பொருள் 18 : பெண்ணுடல்
உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை ஒரு பெண்ணின் உடல் பாகங்கள் அனைத்துமே ஆபத்தானவையாக இருந்திருக்கின்றன என்கிறார் ரோசாலிண்ட் மைல்ஸ். தலையை எடுத்துக்கொள்வோம். முதலில் தலைமுடி. ஒரு பெண் தன் கேசத்தை வெளிக்காட்டத் தேவையில்லை என்கிறது யூதர்களின் புனித நூலான தல்மூத். இது வெறுமனே அறிவுறுத்தல் மட்டுமல்ல, கட்டளையும்கூட. மீறி ஒரு பெண் தன் கேசத்தை வெளியில் படரவிட்டால் அது தண்டனைக்குரிய குற்றமாகக் கருதப்பட்டது. இந்தக் கொடுங்குற்றத்துக்கான தண்டனை என்ன தெரியுமா? விவாகரத்து.
புனித பால் பாதிரியாருக்கும் ஒரு பெண்ணின் கேசம் முக்கியமான பிரச்சினையாக இருந்திருக்கிறது. எனவே கிறிஸ்தவர்களுக்கு அவர் ஓர் அறிவுறுத்தலை வழங்க வேண்டியிருந்தது. தன் தலையை மூடாமல் தேவாலயத்துக்குள் பிரவேசிக்கும் ஒரு பெண் தண்டிக்கப்பட வேண்டும் என்கிறார் அவர். எப்படித் தண்டிக்க வேண்டும் என்பதையும் அவரே சொல்லிவிடுகிறார். அந்தப் பெண்ணை சிறைப்படுத்தி அவள் தலைக்கேசத்தை முற்றாக மழித்துவிட வேண்டும்.
அடுத்த ஆபத்து, முகம். கேசத்தைக் காட்டிலும் அதிக செல்வாக்குக் கொண்டது முகம். எனவே அதிக ஆபத்தானதாக முகம் கருதப்பட்டது. ஒரு பெண்ணின் அழகிய முகத்தை வஞ்சகமான தூண்டில் என்று ஆண்கள் மதிப்பிட்டார்கள். அது அவர்களை மயக்குகிறதாம், நிலை தடுமாறவைக்கிறதாம், மதியிழக்கச் செய்கிறதாம், மோசம் செய்கிறதாம். பொயுமு 3ஆம் நூற்றாண்டில் டெர்டூலியன் என்னும் பாதிரியார் எச்சரிக்கிறார். ‘கவனம், ஏஞ்செல்களின் வீழ்ச்சிக்குப் பெண்ணின் முகமே காரணம்.’ நல்லவேளையாக, இந்த ஆபத்திலிருந்து ஆண்களைத் தப்புவிக்க அவருக்கு ஓர் உபாயம் தெரிந்திருந்தது. ‘ஆபத்தான முகம் மறைக்கப்பட்டே இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.’
கேசம், முகம் இரண்டையும் ஒரு பெண் மறைத்துக்கொள்ள வேண்டும் என்றாகிறது. ஆபத்து இன்னமும் முடிந்துவிடவில்லை. இந்த இரண்டையும்விட அதிக தீங்கை ஏற்படுத்தவல்ல மற்றோர் அங்கத்தையும் ஆண்கள் கண்டுபிடித்தார்கள். வெளிப்பார்வைக்குத் தெரியாமல் தந்திரமாக அது மறைந்திருந்தது என்றாலும் அதையும் அவர்கள் சாதுரியத்துடன் கண்டறிந்தார்கள். ஒரு பெண்ணின் நாக்குதான் அது. ‘ஒரு நல்ல மனைவி எப்போதும் அமைதியாக இருக்கிறாள்’ என்கிறது ஒரு பழமொழி. அமைதி என்றால் வாயைத் திறக்காமல் இருப்பது. தனது ஆபத்தான ஆயுதத்தைப் பயன்படுத்தாமல் வாய்மூடிக் கிடப்பது. வாயைத் திறக்கும் பெண்ணை எந்தவோர் ஆணும் விரும்பாட்டான். ‘எந்தப் பெண்ணுக்கு நாக்கு இருக்கிறதோ, அந்தப் பெண்ணுக்குக் கணவன் கிடைப்பது சிரமம்’ என்று கிரேக்கர்கள் மத்தியில் ஒரு சொலவடை இருந்தது.
இத்தகைய அபாயங்களைக் கண்டறிவதில் பழங்குடிகளும் சளைத்தவர்களில்லை. மங்கோலிய பழுங்குடிகள் கிட்டத்தட்ட ஆயிரம் ஆண்டுகளுக்குப் பெண்ணின் நாக்கைக் கவனமாகக் கட்டுப்படுத்தி வைத்திருந்தார்கள். மொழி என்பது எல்லாருக்கும் பொதுவானதுதான் என்றாலும் ஆண்கள் பயன்படுத்தும் மொழியை அப்படியே பெண்களும் பயன்படுத்துவது தகாது என்று மங்கோலியர்கள் நம்பினர். முழுக்க மொழியைத் தடைசெய்ய முடியாது என்பதால் குறிப்பிட்ட வார்த்தைகளைப் பட்டியலிட்டு இவற்றையெல்லாம் இனி நீங்கள் உபயோகிக்கக் கூடாது என்று கட்டளையிட்டார்கள். விலக்கப்பட்ட வார்த்தைகள் பெண்களின் நாக்கில் இருந்து உருண்டு வந்துவிடாமல் கவனமாகப் பார்த்துக்கொண்டனர்.
பெண்கள் அமைதியாக இருந்தாக வேண்டும் என்று கண்டிப்புடன் அறிவுறுத்துகிறது யூத மதம். இந்த மதம் உருவாகத் தொடங்கிய ஆரம்ப கட்டத்திலேயே இப்படியொரு கட்டளை! ஜப்பானில் ஷிண்டோ மதம் கூறும் ஒரு தொன்மக்கதையைக் கேளுங்கள். இந்த உலகம் படைக்கப்பட்ட தருணத்தில் ஒரு பெண் முதல்முதலாக வாய் திறந்து பேசிவிட்டாள். அவ்வாறு பேசிய முதல் உயிரினம் அவளே. இந்தக் கொடுந்தவறைப் புரிந்துவிட்ட காரணத்தால் அவளுக்குப் பிசாசே குழந்தையாகப் பிறந்துவிட்டதாம். இதைக் கண்டு திடுக்கிட்டுப்போனான் ஆண். கடவுள் இதன்மூலம் என்ன சொல்லவருகிறார் என்பதை அந்த ஆண் கண்டுகொண்டுவிட்டான். இனி பெண்ணை ஒருபோதும் பேசவிடக் கூடாது என்னும் அதிமுக்கியப் பாடத்தை அவன் தன் சமூகத்துக்குப் பரப்பிவிட்டான். அன்று முதல் ஆணே பேச வேண்டும், பெண் தன் நாவைக் கட்டுப்படுத்தி வைக்க வேண்டும் என்னும் வழக்கம் ஜப்பானில் பிரபலமடையத் தொடங்கியது.
பெண்ணின் மிச்சமுள்ள உடல் பாகங்களும் ஆபத்தானவையே என்கின்றன ஆண்களின் பதிவுகள். பெண் என்பவள் ஒரு மோகினிப் பிசாசு. தன் உடலை அவள் ஒரு கருவியாகப் பயன்படுத்தி ஆண்களை மயக்கி வீழ்த்துகிறாள். ஆண்களை என்றென்றும் தடுமாற்றத்தில் வைத்திருக்க அவள் தன் அழகைப் பயன்படுத்திக்கொள்கிறாள். ஆண்கள் கடமையே கண்ணாக இருக்கும் அப்பாவிகள். பெண்களோ வஞ்சகமும் சூதும் மிதமிஞ்சிய காம உணர்வும் கொண்டவர்களாக இருக்கிறார்கள். அவர்கள் அவ்வாறே படைக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதே உண்மை. பெண்ணை எதிர்கொள்வதும் அவள் விரிக்கும் மாயவலையிலிருந்து தப்பிப்பதும் ஓர் ஆணின் நிரந்தரமான சவாலாக இருந்துவருகிறது. மெத்தப் படித்த அறிஞர்கள், மன்னர்கள், பெருந்தலைவர்கள், புலனடக்கம் பேணும் துறவிகள் என்று ஒருவரையும் பெண்ணுடல் விட்டுவைப்பதில்லை. அரபுலக ஆண்களின் திடமான நம்பிக்கை இது. பெண்களை நினைத்து நினைத்து கனவு கண்டு வாழ்வைத் தெலைத்துவிடாதீர்கள் என்னும் அறிவுரையையும் இவர்கள் வழங்குகிறார்கள்.
நியூ மெக்ஸிகோ பகுதியைச் சேர்ந்த நவஜோ பழங்குடி அமெரிக்க மக்களிடம் நிலவும் ஒரு தொன்மக்கதை இது. ஒரு நாள் ஆண்களுக்கும் பெண்களுக்கும் கடும் சண்டை மூண்டது. சண்டக்குக் காரணம், நீங்கள் எப்போதும் மோகத்தில் மூழ்கிக்கிடப்பவர்கள் என்று பெண்களை நோக்கி ஆண்கள் குற்றம்சாட்டியதுதான். நாங்கள் அப்படியெல்லாம் இல்லை; எங்களுக்கு ஆண்களின் காதல் தேவையேயில்லை என்று பதிலளித்தார்கள் பெண்கள். அப்படியானால் நாங்கள் இல்லாமல் வாழ்ந்துகாட்டேன் பார்ப்போம் என்று ஆண்கள் சவால் விட்டனர். பெண்கள் சவாலை ஏற்றுக்கொண்டனர். ஆண்கள் படகுகளில் ஏறிக்கொண்டார்கள். மறு கரையில் இறங்கியதும் படகுகளை அப்புறப்படுத்தினர். கரையின் ஒரு பக்கம் பெண்கள், இன்னொரு பக்கம் ஆண்கள் என்று தனித்தனியே வசிக்கத் தொடங்கினர்.
ஆண்டுகள் உருண்டோடிச் சென்றன. ஆண்கள் பலசாலிகள் என்பதால் அவர்களால் உழைக்கவும் உணவை உற்பத்தி செய்துகொள்ளவும் முடிந்தது. பெண்களின் நிலை நாள்பட நாள்பட மோசமடையத் தொடங்கியது. ஆண்கள் ஆண்களோடும் பெண்கள் பெண்களோடும் இணைந்து வாழத் தொடங்கினர். இரண்டுமே இயற்கைக்கு மீறிய உறவுகள் என்றாலும் ஆண்களுக்கு அதனால் எந்தப் பாதகமும் ஏற்படவில்லை. பெண்களோ பிசாசுகளைப் பெற்றெடுக்கத் தொடங்கினர். உணவும் இல்லாததால் பெண்கள் பலர் இறந்துபோயினர். இனியும் பொறுக்க முடியாது என்னும் நிலையில் பெண்கள் ஆண்களிடம் மண்டியிட்டு கெஞ்சத் தொடங்கினார்கள். தயவுசெய்து திரும்பிவிடுங்கள் என்று கண்ணீரும் கம்பலையுமாக வேண்டிகொண்ட பெண்களைக் கண்டு ஆண்கள் இறங்கிவந்தனர். பெண்களை ஏற்றுக்கொண்டனர். ஒரு நிபந்தனையுடன். இனி நீ எனக்கு அடங்கியிருக்க வேண்டும்!
ஏன் ஒரு பெண்ணின் உடல் ஆபத்தானதாக, இழிவானதாகப் பார்க்கப்பட்டது என்பதற்கான விடை இதுதான். பெண்கள் மீதான மேலாதிக்கத்தை நிலைநாட்டுவதற்கு ஆணுலகம் கண்டறிந்த எண்ணற்ற உபாயங்களில் ஒன்றுதான் இது.
பொருள் 19 : கடிவாளம்
கடிவாளம் என்னும் கருவியை நாம் பார்த்திருக்கிறோம். குதிரையின் முகம், தலைப்பகுதி, தாடைகள், நெற்றி, மூக்கு, தொண்டை, வாய் ஆகியவற்றைக் கடிவளம் பல பட்டைகளைக் கொண்டு இணைக்கிறது. பல்வேறு வடிவங்களில், வெவ்வேறு பெயர்களுடன் கடிவாளங்கள் உலகமெங்கும் கடிவாளம் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. அனைத்தின் நோக்கமும் ஒன்றுதான். குதிரையின் மெல்லிய முகத் தசைகளுக்கு அழுத்தம் கொடுப்பதன்மூலம், அதன் செயல்களைக் கட்டுப்படுத்த வேண்டும் என்பதுதான் அது. கடிவாளம் பொருத்தப்பட்ட குதிரையை நம் போக்கில் திருப்புவதும் நாம் விரும்பும் வழியில் இயக்குவதும் சுலபம்.
இத்தகைய ஒரு கருவியைப் பெண்களுக்கென்றே பிரத்தியேகமாகத் தயாரித்த பெருமை ஸ்காட்லாந்தையே சேரும். பிரிடில் அல்லது பிரிங்ஸ் என்று அதனை அழைக்கிறார்கள். நுணுக்கமான அந்தக் கருவியைக் கண்டறிந்த பெருமை ஸ்காட்லாந்தையே சேரும். நான்கு வளைந்த கம்பிகளைக் கொண்ட இரும்புக்கூண்டு அது. முட்டை வடிவத்தில் இருக்கும். முன் பகுதியில் மூக்கு போன்ற சற்றே உப்பிய ஒரு பகுதி இருக்கும். கீழ்ப்புறத்தில் ஒருவருடைய தாடையைப் பொருத்தக்கூடிய அளவுக்கு இடம் இருக்கும். உணவு அல்லது நீர் உள்ளே செல்வதற்கு வசதியாக சில துளைகள் போடப்பட்டிருக்கும்.
இந்தப் பிரிடிலை ஒருவருடைய முகத்தில் பொருத்திவிட்டு அழுத்தமாக முடுக்கிவிட்டால் போதும். சம்பந்தப்பட்ட நபர் சிறைபட்டுவிடுவார். குதிரையைப் போல் அவருடைய முகத் தசைகள் இறுகி, இயல்பான இயக்கம் செயலிழக்கும். வாயருகே உள்ள துளை வழியாக ரொட்டியோ நீரோ கொடுக்கலாம். இதுவும் குதிரைக் கடிவாளத்தைப் போல் பல வடிவங்களை எடுத்துள்ளது. வட்டார உபயோகத்துக்கு ஏற்ப பல பெயர்களையும் பெற்றுள்ளது.
உருவாக்கியது ஸ்காட்லாந்து என்றாலும் பிரிட்டனிலும் இது பிரபலமாக இருந்திருக்கிறது. 16ஆம் நூற்றாண்டு வாக்கில் ஸ்காட்லாந்திலும் ஒரு நூற்றாண்டு கழிந்து பிரிட்டனிலும் இது பயன்பாட்டுக்கு வந்திருக்க வேண்டும் என்கிறார்கள் ஆய்வாளர்கள். கடைசியாக பிரிட்டனில் 1824ஆம் ஆண்டு இதை உபயோகித்திருக்கிறார்கள். வேறு பல நாடுகளுக்கும் இது வேகமாகப் பரவியது. சரி, எதற்காக இந்த பிரிடில்? பிடிபடும் குற்றவாளிகளை வதைப்பதற்காக உருவாக்கப்பட்ட பல்வேறு உபகரணங்களில் இதுவும் ஒன்று என்கிறார்கள். பிரேசிலில் கைதிகள் பலருக்கு இந்த பிரிடிலைப் பொருத்தியிருக்கிறார்கள். ஒரு சங்கிலியையும அத்துடன் பொருத்திவிட்டால், கைதிகளை வெளியிலும் அழைத்துச் செல்லமுடியும். உடையாது, சட்டென்று அகற்றிவிட முடியாது என்பதால் பாதுகாப்பானதும்கூட.
பிரிடில் பொருத்தப்பட்ட கைதிகள் வீதிகளைச் சுத்தப்படுத்தும் பணிகளை மேற்கொண்டிருக்கிறார்கள் என்கின்றன குறிப்புகள். மேலும் சிலர் மூட்டை முடிச்சுகளை இறக்கி, ஏற்றுவது போன்ற கடினமான வேலைகளில் ஈடுபடுத்தப்பட்டிருக்கிறார்கள். அவ்வப்போது வேலையை நிறுத்தி ஆகாரம், குடிநீர் கொடுத்துவிட்டு மீண்டும் வேலை செய்யுமாறு உத்தரவிடுவார்கள். கைதிகள், மனம் வெறுத்து நஞ்சு உட்கொள்வதைத் தடுப்பதற்காகவும் மற்ற சிவிலியன்களை அவர்களிடமிருந்து பாதுகாக்கவும் பிரிடில் பயனுள்ளதாக இருந்திருக்கிறது. ஆபத்தானவர்கள் என்று கருதப்பட்ட கைதிகளின் முகம் முழுக்கவே மூடப்பட்டிருக்கும். கண் தெரியவும் சுவாசிக்கவும் உண்ணவும் மட்டுமே துளைகள் இருக்கும்.
ஆப்பிரிக்க அடிமைகளைக் கட்டுப்படுத்தவும் இதையே பயன்படுத்தியிருக்கிறார்கள். சிலருடைய கடிவாளக் கழுத்து பகுதியையும் சேர்த்தே மூடியிருக்கும். இவற்றையெல்லாம் உருவாக்குவதற்கென்றே நிபுணர்கள் சிலர் இருந்தனர். உபயோகத்துக்குத் தக்கவாறு சிறு சிறு மாற்றங்களுடன் அவர்கள் புதிய கடிவாளங்களை இரும்பில் உருவாக்கித் தந்தார்கள்.
ஸ்கால்ட்ஸ் பிரிடில் என்னும் கடிவாளம் முழுக்க முழுக்க பெண்களுக்காகவே உருவாக்கப்பட்டவை. தேவையற்றதைப் பேசும் பெண்ணைக் குறிக்கப் பயன்படுத்தப்பட்ட சொல்லாக ஸ்கால்ட் என்பது இருந்திருக்கக்கூடும். அதிகம் பேசும் பெண்களை, வம்பு செய்யும் பெண்களை, சண்டையிடுபவர்களை, கணவனின் பணிகளுக்குக் குறுக்கீடு செய்பவர்களைத் தண்டிக்கவும் சிறைபடுத்தவும் இந்தக் கடிவாளம் பயன்படுத்தப்பட்டது. குற்றவாளிகளுக்கான கடிவாளங்களைக் காவலாளிகளும் அரசு அதிகாரிகளும் பயன்படுத்தினார்கள் என்றால் பிந்தையதைக் கணவர்கள் வீட்டு உபயோகத்துக்காகச் சுதந்தரமாகப் பயன்படுத்தினார்கள். குதிரைக் கடிவாளங்களைப் போலவே!
அடிக்கடி என் மனைவி பக்கத்து வீட்டுக்காரர்களுடன் சண்டையிடுகிறார், அவள் அருகில் இருக்கும்போது என்னால் வேலை செய்ய முடியவில்லை போன்ற காரணங்களே இந்தக் கடிவாளவத்தைப் பயன்படுத்துவதற்குப் போதுமானவையாக இருந்தன. புறம் பேசுகிறார், வம்படிக்கிறார், நீள நீளமாகப் பேசுகிறார், வசைச் சொற்களைப் பயன்படுத்துகிறார் போன்றவை இன்னபிற காரணங்கள்.
ஸ்கால்ட்ஸ் பிரிடிலின் உட்புறத்தில் ஒரு கூர்மையான கம்பி நீண்டிருக்கும். இதை ஒரு பெண்ணின் முகத்தில் பொருத்தும்போது அந்தக் கம்பி உட்புறமாக அவளுடைய வாயில் மிகச் சரியாக புகுந்து அங்கேயே நிரந்தரமாகத் தங்கிவிடும். கடிவாளத்தை ஆட்டவோ அசைக்கவோ முடியாது. தண்ணீர் அருந்தலாம். ரொட்டி மென்று உண்ணலாம். சுவாசிக்கலாம். உயிருக்கு உத்தரவாதம் இருக்கும். ஆனால், அவளால் ‘தொந்தரவுகள்’ உண்டாகாது. முக்கியமாக, தன் நாக்கை அவளால் அசைக்கவே முடியாது. அப்படி அசைக்க முயன்றால் முள் குத்தும். ஒரு சொல்கூடப் பேச முடியாது. நோக்கமும் அதுதான். ஒரு பெண்ணின், இருப்பதிலேயே ஆபத்தான உடல் பாகமான நாக்கைக் கட்டுப்படுத்தும் கலையை ஆண்கள் முழுமையாகக் கற்றுணர்ந்ததன் அடையாளமாக இன்றும் இந்தக் கடிவாளம் பிரிட்டிஷ் அருங்காட்சியகங்களில் காட்சியளிக்கிறது.
சங்கிலி இணைக்கப்பட்ட கடிவாளங்களைப் பெண்களுக்கும் பயன்படுத்தியிருக்கிறார்கள். வெளியில் அழைத்துச் செல்ல நேரும்போது இந்த வசதி அவர்களுக்குத் தேவைப்பட்டிருக்கும். தவிரவும், வீட்டிலேயே ஓரிடத்தில் நிற்க வைத்து கட்டிப்போடவும் இது பயன்பட்டது. பேச்சு மட்டுமல்ல, ஒரு பெண்ணின் நடமாட்டம்கூட ஆண்களை எரிச்சலடைய வைத்ததால் இந்த ஏற்பாடு. சில நேரம் சின்ன மணிகளும் கடிவாளத்தில் இணைக்கப்பட்டன. பிரச்னைக்குரிய ஒரு பெண் அருகில் வந்துகொண்டிருக்கிறாள் என்பதைச் சிணுங்கும் மணிகள் ஒருவருக்கு உணர்த்திவிடும்.
குதிரையின் வாயை ஏன் பூட்டிவைத்திக்கிறாய் என்று எப்படி ஒருவரைப் பார்த்து உரிமையுடன் கேட்க முடியாதோ அவ்வாறே ஏன் உன் மனைவியை பிரிடிலுக்குள் சிறைபடுத்தியிருக்கிறாய் என்றும் ஓர் ஆணைக் கேட்க முடியாது. அது அவன் உரிமை. எப்போது ஒரு பெண்ணின் நாக்கைக் கட்டுப்படுத்த வேண்டும், எவ்வளவு காலம் இந்தக் கட்டுப்பாடு நீடிக்க வேண்டும் என்பதை அவனே முடிவு செய்வான். விடுவிக்கும் உரிமையும் அவனுக்கே உண்டு. கணவன் போக, பல நேரங்களில் உள்ளூர் நீதிமன்றமும் பெண்களுக்கு பிரிடில் தண்டனை அளித்திருக்கிறது. குற்றவாளியைப் போல் பிரிடில் அணிந்த பெண்ணைப் பொதுவீதிகளில் சங்கிலிபோட்டு அலைய வைத்து அவளை அவமானப்படுத்தும் செயலையும் சட்டப்படியே செய்திருக்கிறார்கள்.
சில ஆண்கள் இரக்கக்குணம் கொண்டவர்களாக இருந்திருக்கிறார்கள் என்பதையும் குறிப்பிட வேண்டும். உனக்கு என்ன வண்ணம் பிடிக்கும் என்று கேட்டு அந்த வண்ணத்தை பிரிடிலுக்குத் தீட்டி அணிவித்தவர்கள் இருந்திருக்கிறார்கள். தங்க முலாம் போடப்பட்ட கடிவாளங்களும் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. சரி, இப்போது பிரிடில்கள் இல்லை என்பதை எப்படிப் புரிந்துகொள்வது? நாகரிக வளர்ச்சி அடைந்துவிட்டதால், இதெல்லாம் தவறு என்பதை ஆண்கள் உணர்ந்துவிட்டார்கள் என்றா? அல்லது, கண்களுக்குத் தெரியாத கடிவாளங்களை அவர்கள் கண்டுபிடித்துவிட்டார்கள் என்றா?
(தொடரும்)
படைப்பாளர்:
மருதன்
எழுத்தாளர், வரலாற்றாளர். சே, ஹிட்லர், ஃபிடல் காஸ்ட்ரோ, திப்பு சுல்தான், மண்டேலா, மாவோ, ஸ்டாலின் ஆகிய உலகத் தலைவர்களின் வாழ்க்கை வரலாறுகளை எழுதியுள்ளார். இவரது ஹிட்லரின் வதைமுகாம்கள், முதல் உலகப் போர், இரண்டாம் உலகப்போர், ஷெர்லக் ஹோம்சால் தீர்க்க முடியாத புதிர், துப்பாக்கி மொழி, திபெத்- அசுரப் பிடியில் அழகுக்கொடி, ஒரு புத்திரனால் கொல்லப்படுவேன் ஆகிய நூல்கள் கவனம் ஈர்த்தவை. பிரபல தமிழ் இதழ்களில் தொடர்கள் எழுதிவருகிறார். இந்து தமிழ் திசை மாயா பஜார் குழந்தைகள் இணைப்பிதழுக்கும் கட்டுரைத் தொடர் எழுதி வருகிறார்.
மிகமிக பயனுள்ள வரலாற்று கருத்துகள். நன்றி தோழர் மருதன் அவர்களே 🙂
இவ்வாறான பல்லாயிரம் பெண்ணுயிரிகளின் சுதந்திர தீயின் தாகம் கொண்டு விரிந்ததே இன்றைய பெண்களின் சிறகு