கடிதம்-2

ஆகஸ்ட் 22, 2016

குவாஞ்ஜூ.

அன்பு அப்பாவிற்கு,

ஒருவழியாக கொரியா வந்துசேர்ந்துவிட்டேன். இந்த இரண்டு மூன்று நாள்களில் இப்போதுதான் ‘கொஞ்சம் உணர்வு வந்தவள்போல்’ நான் நடப்பதாக எண்ணுகிறேன்.

உங்களுக்கு அந்த சிங்கப்பூர் விமான நிலையத்திலிருந்து மடலெழுதிவிட்டு சற்றுநேரத்திலெல்லாம் எங்கள் விமானம் கிளம்பப்போகும் வாயிலுக்கு வந்துசேர்ந்தேன். அங்கே என் அதிர்ஷ்டம், நம்மூரிலிருந்தே கொரியாவிற்கு இதே கொரியாவின் கல்வி உதவித்தொகையும் அழைப்பும் (Global Korea Scholarship) பெற்று படிக்க வந்த மற்றொரு மாணவியைச் சந்தித்தேன்.

அந்தப் பெண் கொரியா-இன்சியானில் இறங்கியதும் அடுத்த விமானத்தில் பூசான் போகவேண்டும் என்று சொன்னார். நான் படிக்கப்போகும் சோசன் (Chosun) பல்கலைக்கழகம் குவாஞ்ஜூவில் (Gwangju) இருப்பதுபோல் அப்பெண்ணின் பல்கலைக்கழகம் பூசானில் இருக்கிறதாம்.

அவள் மிகவும் புத்திசாலித்தனமும் விமானப் யணத்தில் முன்னனுபவமும் வாய்ந்தவள்போல! நைச்சியமாய் விமானச்சீட்டு போட்டுத்தந்த கொரியப் பொறுப்பாளரிடம் பேசி, இந்தியாவிலிருந்து தன்னுடன் இரண்டு பெட்டிகள் எடுத்துவர அனுமதி வாங்கியிருக்கிறார். கொரியாவில் நம்மூர் மசாலா பொருள்கள் எளிதில் கிடைக்காது என விசாரித்து அறிந்து, தேவையானதை எடுத்து வந்திருந்தார்.

அம்மா அவ்வளவு சொல்லியும் 23 கிலோவுக்குள் நான் வாங்கிய புதுத் துணிகளை அடக்கவேண்டுமென தானியங்கள், மசாலாக்கள், துவையல், பொடி வகையறாக்களை நம் வீட்டிலேயே வைத்துவிட்டு வந்த என்னை நானே நொந்துகொண்டேன்.

அதுதான் போகட்டுமென்றால் விமானத்தில் இலவசமாகவே நமக்கு வேண்டிய சைவ உணவுகளை முன் கூட்டியே பதிவு செய்யலாமாம் அப்பா, அதுவும் எனக்குத் தெரிந்திருக்கவில்லை. அப்பா, உண்மையில் நீங்கள் அடிக்கடி சொல்வதுபோல் நான் உலகம்தெரியாத கிணற்றுத்தவளைதானோ?!

இதனை எழுதுகையில் ஏனோ கண்களில் நீர் தளும்பி என் மூக்குக் கண்ணாடிக்குள் இரு சொட்டுகள் விழுகின்றன. ஆனால் என் பார்வையை அவை மறைக்கவில்லை, நிகழ்காலம் பிரகாசமாய்த் தெளிவாகத்தான் தெரிகிறது.

ஏன் அப்பா, முகநூலைக்கூட பயன்படுத்தாத வீம்பு எனக்கு?! எதனைக் கண்டு பயந்தேன்? எது எனக்கு இந்த சுய வெட்கத்தையும் தாழ்வு மனப்பான்மையையும் கூச்சத்தையும் கலக்கத்தையும் தருகிறது?! கொரியாவில் அமர்ந்துகொண்டு முகம் தெரியாத யாரோ ஒருவர் என்னை நம்பி அழைத்து கல்விதர முன்வருகையில், இந்த சுய பச்சாத்தாபம் எனக்கு எங்கிருந்து, ஏன் வருகிறதப்பா? ம்ம்…

இப்போது சிந்தித்து என்ன?! பார்ப்போம்… சற்று நேரத்தில் விமானத்தில் ஏறச்சொன்னார்கள். வெளியே இருந்த விமானப் பணிப்பெண்ணிடம் சைவ உணவு பற்றி விசாரித்தேன். சிடுசிடுவென்று எரிந்துவிழுந்தாள். அவளுக்கு என்ன பணிச்சுமையோ? விமானத்திற்குள் என் இடத்தைக் கண்டுபிடித்து அமர்ந்துகொண்டேன். நல்ல பசி… ‘சிங்கப்பூர் விமானத்தில் சாப்பிடாத கஞ்சத்தனத்திற்கு இது தேவைதான்’ என நினைத்துக்கொண்டேன்.

நான் நினைத்ததுபோலவே சற்று நேரத்திற்கெல்லாம் வேர்க்கடலையும் டிஷ்யூ பேப்பரும் வந்தது. ஏர் இந்தியாவைவிட கொரியன் ஏர் உயர்தர விமானமாம், பல் தேய்த்துக்கொள்ள பல் குச்சி (brush), பற்பசை, நல்ல போர்வை, சிறு தலையணை எல்லாமே ‘நாங்களெல்லாம் பெரிய இடமாக்கும்’ எனப்பறைசாற்றியது. அதற்கேற்ப இதில் தேனில் வறுத்த வேர்க்கடலை தந்தார்கள். ஆனாலும் இதிலும் அதே ஏழு கடலைகள்தாம். விமானங்களுக்கிடையே ஏதும் ஒப்பந்தமா அல்லது ‘ஏழு’ இவர்களின் ராசியான எண்ணா தெரியவில்லை!

நல்ல திரைப்படங்கள் பதிவேற்றப்பட்டிருந்தன. ஆனால் என்னால்தான் எதையும் சரியாக ரசிக்கமுடியவில்லை. என் வயிற்றுப்பாட்டைப் பற்றியே யோசித்துக்கொண்டிருந்தேன். ஒளவைப் பாட்டொன்று பள்ளி நாட்களில் படித்தது – ‘ஒரு நாள் அதிகமாய்ச் சாப்பிடச்சொன்னால் கேட்கமாட்டாய். மற்றொரு நாள் உணவு இல்லையென பொறுத்துக்கொண்டு உண்ணலை விட்டுத் தரும்படி கெஞ்சினாலும் இரங்காய். என் வயிறே உன்னோடு இதுவென்ன போராட்டம்?!’ என்கிற பொருளில் வரும் பாடலை நினைத்துக்கொண்டு கடலைகளைக் கொரித்தபடி காத்திருந்தேன்.

பயந்தது போலவே ஆகிவிட்டது, மாட்டுக்கறி உணவுதான் வந்தது. அதில் நான் சாப்பிட உகந்தது பழங்கள் மட்டுமே. அதுவும் மிகச் சிறிய அளவே இருக்க, ஏர் ஹோஸ்டஸைக் கூப்பிட்டு என் நிலையைக்கூறி சைவம் ஏதாவது கிடைக்குமா… இல்லையென்றால் இந்த பழ சாலட் மற்றொன்றாவது தரமுடியுமா என்று கேட்டேன்.

திருதிருவென விழிக்கும் என் திருட்டு முழியும் ஆங்கில உச்சரிப்பும், முட்டை, கோழிகூட வேண்டாம் என்று நான் சொன்னதில் ஏற்பட்ட எரிச்சலும் சேர்ந்தோ என்னவோ, ஒரு அற்பத்தைப் பார்ப்பதுபோல் என்னைப் பார்த்துவிட்டு மன்னிக்கவும் என்று சொல்லிவிட்டு உணவுத்தட்டை எடுத்துக்கொண்டு போய்விட்டார். அந்த பழத்தைமட்டும் எடுத்து வைத்துக் கொண்டேன், நல்ல வேளை.

இப்போது யோசித்துப்பார்க்கிறேன், ‘ஏன் நாங்கள் சாப்பிடுவதை சாப்பிடாமல் செத்தா போய்விடுவாய்?! எங்கள் நாட்டுக்கு வருவாய், எங்கள் வளர்ச்சி வேண்டும், ஆனால் எங்கள் உணவு உனக்கு வேண்டாமா?! எங்கள் உணவென்றால் உனக்கு இளக்காரமா? அப்படியெனில் பட்டினி கிட!’ என்று அப்பெண்மணி சிந்தித்திருக்கக்கூடும். ம்ம்… தெரியவில்லை. அல்லது என் பசியால் சோர்ந்த முகம் அவர் மனதைத் தொடத்தவறியிருக்கும். எது எப்படியோ… இன்று விரதம்தான் என்று எண்ணிக்கொண்டேன்.

தாரை தாரையாகக் கண்ணீர் கொட்டிக்கொண்டிருந்தது. என் கொரிய வாழ்வு எதிர்காலத்தில் எப்படி இருக்கப்போகிறதோ என்கிற பயம் இப்போது என்னைச் சூழ்ந்துகொண்டது. பசியில் தூக்கம் வரவில்லை. உங்களுக்குத்தான் தெரியுமே, சாப்பிடாவிட்டால் வரும் தலைவலியும் சரியாக ஆஜர் ஆனது. அம்மாவின் முகம்தான் என் கண் முன்னே. இப்பயணத்தின் முதல் நாள் இரவும், அன்று காலையும் சாப்பிடச் சொல்லி வலியுறுத்தியபோது பிரிவுத்துயரிலும் வேதனையிலும் வேண்டாமெென நிராகரித்தது மனதிலேயே நின்றது.

கொரியா கல்வி தர முன்வந்திருக்கிறது, உணவும் அப்படியே கிடைக்கும், பார்க்கலாம் என்று இருந்துவிட்டேன். சற்று நேரத்தில்  கண்ணயர்ந்திருப்பேன்போல. யாரோ எழுப்பினார்கள்.

வேறொரு ஏர் ஹோஸ்டஸ் சிறிது பழங்களோடு நின்றிருந்தார். நான் முந்தைய பணியாளரோடு பேசியதைக் கவனித்திருப்பார்போல. அன்போடும் நன்றியோடும் பெற்றுக்கொண்டேன்.

‘கொரியனோ இந்தியனோ மனிதனோ இல்லை பிற உயிரினமோ பசிக்கும் கருணைக்கும் கனிவுக்கும் மொழியோ எல்லைகளோ இருக்கமுடியாது’ என்பதை நடு வானத்தில் பறக்கையில் உணர்ந்துகொண்டேன். அப்பழம் பசியை முழுவதுமாகப்போக்கவில்லை என்றாலும், எதிர்காலம் குறித்த என் பயத்தை சற்று விலக்கி ஆசுவாசம் கொள்ளச்செய்தது. என்னைப் புரந்து பேணும் கடமையைைக் கைக்கொண்ட பிரபஞ்சம் சற்று கால் இடறினாலும் கைக்கொடுத்துக் காத்திடும் என்ற நம்பிக்கையுடன் நான் உறங்கிப்போக… கண் விழிக்கையில் கொரிய வானில் பறந்தது விமானம்.

தரை இறங்கியதும் பூசான் போகவிருந்த அந்தத் தமிழ் அக்காவைத் தேடி காத்திருந்தேன். அவர் விமானத்தில் பின்னால் எங்கோ அமர்ந்திருந்தார். நீண்ட நேரத்திற்குப் பின்னர் இறங்கியவர் என்ன நினைத்தாரோ என்னவோ, என்னிடம்  பேருக்குப் புன்னகைத்தார். உன் வழியை நீயே பார்த்துக்கொள் என நாசுக்காய்ச் சொல்லிவிட்டு, நகர்ந்து மறைந்துவிட்டார். ம்ம்… பொறுமையாக விசாரித்துக்கொண்டு வழிகேட்டு, என் பெட்டியை எடுத்துக்கொண்டு வெளியே வந்துசேர்ந்தேன்.

அப்பா, நானும் இதுவரை எத்தனைமுறை நான் உண்டு என் வேலையுண்டு என நகர்ந்திருப்பேன்? எத்தனைமுறை அந்த முதல் ஏர் ஹோஸ்டஸைப்போல எனக்குப் புரியாத ஒன்றை தவறு என மதிப்பிட்டு மனதிற்குள்ளாக நீதிமன்றம் நடத்தித்தீர்ப்பளித்து அதன்படி நடந்திருப்பேன்? அப்பா, பசி, கருணையைப்போல் தீர்ப்பளிப்பதிலும் அக்கறையின்மையிலும்கூட மானுடம் ஒன்றுபட்டு நிற்கக் காண்கிறேன்.

அது கிடக்கட்டும்… ஒரு வழியாக வெளியேவந்து, முதல் தளத்தில் குவாஞ்ஜூவிலிருந்து எங்களுக்காய் காத்திருந்த சோசோன் (Chosun) பல்கலைக்கழகப் பணியாளர் ஒருவரைச் சந்தித்தேன். முன்பே இமெயிலில் தெரிவித்திருந்ததுபோல நீல நிற ஜாக்கெட் ஒன்றைக் கையில் வைத்திருந்தார். அப்போதுதான், நேபாளத்திலிருந்து வந்த திரிபாதியைச் சந்தித்தேன்.

அப்பா.. ஒரு சுவாரசியமான தகவல். நேபாளர்கள்  பல வட இந்தியர்களைப் போல பயணத்திற்கு முன்பு தேவி துர்கையை வேண்டிக்கொண்டு ஒரு சிறு எலுமிச்சை மூடி அளவுக்கு வட்ட வடிவத்தில் குங்குமத்தை நீரில் குழைத்து நெற்றியில் இட்டுக்கொள்கின்றனர்.

திரிபாதிக்கு சிறிய நெறி, நீண்ட முகம். அதில் அத்தனைப் பெரிய வட்ட வடிவ குங்குமப் பொட்டு. என் தோள்களைவிட குள்ளமாக இருந்தாள். நம் அக்கா வயதுதான். ஆனால், பெயர்சொல்லி அழைக்கச்சொன்னாள். அவள் இரட்டைப்பிறவியாம். அவள் தங்கைக்குக் கிடைக்காத கல்வி வாய்ப்பு தனக்குக் கிடைத்ததில் மகிழவும்முடியாது, வாய்ப்பைப் புறக்கணிக்கவும் முடியாது வந்துசேர்ந்திருந்தாள். என்னைவிட நன்றாகவே இந்தி பேசுகிறாள்.

இந்தியாவிற்கும் நேபாளத்திற்கும் உள்ளும் புறமும் விசா (நுழைவு இசைவு) இல்லாமல் சென்று வரலாமாம். நாம் ஒருமுறை போவோம் அப்பா. உங்களுக்கு நேபாளத்தில் ஒரு வார்த்தை கற்றுத் தருகிறேன். ‘மிலிஜுலி’ அப்படியென்றால் மகிழ்ச்சி என்று பொருள். திரிபாதியைப் சந்தித்ததும் நானும் என்னால் அவளும் ‘மிலிஜுலி’ கொண்டோம் என்றால், அது மிகையல்ல.

அப்பா, துக்கத்தில்கூட துணை ஒன்று கிடைத்தால் மனது இலகுவாகிறது, புதுத்தெம்பு பிறக்கிறது. எனவே நான் வீட்டைத் துறந்து வந்த துக்கம் மறந்து, எங்களால் எம் இருவரின் அருகாமையில் ஆறுதல் தேடமுடிந்தது. அப்பா கொரிய விமான நிலையத்திலிருந்து குவாஞ்ஜூ வந்தடைந்த பேருந்தில் எண்ணி முப்பதுக்கும் குறைவான இருக்கைகள்தாம். ஒவ்வொன்றும் அரியணைபோன்று அத்தனை பெரியதாக சௌகரியமானதாக இருக்கிறது. 

ஒரு மணி நேரத்திற்கும் கூடிய பயணங்களில் ஒரு பத்து-பதினைந்து நிமிடங்கள் வண்டியை நிறுத்துகின்றனர். உணவு இடைவேளை தவிர நம் ஊரில் 6-8 மணி நேரப் பயணங்கள்கூட இதுபோன்ற கழிவறை இடைவேளைகளை நான் கண்டதில்லை. அந்த இடைவேளையில் பேருந்திலிருந்து சற்று இறங்கி கை கால்களை நீட்டி மடக்கி ஓய்வு கிடைத்தது சுகம். மற்றபடி வழி நெடுகிலும் கொரிய மலைகளால் அலங்கரிப்பட்டிருந்ததை பேருந்துக்குள்ளிருந்து இரசித்தபடிவந்தோம்.

குவாஞ்ஜூவில் இறங்கியபோது நல்ல மழை. வானமே எங்களது வருகையின் பொருட்டு நீர்ப்பூக்களைத் தூவி வரவேற்றதுபோன்றிருந்தது. இங்கு எனக்கு பல்கலைக்கழக விடுதியில் நல்ல அறையொன்று கொடுத்திருக்கிறார்கள். ஒரு அறையில் இரு மாணாக்கர் தங்கிக்கொள்ளலாம். திரிபாதிக்கு வேறோர் அறை. என் அறைத்தோழியாய் இந்தோனேசிய மாணவி ஒருத்தி வந்திருக்கிறாள். அவளைப் பற்றியும், மற்ற தோழர்-தோழியர் பற்றியும் குவாஞ்ஜூவைப் பற்றியும் அடுத்த மடலில் எழுதுகிறேன். தவறாது பதில் எழுதவும். உடல் நலம் பேணுங்கள். அனைவரையும் விசாரித்ததாய்ச் சொல்லுங்கள்.  

​அன்புடன்,

உங்கள் மகள்,

ஜெயஸ்ரீ பத்மநாபன்.

தொடரும்…

படைப்பாளர்

ஜெயஸ்ரீ பத்மநாபன்

தற்போது கொரியத் தலைநகர் சியோலில் உள்ள கொரியா பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்ட ஆய்வு (Ph.D.) மாணவியாக இயற்பியலில் ஆய்வு மேற்கொண்டுவருகிறார். வாசிப்பு, எழுத்தின்மீது பேரார்வம் கொண்டவர்.