சில ஆண்டுகளுக்கு முன்பு வெளிநாட்டு நண்பர் ஒருவர் காலை உணவுக்கு எங்கள் அம்மா வீட்டுக்கு வந்திருந்தார். பூரி, பொங்கல், வடை, சட்னி, இட்லி, மட்டன் குழம்பு என்று அம்மா விதவிதமாகச் சமைத்து அசத்தியிருந்தார். எல்லாவற்றையும் ரசித்து ருசித்துச் சாப்பிட்ட அந்த நண்பர் அம்மாவுக்குக் கைகொடுத்து, சமையலை வெகுவாகப் பாராட்டினார். எல்லோரும் சாப்பிட்ட பின் அம்மா அடுக்களைக்குச் சென்றுவிட்டார். நாங்கள் அனைவரும் உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்தோம். “எங்கே அம்மாவைக் காணோம்? அவருக்கு முக்கிய வேலை எதுவும் இருக்கிறதா?” என்று நண்பர் என்னிடம் கேட்டார். அவர் மதிய உணவைச் சமைக்க ஆரம்பித்துவிட்டார் என்றேன். “என்ன?” என்று நண்பர் அதிர்ந்தார். “ஆம், எங்கள் நாட்டில் பெண்கள் காலை சமையலை முடித்து, சாப்பிட்ட பின், மதிய உணவு தயாரிக்க ஆரம்பித்துவிடுவார்கள். குழம்பு, கூட்டு, பொரியல், ரசம் என்று எல்லாவற்றையும் செய்ய நேரம் வேண்டுமே? இப்போது தொடங்கினால்தான் ஒரு மணிக்குள் முடிக்க முடியும்” என்றேன். “அதற்குப் பிறகு…” நண்பர் இழுக்க, “மாலைக்கு பஜ்ஜி, வடை, டீ, பின் இரவுக்கு டிபன்” என்று முடித்தேன். “என்ன கொடுமையாக இருக்கு? உங்கள் உணவு வகைகள் அருமையாகத்தான் உள்ளன. அதற்காக நாள் முழுக்கப் பெண்களை அடுக்களையில் உழைக்கச் செய்வது அநியாயமாக இல்லையா கீதா?” என்றார். என்னிடம் பதில் இல்லை.
“பெண்களிடமிருந்து கரண்டியைப் பிடுங்கிவிட்டு, புத்தகத்தை கொடுத்தால் போதும்” என்று 1938இல், அதாவது 84 ஆண்டுகளுக்கு முன்பு சொன்னவர் தந்தை பெரியார். நமது பெண்கள் படிக்க ஆரம்பித்து கல்வியறிவு பெற்றுவிட்டால், வீட்டைவிட்டு வெளியே பணிபுரியத் தொடங்கிவிடுவார்கள், சமையலறையிலிருந்து விடுபட்டு விடுவார்கள் என்ற எண்ணத்தில் பெரியார் அப்படிச் சொன்னார். நம் பெண்களும் படிக்க ஆரம்பித்துவிட்டார்கள், வேலைக்கும் போக ஆரம்பித்துவிட்டார்கள். ஆனாலும் அவர்களிடமிருந்து இன்னும் கரண்டியைப் பிடுங்க முடியவில்லை.
ஆண் வெளியே சென்று வேலை செய்து பொருளீட்டி வருவான், பெண் வீட்டில் சமையலையும் வீட்டு வேலைகளையும் செய்து குடும்பத்தினரைக் கவனித்துக்கொள்வாள் என்றிருந்த பண்டைய வழக்கம் மாறி, பெரும்பாலான பெண்கள் கல்வி கற்று, வேலைக்குப் போய் சம்பாதிக்க ஆரம்பித்து பல்லாண்டுகள் ஆகின்றன. இருந்தாலும், சமையல் பணியிலிருந்து அவளால் விடுபட முடியவில்லை. பெண்தான் சமையல் செய்ய வேண்டும் என்பதை இந்த ஆணாதிக்க சமுதாயம், பெண்களின், ஆண்களின் மூளைகளில் மிக அழுத்தமாகப் பதித்துள்ளது. அதிலிருந்து மாறவேண்டும் என்பதைப் பல பெண்களாலேயே ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்பதுதான் நிஜம்.
“மூன்று வேளையும் சமைக்க வேண்டியிருக்கு. அதுவும் ஒவ்வொருத்தருக்கு ஒவ்வொன்னு புடிக்கும். பையனுக்குப் புடிக்கறது பொண்ணுக்குப் புடிக்காது. பொண்ணுக்குப் புடிக்கறது புருஷனுக்குப் புடிக்காது. அவருக்குப் புடிக்கறது மாமியாருக்குப் புடிக்காது. மாமனாருக்கு சுகர், பிபி இருக்கறதால தனி சமையல். என்னதான் செய்யறது?” என்று தோழிகள் அலுத்துக்கொள்வதில் நியாயம் இருக்கிறது. ஒவ்வொருவருக்கும் தனித்தனியாகச் சமைப்பது மிகப் பெரிய வேலை. சமையலுக்குத் தனியாக உதவியாளரை வைத்துக்கொள்ளலாமே என்று ஆலோசனை சொன்னால், “எங்கேப்பா கிடைக்கிறாங்க? வர்றவங்களும் ஆயிரம் கண்டிஷன் போடறாங்க. அப்படியே கிடைச்சாலும் நம்ம டேஸ்டுக்குச் சமைக்க மாட்டேங்கிறாங்க” என்று வருத்தப்படுகிறார்கள். இவற்றிலும் உண்மை இல்லாமல் இல்லை.
ஆனால், நெஞ்சைத் தொட்டு சொல்லுங்கள் தோழியரே, உங்கள் சமையல்கட்டை இன்னொருவருக்கு விட்டுக்கொடுக்க மனமிருக்கிறதா? பெரும்பாலான பெண்களுக்கு மனமில்லை. அதை நேரடியாகச் சொல்லாமல், வேறு காரணங்களைக் காட்டி தட்டிக்கழிப்பார்கள். வேலைக்குப் போகும் பெண்களே தயங்கும் போது, வீட்டில் இருப்பவர்களைப் பற்றி கேட்கவே வேண்டாம். வேலைக்குப் போகும் தோழிகள் கஷ்டப்படுகிறார்களே என்று தெரிந்தவர்களிடம் விசாரித்து, ஏஜென்ஸிகளுக்கு போன் செய்து, யாரையாவது தேடிக் கொடுப்போம். “டைம்முக்கு வர மாட்டேங்கறாங்க. நம்ம டேஸ்டுக்குச் சமைக்க மாட்டேங்கறாங்க. அடிக்கடி லீவ் கேக்குறாங்க” என்று ஏதாவது காரணம் சொல்லி பத்துப் பதினைந்து நாட்களிலேயே அந்த உதவியாளரை நிறுத்திவிடுவார்கள். “ஆபீஸுக்கும் போயிட்டு, நேரத்துக்கு வடிச்சுக் கொட்ட என்னால முடியல” என்று திரும்பவும் புலம்ப ஆரம்பிப்பார்கள். “முடியலைன்னா மெஸ்ல வாங்கிக்கொள்ள வேண்டியது தானே?” என்றால், “அவங்க என்ன எண்ணெய்ல சமைக்கிறாங்களோ, உடம்புக்கு ஒத்துக்காம போயிட்டா என்ன பண்றது?” என்று ரெடியாக பதில் வைத்திருப்பார்கள். “சரிங்க, வீட்டில் வளர்ந்த குழந்தைகளும் கணவரும் இருக்கிறார்களே… அவர்களைச் சமைக்கச் சொல்லலாமே” என்றால், “அவங்களுக்கு என்ன தெரியும்? சமைக்கிறேன் பேர்வழின்னு மளிகைசாமானை வேஸ்ட் பண்ணுவாங்க. எல்லாப் பாத்திரத்தையும் யூஸ் பண்ணி, சிங்க்கை நிரப்பி வச்சிருப்பாங்க. யாரால கிளீன் செய்ய முடியும்?” என்று புகார் செய்வார்கள்.
இன்னும் சிலர் இருக்கிறார்கள். வசதியான வீடு, வேலைகளுக்கு உதவியாளரும் வீட்டோடு தங்கி இருப்பார். ஆனாலும், அந்த உதவியாளரைச் சமைக்கவிட மாட்டார்கள், “நீ வீட்டைச் சுத்தம் பண்ணிட்டு, பாத்திரம் கழுவிட்டு, காய்கறி நறுக்கிக் குடு. நான் சமையலைப் பாத்துக்கறேன்” என்று வரிந்து கட்டிக்கொண்டு சமைப்பார்கள், அந்த உதவியாளருக்கும் சேர்த்துதான்.
அன்பான தோழிகளே, உங்களைக் குறை சொல்வது என் நோக்கமில்லை. ஆனால், சமையல்கட்டை இன்னொருவரிடம் கொடுக்க உங்களுக்கு என்ன தயக்கம்? ஏன் டியர்ஸ் இந்த மனத்தடை? கொஞ்சம் ஆராய்ந்து பார்த்தால், “சமையலும் செய்யறதில்லை? அப்புறம் என்ன வேலை உனக்கு?” என்று குடும்பத்தினர் கேட்டுவிடுவார்களோ என்ற பயமும், “ஆமாம், அதைவிட நமக்கு என்ன வேலை?” என்ற தேவையற்ற குற்றவுணர்வும்தான் காரணமாக இருக்கிறது. என்னதான் வேலைக்குப் போய் வெளியே சாதனைகள் செய்தாலும், சமையலால் கிடைக்கும் அங்கீகாரமும் பாராட்டும் பெரும்பாலான பெண்களுக்குத் தேவையாக உள்ளது. ‘அம்மாவின் கைமணம் போல வருமா?’, ‘என் வொய்ஃப்போட சமையலுக்கு ஈடாகுமா?’ என்று சமையலைச் சிலாகித்து வரும் கமெண்ட்டுகள் போதை அளிக்கின்றன. உண்மைதானே ஃப்ரெண்ட்ஸ் ?
ஊடகங்களும் இதற்கு ஒரு காரணம். பெண் ரிசர்வ் வங்கியின் துணை கவர்னராகவே இருந்தாலும், “வீட்டில சமைப்பீங்களா? நீங்க சமைக்கறதுல உங்க குழந்தைகளுக்குப் பிடிச்ச ரெசிப்பி என்ன?” போன்ற அநாவசிய கேள்விகளைக் கேட்டு, அவர் வீட்டில் சமைப்பதை உறுதிப்படுத்திக்கொள்கின்றன. “வீட்டில் சமைக்க மாட்டேன்” என்று வெளிப்படையாகச் சொல்லும் பெண்ணை, “நீயெல்லாம் ஒரு பெண்ணா” என்று மறைமுகமாகக் குத்திக் காட்டி பகடி செய்கின்றன. இது அப்பட்டமான உரிமைமீறல்.
ஒரு ரகசியம் சொல்லட்டுமா தோழிகளே? வாழ்நாள் முழுக்கச் சமையல் செய்துகொண்டே இருந்தால், நமக்குப் பிடித்த வேறு வேலைகளைச் செய்ய முடியாது. வேலைக்குப் போவதும் வீட்டுக்கு வந்தால் சமைப்பதுமாக வாழ்க்கை ஓடிவிடும். ‘வயது போன பின்பு, சமைத்த நேரத்தில் படித்திருந்தால் எக்சாமில் பாஸ் பண்ணி ஆபிசரா பிரமோஷன் வாங்கியிருப்பேனே, பிடிச்ச புக்ஸைப் படிக்காம போயிட்டேனே, தியேட்டருக்குப் போய்ப் படம் பார்க்காம போயிட்டேனே, ஃப்ரெண்ட்ஸ் எல்லாம் சேர்ந்து எத்தனை டூர் போனாங்க, என்னால போக முடியலையே, நீச்சல் கத்துக்க ஆசைப்பட்டேன் எங்கே நேரம் இருந்தது, கணவரோட ஊர் சுத்தவே இல்லையே, குழந்தைகளுக்குச் சமைச்சுப் போட்டேனே தவிர, அவங்களோட உட்கார்ந்து ஜாலியா விளையாட முடியலையே, எக்ஸர்சைஸ் பண்ண நேரமில்லாம சுகர், பி.பி.ன்னு இப்ப அவதிப்படறேன்’ என்றெல்லாம் வருத்தப்பட வேண்டி வரும்.
என்னதான் செய்யணும்? சமையல் மீதிருக்கும் உணர்வுப்பூர்வமான பிணைப்பைத் துண்டித்துக்கொள்ளுங்கள் தோழிகளே. இப்படிச் சொல்வதால் சமையலை வெறுக்க வேண்டும் என்று அர்த்தமில்லை. பிடித்த உணவை விரும்பும்போது சமைத்து, ரசித்து உண்டு, மகிழ்ச்சியாக வாழலாம். ஆனால், அந்த உணவை நீங்கள்தான் எல்லா நேரமும் சமைக்க வேண்டும் என்று உங்களுக்கு நீங்களே விதித்துள்ள நிர்பந்தத்தைக் கட்டவிழுங்கள். சமைப்பது பெண்ணின் தேர்வாக இருக்க வேண்டுமேயன்றி, கட்டாயச் சுமையாக அவர்கள் மேல் திணிக்கப்படக் கூடாது. சமைப்பதற்கு, சம்பளம் கொடுத்து ஓர் உதவியாளரை நியமித்துக்கொள்ளுங்கள் தோழிகளே. உங்கள் குடும்பத்திற்கு ஏற்றவாறு அவருக்குச் சமைக்கக் கற்றுக் கொடுங்கள். குறைந்தது மூன்று மாதமாவது அவருடன் சேர்ந்து சமைத்து, நீங்கள் பயிற்சி கொடுக்க வேண்டிவரும். அதற்கு நானே சமைத்துவிடுவேனே என்று சலித்துக்கொண்டால், வாழ்நாள் முழுக்க இந்தப் பணியிலிருந்து விடுபட முடியாது. அவரது பணிக்கு ஏற்ற, நல்ல சம்பளம் கொடுங்கள். உங்கள் வீட்டிலேயே சாப்பிடச் செய்து குடும்பத்தில் ஒருவராக நடத்துங்கள். அவருக்கு இருக்கும் பிரச்னைகளைக் கேட்டு தீர்க்க முயற்சி செய்யுங்கள். வாரம் ஒரு நாள் விடுமுறை கொடுங்கள். அந்த உதவியாளர் உங்களை விட்டுப் போக மாட்டார்.
உதவியாளரை வைத்துக்கொள்ளும் அளவுக்கு வசதி இல்லாத தோழிகள் என்ன செய்வது? ஆரம்பத்திலேயே, குடும்பத்தில் கணவருக்கும் குழந்தைகளுக்கும் சமைக்கக் கற்றுக் கொடுத்துவிடுங்கள். அவர்கள் அரைகுறையாகவே செய்தாலும் குறைசொல்லாமல், பாராட்டி ஊக்கப்படுத்துங்கள். மூன்று வேளை சமையலில், ஒரு வேளை அவர்கள் சமைக்க வேண்டும் என்று பணியை பிரித்துக் கொடுங்கள். வாரத்திற்கு ஒரு நாள் நீங்கள் சமைக்காமல், மூன்று வேளையும் அவர்களையே சமைக்கச் செய்யுங்கள். நீங்கள் செய்தால்தான் எல்லாம் ருசியாக இருக்கும் என்ற ‘பெர்ஃபெக்சனிஸ்ட் கிரீடத்தை’ கழற்றிவையுங்கள் டியர்ஸ். அது கிரீடமல்ல, மிகப்பெரிய சுமை. முறையாக யார் சமைத்தாலும், உணவு ருசிக்கும்.
உதவியாளரையும் வைத்துக்கொள்ள முடியாது, வீட்டில் யாரும் சமைக்க மாட்டேன் என்கிறார்கள் என்ற நிலை இருந்தால், பக்கத்தில் தரமான மெஸ்ஸோ ஹோட்டலோ இருந்தால் ஒருவேளைக்காவது அங்கு வாங்கிக்கொள்ளலாம். இப்போதெல்லாம் நான்வெஜ் குழம்பு, சாம்பார், ரசம், பொரியல், கூட்டு என்று எதை வேண்டுமானாலும் தனியாக வாங்கிக்கொள்ளும் வசதி வந்துவிட்டது. சத்தான உணவில் சமரசம் செய்யாமல், எதைச் செய்ய அதிக நேரம் பிடிக்கும் என்று திட்டமிட்டு, அதை மட்டும் வெளியே வாங்கலாம். கீரை சூப், முளைக்கட்டிய பாசிபயறைச் சேர்த்துப் பச்சை காய்கறிகளை நறுக்கிப் போடும் சாலட், வேகவைத்த முட்டை ஆகியவற்றை குறைந்த நேரத்தில், எளிமையாகச் செய்துவிடலாம். குழம்பு, சாம்பார், பொரியல், கூட்டு போன்றவற்றை மெஸ்ஸில் வாங்கிவிடலாம். ராகிக் கூழ், கம்மங்கூழ் ஆகியவற்றை முந்தைய நாள் இரவிலேயே காய்ச்சி வைத்துவிடலாம். மறுநாள் காலை உப்பு, மோர் சேர்த்து காலை உணவாகவே கொடுக்கலாம். இது ஓர் உதாரணத்திற்குத்தான். குறைந்த நேரத்தில், எளிமையாகச் செய்யும் சத்தான உணவு வகைகள் ஏராளம். அவற்றைச் செய்துவிட்டு, உங்களுக்குப் பிடித்த பணிகளுக்கான நேரத்தை ஒதுக்குவது உங்கள் சாமர்த்தியம் தோழியரே.
தோழர்களே, சமையலைக் குடும்பத்தின் கூட்டுப் பொறுப்பாக்க வேண்டும். சமையலில், மனைவிக்கு உதவி செய்துகொண்டுதான் இருக்கிறேன் என்ற நிலையிலிருந்து அடுத்த கட்டத்திற்குச் செல்ல வேண்டும். கணவர் ஒருவேளை சமையலையாவது முழுமையாகப் பொறுப்பேற்று செய்யத் தொடங்க வேண்டும்.
இந்தப் பிரச்னைக்கு நிலையான, நீண்ட காலத்தீர்வு பெரியார் பரிந்துரைத்த `கம்யூனிட்டி கிச்சன்’ என்ற சமுதாய சமையலறை. இன்னும் இதனைச் சோதனை அளவில்கூட முயற்சி செய்யக்கூட இந்த ஆணாதிக்க சமுதாயம் தயாராக இல்லை. அரசே இதனை உருவாக்க வேண்டும். மாதத்திற்கு இவ்வளவு என்ற அளவில் நியாயமான கட்டணத்தைச் செலுத்திவிட்டு, குடும்பம் மொத்தமும் தினமும் அங்கே சாப்பிட்டுக்கொள்ளும் முறையை உருவாக்கினால் பெண்களுக்கு மிகப்பெரிய விடுதலை கிடைக்கும். கொடுமையான ஜாதியக் கட்டமைப்பை ஒழிப்பதற்கான முதல் படியாகவும் இது இருக்கும். பெண்கள் சமைப்பதற்குச் செலவழிக்கும் நேரத்தையும், ஆற்றலையும் தாம் பணியாற்றும் துறைகளில் செலுத்தினால், அந்தந்தத் துறைகளில் கொள்கை முடிவுகள் எடுக்கும் உயர்நிலையை அடைய முடியும். சமுதாயத்தின் முன்னேற்றத்திற்கு மிகப்பெரிய பங்காற்ற முடியும் தோழர்களே!
(பேசுவோம்)
படைப்பாளர்:
கீதா இளங்கோவன்
‘மாதவிடாய்’, ‘ஜாதிகள் இருக்கேடி பாப்பா’ போன்ற பெண்களின் களத்தில் ஆழ அகலத்தை வெளிக்கொணரும் ஆவணப் படங்களை இயக்கியிருக்கிறார். சமூக செயற்பாட்டாளர்; சிறந்த பெண்ணிய சிந்தனையாளர். அரசுப் பணியிலிருந்த தோழர் கீதா, சமூக வலைதளங்களிலும் தன் காத்திரமான ஆக்கப்பூர்வமான எழுத்தால் சீர்திருத்த சிந்தனைகளை தொடர்ந்து விதைத்து வருகிறார்.
ஹெர் ஸ்டோரீஸ் இணையதளத்தில் ‘கீதா பக்கங்கள்’ பகுதியில் இவர் எழுதிய காத்திரமான கட்டுரைகள், ‘துப்பட்டா போடுங்க தோழி’ என்ற பெயரில் ஹெர் ஸ்டோரீஸ் வெளியீட்டில் புத்தகமாக வந்து, மிக முக்கியமான பெண்ணிய நூல் என்கிற அங்கீகாரத்தைப் பெற்றிருக்கிறது!
அருமையான பதிவு தோழர் 😍😍💝
அன்பும் நன்றியும் தோழர் ❤️😍