‘மாயா லா அசோசியேட்ஸ்’ அலுவலகம்.
“எனக்கு மாதினி மேம பார்த்தே ஆகணும். பிளீஸ்… பிளீஸ்… அண்ணா, ஹெல்ப் பண்ணுங்க” எனக் கெஞ்சிக்கொண்டு நின்றவளை ஏற இறங்கப் பார்த்தான் மனோகர்.
“சொன்னா புரிஞ்சிக்கவே மாட்டேங்கறீங்க. லாஸ்ட் வீக்கே உங்களுக்கு அப்பாயின்மென்ட் கொடுத்தேன். ஆனா அன்னைக்கு வராம விட்டுட்டீங்க. உங்களால அவங்க கிட்ட நான்தான் நல்லா வாங்கிக் கட்டிக்கிட்டேன். இவ்வளவு அவசரம்னு சொல்றவங்க, இப்படியா இர்ரெஸ்பான்ஸிபிளா நடந்துப்பாங்க?” எனக் கடுகடுத்தான்.
“அதான் சொன்னேனே, அன்னைக்கு எனக்கு ஒரு சின்ன ஆக்சிடென்ட் ஆயிடுச்சு. இல்லனா நிச்சயம் வந்திருப்பேன், சாரி அண்ணா. ப்ளீஸ் ஒரே ஒரு சான்ஸ் கேட்டுப் பாருங்க.”
“வந்ததுல இருந்து முன்னூறு சாரி, எழுநூறு ப்ளீஸ் சொல்லிட்டீங்க. ஆனா, நான் சொல்றதத்தான் காதுலயே வாங்க மாட்டேங்கறீங்க.”
“அப்படிலாம் இல்ல…”
“அப்ப நாளைக்கு மார்னிங் அவங்களோட கோர்ட் சேம்பர்ல போய் அவங்கள மீட் பண்ணுங்க. அங்க பார்க்க எந்த அப்பாயின்ட்மென்ட்டும் தேவையில்ல. உண்மையாவே உங்க பக்கம் நியாயம் இருந்தா, அவங்க பீஸ்கூட வாங்க மாட்டாங்க” என்றதும் அவளின் கண்களில் பயம் படர்ந்தது.
“பிளீஸ் புரிஞ்சிக்கங்க. என்னால அங்கலாம் போக முடியாது. போன் போட்டு அவங்களால இன்னைக்கு ஆபிஸ் வர முடியுமான்னு மட்டும் கேட்டுச் சொல்லுங்க. எவ்வளவு நேரம் வேணாலும் வெயிட் பண்றேன்” என்றவளின் குரல் கமறியது.
“ஒரு வாரமா வந்துட்டு இருக்கீங்க. எனக்கே உங்களைப் பார்க்க பாவமாதாங்க இருக்கு. ஆனா மாதினி மேமும் வேணும்னே உங்கள அவாய்ட் பண்ணல. அவங்க போன வாரம் ஃபுல்லா ரொம்ப பிசி. ரெண்டு பேமிலி பங்க்ஷன்ஸ் அட்டென்ட் பண்ண வெளியூர் போனாங்க. கோர்ட் நேரம் போக, அவங்க நிறைய பப்ளிக் பங்க்ஷன்ஸ்ல கலந்துக்கறாங்க. இன்னைக்குக்கூட ஒரு விமன்ஸ் காலேஜ் பங்க்ஷனுக்கு சீஃப் கெஸ்டா போயிருக்காங்க. அங்க போய் டைம் மேனேஜ்மேன்டலாம் பண்ணிட்டு இருக்க முடியாது. முன்ன பின்னதான் ஆகும். புரிஞ்சிக்கோங்க” எனப் பொறுமையாக விளக்கினான்.
இப்படியே இழுத்துக்கொண்டே போனால் அது விபரீதத்தில்தான் போய் முடியும் என அவளுக்கு பயமாக இருந்தது. “ப்ளீஸ், போன் போட்டு லாஸ்ட்டா ஒரே ஒரு தடவ கேட்டுப் பாருங்க. அவங்க முடியாதுன்னு சொல்லிட்டாங்கன்னா நான் போயிடறேன். இதுக்கு மேல உங்கள தொந்தரவு செய்ய மாட்டேன்” என மிகவும் இறங்கி வந்து கெஞ்சிப் பார்த்தாள்.
மனோகருக்குக் கொஞ்சநஞ்சம் ஒட்டிக்கொண்டிருந்த பொறுமையும் காற்றில் போனது. அவனுக்கு மாதினியின் மேல்தான் கோபம் வந்தது. வருபவர் எல்லாருமே அவளைத்தான் கேட்கிறார்கள். இங்கிருந்து பதில் சொல்வது இவனுக்குப் பெரும்பாடாய் இருக்கிறது.
சற்றுத் தள்ளி வந்து கைப்பேசியை எடுத்து மாதினியின் எண்ணுக்கு அழைத்தான். “என்ன மனோ, இப்ப கால் பண்ற?” என அழைப்பை ஏற்றாள். அருகில் அதிக இரைச்சலாக இருந்தது. “அந்த சுப்ரியா வந்திருக்காங்க. உன்ன பார்க்காம போக மாட்டேன்னு கெஞ்சிட்டு இருக்காங்க” என்றான். “இதெல்லாம் நீயே ஹேண்டில் பண்ண மாட்டியா?. எனக்கு கால் பண்ணிட்டு இருக்க” என எரிச்சலுற்றாள்.
“அந்தப் பொண்ணு கிட்ட நான் எவ்வளவோ சொல்லிப் பாத்துட்டேன். புரிஞ்சுக்கவே மாட்டேங்குது. அதுக்கு என்ன பிரச்னையோ தெரியல, உன் கிட்டதான் பேசுவேன்னு பிடிவாதம் பிடிச்சுட்டு நிக்குது. போன அந்தப் பொண்ணு கைல கொடுக்கிறேன். தயவுசெஞ்சு நீயே பேசி புரிய வை. இதுக்கு மேல என்னால முடியல” என்று சொல்லிவிட்டு அவளின் ஒப்புதலைக்கூடக் கேட்காமல் கைப்பேசியை அந்தப் பெண்ணிடம் கொடுத்தான்.
“உங்களத் தொந்தரவு பண்றதுக்கு மன்னிச்சுக்கோங்க, மேம். ஆனா, எனக்கு வேற வழி இல்ல. நான் ரொம்பப் பெரிய சிக்கல்ல மாட்டிக்கிட்டு இருக்கேன். எப்படியாவது என்னைக் காப்பாத்துங்க” என அவசரமாகப் பேசத் தொடங்கினாள்.
“அவ்வளவு முக்கியமான விஷயத்தை இப்படிப் போன்ல எல்லாம் பேச முடியாது இல்ல? அதுவும் இல்லாம இந்த ஃபங்ஷன் முடிய நைட்டு பத்து, பத்தரை ஆயிடும்” என்று மாதினி சொல்ல, “மேம் ப்ளீஸ்… ப்ளீஸ்…” என்பதைத் தவிர வேறு வார்த்தை இல்லை அவளிடம்.
“சரி, ஒண்ணு பண்ணுங்க. அங்க என்னோட சிஸ்டர் யாமினி இருப்பாங்க. உங்க டீட்டைல்ஸ் எல்லாத்தையும் அவங்க கிட்ட கொடுத்துட்டு, என்ன பிரச்னைன்னு தெளிவா அவங்க கிட்ட சொல்லிடுங்க. நாளைக்கு நான் கேட்டுத் தெரிஞ்சுக்கிறேன். உங்க பக்கம் நியாயம் இருந்தா கண்டிப்பா கிஉங்க கேஸ நான் எடுப்பேன் கவலைப்படாதீங்க” என்றாள் மாதினி.
அதிலும் நம்பிக்கையுறாமல் அவள், “மேம்… ப்ளீஸ், உங்க கிட்ட நேர்ல…” என்று இழுக்க, “சாரி, என்கிட்ட இப்போதைக்கு வேற ஆப்ஷன் இல்ல. நீங்க அவங்க கிட்ட நம்பி சொல்லலாம். கேஸ் எடுத்துக்கலாம்னு முடிவு செஞ்சுட்டேன்னா, நானே உங்கள மறுபடியும் கூப்பிடுறேன்” என்று சொல்லி அழைப்பைத் துண்டித்தாள் மாதினி.
ஏமாற்றத்துடன் போன் திரையை அவள் வெறிக்க, “என்ன, என்கிட்டயே எல்லா டீடைல்ஸையும் சொல்லச் சொல்லிட்டாங்களா?” என்று கேட்டான் மனோகர் சிரிப்புடன்.
“இல்ல, அவங்க சிஸ்டர் யாமினி மேம்கிட்ட பேசச் சொல்லிட்டாங்க” என்று அவள் பதில் கொடுத்த விதத்தில், ‘டேய் மனோ, இந்த அவமானமெல்லாம் உனக்குத் தேவையா?’ என மனதிற்குள் புலம்பியபடி, “வெயிட் பண்ணுங்க” என்று சொல்லிவிட்டு அருகில் இருந்த மாதினியின் கேபினுக்குள் சென்று, சில நிமிடங்களில் திரும்ப வந்தான்.
“உங்களுக்கு ஹாப் அன் ஹவர் டைம். வளவளன்னு இழுக்காம, அவங்ககிட்ட என்ன சொல்லணுமோ அத கிரிஸ்பியா சொல்லிட்டு வந்துடுங்க. பேச்சுல உண்மை மட்டும்தான் இருக்கணும். சரின்னு பட்டா மாதினி கண்டிப்பா உங்களுக்கு ஹெல்ப் பண்ணுவாங்க” என்று அவளை அனுப்பினான்.
கதவைத் தள்ளிக்கொண்டு உள்ளே சென்றவள், இருக்கையில் அமர்ந்திருந்த யாமினியைப் பார்த்து அதிர்ந்தாள். காரணம் அவள் அச்சு அசல் மாதினியைப் போலவே இருந்தாள். ஆனால் அவளின் விழிகள் மட்டும் சற்று வித்தியாசமாக இருந்தன. உறைந்து நின்றவளை, “ப்ளீஸ் பீ சீட்டட்” என்கிற யாமினியின் குரல் கலைத்தது.
வேகமாக அமர்ந்தவளின் விழிகளை ஊடுருவிப் பார்த்தபடி, “உங்க நேம் சுப்ரியாவா?” என்று வினவினாள்.
“எஸ் மேம், சுப்ரியாதான்…”
“உங்களுக்கு என்ன பிரச்னை? எதுக்கு லீகல் ஹெல்ப் வேணும்?”
“நான் ஒரு ஆன்லைன் ஸ்கேம்ல ஏமாந்து, அஞ்சு லட்சத்த இழந்துட்டேன், மேம்.”
“போலிஸ் கம்பிளைன்ட் பண்ணிட்டீங்களா?”
“இல்ல, மேம்…”
“பண்ணலயா? அதைச் செய்யாம எதுக்கு மாதினிய பார்க்க வந்திருக்கீங்க?”
“இல்ல மேம், ஹஸ்பண்ட்டுக்குத் தெரியாம என்னோட ஜுவெல்ஸ அடகு வெச்சு, அந்தப் பணத்த அவங்க சொன்ன அக்கவுண்ட்டுக்கு அனுப்பிட்டேன். நான் ஏமாந்ததே ஒரு மாசம் கழிச்சுதான் எனக்குத் தெரிஞ்சுது. வீட்டுக்குத் தெரியாம போலிஸ் கம்பிளைன்ட் கொடுக்க முடியாது. இத வேற எப்படி ஹேண்டில் பண்றதுன்னு தெரியல. அதனாலதான் மாதினி மேம் கிட்ட ஹெல்ப் கேட்டு வந்திருக்கேன்.”
“தென் ஃபைன், என்ன நடந்துச்சுன்னு பிரீஃபா சொல்லுங்க” என யாமினி சொல்லவும், நடந்தவற்றைச் சுருக்கமாகச் சொல்லி முடித்தாள்.
“இந்த டீடைல்ஸ் போதும். என்ன செய்யணும்னு மாதினிதான் டிசைட் பண்ணுவாங்க. வீட்டுக்குப் போய், நீங்க யூஸ் பண்ற சோஷியல் மீடியா லிங்க்ஸ், ஒண்ணு விடாம எல்லாத்தையும் எனக்கு ஈமெயில் பண்ணுங்க” என்று சொல்லி அவர்களின் மின்னஞ்சல் முகவரியைச் சொன்னாள்.
“ஷ்யூர் மேம், தேங்க் யூ” என்று அவளுக்கும் வெளியில் வந்து மனோகருக்கும் நன்றி சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்பினாள் அவள்.
அடுத்த நொடியே ஒரு நீண்ட குறுஞ்செய்தி யாமினியிடமிருந்து மாதினிக்குப் பறந்தது.
‘ஹாய் மாதினி, அந்தப் பெண்ணிடம் முழு உண்மை இல்லை. உண்மையில் அவள் சுப்ரியாவே இல்லை. அவள் பெயர் அமுதா. ஆனால் அவளின் உடல்மொழியிலிருந்து நான் தெரிந்துகொண்டது, அவள் சொன்ன எதுவும் பொய்யில்லை. உண்மையில் பிரச்னையில் இருக்கிறாள். அவளுடைய ஆண்டிராய்டு போனை ஹாக் செய்துவிட்டேன். அவளின் லைவ் லொகேஷன் ஷேர் செய்திருக்கிறேன்.
வேறு எதுவும் தகவல் தேவையா?’
நிகழ்ச்சி முடிந்து மாதினி பார்ப்பதற்காக அவளின் கைப்பேசியில் காத்திருந்தது அந்தத் தகவல்.
(தொடரும்)
படைப்பாளர்

எழுத்தாளர் கிருஷ்ணப்பிரியா நாராயணன். தமிழ் நாவலாசிரியர் மற்றும் பதிப்பாளர். சென்னையில் வசிக்கிறார். சென்னை வானொலி நிலைய நிகழ்ச்சித் தொகுப்பாளராக இருந்தவர். இவரது பதினாறு நாவல்கள் புத்தகங்களாக வெளிவந்திருக்கின்றன. ஹெர் ஸ்டோரிஸ் வலைதளத்தில் பெண்ணியக் கட்டுரைகள் எழுதி வருகிறார். சிறாருக்கும்
நூல்களும் எழுதி வருகிறார்.




