பொருள் 12
மனிதர்களுக்கு மிகவும் நெருக்கமான ஓர் உயிரினம் சிம்பன்ஸி. நம்முடைய மரபணுக்கள் பெருமளவில் சிம்பன்ஸிக்களின் மரபணுக்களோடு ஒத்திருப்பதை ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன. இந்தக் குரங்கினத்தின் உடலியல் தன்மைகள், பழக்கவழக்கங்கள் அனைத்தும் விரிவாக ஆராயப்பட்டுள்ளன. அமெரிக்க எழுத்தாளரான மெரிலின் ஃபிரெஞ்ச் சிம்பன்ஸிகளின் சமூக வாழ்க்கையில் தென்படும் ஒரு முக்கியமான அம்சத்தைத் தன்னுடைய நூலொன்றில் குறிப்பிட்டுள்ளார். ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என்று அனைத்து வகை சிம்பன்ஸிகளும் ஒருங்கிணைந்து ஒரே இடத்தில் வசிக்கும் இயல்பு கொண்டவை என்பதுதான் அது.
இதென்ன பெரிய விஷயமா என்று நினைக்க வேண்டாம். காரணம், எல்லா விலங்குகளும் இப்படித் தங்களுக்குள் ஒன்று கலந்து வாழ்வதில்லை. உதாரணத்துக்கு, சிங்கம், யானை ஆகியவற்றை எடுத்துக்கொண்டால் ஆண்கள் தனியாகவும் பெண்கள் தனியாகவும் வசிப்பது வழக்கம். குழந்தைகள் அம்மாவுடன் ஒட்டியிருக்கும். ஆண்கள் தனியே சுற்றிக்கொண்டிருப்பார்கள். வலுவான ஓர் ஆண் விலங்கு மற்ற ஆண் விலங்குகளைக் காட்டிலும் கூடுதல் வசதிகளை அனுபவிக்கும். தண்ணீர், உணவு, இணைச் சேர்க்கை போன்றவற்றை எடுத்துக்கொண்டால் வலுவற்ற ஆண்களைவிட வலுவான ஆண் விலங்குகளுக்கு வாய்ப்புகள் அதிகம் இருக்கும். பெண் விலங்குகளுக்கும் இது பொருந்தும். வலுவான ஆண் அல்லது பெண் விலங்கின் ஆதிக்கத்தை மற்ற விலங்குகள் அவ்வப்போது முறியடிக்க முயலும். அந்த இடத்தைத் தானும் பிடித்துக்கொள்ள வேண்டும் என்று அவை விரும்பும். ஒரு வகையான அதிகாரப் போட்டி என்று இதனை அழைக்கலாம். இந்த அதிகாரப் போட்டி ஆண்களுக்கும் பெண்களுக்கும் தனித்தனியே நடக்கும். பொதுவாக ஆண் விலங்குகள் பெண் விலங்குகளின் உலகத்துக்குள் அநாவசியமாகப் பிரவேசிப்பதில்லை.
ஆனால், சிம்பன்ஸிகள் இவை அனைத்திலும் இருந்து மாறுபடுகின்றன. ஆண்களின் உலகில் பெண் சிம்பன்ஸிகள் தொடர்ச்சியாகத் தலையிடுகின்றன. ஆண் சிம்பன்ஸிகள் தங்களுக்குள் சண்டையிட்டுக்கொள்ளும்போது பெரும்பாலும் ஒரு பெண் சிம்பன்ஸி தலையிட்டு அந்த மோதலை முடிவுக்குக் கொண்டுவரும். அல்லது, வேறொரு விலங்கின் மீது ஓர் ஆண் சிம்பன்ஸி பாயும் சமயங்களில் பெண் சிம்பன்ஸி இடைமறித்து ஆணின் நடவடிக்கையைக் கட்டுப்படுத்தும்.
இங்கே கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயம், இத்தகைய தலையீடுகளை ஆண் சிம்பன்ஸிகள் வரவேற்கின்றன என்பதைத்தான். மற்ற விலங்குகளில் காணக்கிடைக்காத இந்த வித்தியாசமான ‘பெண் தலையீட்டை’ ஆண்கள் மட்டும் ஏன் அனுமதிக்கின்றன அல்லது விரும்புகின்றன? ஏன் பெண்களோடு ஆண் சிம்பன்ஸிகள் ஒன்று கலந்தே காணப்படுகின்றன? தங்களுடைய வலிமையைக் கட்டுப்படுத்தும் அதிகாரத்தை ஏன் பெண்களிடம் ஆண் சிம்பன்ஸிகள் ஒப்படைக்கின்றன? இந்தக் கேள்விகளுக்கு மெரிலின் ஃபிரெஞ்ச் அளிக்கும் பதில் என்ன தெரியுமா?
பெண் சிம்பன்ஸிகளை ஆண்கள் மதிக்கின்றன, நேசிக்கின்றன. ஏனென்றால் பெண் சிம்பன்ஸிகள் நீங்காத அக்கறையுடன் தங்கள் குழுவைச் சேர்ந்தவர்களைக் கவனித்துக்கொள்கின்றன. ஆண், பெண் என்று பேதமின்றி அனைவருடைய நலன்களின்மீதும் கவனம் செலுத்துகின்றன. சூழலுக்கேற்ப அவர்களை வளர்த்தெடுக்கும் பணிகளையும் மேற்கொள்கின்றன. குழந்தைகளைக் கவனித்துக்கொள்ளும் பொறுப்பு மட்டுமல்ல, நல்ல பண்புகளைக் கற்றுக்கொடுக்கும் பொறுப்பும்கூட பெண்களுக்கே உள்ளன. எதையெல்லாம் சாப்பிடலாம், எதையெல்லாம் தவிர்க்க வேண்டும்? இரவு உறங்கும்போது படுக்கையை எப்படித் தயார் செய்ய வேண்டும்? உடல் நலக்குறைவு ஏற்பட்டால் என்ன செய்வது? மற்றவர்களுடன் எப்படி உரையாடுவது போன்றவற்றையெல்லாம் பெண் சிம்பன்ஸிகளே கற்றுக்கொடுக்கின்றன.
பத்தாண்டுகள் வரை சிம்பன்ஸி குட்டிகள் அம்மாவைவிட்டுப் பிரியாது. இடையில் தாய் இறந்துவிட்டால் குழந்தைகள் திண்டாடிப் போகின்றன. குடும்பத்தில் இருந்து வேறு யாரேனும் பாசத்துடன் முன்வந்து கவனித்துக்கொள்ளும்வரை காத்திருக்க வேண்டியதுதான். ஆண்களும்கூட குழந்தைகளை அவ்வப்போது கவனித்துக்கொள்கின்றன என்றபோதும் ஓர் அம்மாவுக்கு உள்ளதைப் போன்ற பொறுப்பு அப்பாவுக்குப் பெரும்பாலும் இருப்பதில்லை. ஆனால், பெண் சிம்பன்ஸிகளோ தங்கள் குழந்தைகளிடமும் குழுவில் உள்ள மற்றவர்களிடமும் மட்டுமல்ல, பிற விலங்குகளிடமும்கூட அன்புடன் பழகுகின்றன. அன்பின் முக்கியத்துவம் தெரிந்திருப்பதால், மற்ற விலங்குகளுக்கும் அன்பை நீட்டிக்கலாம் என்று இந்தப் பெண் சிம்பன்ஸிகள் கருதியிருக்கலாம்.
நம்முடைய மூதாதையர்களும்கூட இப்படித்தான் வாழ்ந்திருக்க வேண்டும் என்கிறார்கள் ஆய்வாளர்கள். அன்பு செலுத்துபவர்களாக, ஆண்களின் உலகத்துக்குள் தலையீடு செய்பவர்களாக, குழந்தைகளை வளர்த்தெடுப்பவர்களாக, அவர்களுக்குப் பண்புகளைக் கற்றுக்கொடுப்பவர்களாக, ஆண்கள் தங்களுக்குள் மோதிக்கொள்ளும்போது தடுத்து நிறுத்துபவர்களாகப் பெண்கள் இருந்தனர் என்கிறார்கள் ஆய்வாளர்கள். ஆண்களின் நேசிப்பையும் மரியாதையையும் அவர்கள் பெற்றிருந்தனர். இந்தச் சமூக அமைப்பு பெண்களை மையப்படுத்தியே இயங்கிவந்தது. இதை மேட்ரியார்க்கி என்று பலரும் அழைக்கிறார்கள். இதன் பொருள் தாய்வழியாட்சி முறை. தாய்வழிச் சமூகம் என்றும் அழைக்கலாம்.
ஆனால், இந்தப் பதம் சரியானதல்ல என்கிறார் மெரிலின் ஃபிரெஞ்ச். தாய்களால் ஆளப்பட்ட சமூக முறை என்னும் பொருளை இது அளிக்கிறது. தாய்கள் சமூகத்தை, குறிப்பாக ஆண்களை ஆட்சி செய்ததில்லை. மேலே பார்த்ததைப் போல் ஆண்கள் பெண்களை ஏற்றுக்கொண்டது அவர்களுடைய தனித்துவமான குணங்களால் மட்டுமே. ஆண்கள் பெண்களைச் சுற்றிப் படர்ந்து வளர்ந்ததற்குக் காரணம் அவர்கள் பெண்களால் வளர்க்கப்பட்டவர்கள் என்பதுதான். பெண்கள் போதித்து வளர்த்த சமூகமாக அது இருந்தது. பெண்களை மையப்படுத்தி அமைந்த அந்தச் சமூகத்தை ‘மாட்ரிசெண்ட்ரி’ என்றுதான் அழைக்க வேண்டும் என்கிறார் ஃபிரெஞ்ச்.
ஆண்களின் ஆதிக்கம் படர்ந்து பரவிய பிறகும்கூட இன்றும் சமூகங்கள் பெண்களை மையப்படுத்தியே இயங்கி வருகின்றன. குட்டி சிம்பன்ஸிகள் தங்களுடைய தாயைச் சார்ந்திருந்ததைப் போலவே குழந்தைகள் இன்றும் அம்மாவைச் சார்ந்து வளர்கின்றன. இன்றும் ஆண்கள் தங்கள் அன்றாடப் பணிகளுக்குப் பெண்களையே நம்பியிருக்கின்றனர். ஆண்களின் மோதல்களைப் பல நேரங்களில் பெண்களே தடுத்து நிறுத்துகின்றனர். ஆண்களின் உலகில் ஒழுங்கையும் கட்டுப்பாட்டையும் அன்பையும் அறிமுகப்படுத்துபவர்களாக இன்றும் பெண்களே திகழ்கிறார்கள். இருந்தும் ஆண்களின் நேசிப்பையும் மரியாதையையும் பெண்கள் பெற்றிருக்கிறார்கள் என்று சொல்லிவிட முடியுமா?
படைப்பாளர்:
மருதன்
எழுத்தாளர், வரலாற்றாளர். சே, ஹிட்லர், ஃபிடல் காஸ்ட்ரோ, திப்பு சுல்தான், மண்டேலா, மாவோ, ஸ்டாலின் ஆகிய உலகத் தலைவர்களின் வாழ்க்கை வரலாறுகளை எழுதியுள்ளார். இவரது ஹிட்லரின் வதைமுகாம்கள், முதல் உலகப் போர், இரண்டாம் உலகப்போர், ஷெர்லக் ஹோம்சால் தீர்க்க முடியாத புதிர், துப்பாக்கி மொழி, திபெத்- அசுரப் பிடியில் அழகுக்கொடி, ஒரு புத்திரனால் கொல்லப்படுவேன் ஆகிய நூல்கள் கவனம் ஈர்த்தவை. பிரபல தமிழ் இதழ்களில் தொடர்கள் எழுதிவருகிறார். இந்து தமிழ் திசை மாயா பஜார் குழந்தைகள் இணைப்பிதழுக்கும் கட்டுரைத் தொடர் எழுதி வருகிறார்.