‘இப்போது சிறுநீரகம் இல்லை. மீண்டும் டயலிசிஸ் செய்தாக வேண்டும். கிருமித்தொற்று காரணமாக வயிற்றிலிருந்த பெரிடோனியல் டயலிசிஸ் கதீட்டரையும் நீக்கிவிட்டார்கள். இனி என்ன செய்வது?’ என்ற கேள்வி எங்கள் முன் விஸ்வரூபமெடுத்து நின்றது என்று சென்ற பதிவில் எழுதியிருந்தேன் அல்லவா?   

பெரிடோனியல் டயலிசிஸ் ஆரம்பிக்க கதீட்டரை அடிவயிற்றில் (peritoneal cavity) வைக்கும் அறுவைசிகிச்சையை மறுபடியும் செய்தாக வேண்டும். ஆனால் இவர் அடிவயிற்றில் நீர் சேர்ந்திருந்தபடியால் உடனே அறுவை சிகிச்சை செய்யமுடியாதென்றும், அந்த நீர் முழுவதுமாக வெளியேறிய பிறகுதான் செய்ய முடியுமென்றும் சொல்லிவிட்டார்கள். எனவே அந்த அறுவைசிகிச்சை செய்து, பெரிடோனியல் கதீட்டர் டயலிசிஸிக்குத் தயாராகும் வரை, இவரது கழுத்துக்குக் கீழே மார்பின் இடப்பக்கம் ஒரு கதீட்டர் (Tunneled Hemodialysis Catheter) பொருத்தி ஹீமோ டயலிசிஸ் செய்ய முடிவானது. மார்பின் இடப்பக்கத்தில் தோலில் ஒரு சிறிய துளை ஏற்படுத்திக் கதீட்டரை இடது உள்கழுத்துச் சிரை (Left Internal Jugular Vein) வழியாக உடலுக்குள் செலுத்தி இதயத்தின் வலது மேலறை அருகில் அதன் முனையை வைத்தனர்.

இவருக்கு ஏற்கெனவே ரத்தம் உறையும் பிரச்னை இருந்ததால் தான் ஏவி கிராப்ட் வழியே ஹீமோ டயலிசிஸ் செய்ய முடியாமல் போனது. எனவே ரத்தம் உறைவதைத் தடுக்கவும், கதீட்டரின் உட்புறம் ரத்தம் உறைந்து அடைப்பு ஏற்படுவதைத் தடுக்கவும் டயலிசிஸ் நடைபெற்ற நேரத்தில் ஹெப்பாரின் (Heparin) செலுத்தப்பட்டது. டயலிசிஸ் முடிந்த பிறகு அடுத்த டயலிசிஸ் வரை கதீட்டருக்குள் ரத்தம் உறைந்து அடைப்பு ஏற்படாமல் தடுக்க அதன் இரண்டு வழிகளிலும் ஹெப்பாரின் (Heparin Lock) கரைசல் செலுத்தப்பட்டது. பெரிடோனியல் கதீட்டர் வைக்கும் வரை இதில் கிருமித்தொற்று ஏற்படாமல் பாதுகாக்க வேண்டுமென்றனர். 

நாங்கள் மாற்றுச் சிறுநீரக அறுவைசிகிச்சைக்காக சென்னைக்கு வந்து ஐந்தரை மாதங்கள் முடிந்துவிட்டன. வங்கியில் நாங்களிருவரும் அதுவரை சேமித்து வைத்திருந்த எல்லா விடுப்பும் முடிந்து போய், ஏற்கெனவே சம்பளமில்லா விடுப்பு ஆரம்பித்திருந்தது. எனவே இதற்கு மேலும் பணிக்குத் திரும்பாமல் இருக்க முடியாதென்பதாலும், பெரிடோனியல் கதீட்டர் வைக்கும் அறுவைசிகிச்சைக்கு உடம்பு எப்போது தயாராகுமென்று தெரியாததாலும் புதுச்சேரி திரும்ப முடிவு செய்தோம்.

என் மகள் ஹவுஸ் சர்ஜன் முடித்துவிட்டுக் கடைசி மூன்று மாதம் என் கூடவே மருத்துவமனையில் துணைக்கு இருந்தார். இடையில் நீட் தேர்வுக்கு மருத்துமனையிலேயே அமர்ந்து படித்துக் கொண்டிருந்தார். ஜூன் மாதத்தில் ஒரு நாளிரவு நீட் தேர்வு முடிவு வெளியானது. அதில்  98.5% பர்சன்டைல் (Percentile) எடுத்துத் தேர்ச்சி பெற்றார். இந்தியா முழுக்கத் தேர்வெழுதிய 90000 பேரில், ஐநூறுக்குள் வந்து எங்களுக்கு இன்ப அதிர்ச்சியளித்தார். ஆறு மாதம் அடுத்தடுத்துக் கடுந்துன்பம் அனுபவித்து மனச்சோர்வால் பாதிக்கப்பட்டிருந்த எங்களுக்கு, இந்தத் தேர்வு முடிவு அதிக மகிழ்ச்சியையும் சோகத்திலிருந்து மீண்டெழுவதற்கான உற்சாகத்தையும் தந்தது.

மருத்துவமனையில் நாங்கள் ஐந்து மாதங்களுக்கு மேல் தங்கியிருந்ததால் அங்கிருந்த மருத்துவர்கள், செவிலியர்கள் அனைவருக்கும் நன்கு பரிச்சயமாகியிருந்தோம். “நாள் முழுக்க உன் அப்பாவுக்காக இங்கேயே சுற்றிக் கொண்டிருந்தாய்? எப்படி இந்த ‘ராங்க்’ எடுத்தாய்?” என்று சில சீனியர் மருத்துவர்கள் ஆச்சரியத்துடன் மகளிடம் வினவினார்கள். மகளுக்குத் தமிழ்நாட்டின் பெருமைமிகு சென்னை மருத்துவக் கல்லூரியில் முதுநிலைப் படிப்பில் பொது மருத்துவப் பிரிவில் (M.D) (General Medicine) இடம் கிடைத்தது. அளவிலா மகிழ்ச்சியுடன் மகளைக் கல்லூரியில் சேர்த்துவிட்டு நாங்களிருவரும் புதுவை நோக்கிப் பயணமானோம்.

புதுச்சேரியில் ஏற்கெனவே ஹீமோ டயலிசிஸ் செய்த மருத்துவமனையிலேயே டயலிசிஸ் ஆரம்பமானது. நான்கு மாதங்கள் வரை அடிவயிற்றில் அந்தப் பிரச்னை நீடித்தது. அதற்குப் பிறகு மீண்டும் சென்னை சென்று பெரிடோனியல் கதீட்டர் வைக்கும் அறுவைசிகிச்சை நடந்து முடிந்தது.

2013ஆம் நவம்பரில் வைத்த பெரிடோனியல் கதீட்டர் சிறப்பாகச் செயல்படத் தொடங்கியது. இடையில் இரண்டு முறை கிருமித் தொற்று ஏற்பட்டாலும் ஆண்டிபயாடிக் மருந்துகள் மூலம் குணப்படுத்திக் கொள்ள முடிந்தது. காலுக்குச் செல்ல வேண்டிய முக்கியமான ரத்தக்குழாயை அடைத்துவிட்டதால் வெளியில் இவரால் சிறிது தூரம் நடக்கவோ, நீண்ட நேரம் நிற்கவோ முடியவில்லை. அவர் விருப்பப்படி சாப்பிட முடியாமல் உணவுக்கட்டுப்பாட்டைத் தொடர வேண்டியிருந்தது. மற்றபடி தினமும் மூன்று வேளை டயலிசிஸுடன் நார்மலான வாழ்க்கை தொடர்ந்தது. தொடர்ந்து இவர் வங்கிப் பணிக்குச் சென்று பணி ஓய்வும் பெற்றார். மூன்று மாதங்களுக்கு ஒரு முறை மருத்துவப் பரிசோதனைக்கு மட்டும் சென்னை சென்று வந்தோம். 

மகள் நல்லவிதமாக முதுநிலைப் படிப்பை முடித்தவுடன் அவருக்கு மருத்துவரைத் தேர்வு செய்து திருமணம் செய்துவைத்தோம். வெளிநாட்டிலிருந்த மகனுக்கு ஏற்கெனவே திருமணம் முடிந்திருந்தது. மகனுக்கு இரண்டு குழந்தைகளும், மகளுக்கு இரண்டு குழந்தைகளும் பிறந்தன.

பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம் மூலம் பத்து மணி நேரப் பயணத்தில் சென்னையிலிருந்து லண்டனிலிருந்த மகன் வீட்டுக்கு இரண்டு முறை சென்று வந்தோம். இவர் வயிற்றில் கதீட்டர் இருந்தமையால் செக்யூரிட்டி சோதனையில் பிரச்னை ஏற்படாமலிருக்க டாக்டரிடம் ஒரு சான்றிதழ் வாங்கிச் சென்றோம்.

விமானத்தில் நாம் டயலிசிஸ் கரைசலை எடுத்துச் செல்ல அனுமதி கிடையாது. வெளிநாட்டில் மருந்துக் கடையிலும் பணம் கொடுத்து அதை வாங்க முடியாது. எனவே இந்தியாவில் அந்தக் கரைசலை விற்கும் பாக்ஸ்டர் கம்பெனிக்கு நாம் செல்லப் போகும் நாட்டையும், தங்கப் போகும் காலத்தையும் முன்கூட்டியே தெரிவித்து மெயில் அனுப்ப வேண்டும். அவர்கள் அனுப்பும் ஒரு மெடிக்கல் படிவத்தை மருத்துவரிடம் கொடுத்து “எவ்வளவு பை வேண்டும்? என்ன கரைசல் வேண்டும்?” போன்ற விவரங்களைப் பூர்த்தி செய்து அவர் கையெழுத்துடன் வாங்க வேண்டும். அதை கம்பெனிக்கு அனுப்பினால் மொத்த தொகையைக் கணக்கு பண்ணி நம்மைப் பணம் அனுப்பச் சொல்வார்கள். நாம் பணம் அனுப்பியவுடன் வெளிநாட்டில் இருக்கும் அவர்களது கிளைக்குத் தகவல் அனுப்பிவிடுவார்கள். அந்தக் கிளை அங்கே நாம் குறிப்பிடும் முகவரிக்குக் கரைசலை அனுப்பிவிடுவார்கள். எனவே வெளிநாட்டுப் பயணம் கிளம்பும் முன்பே இந்தியாவில் பணம் செலுத்தி நமக்குத் தேவையான கரைசல் அங்கே கிடைத்துவிட்டதை உறுதி செய்து கொள்ள வேண்டும். அது ரொம்ப முக்கியம்!

ஏறக்குறைய ஏழாண்டுகள் சிறப்பாகச் செயல்பட்ட பெரிடோனியல் கதீட்டரின் வடிகட்டும் திறன் மெதுவாகக் குறையத் தொடங்கியது. அடுத்தடுத்து உடல்நலக் கோளாறுகள் தோன்ற ஆரம்பித்தன. குறைந்த ரத்த அழுத்தப் பிரச்சினை அடிக்கடி ஏற்பட்டது. போதாக்குறைக்கு 2021ஆம் ஆண்டு கொரோனா தொற்று தமிழ்நாட்டில் வேகமாகப் பரவ ஆரம்பித்தது.

(அடுத்த வாரம் முடியும்)

படைப்பாளர்:

ஞா.கலையரசி

புதுச்சேரியைச் சேர்ந்தவர். ஸ்டேட்பாங்க் ஆஃப் இந்தியாவில்  வேலை செய்து ஓய்வு பெற்றுள்ளார். தற்போது சென்னையில் வசிக்கிறார். சிறார்களுக்காக இதுவரை 20 நூல்களை எழுதியிருக்கிறார். வானம், பாரதி புத்தகாலயம், நிவேதிதா, தமிழ்நாடு பாடநூல் கழகம் வாயிலாக நூல்கள் வெளிவந்துள்ளன. வானதி பதிப்பகம் வரலாற்று நாவலை வெளியிட்டுள்ளது. குழந்தைகளின் வாசிப்பை ஊக்குவிக்க ‘சுட்டி உலகம்’ எனும் வலைத்தளத்தை நடத்துகிறார். ‘பூஞ்சிட்டு’ எனும் குழந்தைகள் இணைய இதழின் ஆசிரியர் குழுவில் இருக்கிறார்.