2. தொன்மை
“இலங்கைத்தீவின் திருகோணமலையைக் கைப்பற்றிவிட்டால், இந்த உலகையே நான் ஆள்வேன்” – பதினெட்டாம் நூற்றாண்டில் ஐரோப்பியக் கண்டத்தில் பிரான்ஸின் ஆதிக்கத்தை நிறுவிய ஹீரோ நெப்போலியனின் வாக்குமூலம் இது. இந்த இருபத்தொன்றாம் நூற்றாண்டிலும் சீனா முதல் அமெரிக்கா வரை உலக வல்லரசு நாடுகளின் கடைக்கண் பார்வை எப்போதும் இலங்கை நோக்கியே திரும்பியிருக்கிறது. (சில மாதங்களுக்கு முன்பு திரிகோணமலையில், அமெரிக்காவிற்குப் பெரிய அளவில் நிலப்பரப்பு வழங்கப்பட்டிருப்பதாகவும், அங்கு அமெரிக்கத்தளம் உருவாக்கப்படுவதாகவும் ஊடகங்களில் பரபரப்பாகி, மக்களிடையே சலசலப்பை உண்டு பண்ணியது நினைவிருக்கலாம்.) வல்லரசுகளுக்கு மட்டுமல்ல, உலகின் மூலைமுடுக்கு நாடுகளுக்கும்கூட இலங்கையின்பால் எப்போதும் ஒரு கிறக்கம் உண்டு. சீனப்பயணி பாஹியான் இலங்கை கண்டு வியந்த வரலாறும் உண்டு; இத்தாலிய ஆய்வாளர் மார்கோ போலோ “உலகின் சிறந்த தீவு இதுவல்லவோ” என மயங்கிய வரலாறும் உண்டு. இன்றைக்கும், உலகம் சுற்றும் வேட்கையாளர்களின் பக்கெட் லிஸ்ட்டில் தவறாமல் இடம்பெற்றிருப்பது இலங்கை… இலங்கை… இலங்கையைத் தவிர வேறில்லை. லங்காபுரி என்று அறியப்பட்ட காலம் தொட்டு இலங்கையான இன்றைய நாள் வரை அங்கு நிகழும் சம்பவங்களால், உலகின் பேசுபொருளாகவே எப்போதும் இருக்கும் இலங்கையின் தொன்மையை லேசாகக் கிளறிப் பார்க்கலாம், வாருங்கள்.
உலகின் மூன்றாவது பெரிய நீர்த்தொகுதி என்ற பெருமையுடன், உலகப் பரப்பில் 20 சதவீதப் பகுதியை உள்ளடக்கிக்கொண்டு, உலகின் வர்த்தகப் பாதையாகத் திகழும் இந்துமகா சமுத்திரம்தான் இந்தியாவிற்குப் பேச்சு, மூச்சு, உயிர்நாடி எல்லாமும். “இந்து சமுத்திர நீர்ப்பரப்பு பாதுகாக்கப்படாமல், இந்தியாவிற்குத் தொழில் விருத்தியுமில்லை, வர்த்தக வளர்ச்சியுமில்லை, ஸ்திரமான அரசியல் அடித்தளமுமில்லை” என இந்தியாவின் முன்னாள் பாதுகாப்பு ஆலோசகர் கே.எம். பணிக்கர் அவர்கள் ஒருமுறை குறிப்பிட்டது, எக்காலத்திற்கும் இந்தியாவிற்குப் பொருத்தமானதே. அப்படிப்பட்ட, பூகோள, சரித்திர, வர்த்தக, அரசியல் முக்கியத்துவம் பெற்ற ஒரு சமுத்திரத்தில்தான் கண்கவர் முத்தாக மிதந்துகொண்டிருக்கிறது தொன்மை மிகு இலங்கை.
ஒரு நாடு ஒரு தீவாகவோ, தீவுக்கூட்டமாகவோ இருந்தால் அது தீவு தேசம் என்ற கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுகிறது. உலகின் மொத்தமுள்ள 195 நாடுகளில் 47 நாடுகள் தீவு தேசங்களாக அங்கீகரிக்கப்பட்டுள்ளன. (ஸாரி, நித்தியின் கைலாசா தீவு தேசம் இந்தக் கணக்கில் வராது). அந்த 47இல் ஒரு தேசமாக நாம் தொட்டுவிடும் தூரத்தில்… இல்லையில்லை, கண்ணுக்கெட்டிய தூரத்தில்… ம்ம்ம்… அதுவுமில்லை, 24 கிலோமீட்டர், 15 மைல், 18 கடல் நாட்டிகல் என்றெல்லாம் அளவிடப்படும் தூரத்தில் உலகின் பார்வையை ஈர்த்துக்கிடக்கும் இலங்கையை, தனுஷ்கோடியின் அரிச்சல் முனையிலிருந்து பார்த்தால்கூட இந்திய – இலங்கை பூகோள அமைப்பின்படி பார்க்க முடியாது என்கின்றனர் வல்லுநர்கள். 150 அடி உயரம் அல்லது 46 மீட்டர் உயரத்தில் இருந்து பார்த்தால் மட்டுமே இலங்கை தெரியுமாம். (சிறு வயதில் ராமேஸ்வரம் சென்றிருந்த நாள் ஒன்றில், விடுதியின் மொட்டை மாடியில் நின்று கடலுக்குள் குத்துமதிப்பாகக் கைகாட்டி, “அதோ தெரியுது பார், அதுதான் எங்க ஸ்ரீலங்கா” என்று கூறி, இந்தப் ‘பச்சப்புள்ளை’யை ஏமாற்றிய, பக்கத்து அறையிலிருந்த சிலோன்கார மாமாவை இன்னும் தேடிக்கொண்டிருக்கிறேன்).
இலங்கை, இலங்காபுரி, லங்கா, நாகதீபம், தர்மதீபம், லங்காதுவீபம் என்று இலக்கியங்களாலும் சின்மோண்டு, சேலான், தப்ரபேன் என்று கிரேக்கர்களாலும், சீரெண்டிப் என்று அரேபியர்களாலும், சேரன்தீவு, சிலோன் என்று பொதுவிலும் கொண்டாடப்பட்ட இத்தீவு தேசத்தின் வரலாறு மிக சுவாரசியமானது. வரலாறு என்றாலே சுவாரசியம் தானே? இலங்கையின் ஆவணப்படுத்தப்பட்ட வரலாறு மூவாயிரம் ஆண்டுகளைக் கொண்டிருக்கிறது என்று சொல்லப்பட்டாலும்கூட, பாளி மொழியில் எழுதப்பட்ட தீப வம்சம், மகாவம்சம், சூள வம்சம் முதலிய நூல்களும், ராசாவலிய என்ற சிங்கள மொழியில் எழுதப்பட்ட நூலுமே இலங்கையின் பழமையான தொகுப்பு நூல்களாகும். இலங்கையின் ஆதி நூலான தீபவம்சம், கி.பி. நான்காம் நூற்றாண்டில் தொகுக்கப்பட்டதாகக் கருதப்படுகிறது. தீபவம்சத்தின் திருத்தப்பட்ட வடிவமான மகாவம்சம், இலங்கைத் தீவுக்குப் பௌத்த சமயம் வந்த வரலாறு குறித்தும், புத்தரின் மூன்று இலங்கை வருகை குறித்தும் விவரிக்கிறது. இலங்கையின் வரலாற்று நூல்களான சூள வம்சமும், ராசாவலியவும் இலங்கையை ஆட்சி செய்த அரசர்கள் பற்றிக் குறிப்பிடுகின்றன. இந்நூல்கள் சிங்களப் பௌத்தத் துறவிகளால் பல்வேறு காலக்கட்டங்களில் எழுதப்பட்ட தொகுப்பு நூல்களாகும்.
ஆனால், நமக்கு இந்த அதிசயத்தீவை அறிமுகப்படுத்தி, அதன் அழகை வர்ணித்த முதல் ஆவணம் தமிழகக் காப்பியமான கம்ப ராமாயணம்தான். ‘செல்வத்தின் கடவுளான குபேரனுக்காக, விசுவகர்மா என்ற தேவ சிற்பியால் உருவாக்கப்பட்ட லங்கா என்ற ராச்சியம்’ என்று குறிப்பிடுகிறது ராமாயணம். “கற்பில் சிறந்தவள் சீதையா, மண்டோதரியா” போன்ற, இந்தியா வல்லரசாவதற்குத் தேவையான அதி முக்கியப் பட்டிமன்றங்கள் நிகழக் காரணமாக இருந்த, ராமாயணக் (கட்டுக்)கதைகளைத் தவிர்த்துப் பார்த்தாலும்கூட, இலங்கையும் தமிழகமும் இலக்கியத்தால், வரலாற்றால் பின்னிப் பிணைந்திருந்ததற்கான ஆதாரங்களைக் காலந்தோறும் பார்க்க முடிகிறது.
இலங்கையின் தமிழ் இலக்கிய வரலாறு, சங்க காலத்தைச் சேர்ந்த ஈழத்து பூதத்தேவனாருடன் தொடங்குகிறது. ஈழத்து பூதந்தேவனார் என்னும் பெயர் நற்றிணையிலும் குறுந்தொகையிலும் செய்யுள் முகப்பில் காணப்படுகிறது. இவரது பாடல்கள் அகநானூறில் 88, 231, 307 என மூன்று பாடல்கள், குறுந்தொகையில் 189, 343, 360 என மூன்று பாடல்கள், நற்றிணையில் 366வது பாடல் என மொத்தம் ஏழு பாடல்கள் உள்ளன. ‘இவர் ஈழ நாட்டில் நின்று மதுரையில் வந்து தங்கிய பூதன் மகன் தேவன் எனப்படுவார்’ என்று நற்றிணை நானூறுக்குத் தெளிவுரை எழுதிய அ. நாராயணசாமி ஐயர் குறிப்பிடுகிறார். இதே போல் சங்கப் புலவரான முரஞ்சியூர் முடிநாகராயர் ஈழ நாட்டைச் சேர்ந்தவர் எனவும் மன்னாரில் முசலி (முரஞ்சி) என்ற கிராமத்தவர் எனவும் ஈழ மண்டலப் புலவர் சரிதம் என்ற நூலில் ஆ.முத்துத் தம்பிப்பிள்ளை குறிப்பிடுகிறார்.
சிறுபாணாற்றுப்படை தொன்மாவிலங்கை என்றும் சிலப்பதிகாரம் தொல் இலங்கை என்றும் குறிப்பிடுகின்றன. திருஞான சம்பந்தரும் சுந்தரரும் திருகோணமலை மீதும், திருக்கேதீஸ்வரர் மீதும் தேவார திருப்பதிகங்கள் பாடி கடல் கடந்து திருக்கேத்தீஸ்வரரை நமக்கு அறிமுகப்படுத்தினர். பூங்குழலி என்ற படகோட்டிப் பெண், வந்தியத்தேவனை அழகிய இலங்கைக்கு அழைத்துச் சென்றார் என்ற செய்தியுடன் இலங்கையின் அழகையும் வர்ணித்து நமக்குக் களிப்பூட்டினார் கல்கி. சோழ மன்னர்கள் கடல் வழியாக இலங்கைக்குப் படையெடுத்துச் சென்றதாக, வென்றதாகக் கூறுகிறது சோழர்கள் வரலாறு.
கி.பி. இரண்டாம் நூற்றாண்டில் இலங்கையைச் சேர்ந்த கயவாகு என்ற மன்னன், தமிழகத்தில் செங்குட்டுவன் கோயில் கட்டி நடத்திய கண்ணகி விழாவுக்கு வருகை தந்ததுடன், தமிழகத்து கண்ணகிக்கு இலங்கையிலும் கோயில் எடுத்து வழிபட்டிருக்கிறான். சோழ மன்னன் கிள்ளி ஈழத்தைத் தாக்கிப் போரிட்டான் என்கிறது முத்தொள்ளாயிரம். இப்படி நமது இலக்கிய, வரலாற்று நூல்கள் தொடர்ச்சியாக இலங்கைச் செய்திகளை அள்ளியள்ளிக் கொடுத்துக்கொண்டேயிருக்க, ‘இலங்கை பார்க்கும் ஆசை’ எனும் மனதுக்குள் பற்றி எரியும் தீயில், தங்கள் அன்பாலும் நட்பாலும் எண்ணெய் வார்ப்பார்கள் எனது இலங்கை ஆசிரியத் தோழமைகள்.
இலங்கைத் தமிழர், இலங்கைச் சோனகர், இந்திய வம்சாவளித் தமிழர், பறங்கியர், இலங்கை மலாயர், இலங்கை ஆப்பிரிக்கர் மற்றும் பூர்வக்குடிகளான வேடுவர் ஆகியோரின் தாயகமாக இலங்கை விளங்குகிறது. மகாவம்சம் நூலின்படி, இலங்கையின் ஆதிக்குடிகள் இயக்கரும் நாகரும் ஆவர். இவர்கள், இன்றைய இலங்கையில் வாழும் வேடர்கள் எனும் ஆதிக்குடிகளின் மூதாதையர்களாக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது. இவர்களது தற்போதைய சனத்தொகை ஏறக்குறைய 2500 என்கிறது இலங்கைக் குடிக்கணக்கு. இன்று இலங்கையில் பெரும்பான்மையினராக இருக்கும் சிங்களர்களின் மூதாதையரான விசயன் என்பவன் மேற்கு வங்காளத்தின் ரார் என்ற பகுதியிலிருந்து தனது 700 தோழர்களுடன், எட்டுக் கப்பல்களில் 860 கடல் மைல் தூரம் பயணித்து இலங்கையை அடைந்து, தலைமன்னாருக்கு அருகில் தம்பபண்ணி எனும் அரசை உருவாக்கி, இயக்கர் தலைவியான குவேணியை மணம்முடித்திருக்கிறான் (மகாவம்சம்). அந்த விசயனை இலங்கையின் முதல் மன்னனாகக் கணக்கிட்டு, 189 மன்னர்கள் கி.மு. 543 முதல், கிபி 1815 வரையிலான 2359 வருடங்கள் ஆட்சி செய்திருப்பதாக இலங்கை வரலாறு கூறுகிறது.
இத்தகு தொன்மை வாய்ந்த இலங்கையை நோக்கி, இந்தப் ’புன்னகைக்கும் மக்கள் தேசத்தை’ (இலங்கையின் மற்றொரு பெயர்) நோக்கி 1505இல் ஓர் அயல்நாட்டு நாவாய் இந்து சமுத்திரத்தில் அசைந்தாடி வந்துகொண்டிருந்தது. ஆம், போர்த்துகீசியப் போர்வீரனும், உலகம் சுற்றும் வாலிபனுமான பிரான்சிஸ்கோ டி அல்மெய்டா பேராவலுடன் கொழும்புத் துறைமுகத்தை வந்தடைந்தான். செவிவழியாக அவன் கேட்டிருந்த இலங்கையின் வனப்பும் வளமும் அவனை அத்தனை தூரம் பயணப்பட வைத்திருந்தது. உலக வழக்கப்படி சில பல போர்களுக்குப் பின் யாழ்ப்பாண அரசு முதன்முறையாக ஓர் அந்நிய தேசத்தின் (போர்த்துக்கீசியரின்) வசமானது. வளம் கொழிக்கும் இலங்கையின் யாழ்ப்பாணத்திலிருந்த போர்த்துகீசியர்களை விரட்ட 1683இல் நுழைந்த டச்சுக்காரர்கள் கொசுறாகக் கொழும்பையும் கைப்பற்றினர். இதையெல்லாம் பார்த்துக்கொண்டு சும்மாயிருக்க முடியுமா பிரிட்டனால்? 1796இல் பிரிட்டன் கரையோரப் பகுதிகளைக் கைப்பற்றியதன் மூலம், இலங்கைக்குள் மூக்கை நுழைத்தது. பிறகென்ன கடைசி மன்னன் ஸ்ரீ விக்கிரமராச சிங்கன் இந்தியாவிற்கு நாடு கடத்தப்பட பிப்ரவரி 14, 1815இல் முழு இலங்கையும் அதிகாரப்பூர்வமாக ஆங்கிலப் பேரரசின் கீழ்வந்தது. ஆங்கில ஆட்சியின் கீழ் இந்தியா அனுபவித்த அத்தனை துயர்களையும் இலங்கையும் குறைவின்றி அனுபவிக்க, கிட்டத்தட்ட 133 நெடிய வருடங்களுக்குப்பின், பிப்ரவரி 4, 1948இல் ஒரு சுபயோக சுபதினத்தில் இலங்கை மக்கள் “விடுதலை….விடுதலை…விடுதலை”… எனச் சுதந்திரப் பெருமூச்சு விட்டனர்.
(தொடரும்)
படைப்பாளர்:
ரமாதேவி ரத்தினசாமி
எழுத்தாளர், அரசுப்பள்ளி ஆசிரியர். பணிக்கென பல விருதுகள் வென்றவர். இவர் எழுதி வெளிவந்துள்ள ‘கனவுகள் மெய்ப்படட்டும்’ கட்டுரைத் தொகுப்பு பரவலாக கவனம் பெற்றுள்ளது.