ஸ்ரீ தலதா மாளிகை (Sri Dalada Maligawa) /புனிதப் பல் கோவில் வளாகத்திற்குச் செல்லும் சந்திப்பில், கண்டி ஏரிக்கு (Kandy Lake) அருகில், ஜெனரல் அனுருத்த ரத்வத்த (General Anuruddha Ratwatte) அவர்களின் வெண்கலச் சிலை உள்ளது. இவர், கண்டி மாவட்ட விளையாட்டு அமைப்பை நிறுவியவர்; மின்சார சீரமைப்பு, கண்டி கிழக்கு குடிநீர் விநியோகத் திட்டம் போன்றவற்றில் இவர் சிறந்த பங்களிப்பைச் செய்துள்ளார்.
அப்படியே பயணித்தால், சாலையின் ஒருபக்கம் நூற்றாண்டைக் கடந்த அழகிய கட்டிடம், எதிரில் பெரிய வளாகம்! தரையில் அமர்ந்து உணவை சுவைக்கும் புறாக்கள், அருகே மக்கள் கூட்டம் என அந்த இடம் கலகலப்பாகவே இருந்தது.


இந்த வளாகத்தினுள்தான் கோவில் உள்ளது. இதன் வலது பக்கம் முழுவதும் பூக்கடைகள், விளக்கு ஊதுவத்தி கடைகள். பொதுவாக ஈக்களைத்தான் நாம் கடைத்தெருக்களில் பார்த்திருப்போம். ஆனால் இங்கே சுற்றியவையோ தேனீக்கள்! கடைகளிலிருக்கும் பூக்களைச் சுற்றி அவை வருவதெல்லாம் கண்கொளாக் காட்சி! கடைக்காரர் கைக்கு எட்டாத இடத்திலிருக்கும் பூக்களில் அவை கூட்டமாக உட்கார்ந்து இனிய ஓசையைக் கொடுக்கின்றன. இலவச இசை!
வளாகத்தில் இடதுபக்கம் சுற்றிலும் கம்பி போட்டு வேலி அமைத்திருக்கிறார்கள். அதற்கடுத்து தான் ஏரி உள்ளது. இரண்டிற்குமிடையில் இருக்கும் பாதை வழியேதான் கோவிலுக்குள் நுழைய இயலும். வெளியே வருவதற்கு முன்பக்க வழியைப் பயன்படுத்திக்கொள்ளலாம். நெருக்கடியைத் தவிர்ப்பதற்கான சிறப்பான ஏற்பாடு இது. வலதுபுறம் ஏரியைப் பார்த்துக்கொண்டே நடப்பது என்பது அழகிய அனுபவம்.
பச்சைபோர்த்திய மரங்கள்

செல்லும் வழியில் நிற்கும் மரங்களில் பாசிபோன்று ஆனால் சிறிய வேர் கொண்ட தாவரங்கள் நீக்கமற உள்ளன. இதே போன்று மரங்கள் சிலவற்றை மலேசியாவில் பார்த்ததுண்டு. இவை மின்னல் பாசிகள் (Ferns) அல்லது எபிஃபைட்ஸ் (Epiphytes – தொற்றுத்தாவரங்கள்) வகையைச் சேர்ந்தவை; மரங்களுக்குப் பாதிப்பு ஏற்படுத்தாமல், காற்றில் உள்ள ஈரப்பதத்தை உறிஞ்சி வாழும் இயல்புடையவை. இலங்கை மற்றும் மலேசியா ஆகிய இரு நாடுகளுமே வெப்பமண்டல மழைக்காட்டுக் காலநிலையைக் கொண்டிருப்பதால், அங்குள்ள தாவர அமைப்புகளில் இந்த ஒற்றுமை காணப்படுகிறது.
உல்பாங்கே

வலைப்பக்கமிருக்கும் ஏரி, 1807 ஆம் ஆண்டில் மன்னர் ஸ்ரீ விக்கிரம ராஜசிங்கால் கட்டப்பட்ட செயற்கை ஏரி. இது ‘பாற்கடல்’ என்றும் அழைக்கப்படுகிறது. இதன் நடுவில் இருக்கும் சிறிய தீவு, மன்னரின் தனிப்பட்ட ஓய்விடமாகப் பயன்படுத்தப்பட்டது.
பாதையின் முடிவில் இடப்பக்கம் ‘உல்பாங்கே’ எனப்படும் அரசியின் குளியல் மண்டபம் உள்ளது. இந்த ஈரடுக்குக் கட்டடமும், மன்னர் ஸ்ரீ விக்ரம ராஜசிங்கனால் கட்டப்பட்டது தான். இதன் தரைத்தளம் ஏரி நீரால் சூழப்பட்டு, அரச குடும்பத்தின் பெண்கள் குளிப்பதற்காகப் பயன்படுத்தப்பட்டது. இதன் உள்ளேயே ஏரி நீரும் செல்கிறது. சுரங்கப்பாதை மூலம் அரண்மனையுடன் இக்குளம் இணைக்கப்பட்டுள்ளது என்றும் சொல்லப் படுகிறது.
பெரிய தூண்கள், மர உத்திரம், நிலை, கூரை, மரத்தூண்கள், சுண்ணாம்புத் தூண்கள் எனக் கட்டிடம் பழமையை நினைவூட்டினாலும், நல்ல பராமரிப்பின் மூலம் புதிய கட்டிடம் போன்றே உள்ளது.
அருகில் இருக்கும் பதாகை இவ்வாறு சொல்லுகிறது.

கண்டி இராச்சிய காலத்துக் கட்டடங்களில் பலகை பாவிக்கப்பட்ட விசேட வீட்டு நிர்மாண அங்கங்கள்.
1 கூரை 2 கதவு மற்றும் கதவு நிலை
3 பலகைத்தூண்
4 போதிகை
5 முட்டு
6 தறி

மற்றுமொரு பதாகை கண்டி ஒப்பந்தம் குறித்த வரலாற்றைச் சொல்லுகிறது. “மேலைத்திய ஆதிபத்தியத்தின் இடைவிடாத படையெடுப்புகள் தோல்வியுற்று பூரணமாக நாட்டினைக் கைப்பற்ற முடியாமற் போனதன் பின்னர், 1815 ம் ஆண்டு மார்ச் 02 ம் திகதிய கண்டிய ஒப்பந்தத்தோடு வெற்றியைப் பெற்றுக் கொண்டனர். கண்டி வாழ் உயர்குலத்தவர்களையே காணப்பட்ட ஒற்றுமையின்மை மற்றும் பலவீனம் காரணமாக, பல்வேறு பட்ட மன்னர்களாலும் ஆளப்பெற்ற இந்நாட்டின் அரசபரம்பரை ஸ்ரீ விக்கிரமராஜசிங்க மன்னனை ஆங்கிலேயர் வெற்றி கொண்டதன் பின்னர் இந்நாட்டின் சுதேச ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வந்தமையே அவர்கள் பெற்றுக்கொண்ட விசேட வெற்றியாகும். ஆங்கில மேலாதிக்கம், கலாச்சாரம் தொடர்பாகச் சிங்கள மக்களிடையே நிலவிய அதிருப்தி பற்றி அறிந்திருந்த அவர்கள் தந்திரோபாயமான முறையில் தங்களின் விருப்பங்களைச் சிங்கள மக்களிடத்தில் செல்வாக்குப் பெற முயன்றனர். இதன் பிரதிபலனாக 1815 பங்குனி 02 ம் திகதி கண்டி மகுல் மடுவத்தில் “கண்டிய ஒப்பந்தம்” என்னும் பெயரிலான ஒப்பந்தத்தைச் செய்துகொண்டனர்.”
பதாகைகளிலிருக்கும் சொற்களை நான் அப்படியே எழுதியிருக்கிறேன். இலங்கையின் சொல்லாடல்களை இவற்றின்மூலம் நாம் புரிந்து கொள்ளலாம்.
புனிதப்பல்லின் நீண்ட பயணம்

இந்த தலதா மாளிகையிலிருக்கும் புத்தரின் பல்லிற்கு நெடிய வரலாறு உள்ளது. அனைத்தும் இணையம் மற்றும் காணொளிகள் சொல்லும் தகவல்கள்தான்!
தாதவம்சம் (Dathavam ) என்பது கி.பி 3-4ஆம் நூற்றாண்டில் அனுராதபுரத்தின் சிறிமேகவண்ணனின் ஆட்சிக் காலத்தில் இலங்கைக்குப் பல் முதன்முதலில் வந்தபோது எழுதப்பட்ட சிங்கள உரையின் மொழிபெயர்ப்பாகும். இது எழுதப்பட்ட காலம் கிபி 13ஆம் நூற்றாண்டு. இந்நூல் பல்லின் பயணத்தைச் சொல்லுகிறது.
புத்தரின் இறப்பிற்குப் பிறகு, இறுதிச் சடங்கிற்குப் பின்னான சாம்பலிலிருந்து கேமா (Khema) என்கிற பெண், புத்தரின் பல்லை எடுத்திருக்கிறார். இவர் புத்தரின் முதல் பெண் சீடர்; மகத மன்னர் பிம்பிசாரரின் மனைவி. கேமா, பிரமதத்தா (Brahmadatta) என்ற கலிங்க மன்னரிடம் கொடுத்துள்ளார். பல் கலிங்கத்தின் தலைநகரான தந்தபுரத்தில் (பூரி) பெரிய கோவில் ஒன்றில் வைக்கப்பட்டிருக்கிறது. கலிங்கம் என்பது இன்றைய ஒரிசா பகுதி என்கிறது Tooth of Buddha: A Story of Worship, Heritage & Wars (Temple of Tooth, Kandy, Sri Lanka) என்கிற காணொளி. ஆனால் ஆந்திராவில் இப்பெயர் கொண்ட ஊர் ஒன்று உள்ளது. பல் (தந்தம்) வைக்கப்பட்டிருந்த இடம் என்பதால் தந்தபுரம் எனப் பெயர் இருந்திருக்கலாம். ஆந்திராவின் ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் ஒரு சிறிய கிராமமாக இப்போது உள்ளது. வரலாற்றாசிரியர்கள் இது கலிங்கத்தின் தலைநகரம் என்று நம்புகிறார்கள். இப்படி சிறு குழப்பம் உள்ளது. பல், 800 ஆண்டுகளுக்கும் மேலாக அங்குச் சிறப்பான முறையில் பாதுகாப்பாக இருந்திருக்கிறது.
குகாசிவா (Guhasiva) என்ற நான்காம் நூற்றாண்டு கலிங்க மன்னர்தான் முதலில் புத்த சமயத்திற்கு மாறியிருக்கிறார். அதுவரை இருந்த மன்னர்கள் இந்துக்கள். புதிதாக சமயம் மாறிய அவர், தனது பழைய சமயத்தில் இருந்தவர்களைக் கொல்லத்தொடங்கியிருக்கிறார். மன்னர் சமயம் மாறினால் அனைவரும் மாறியாகவேண்டும் என்பதுதான் அன்றைய நிலையாக இருந்திருக்கவேண்டும்.
மக்கள் பாடலிபுத்திரம்போய் அடைக்கலம் கேட்டிருக்கிறார்கள். அப்போது அங்கு பாண்டு (Pandu) பேரரசராக இருந்திருக்கிறார். அவரிடம் கப்பம் கட்டும் மன்னராகத்தான் குகாசிவா இருந்திருக்கிறார். இதனால் பல்லுடன் அவரை அழைத்து (இழுத்து) வரச்சொல்லி, மற்றொரு குறுநில மன்னரைப் படையுடன் பாண்டு அனுப்பியிருக்கிறார். ஆனால் போன பாதையில் இவர்களும் புத்த சமயத்திற்கு மாறிவிட்டார்கள். ஆனாலும் மன்னரின் கட்டளையை அந்த குறுநில மன்னர் கடைப்பிடித்தார். பல் பாடலிபுத்திரம் வந்து சேருகிறது.
பாண்டு பல்லைத் தீயில் போட்டார். தீயிலிருந்து பெரிய தாமரை வந்தது. உள்ளிருந்து பல் மிளிரத் தொடங்கியது. அழுக்கான பள்ளத்தில் புதைத்தார். ஆனால் அது தூய குளமாக மாறியது. சுத்தியலால் அடித்தும் பல் உடையவில்லை. பாண்டுவும் புத்த மதத்திற்கு மாறினார். பாடலிபுத்திரத்தில் பல் வைப்பதற்கென பெரிய கோவிலைக் கட்டினார்.
இலங்கை வந்த புனிதப்பல்

கிராதரா (Khirathara) என்ற மன்னர் வடக்கிலிருந்து வந்து பல்லை எடுத்துச் செல்லமுயன்றார். பாண்டுவே வென்றார். ஆனாலும் பாண்டு பல்லை மீண்டும் பழைய (தந்தபுர) கோவிலில் கொண்டுவந்து வைத்துவிட்டார். கிராதரா இப்போது இங்குப் படையெடுத்து வருகிறார். இதனால் குகாசிவா, தனது மகள் ஹேமமாலா மற்றும் மருமகன் தந்தகுமார் இருவரிடமும், பல்லை இலங்கைக்குக் கொண்டு செல்லுங்கள் என்று சொல்லியிருக்கிறார். ஹேமமாலா, தனது முடியில் மறைத்து வைத்து, இங்கு கொண்டு வந்திருக்கிறார்.
வந்த இடம் லங்காப்பட்டனம் / திருக்கோணமலை (Lanka Pattanam/ Trincomalee). இங்கு மகாசேனா என்கிற மன்னரிடம் கொண்டு வந்திருக்கிறார்கள். இவர் குகசிவாவின் நண்பர்.
ஹேமமாலா மற்றும் தந்தகுமார் பல்லை அநுராதபுரம் கொண்டு வந்த நேரத்தில் மகாசேனா இறந்துவிட, அவரது மகன் கீர்த்தி ஸ்ரீ மேஹாவனா கி.பி 301–328 (Keerthi Sree Mehavanna) பல்லைப் பெற்றுத் தம்மக்காக்ககேஹா (Dammacakkageha) என்கிற கோவிலில் வைத்தார். அதுதான் இன்றைய இசுருமுனியா என்றும் சொல்லுகிறார்கள். பின் புனிதப்பல்லை அபயகிரி விகாரத்தில் வைத்திருக்கிறார்கள். இவை குறித்துப் பின்னர் பார்க்கலாம்.
விஜயபாகு காலம்வரை அபயகிரி விகாரத்தில்தான் பல் இருந்திருக்கிறது. இவர் ராஜராஜ, ராஜேந்திர சோழர்களின் சம காலத்தவர். பொன்னியின் செல்வனில், சோழர் பாண்டிய நாட்டின் மீது படையெடுக்க, சிங்கள நாட்டு அரசன் மகிந்தன் பாண்டியருக்கு உதவியிருக்கிறார். இதனால் அவரை ஒடுக்க வேண்டுமெனத்தான் அருள்மொழிவர்மன் இலங்கை செல்கிறார். அப்போது அவருக்கு வயது பத்தொன்பது என்கிறார் கல்கி. மணிரத்தினத்தின் அருள்மொழிவர்மனுக்கும் பத்தொன்பது வயதா எனக் கேட்கக்கூடாது. ஷ்…

சோழர் காலத்தில் பொலனறுவா தலைநகரானது. அதுவரை அநுராதபுரத்தில் பல் இருந்தது. அனுராதபுரத்தில் நடைபெற்ற திருவிழா குறித்து கல்கி, ‘பொன்னியின் செல்வனில்’ குறிப்பிடுகிறார்.
பிற்காலத்தில் முதலாம் விஜயபாகு பொலனறுவாவில் (தலைநகர்) பல் மாளிகையை அமைத்திருக்கிறார்.
1247இல் சந்திரபானு தாய்லாந்து / ஜாவா (Chandrabanu of Java) பாண்டியர் ஆட்சியின் கீழிருந்த இலங்கையின் மீது படை எடுத்து வெற்றிகொள்ள, அவரும் பல்லைத்தான் குறிவைத்திருக்கிறார். ஆனால் இலங்கையின் இரண்டாம் பராக்கிரம பாகுவால் இவர் மகன் தோற்கடிக்கப்பட, பல் தப்பியது.
இலங்கை முழுவதையும் சுற்றிய புனிதப்பல்
தென்னிந்திய படையெடுப்புகளிலிருந்து பல்லைக் காப்பாற்ற எனத் தலைநகரம் 1272ஆம் ஆண்டு அநுராதபுரத்தின் தென்மேற்குப்பகுதியிலிருக்கும் யாப்பகூவா (Yapahuwa) என்னும் இடத்திற்கு மாற்றப்பட்டது. அங்கு மலை ஒன்றில் கோட்டை, கோவில் எல்லாம் கட்டிப் பாதுகாத்திருக்கிறார்கள். ஆனாலும் பாதுகாப்பை மீறி தென்னிந்திய மன்னர்கள் யாப்பகூவாவைக் கைப்பற்றியிருக்கிறார்கள். அவர்களிடமிருந்து மீண்டும் சிங்கள மன்னர் கைப்பற்றியிருக்கிறார். இவை குறித்த வரலாறுகளை நாம் பொலனறுவா, அனுராதபுரம், சிகிரியா பயணங்களில் பார்க்கலாம்.
‘பல்’ ஆட்சி உரிமையின் அளவுகோலாகப் பார்க்கப்பட்டதால், அதை அங்குமிங்கும் பந்தாடியிருக்கிறார்கள். இதனால் புத்தரின் புனிதப்பல் ஏறக்குறைய இலங்கைத் தீவு முழுவதையும் பார்த்திருக்கிறது. ஸ்ரீ வீரபராக்கிரம நரேந்திரசிங்க மன்னர் (1707- 1739) கட்டிய கோவில்தான் இப்போதுள்ள கோவில்.
கண்டி அரச மரபினர் எப்போதுமே தென்னிந்திய நாயக்கர் மரபிலிருந்து பெண் எடுத்திருக்கின்றனர். கண்டியின் கடைசி அரசன், வாரிசு இல்லாமல் இறக்க, மதுரை நாயக்கர் மரபைச் சேர்ந்த அரசியின் தம்பி அரசனாக்கப்பட்டார். இப்படி நான்கு நாயக்க மன்னர்கள் ஆண்டிருக்கிறார்கள். இவர்கள் பல் கோவிலைச் சிறப்பாகப் பராமரித்து வந்திருக்கிறார்கள். கண்டிதான் இலங்கையின் இறுதி அரசு என்பதையும் இங்குக் குறிப்பிடவேண்டும். அதாவது இலங்கையின் இறுதி அரசு, இந்திய நாயக்க மன்னர்களின் அரசாகவே இருந்திருக்கிறது.
ஐரோப்பிய ஆட்சியில் புனிதப்பல்
போர்த்துக்கீசியர் ஆளுகையின்கீழ் இலங்கை வந்தது. 1561ஆம் ஆண்டு போர்த்துக்கீசிய கோவா ஆளுநர், கோவா மறைமாவட்ட ஆயரிடம் பல்லைக் கொடுத்திருக்கிறார். மியான்மரில் இருந்த ஹந்தவாடி (பெகு) The Hanthawaddy kingdom (Pegu) அரசின் அரசர் பல்லை உடைக்காமலிருக்க, 50,000 பவுண்ட் கொடுப்பதாகச்சொல்லியிருக்கிறார். அதற்கு இணையாக, மலாக்காவில் (Malacca) அப்போது இருந்த போர்த்துக்கீசியப் படைக்கு ஒரு கப்பல் அரிசியும் அனுப்புவதாகச் சொல்லியிருக்கிறார். மலாக்கா, மலேசியாவில் இருக்கும் ஒரு நகரம்.
ஆளுநருக்கு இவ்வளவு பணம் ஒரு பல்லிற்காகக் கிடைக்கிறதே என்று விருப்பம்தான். இங்கு ஆளுநருக்கும் மியான்மர் மன்னருக்கும் பேச்சுவார்த்தை நடந்துகொண்டிருக்க, செய்தி ஆயருக்குப் போய்விட்டது. ஆயர் பல்லை நொறுக்கி, எரித்து சாம்பலை மண்டோவி ஆற்றில் கரைத்திருக்கிறார். ஆனால் அது தாமரைப்பூவில் மிதந்து இலங்கை வந்துவிட்டது என்றும், அங்கே அவர்கள் கொண்டு சென்றது பொய்ப்பல் என்றும், பல் ஏற்கனவே இலங்கையில்தான் வேறு வேறு இடங்களில் மறைத்துவைக்கப் பட்டது என்றும் இருவேறு கருத்து உள்ளதாக ஒரு காணொளி சொல்லுகிறது.
கண்டி ஒப்பந்தம் ஆங்கிலேயரின் ஆட்சியைக் கண்டிக்குக் கொண்டுவந்தது. அதுவரை கண்டி, சிங்கள மன்னரால்தான் ஆளப்பட்டது என்றால் பல் எப்படி போர்த்துக்கீசிய ஆளுநர் கைக்குப் போனது?
1560-1561இல் போர்த்துக்கீசியர்கள் பல்லைக் கைப்பற்றியபோது, கண்டி, யாழ்ப்பாணம் இரண்டும் தனித்தனி அரசுகளாகவே இருந்தன. அப்படியென்றால் அந்தப் பல் எப்படி போர்த்துக்கீசியர் கையில் சிக்கியது என்பதற்கு வரலாற்றில் இரண்டு விளக்கங்கள் உள்ளன.
1560ஆம் ஆண்டு போர்த்துகீசிய வைஸ்ராய் கான்ஸ்டான்டினோ டி ப்ரகன்சா, யாழ்ப்பாண மன்னன் சங்கிலியனுக்கு (Cankili I) எதிராகப் படையெடுத்தார். இந்தத் தாக்குதலின்போது, யாழ்ப்பாணத்தின் புகழ்பெற்ற நல்லூர் கந்தசுவாமி கோவிலில் அல்லது அதற்கு அருகிலுள்ள பௌத்த விகாரையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த பல்லை போர்த்துக்கீசியர்கள் கைப்பற்றினர்.
போர்த்துக்கீசியர்களிடமிருந்து புனிதப்பல்லைப் பாதுகாப்பிற்காக, பௌத்த துறவிகள் அதைத் தற்காலிகமாக வடக்கே இருந்த யாழ்ப்பாண மன்னனின் பாதுகாப்பிற்கு அனுப்பியிருக்கலாம் என்று நம்பப்படுகிறது. அதனால்தான் யாழ்ப்பாணத்தைப் போர்த்துக்கீசியர்கள் தாக்கியபோது அது அவர்கள் கைகளில் சிக்கியது.
மற்றொரு வரலாற்றுப் பதிவின்படி, கொழும்புக்கு அருகிலுள்ள கோட்டே (Kotte) அரண்மனையை போர்த்துக்கீசியர்கள் சூறையாடியபோது, அங்கிருந்த பௌத்த வழிபாட்டுத் தலங்களில் இருந்து ஒரு பல்லைக் கைப்பற்றினர். ஆனால், பல்லின் பாதுகாவலர்கள் அதற்கு முன்பே உண்மையான பல்லை எடுத்துக்கொண்டு இரத்தினபுரி காட்டுப் பகுதிக்குத் தப்பிவிட்டனர். போர்த்துக்கீசியர்களிடம் சிக்கியது ஒரு போலிப் பல்லே ஆகும்.
சுருக்கமாகச் சொன்னால், கோவாவில் அழிக்கப்பட்ட பல் கண்டி நகரிலிருந்து எடுக்கப்பட்டதல்ல; அது யாழ்ப்பாணம் அல்லது கோட்டே பகுதியிலிருந்து போர்த்துக்கீசியர்களால் கைப்பற்றப்பட்ட ஒன்றாகும். உண்மையான பல் எப்போதும் கண்டி மற்றும் இரத்தினபுரி மலைப் பகுதிகளிலேயே பத்திரமாக இருந்தது.
இப்படிப் புத்தரின் புனிதப்பல் வரலாறு போகிறது. இப்போது நிரந்தரமாகப் புனிதப் பல் கண்டியில் குடிகொண்டுள்ளது. இந்தியாவின் கலிங்க மண்ணில் தொடங்கி, இளவரசி ஹேமமாலாவின் கூந்தலில் மறைந்து வந்து, சோழர் படையெடுப்புகள், போர்த்துகீசிய-டச்சு ஆட்சிகள், அரைக்கும் கல்லின் மறைவிடம் என அனைத்தையும் கடந்து, இன்று கண்டி ஏரிக்கரையின் ஸ்ரீ தலதா மாளிகையில் பௌத்த உலகின் ஆகச்சிறந்த புனிதச் சின்னமாக இப்பல் அமைதியாக இருக்கிறது.
தொடரும்…
படைப்பாளர்

பாரதி திலகர்
தீவிர வாசிப்பாளர், பயணக் காதலர்; தொன்மை மேல் பெரும் ஆர்வம் கொண்டவர். அயல்நாட்டில் வசித்து வந்தாலும் மண்ணின் வாசம் மறவாமல் கட்டுரைகள் எழுதிவருகிறார். ஹெர் ஸ்டோரிஸில் இவர் எழுதிய கட்டுரைகள், ‘பூப்பறிக்க வருகிறோம்’, ‘சினிமாவுக்கு வாரீகளா ? – 1, 2 & 3’ என்கிற புத்தகங்களாக, ஹெர் ஸ்டோரிஸில் வெளிவந்திருக்கின்றன. இவை தவிர ‘தமிழர் பாரம்பரிய விளையாட்டுகள்’, ‘நகர்தல் என்றும் நன்று’, ‘கேட்டல் என்றும் நன்று’, ‘ஒரு தாய் மக்கள்’ ஆகிய நூல்களை எழுதியுள்ளார். தொடர்ந்து இந்து தமிழ் திசை உள்ளிட்ட நாளிதழ்களில் எழுதிவருகிறார். இவரது நூல்கள் கவிதை உறவு உள்ளிட்ட விருதுகளை வென்றுள்ளன. ‘சினிமாவுக்கு வாரீகளா – 4’ மற்றும் ‘சாதனை படைக்கும் சாமானியர்’ என்கிற இரண்டு தொடர்களை ஹெர் ஸ்டோரீஸ் வலைத்தளத்தில் எழுதியுள்ளார்.





