2010இல் தமிழ்நாட்டில் பெருநகரங்களைத் தவிர்த்துப் பெரும்பாலான ஊர்களில் டயலிசிஸ் செய்யும் வசதியில்லை. நல்லவேளையாகப் புதுச்சேரியில் அந்த வசதி இருந்தது. தனியார் மருத்துவமனையில் திங்கள், புதன், வெள்ளி என வாரம் மூன்று நாட்கள் டயலிசிஸ் செய்ய ஏற்பாடு செய்து கொண்டோம். பிற்பகல் மூன்று முதல் இரவு ஏழு மணி வரை எங்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரம்.  

மருத்துவமனையில் குறைந்த எண்ணிக்கையிலான இயந்திரங்களே இருந்ததால், அவர்கள் நமக்கு ஒதுக்கும் நேரத்தில் மட்டுமே நாம் செல்லமுடியும். நமக்குத் தோதுபடும் நேரத்தைக் கேட்க முடியாது. ஒரு முறை ஹீமோடயலிசிஸ் செய்து முடிக்க நான்கு மணி நேரமாகும். டயலிசிஸ் நடக்கும் போது குறைந்த ரத்த அழுத்தம், மயக்கம் போன்ற பிரச்னைகள் ஏற்பட்டால் நேரம் இன்னும் கூடும்.

அப்போது கணவர் வங்கியில் வேலை செய்து கொண்டிருந்தார். மாலை ஐந்து வரை வங்கிப் பணி நேரம் என்பதால், கிளை மேலாளரிடம் இரண்டு மணி நேரம் ஸ்பெஷல் பர்மிஷன் வாங்கிக் கொண்டு, மதியம் மூன்று மணிக்குக் கிளம்பினார். டயலிசிஸ் முடிந்து வீட்டுக்கு வர இரவு ஏழரைக்கு மேலாகிவிடும்.

வாரத்தில் மூன்று நாள் வங்கியை விட்டு முன்னதாகக் கிளம்புவதால், அந்த நேரத்தை ஈடுகட்ட மற்ற வேலை நாட்களில் இரவு ஏழு வரை வங்கியில் இருந்து இவர் வேலை பார்த்தார். அப்படிச் செய்தும் பணி நேரத்தில் இவர் முன்னதாகக் கிளம்புவது குறித்துச் சக பணியாளர்களில் சிலர் அதிருப்தி தெரிவிக்கத் தொடங்கினர்.

இவர் சீக்கிரம் கிளம்புவதால் அவர்களுக்கு வேலைப் பளு அதிகரித்ததன் காரணமாக அதிருப்தி ஏற்பட்டிருக்கலாம். ‘உடல்நலமில்லை என்றால் விருப்பு ஓய்வு பெற்றுக்கொண்டு, வீட்டில் இருக்க வேண்டியது தானே?’ என்றும் அவர்கள் நினைத்திருக்கலாம்.

கணவன் மனைவி இருவரும் சம்பாதிப்பது குறித்து ஆண்கள் சிலர் அடிக்கடி, “உங்களுக்கென்ன கஷ்டம்? டபுள் எஞ்சின்” என்று சொல்வார்கள். நானும் வங்கியில் வேலை செய்தமையால் மனைவியின் வருமானம் இருக்கும்போது, ‘இவர் விருப்ப ஓய்வு பெற்றுப் போக வேண்டியதுதானே’ என்று அவர்கள் எண்ணியிருக்கக் கூடும். ஆனால் இருவரும் சம்பாதித்ததாலும், வங்கியில் நல்ல சம்பளத்தில் இருந்ததாலும்தான், எக்கச்சக்கமான மருத்துவச் செலவுகளைத் தொடர்ந்து எங்களால் சமாளிக்க முடிந்தது என்பதே உண்மை. அப்போது எதிர்பாரா மருத்துவச் செலவுகளுக்கு மருத்துவக் காப்பீடு எதையும் நாங்கள் செய்து வைத்திருக்கவில்லை. அந்த முன்யோசனை எங்களுக்கு இல்லவே இல்லை.

யாருக்கு வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் எந்த நோயும் வரலாம். திடீரென்று எதிர்பாராமல் குடும்பத்தின் மருத்துவச் செலவு அதிகரிக்கலாம். எனவே இந்தக் காலத்தில் ஒவ்வொருவரும் மருத்துவக் காப்பீடு செய்து வைத்துக் கொள்வது மிகவும் அவசியம்.  

இவர் சீக்கிரம் கிளம்புவதற்குச் சக பணியாளர் ஒருவர், இவர் நண்பரிடம் ஒரு நாள் வெளிப்படையாகவே எதிர்ப்புத் தெரிவித்தாராம்.

“என்ன செய்றது? அவர் போய்த்தானே ஆகணும்? டயலிசிஸ் செய்யலேன்னா செத்துடுவாரே” என்றாராம் இவர் நண்பர்.

“சாகட்டுமே” என்றாராம் அவர், அலட்சியமாக.

அவர் சொன்னதைக் கேட்டுத் தாம் அதிர்ந்து விட்டதாக நண்பர் வருத்தத்துடன் செய்தியைப் பகிர்ந்துகொண்டார். அந்தப் பணியாளர் வேறு ஊரிலிருந்து புதுவை கிளைக்கு மாற்றலாகி வந்தபோது, அவருக்கு வாடகைக்கு வீடு பார்த்துக் கொடுப்பது, குழந்தைகளுக்குப் பள்ளிகளில் அட்மிஷன் வாங்கிக் கொடுப்பது எனக் கணவர் பல உதவிகளைச் செய்திருந்தார். அப்படி இருந்தும் அவர் மனசாட்சியே இல்லாமல் அவ்வாறு சொன்னதை அறிந்தபோது மிகவும் வேதனையாக இருந்தது. தலைவலியும் காய்ச்சலும் தனக்கு வந்தால்தானே தெரியும்?        

2010இல் ஒரு தடவை டயலிசிஸ் செய்ய ரூ 1500/- செலவானது. பெரும்பாலோர்க்கு வாரம் மும்முறை செய்ய வேண்டும் என்பதால் மாதம் ரூபாய் 18000/- செலவாகும். பெரிய மருத்துவமனைகளில் ஒரு தடவைக்கே ரூ 2000/- செலவாகும். மாதச் செலவு ரூ 24000/-. அது தவிர ஹீமோகுளோபின் ஊசி வாரம் ஒன்று போடவேண்டும். மாத்திரைகள் செலவு தனி. ’பொருளில்லார்க்கு இவ்வுலகம் இல்லாகி யாங்கு’ என்பது, சிறுநீரக நோயாளிகளுக்கு மிகவும் பொருந்தும்.

அந்தக் காலத்தில் சென்னை தனியார் மருத்துவமனைகளில் கணவருக்குத் துணையாக நான் தங்கியிருந்த போது டயலிசிஸ் செய்யப் போதுமான பணமில்லாமல் சிறுநீரக நோயாளிகள் புலம்புவதைக் கேட்டிருக்கிறேன். அரசு மருத்துவமனைகளில் ஒரு நோயாளிக்கு 15 முறை மட்டும் இலவசமாகச் செய்துவிட்டு, ’இனிமே இங்கே செய்ய முடியாது; வேறு எங்காவது போய் டயலிசிஸ் செய்து கொள் என்று சொல்லிவிட்டார்கள்’ என்று புலம்புவார்கள்.

வருமானம் இல்லாத பெற்றோர் ஒவ்வொரு முறையும் டயலிசிஸ் செய்யப் பிள்ளைகளிடம் கெஞ்சிக் கேட்டுப் பணம் வாங்கி வந்ததாகச் சோகத்துடன் சொல்வார்கள். ஆனால் தற்போது அரசு மருத்துவமனைகளில் கூடுதலான எண்ணிக்கையில் இயந்திரங்கள் இருக்கின்றன என்றும், ஏழைகளுக்கு இலவசமாக டயலிசிஸ் செய்கிறார்கள் என்றும் கேள்விப்பட்டேன். அந்தச் செய்தி உண்மையாக இருந்தால் மகிழ்வேன்.  

ஒரு டயலிசிஸ் முடிந்து ஒரு நாள் விட்டு அடுத்த நாள் போவதற்குள் சிறுநீர் வெளியேறாததால் உடம்பு ஊதிவிடும். கால்கள் வீங்கத் தொடங்கும். சிலருக்கு மூச்சுத் திணறல் ஆரம்பமாகிவிடும். இரண்டு டயலிசிஸ் அமர்வுக்கு இடையில் எடை கூடினால், உடலில் அதிக திரவம் சேர்ந்திருக்கிறது என்று அர்த்தம். எனவே டயலிசிஸ் செய்யும் போது அதிகளவு நீரை வெளியேற்ற வேண்டியிருக்கும். அதிகளவு நீர் வெளியேறுவதால் ரத்த அழுத்தம் திடீரென்று குறையும். சிலருக்குத் தசைப்பிடிப்பு போன்ற தொந்தரவு ஏற்படும். எனவே நோயாளிக்குச் சிறுநீர் வெளியேறும் அளவைப் பொறுத்து, மருத்துவர் சொல்லும் திரவ அளவைக் கண்டிப்பாகக் கடைப்பிடிக்க வேண்டும்.

சிறுநீரகச் செயலிழப்புக்குப் பிறகு இவருக்கு ஒரு சொட்டுச் சிறுநீர் கூட வெளியேறவில்லை என்பதால், ’ஒரு நாளுக்கு 750 மில்லி லிட்டர் தண்ணீர் மட்டுமே குடிக்கலாம்’ என்றார் மருத்துவர். அந்த முக்கால் லிட்டரில் நாம் குடிக்கும் பால், மோர், காபி, தேநீர் எல்லாமே அடங்கும்.

இவர் சொம்பு சொம்பாகத் தண்ணீர் குடிக்கும் வழக்கம் உள்ளவர். ’சாப்பிடாமல் கூட இருந்து விடுவேன். தண்ணீர் குடிக்காமல் என்னால் இருக்க முடியாது’ என்று புலம்பினார்.

  • வாயில் நீரை நிரப்பி நன்றாகக் கொப்பளித்து விட்டுத் துப்பி விட வேண்டும். விழுங்கக் கூடாது. நன்றாகக் கொப்பளித்தால் தாகம் குறையும்.
  • சிறிய டம்ளரில் நீரை எடுத்துக் கொண்டு உதட்டில் வைத்து காபி, தேநீர் போலச் சிறிய அளவில் உறிஞ்சிக் குடிக்க வேண்டும்.
  • உப்பு அதிகமுள்ள உணவு தாகத்தை அதிகப்படுத்தும். எனவே உப்பை வெகுவாகக் குறைக்க வேண்டும்.  

இவை தண்ணீரைக் குறைவாகச் சேர்க்க எங்களுக்குச் சொல்லப்பட்ட சில யோசனைகள்.

டயலிசிஸ் செய்யும் போது இயந்திரம் ரத்தத்தில் இருக்கும் கழிவுப் பொருட்களையும் அதிகப்படியான நீரையும் நீக்கிச் சுத்தமான ரத்தத்தை மீண்டும் உடலுக்குள் அனுப்புகிறது. டயலிசிஸ் செய்வதில் பல குறைபாடுகள் இருந்தாலும், சிறுநீரக நோயாளிகளின் உயிரைக் காத்து வாழ்நாளை நீட்டிப்பதில் இதற்கு முக்கியப் பங்குண்டு.

சிறுநீரகம் 24 மணி நேரமும் இடைவிடாமல் ரத்தத்தை வடிகட்டுகிறது. அதிலிருந்து உடலுக்குத் தேவையானவற்றை மீண்டும் உறிஞ்சிக் கொண்டு கழிவுகளை மட்டும் சிறுநீரில் வெளியேற்றுகிறது. ஆனால், டயலிசிஸ் வாரத்திற்கு மூன்று முறை மட்டுமே செய்யப்படுகிறது. அதுவும் ஒவ்வொரு முறையும் சுமார் 4 மணி நேரம் மட்டுமே நடைபெறுகிறது. எனவே சிறுநீரகத்தின் அத்தனை நுணுக்கமான வேலைகளையும் இயந்திரத்தால் செய்ய முடியாது.

1966இல் டயலிசிஸ் செய்ய ஏ.வி.ஃபிஸ்டுலா அறுவை சிகிச்சை முறையைக் கண்டுபிடித்த அமெரிக்கச் சிறுநீரக மருத்துவர்களான ஜேம்ஸ் இ. சிமினோ என்பவருக்கும், மைக்கேல் ஜே. பிரெசியா என்பவருக்கும் சிறுநீரக நோயாளிகள் தம் வாழ்நாள் முழுவதும் நன்றிக்கடன் செலுத்த வேண்டும். இன்று உலகம் முழுவதும் நீண்ட காலம் ஹீமோடயலிசிஸ் செய்ய, அந்த முறையே பயன்படுகிறது.

புதுவை மருத்துவமனையில் டயலிசிஸ் செய்தபோதுதான், மறைந்த புதுச்சேரி கவிஞர் உமா மோகன் அறிமுகமானார். அவர் கணவர் மோகனும் அதே மருத்துவமனையில் டயலிசிஸ் செய்து கொண்டிருந்தார். நானும் உமாவும் அச்சமயம் ஒரே படகில் பயணம் செய்தமையால் எங்களின் பிரச்னைகளையும், சுகதுக்கங்களையும் ஒளிவு மறைவின்றிப் பகிர்ந்து கொண்டோம். இரு குடும்பங்களுக்கிடையே நெருக்கம் அதிகமானது. உமா மறையும் வரை என் ஆத்மார்த்தமான தோழியாக இருந்தார். அவரது அகால மரணம் எனக்குப் பேரிழப்பு.

(தொடரும்)

படைப்பாளர்:

ஞா.கலையரசி

புதுச்சேரியைச் சேர்ந்தவர். ஸ்டேட்பாங்க் ஆஃப் இந்தியாவில்  வேலை செய்து ஓய்வு பெற்றுள்ளார். தற்போது சென்னையில் வசிக்கிறார். சிறார்களுக்காக இதுவரை 20 நூல்களை எழுதியிருக்கிறார். வானம், பாரதி புத்தகாலயம், நிவேதிதா, தமிழ்நாடு பாடநூல் கழகம் வாயிலாக நூல்கள் வெளிவந்துள்ளன. வானதி பதிப்பகம் வரலாற்று நாவலை வெளியிட்டுள்ளது. குழந்தைகளின் வாசிப்பை ஊக்குவிக்க ‘சுட்டி உலகம்’ எனும் வலைத்தளத்தை நடத்துகிறார். ‘பூஞ்சிட்டு’ எனும் குழந்தைகள் இணைய இதழின் ஆசிரியர் குழுவில் இருக்கிறார்.