மருத்துவச் சிகிச்சை தொடங்கிய பிறகு இரண்டு வாரம் எந்தப் பிரச்னையுமில்லை. பிறகு கொஞ்சங் கொஞ்சமாகக் தூக்கம் அவரிடமிருந்து விடைபெற்றது. நாள் கணக்கில், வாரக்கணக்கில் தூங்க முடியாமல் அவதிப்பட்ட அவரின் மனநலம் பாதிக்கப்பட்டது. வீட்டில் எல்லாரிடமும் சிடுசிடுவென்று எரிந்து விழுந்தார்.
ஏற்கெனவே நோய் காரணமாக ஏற்பட்ட அதிர்ச்சியுடன், தூக்கமின்மையும் சேர்ந்து கொள்ள மன அழுத்தத்துக்கு ஆளானவர், எந்நேரமும் எதையோ பறிகொடுத்தவர் போலக் காணப்பட்டார். சமயத்தில் குடும்ப உறவுகளின் பெயர்களையே மறந்துவிட்டுக் கூப்பிடத் தடுமாறினார். சில நாட்கள் தமக்குத்தானே பேசவும், சிரிக்கவும் தொடங்கினார்.
மூன்று மாதங் கழித்து முதல் மருத்துவச் சோதனைக்குச் செல்ல வேண்டிய நாளில் புதுவையிலிருந்து சென்னையை நோக்கிப் பேருந்தில் பயணம் செய்தோம். மாலை நேரம். இடையில் பேருந்து ஏதோ ஓர் ஊரில் நின்றது. நடத்துநர் இறங்கிச் சென்று அலுவலகத்தில் கணக்குக் கொடுத்துவிட்டுத் திரும்பி வந்தார்.
பேருந்து நின்றவுடன் கணவர், “பாத்ரூம் செல்கிறேன்” என்று சொல்லிவிட்டு இறங்கிச் சென்றார். நடத்துநர் திரும்பி வந்து பேருந்தில் ஏறி விசில் கொடுக்கும் வரை அவர் வரவில்லை. பேருந்து நகர ஆரம்பித்தது.
பதறிப்போன நான் நடத்துநரிடம் சென்று, “கணவர் வர வேண்டும்; ஐந்து நிமிடம் பொறுங்க” என்று கெஞ்சிக் கேட்டுக்கொண்டேன்.
ஆனால் பத்து நிமிடங்களாகியும் கணவர் வரவில்லை. என் இதயத்துடிப்பு எகிறத் தொடங்கியது. பேருந்திலிருந்தவர்கள் நேரமாகிறதென்று முணுமுணுக்கத் தொடங்கினர். நான் பதற்றத்துடன் பேருந்தை விட்டிறங்கி அங்குமிங்கும் ஓடித் தேடினேன். சிலர் என் கூடவே இறங்கி வந்தனர்.
அந்த நிலையத்திலிருந்து சில பேருந்துகள் புறப்பட்டு வெளியே சென்றவண்ணமிருந்தன. ‘இந்நேரம் திரும்பியிருக்க வேண்டுமே? பேருந்து எண்ணைச் சரியாகக் கவனிக்காமல் வேறு எதிலாவது ஏறிச் சென்றுவிட்டாரா? அவரைத் தனியே இறங்கவிட்டது தப்பு’ என்று யோசித்தபோது படபடப்பு இன்னும் அதிகரித்தது. அங்கிருந்த கூட்டத்தில் புகுந்து ஓடிப் பம்பரமாகச் சுழன்று தேடினேன்.
முடிவில் அங்கிருந்த ஒரு சின்ன பாடாவதி உணவகத்தில் அவரைக் கண்டறிவதற்குள் எனக்குப் போதும் போதுமென்றாகிவிட்டது. டிபன் வாங்கிச் சாப்பிட்டுக் கொண்டிருந்தவரிடம் கோபமாகக் கத்திச் சண்டை போட்டுவிட்டு அழைத்து வந்தேன். என்கூட வந்த பயணிகள் மூலம் நடத்துநருக்கு உண்மை தெரிந்துவிட்டது.
“5 நிமிஷம் பஸ் நிக்கும்னு சொன்னா, போய் டிபன் சாப்பிட ஆரம்பிச்சிடுறாங்க” என்று கடுப்படித்தார் நடத்துநர். கணவரின் மனநலப் பிரச்னை தெரியாமல், அவர் சாப்பிட்டது குறித்துப் பேருந்தில் இருந்தவர்களும் ஆளாளுக்கு நக்கலடித்தனர்.
தாம் போய்ச் சாப்பிட்டது பற்றியோ, மற்றவர்கள் அடிக்கும் கிண்டல் பற்றியோ எந்தவிதக் குற்றவுணர்வும், உறுத்தலுமின்றி அடுத்த சில நிமிடங்களில் இருக்கையில் சாய்ந்து தூங்க ஆரம்பித்துவிட்டார் கணவர். அவர்கள் பேசியது எதுவுமே அவரைச் சென்றடையவில்லை. எனக்குக் கஷ்டமாக இருந்தது. சுகாதாரமற்ற அந்தப் பேருந்து நிலைய உணவகத்தில் சாப்பிட்டதன் விளைவாக, இரண்டு வாரத்தில் டைபாய்டு காய்ச்சல் வந்து அவரைப் பாடாய்ப்படுத்திவிட்டுச் சென்றது.
அடுத்த நாள். என்னைக் கலங்கடித்த இன்னொரு சம்பவம்…
மருத்துவரைப் பார்ப்பதற்கு முன் சில ரத்தச் சோதனைகளின் முடிவுகளோடு செல்ல வேண்டுமென்பதால், சென்னை தாம்பரத்திலிருந்து ராயப்பேட்டையிலிருந்த ஓர் ஆய்வுக்கூடத்துக்குப் பயணமானோம்.
காலை நேரமென்பதால் பேருந்தில் எக்கச்சக்கக் கூட்டம். நான் பேருந்தின் முன்பக்கம் பெண்கள் பக்கம் நின்றேன். அவர் எனக்குப் பின்புறம் கொஞ்சம் தள்ளி நின்றார்.
ராயப்பேட்டையில் நாங்கள் இறங்க வேண்டிய நிறுத்தத்தில் கூட்டத்தோடு சேர்ந்து இறங்கிவிட்டுப் பார்த்தால், கணவரைக் காணோம். பேருந்தில் அவர் நின்றிருந்த இடத்திலும் அவரைக் காணவில்லை. நான் கீழே நின்றவாறே பேருந்தினுள் அவர் இருக்கிறாரா என அவசர அவசரமாகக் கண்களால் துழாவினேன். அவரைப் போலவே கட்டம் போட்ட சட்டை போட்ட ஒருவர் எனக்குத் தம் முதுகைக் காட்டிக் கொண்டு உள்ளே நின்றிருந்தார். “அவரைக் கூப்பிடுங்க ப்ளீஸ்” என்று சன்னலோரம் உட்கார்ந்திருந்த ஒருவரிடம் சொன்னேன். அவர் “ஹலோ” என்று கூப்பிடவும், அந்த நபர் திரும்பிப் பார்த்தார். ஆனால் அவர் வேறு யாரோ! பேருந்து ஓர இருக்கையில் அமர்ந்திருந்தவர்கள் நான் தவிப்பதைப் பரிதாபமாகப் பார்த்தார்கள். ‘மீண்டும் ஏறிச் சென்று உள்ளே தேடலாம்’ என்று நினைப்பதற்குள் பேருந்து புறப்பட்டுவிட்டது.
‘இரண்டு முறை திரும்பிப் பார்த்தபோது அங்கேதானே நின்றார்? தவறுதலாக முன் நிறுத்தத்திலேயே இறங்கிவிட்டாரா? அல்லது உள்ளே காலியான இருக்கையில் போய் அமர்ந்து விட்டாரா?’ என எனக்குக் குழப்பம்.
‘நான் பேருந்தை விட்டு இறங்கியிருக்கக் கூடாது; உள்ளேயே போய்த் தேடியிருக்க வேண்டும்’ என்கிற நினைப்பு அடிக்கடி வந்து போனது. ஆனால் பேருந்து போன பிறகு என்ன செய்வது? அப்போதெல்லாம் கைபேசி இல்லை.
‘ஏற்கெனவே முந்தைய நிறுத்தத்தில் அவர் இறங்கியிருந்தால் என்ன செய்வது?’ மனநலம் கெட்டு என் பெயரே சரியாக நினைவில் இல்லாத போது, வீட்டு முகவரி நினைவில் இருக்குமா? இந்தச் சென்னை மாநகரத்தில் அவரை எங்கே சென்று தேடுவது? அவரைத் தனியே நிற்க விட்டது எவ்வளவு பெரிய தவறு? அவர் கூடவே நான் நின்றிருக்க வேண்டும்’ என்று மீண்டும் மீண்டும் என்னையே நொந்து கொண்டு ஒரு கட்டிட வாசற்படியில் கவலையுடன் உட்கார்ந்து விட்டேன்.
அதற்கு அடுத்த கட்டிடம்தான் நாங்கள் செல்ல வேண்டிய ஆய்வகம். ஒரு வேளை அவருக்கு இந்த ஆய்வகத்தின் பெயர் நினைவிலிருந்தால், விசாரித்துக் கொண்டு வருவார் என்று நம்பியபடி பேருந்து சென்ற திசையையே பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தேன்.
அரை மணி நேரங்கழித்துத் தூரத்தில் நடந்து வருபவர் என் கணவரைப் போலிருக்கவே, அவரை நோக்கி ஓடினேன். ஆம். அவரேதான். எனக்குப் போன உயிர் திரும்பி வந்தது.
“என்னாச்சு? எங்க இருந்தீங்க? ஏன் இறங்கல?” என்று கேட்டேன்.
“பின்னாடி ஒரு சீட் காலியாச்சு. அங்க போய் உட்கார்ந்துட்டேன். அடுத்த ஸ்டாப்புல பஸ் நின்னப்ப உன்னைத் தேடினேன். பஸ்சில இருந்தவங்க போன ஸ்டாப்புலேயே அவங்க இறங்கிட்டுத் தேடினாங்கன்னு சொன்னாங்க. அதான் அங்க இறங்கி நடந்து வரேன்” என்றார்.
அதற்குப் பிறகு அவரை எங்கும் தனியே விடக்கூடாது என்கிற முக்கிய முடிவெடுக்க, இச்சம்பவம் காரணமாக அமைந்தது.
மருத்துவரிடம் சென்று கணவரது பிரச்னைகள் பற்றிக் கூறியவுடனே, “அந்த மாத்திரை இவருக்கு ஒத்துக் கொள்ளவில்லை; உடனே நிறுத்த வேண்டும்” என்று நிறுத்திவிட்டார். வேறு மாற்றிக் கொடுத்த பிறகு பிரச்னை தீர்ந்து கணவர் பழையபடியாகிவிட்டார்.
அவரது மனநலப் பிரச்னைக்கு ஸ்டீராய்டு மாத்திரைதான் காரணமென்று முன்பே தெரிந்திருந்தால், மூன்று மாதம் அதை உட்கொள்ளாமல் உடனே மருத்துவரிடம் சென்று அதை நிறுத்தியிருக்கலாம். அவரிடம் மாத்திரையின் பக்கவிளைவு குறித்து ஆரம்பத்திலேயே கேட்காதது, நாங்கள் செய்த பெரிய தவறு.
(தொடரும்)
படைப்பாளர்:

ஞா.கலையரசி
புதுச்சேரியைச் சேர்ந்தவர். ஸ்டேட்பாங்க் ஆஃப் இந்தியாவில் வேலை செய்து ஓய்வு பெற்றுள்ளார். தற்போது சென்னையில் வசிக்கிறார். சிறார்களுக்காக இதுவரை 20 நூல்களை எழுதியிருக்கிறார். வானம், பாரதி புத்தகாலயம், நிவேதிதா, தமிழ்நாடு பாடநூல் கழகம் வாயிலாக நூல்கள் வெளிவந்துள்ளன. வானதி பதிப்பகம் வரலாற்று நாவலை வெளியிட்டுள்ளது. குழந்தைகளின் வாசிப்பை ஊக்குவிக்க ‘சுட்டி உலகம்’ எனும் வலைத்தளத்தை நடத்துகிறார். ‘பூஞ்சிட்டு’ எனும் குழந்தைகள் இணைய இதழின் ஆசிரியர் குழுவில் இருக்கிறார்.





