பாலை நிலத்தோட குணமே பிரிதலும் பிரிதல் நிமித்தமும் தான். ‘பொண்ணு அமெரிக்கால இருக்கா என்பதற்கும் பொண்ணு துபாயில இருக்கா’ என்பதற்கும் உள்ள வித்தியாசம் நம் மக்கள் பெரும்பாலும் அறிந்ததே. ஆனால், எண்பது, தொண்ணூறுகளில் பார்த்த துபாய் இப்போது இல்லைன்னு பல வருடங்களா இங்க இருப்பவங்களுக்குத் தெரியும்ன்னு நினைக்குறேன். ஒரு சாராருக்கு துபாய் வாழ்க்கை சொர்க்கமா இருந்தாலும் ஒரு சாராருக்கு அது இன்னும் துயரமாகத் தான் இருக்கு.

மொத தடவையா ஷார்ஜா மாலுக்குள்ள போனப்போ ஒரு தமிழ்க்கார அம்மா என் பக்கத்துல வந்து, “நீ எந்த ஊர்ம்மா? நான் வீட்டுலயே டெய்லரிங் பண்றேன். சுடிதார் ஏதாச்சும் தைக்கணும்ன்னா எங்கிட்ட கொடு. என் பையன் இங்க வேலை பாக்குறான், இந்தா அட்ரெஸ்”ன்னு என் கையில் ஒரு விசிட்டிங்க் கார்டைத் திணிச்சுட்டுப் போனாங்க. ஒரு முறைகூட நான் இங்கே துணி எடுத்து சுடிதார் தைக்கவில்லை. அவர்கள் இன்னும் இங்குதான் இருக்காங்களான்னு தெரியல. தெரிஞ்சுக்கப் போறதும் இல்லை. அந்த விசிட்டிங் கார்டு இன்னும் பத்திரமா என்கிட்ட இருக்கு. இங்குள்ள வாழ்வு இப்படித்தான். அவரைப் பற்றி நினைக்கும் போது ஊரில், “என்கிட்டயே ஜாக்கெட் தெச்சுக்கோங்க” என்று என் மாணவியின் அம்மா சொன்னது நினைவுக்கு வருகிறது. பெரிய பெரிய மால் என்று சுற்றும்போதுகூட எங்காவது தமிழ் பேசுபவர்களைப் பார்த்தால் நம்மூர்க்காரங்க என்று மனசு சொல்லிக்கிட்டே கிடக்கும்.

துபாயில் எனக்கு மறக்க முடியாத ஒரு அனுபவம் இருக்கு. என் அம்மா 2020 பிப்ரவரில இந்தியாவில் இருந்து துபாய்க்கு என்னைப் பார்க்குறதுக்கு வந்தாங்க. அவங்க நிறைய முறை துபாய் வந்திருக்காங்க. முதல் முறை நான் கர்ப்பமாக இருந்தப்போ, அப்புறமா என் பொண்ணை எடுத்துக் கொண்டு வந்தப்போன்னு, ஒவ்வொரு முறையும் என்னையும் என் குழந்தையையும் பாத்துக்க தான் வந்தாங்க. ஒரு முறைகூடச் சாதாரணமா என் கூட இருக்கணும்ன்னோ, ஊரைச் சுத்திப் பாக்கணும்ன்னோ வந்ததில்லை. அதுனால இந்த முறை வரும்போது நிறைய இடம் சுத்திக் காட்டலாம்ன்னு நினைச்சுட்டு வரச் சொன்னேன். ஆனா, அவங்க வந்த அடுத்த பத்து நாள்லயே இந்தியால கொரோனா காரணமா லாக்டவுன் அறிவிச்சுட்டாங்க. இங்கேயும் லாக்டவுன் பண்ணிட்டாங்க. இந்தியாவுக்கும் திரும்ப முடியாம இங்கயும் எவ்வளவு நாள் இருக்க வைக்க முடியும்ன்னு தெரியாம ஒரு பெரிய குழப்பத்தோடவே நாட்களை நகர்த்திட்டு இருந்தோம். வெளியே எங்கயும் போக முடியாம வீட்டுக்குள்ளயே தான் இருந்தோம்.

கிட்டத்தட்ட ஆறு மாசம் இப்படியே போயிருச்சு. நகரம் முழுசும் இயல்பு நிலைக்கு வர ஆரம்பிச்சது. அதுக்கு அப்புறம்கூட அதிகமா வெளிய சுத்திப் பார்க்கப் போகல. அவங்க வயசும், கொரோனா பயமும் முழுசா விலகாததால அதிகம் வெளியில் செல்வதைத் தவிர்த்துட்டே வந்தேன். ஆனா, அம்மா ஊரில இருந்து வந்தப்போ ஒரு பேப்பர் கட்டிங்க என்கிட்ட கொண்டு வந்து காட்டினாங்க. அது உலகப் புகழ் வாய்ந்த மிராக்கிள் கார்டன் பூங்கா பற்றிய செய்தி. துபாய்ல அந்தப் பூங்கா மிகவும் பிரபலம். “பாரு இந்தக் கட்டிங்க நான் வெட்டி எடுத்துட்டு வந்திருக்கேன். என்ன இங்க கூட்டிட்டு போவியா?”ன்னு சின்னக் கொழந்தை மாதிரி கேட்டது ஆறு மாசம் கழிச்சு எனக்கு நியாபகம் வந்துச்சு. கொரோனா பயத்தில இருந்து கொஞ்சம் வெளியே வந்திருந்தோம். அப்போ தான் நான் ஒண்ணு நினைச்சேன். நிலையில்லாத இந்த வாழ்க்கையில கொஞ்சம் கொஞ்சம் இளைப்பாறவும் மகிழ்ந்திருக்கவும் வேணும்ன்னு தோண ஆரம்பிச்சது. என்ன ஆனாலும் பரவால்லன்னு நாங்க கிளம்பி மிராக்கிள் கார்டன் போனோம். அம்மாவுக்குச் சந்தோஷம் கட்டுக்கடங்காம இருந்தது. ஊட்டில நடக்குற மலர் கண்காட்சியப் போய் பாக்கணும்ன்னு அம்மா எங்கிட்ட அடிக்கடி சொல்லுவாங்க. கோவையிலயே இருந்த போதும், ஊட்டிக்குப் பலமுறை போயிருந்தாலும் கூட, அங்கு நடக்கும் மலர்க் கண்காட்சிக்குப் போனதில்லை. எதிர்காலத்தில் அது நடக்குமான்னும் தெரியல. ஆனா, இந்த மிராக்கிள் கார்டனின் பிரம்மாண்டத்தில் அம்மா மிரண்டு தான் போனாங்க. அவர்கள் வாழ்வில் அது ஒரு மறக்க முடியாத டைரி குறிப்பாக இருக்கும் என்பதில் எனக்குச் சந்தேகமே இல்லை. எழுபது வயசு அம்மாவுக்கு கார்டன் பார்க்க ஆசையான்னு அதை என்னால் சாதாரணமாக கடக்க முடியவில்லை. அவர்களின் ஆசை சிறியதோ பெரியதோ, அம்மா என்பவள் எல்லா உணர்வுகளும் உள்ள சாதாரண மனுஷி தான். நான் சொல்றது சரி தானே?

ஒரு முறை என் பொண்ணைக் கூட்டிக்கிட்டு துபாயின் ஃபவுண்ட்டென் டான்ஸ் பார்க்கப் போனப்போ ஒரு பிரேசில் ஃபேமிலி என் மகளைத் தூக்கிக் கொஞ்சியது, தெரியாத ஊரில் பார்த்த கணத்தில் அன்பு செலுத்தும் மனிதர்களும் இருக்கிறார்கள்ன்னு தோண வெச்சது. அதி தீவிர வெயில் நாள், என் அப்பார்ட்மெண்ட் கீழே ரோட்டில் குழி தோண்டி ஏதோ பைப் லைன் பதிச்சுட்டு இருந்தாங்க. பத்துக்கும் மேல ஆட்கள் வேலை செஞ்சுட்டு இருந்தாங்க. மேல பால்கனியில நின்னு வேடிக்கை பார்த்துட்டு இருந்தப்போ என்னால பால்கனி சூட்டைக்கூடத் தாங்க முடியல. ‘இங்க ஒரு பத்து நிமிஷம்கூட நிக்க முடியலயே, இவங்க எப்படி வேலை செய்யுறாங்க’ன்னு தோணிச்சு. உடனே என் மகளைக் கூப்பிட்டுக் கொண்டு கீழே இறங்கி, பக்கத்துக் கடையில் ஜூஸ் வாங்கிக் கொண்டு வந்து அங்குள்ள அனைவருக்கும் கொடுத்த போது, ஏனோ ஊரில் வீடு கட்டும் வேலையின் போது வேலையாட்கள் எல்லோருக்கும் டீ ஊற்றிக் கொடுக்கும் நியாபகம் வந்தது. அவர்களின் கான்ட்ராக்டர் புதுக்கோட்டை பக்கத்துல ஏதோ ஒரு ஊர் பேரு சொன்னார். அவரோட பையன் இன்ஜினியரிங் படிக்கிறான்னும் அவரின் படிப்புக்காக இப்போ இன்னும் ஒரு நாலு வருசம் சேர்த்து வேலைக்கு ஒப்பந்தம் போட்டுட்டேன்னும் சொன்னார். இங்கு பல பேர் அப்படித்தான். கடனை அடைக்கலாம் என்று இங்கு வந்து, கடன்கள் பெருகி பெருகி, எங்களின் கடன்கள் தீருவதே இல்லை.

அச்சச்சோ இத்தனை கஷ்டமா வெளிநாடு அப்படின்னு சோக கீதம் வாசிக்க வேண்டிய அவசியமும் இல்லை. என்னதான் சுற்றம் இங்கே வாய்க்கவில்லைன்னாலும் பார்க்கும் அனைவரையுமே நட்பாக்கிக் கொள்வதால் எப்போதுமே மகிழ்ச்சி தான். ‘வருடத்திற்கு ஒரு முறை தானா?’ என்று வருத்தம் கொள்ள வைக்கும் அளவிற்கு பிறந்தநாள் கொண்டாட்டங்கள், நண்பர்களோடு சேர்ந்து கூடிக் களித்திருக்கும் அனுபத்தைத் தர மறுத்ததில்லை. வார இறுதி நாட்களில் காரில் ஏறி தமிழ் வானொலியைத் தட்டிவிட்டு, தமிழ்ப் பாட்டைக் கேட்டுக்கொண்டே செய்யும் முடிவில்லாப் பயணங்கள் அழகோ அழகு!

முதல் விடுமுறையில் ஊருக்கு வந்த போது ‘என்ன நம்மூரு இவ்ளோ அசுத்தமா இருக்கு’ன்னு நினைச்சதும், ‘பார்த்தியா உன் வெளி நாட்டுப் பவுச’ என்று என் ஆழ் மனம் என்னை எச்சரிக்கை செய்ததும் மறக்க முடியா அனுபவங்கள். ஆமாம், இங்கே தெருக்கள் அழகு தான், சுத்தம் தான். ஆனால், மனிதர்களே அதிகம் நடமாடாத தெருக்களில் தூசி இருந்தால் என்ன இல்லாவிட்டால் என்ன? (எப்படி எல்லாம் தாய்நாட்டை விட்டுக் கொடுக்காமல் இருக்க வேண்டி இருக்கு பாருங்க!) அதே போல விடுமுறை முடிந்ததும் ஊருக்குக் கிளம்பும் நாளில் வயிற்றில் ஏதோ இனம் புரியாத பயம் வந்து ஒட்டிக்கொள்ளும். போய் தான் ஆக வேண்டும் என்று தெரிந்தாலுமே கூட ‘ஏன் ? எதற்கு ? எப்படி ?’ என்று மண்டைக்குள் ஆயிரம் கேள்விகள் பூத்து பூத்து வாடும். ஆனாலும் கூட ‘சாம்பார்த்தூள எடுத்துக்கிட்டோமா’ என்று பெட்டியைப் பிரித்துப் பார்க்கும் ஒரு எதார்த்த மனதும் கூடவே சுற்றும். இரவானால் மட்டுமே வீட்டுக் கதவை மூடும் நம் இல்லங்களுக்கும் , வீட்டிற்கு வரும் பார்சல்களை வாங்க மட்டுமே கதவைத் திறக்கும் துபாய் இல்லங்களுக்கும் உள்ள பெரிய இடைவெளியை நினைக்கும் போதெல்லாம் மனம் கலங்கிப்போவது இயல்பு தானே.

மண்ணுக்கென்று தனியாக குணங்கள் இருக்கிறதா? தெரியவில்லை. ஆனால், மண்ணில் வாழும் மனிதர்களுக்கென்று தனியா ஒரு குணம் இருக்கு. பால் சக்கரியாவின் இரண்டாம் குடியேற்றம் புத்தகத்தில் ஒரு பெண் திருமணம் முடிஞ்சதும் ஆண் வீட்டுக்குக் குடிபோகணும்ன்னு நிலை வரும் போது, ‘அவன் வீட்டில் என்ன சமைப்பார்கள், நாய்க்குட்டி இருக்குமா, இரக்க குணம் உடையவர்களா’ என்பது மாதிரியாக பெண்ணின் மனது பல்லாயிரம் விஷயங்களை அசை போட்டு, முடிவாக ஒரு மாதம் அவங்க வீட்டில் போய் தங்கித்தான் முடிவு செய்யணும்ன்னு அந்தக் கதை வந்து முடியும். அது போல் எந்த வாய்ப்பும் வெளிநாட்டில் திருமணமாகிப் போற பொண்ணுங்களுக்குக் கிடைக்காது. பூத்துக் குலுங்கிக்கொண்டிருக்கும் ஒரு மரத்தை வேரோட பிடுங்கி வேற இடத்துல நடுவது போல நானும் நான் பொறந்து வளர்ந்த மண்ணை விட்டு, கொஞ்சம்கூடப் பரிச்சயமில்லாத மனிதர்கள் வாழும் புதிய தேசத்திற்கு குடிவந்தேன்.

ஆண் வெளி நாட்டில் வேலை செய்யுறான். அவனைத் திருமணம் செய்யும் பெண்ணும் கூடவே அவளின் அனைத்தையுமே பிறந்த நாட்டில் விட்டுவிட்டு அப்படியே அவன் பின்னால் ஓட வேண்டியிருக்கிறது. ‘அதுக்கென்ன அங்க போய் வேலை தேடிக்கிட்டாப் போச்சு’ என்ற ஒற்றை வரியைக் கணவன் முதல் சுற்றியுள்ள சொந்தம் வரை சொல்லிக்கொண்டே வருவார்கள். பெண்ணின் படிப்பு, வேலை எல்லாமே சமுதாயத்திற்கு இரண்டாம் பட்சமே. தேவைப்பட்டால் வைத்துக் கொள்ளலாம், இல்லையானால் தூக்கி எறிந்துவிடலாம். ‘ஓ! அப்படியா அப்போ ஏன் ஃபாரின் மாப்பிள்ளை தான் வேணும்ன்னு நிக்கறீங்க’ன்னு சில குரூப்பு வேற வரும். நான் சொல்வது அது போல பத்து சதவீதம் நினைக்கும் பெண்களைப் பற்றி அல்ல. அப்படியே நினைத்தாலும் அது அவர்களின் தவறு என்று நான் சொல்லவில்லை. அது அவர்களின் தேர்வு. ஆனால், தனக்கென்று ஒரு படிப்பு, வேலை , சுயமுன்னேற்றம் என்று வாழும் பல பெண்கள் வெளிநாட்டிற்குச் சென்று அனைத்தையும் தொலைத்துவிட்டு, வழி தெரியாமல் விழி பிதுங்கி நிற்கிறோம். அதிலும் குறிப்பாக வளைகுடா மருகள்களுக்கு இன்னுமே பெரிய சங்கடம். இங்கே பெண்களுக்குச் சில குறிப்பிட்ட வேலைகள் தவிர மற்ற துறைகளில் அதிகம் வேலை வாய்ப்புகள் கிடைப்பதில்லை. அப்போ வெளிநாட்டு பையனை திருமணமே செய்யக்கூடாதான்னு கேட்டால் என் பதில் “ஆம்” என்பது இல்லை. மாறாக என்னுடைய கேள்வி ‘ஏன் பெண்கள் அதிகமாக வெளிநாடுகளுக்கு வேலைக்குச் செல்வதில்லை?’ என்பது தான். பக்கத்து ஸ்டேட்டு கேரளா, துபாயில் இருக்குற முக்கால்வாசி ஹாஸ்பிடல் முழுசும் கேரள மேரியும் ஃபாத்திமாவும் தான். அவங்களுக்கும் குடும்பம், குழந்தை என்று இருக்கிறதே. அங்கு வெளிநாட்டு வேலை என்பது ஆண் பெண் இருபாலருக்கும் பொதுவாக இருக்கிறதோ என்று தோணுகிறது. ஆனால், இங்குள்ள பெரும்பாலான தமிழ்ப் பெண்கள் இல்லத்தரசிகளாகவே இருக்கிறார்கள். அது கூட பரவாயில்லை, சில வருசம் கழித்து ஊருக்கு வந்து செட்டில் ஆனதும் மீண்டும் தன் வேலை என்று நம் நாட்டுச் சூழலில் சிக்கிச் சிதறுவது இன்னும் பெரிய கொடுமை. ஆனால், இப்படிப் பயப்படும் அளவுக்கு வெளிநாடும், வெளிநாட்டு வாழ்க்கையும் அத்தனை பூதாகரமானதும் இல்லை. அது இறுதியாகத் தனிப்பட்டவர்களின் விருப்பம் சார்ந்து மட்டுமே இருக்கிறது. அது போகட்டும்…..

என்னோடு சேர்ந்து உலகின் உயரமான கட்டிடத்தின் உச்சியை தடக் தடக் படக் படக் இதயத் துடிப்போடு பயணம் செய்தீர்களா? புல்கூட முளைக்காத பாலைவன தேசத்தில் பூத்துக் குலுங்கும் மலர்த் தோட்டங்களில் புதுமையை அனுபவித்தீர்களா? குப்பூஸ் முதல் ஹம்மூஸ் வரை அரேபியாவின் பல வகையான உணவு வகைகளை ருசிக்க நாவில் ஆவல் எழுகிறதா? என்னதான் அடிக்கடி பயணம் செய்தாலுமேகூட விமானம் ஏறியவுடன் மேரியமாவைக் கூப்பிடும்போது சிரித்தீர்களா? துபாய் வெய்யிலில் நான் வளர்த்த செடியெல்லாம் கருகியது கண்டு மனம் கலங்கினீர்களா? இஸ்லாம் நாட்டில் நான் கொண்டாடிய பொங்கலில் நெகிழ்ந்தீர்களா? இந்தத் தமிழ்ப் பெண் துபாய் மண்ணில் ஆயிரம் சுவையை ருசித்திருந்தாலும் அவளுக்கு அவள் ஊரின் சிறுவாணி ஆற்றுத் தண்ணீர் மட்டுமே என்றும் அமுதமாய் இனிக்கிறது! வேறென்ன? ஓ! இன்னும் அந்த பாட்டைப் பாடவில்லை என்றா? பாடிவிடுவோம். ‘சொர்க்கமே என்றாலும் அது நம்மூரைப் போல வருமா… அட துபாயே ஆனாலும் அது நம் நாட்டுக்கு ஈடாகுமா?’

(நிறைந்தது)

படைப்பாளர்:

சாந்தி சண்முகம்

கோவையைச் சேர்ந்த சாந்தி தற்போது துபாயில் வசித்து வருகிறார். கல்லூரியில் துணை விரிவுரையாளராகப் பணியாற்றியுள்ளார். பயணங்களிலும், எழுதுவதிலும் ஈடுபாடு கொண்டவர்.