பொருள் 49 : போர்ஷியாவின் கத்தி
சில பெண்களை வரலாறு மிக உயர்வாக உயர்த்திப் பிடித்தியிருப்பதையும் நாம் ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். போர்ஷியா கடோனிஸ் அவர்களில் ஒருவர். பலமிக்க ரோமானியப் பெண்ணாகவும் தூய்மையான அன்பின் அடையாளமாகவும் போர்ஷியா பலரால் புகழப்படுகிறார். ஒவ்வொரு ரோமானியப் பெண்ணும் போர்ஷியாவை அடியொற்றி நடக்கவேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டது .
புரூட்டஸின் இரண்டாவது மனைவி, போர்ஷியா. தன்னுடைய முதல் மனைவியான கிளாடியாவை எந்தவிதக் காரணமும் சொல்லாமல் விவாகரத்து செய்துவிட்டு இளம் பெண்ணான போர்ஷியாவை மணந்துகொண்டார் புரூட்டஸ். போர்ஷியா புரூட்டஸை உளமாற காதலித்தார். புரூட்டஸின் மனைவியாக இருப்பது பெருமைக்குரிய கவுரவம் என்றும் அவர் நினைத்தார். வாழ்நாளின் இறுதிவரை தன் கணவருக்கு விசுவாசமாக இருக்கவேண்டும் என்றும் அவர் உறுதிபூண்டார்.
ஜூலியஸ் சீஸருக்கு நெருக்கமானவராக இருந்தவர் புரூட்டஸ். சீஸரைக் கொல்ல அவர் சதித் திட்டம் தீட்டியது போர்ஷியாவுக்குத் தெரியுமா, தெரியாதா என்பதில் பலவிதமான கருத்துகள் நிலவுகின்றன. தன் கணவரின் திட்டத்தை ஆதரித்ததோடு நில்லாமல் அவருக்குத் தன்னாலான உதவிகளையும் போர்ஷியா செய்தார் என்கிறார்கள் ஒரு தரப்பினர்.
போர்ஷியாவிடம் புரூட்டஸ் தன் திட்டத்தைப் பகிர்ந்துகொண்டிருக்க வாய்ப்பேயில்லை என்கின்றனர் இன்னொரு தரப்பினர்.
புகழ்பெற்ற வரலாற்றாசிரியர் புளூடார்க் அளிக்கும் சித்திரம் வித்தியாசமானது. ஒரு நாள் போர்ஷியா தன் கணவரைக் காண்பதற்காக அவருடைய அறைக்குச் சென்றார். அங்கே புரூட்டஸ் கவலையும் குழப்பமும் தோய்ந்த முகத்துடன் அமர்ந்திருப்பதைக் கண்டார்.
நீங்கள் எதைப் பற்றி யோசித்துக் கொண்டிருக்கிறீர்கள், ஏன் இப்படிச் சோர்வாக இருக்கிறீர்கள் என்று அவரிடம் விசாரித்தார். சீஸரை எப்படிக் கொல்வது என்பதைப் பற்றிதான் அப்போது புரூட்டஸ் சிந்தித்துக்கொண்டிருந்தார். ஆனால், அதை அவர் தன் மனைவியிடம் பகிர்ந்துகொள்ளவில்லை. ஏதோ சாக்குபோக்கு சொல்லி போர்ஷியாவை அவர் திருப்பியனுப்பிவிட்டார்.
இது போர்ஷியாவைப் பாதித்தது. தன் ஆசை கணவர் ஏன் தன் மனநிலையை என்னுடன் பகிர்ந்துகொள்ள மறுக்கிறார்? நான் அப்படி என்ன தவறாகக் கேட்டுவிட்டேன்? ஒருவேளை ஏதேனும் அரசாங்க விவகாரமாக இருக்குமோ? இருந்தால்தான் என்ன? நான் அவர் மனைவிதானே? தன் மனதைப் பிசையும் விஷயம் என்ன என்பதை என்னுடன் அவர் பகிர்ந்துகொண்டிருக்கலாமே? என் உதவியை நாடாவிட்டாலும் தகவலாவது சொல்லியிருக்கலாமே. ஏன் செய்யவில்லை அவர்? அப்படியானால் என்னை அவர் இன்னும் பரிபூரணமாக நம்பவில்லையா? என் காதலை, தூய்மையான அன்பை அவர் சந்தேகிக்கிறாரா?
பிறகுதான் போர்ஷியாவுக்குக் காரணம் தெரிந்தது. புரூட்டஸ் ஏதோ ஒரு ரகசியமான திட்டத்தை வகுத்துக்கொண்டிருக்கிறார். அதை ஒருவரிடமும் சொல்ல அவர் விரும்பவில்லை. காதல் மனைவிதான் என்றபோதும் ஒரு பெண் என்பதால் அவர் ரகசியத்தைப் பகிர்ந்துகொள்ளத் தயங்கியிருக்கிறார். நிச்சயம் அந்த ரகசியம் அரசாங்க அலுவல் சம்பந்தப்பட்டதாகத்தான் இருக்கவேண்டும். ஆபத்தானதாகவும் இருக்கக்கூடும். போர்ஷியாவுக்கும் அந்த ரகசியம் தெரியும் என்னும் உண்மை வெளிவந்தாலும் அவரையும் அரசுப் படைகள் கைது செய்துவிடும். என்ன, ஏது என்று கேள்விகள் கேட்டும் சித்திரவதை செய்தும் துன்புறுத்தவும் செய்யும். பெண்களால் இத்தகைய வதைகளைப் பொறுத்துக்கொள்ளமுடியாது என்பதை ரோமானியர்கள் அறிவார்கள். அதனால்தான் புரூட்டஸ் அமைதி காத்திருக்கிறார்.
ஆம், இதுதான் உண்மையான காரணமாக இருக்கமுடியும் என்று நினைத்துக்கொண்டார் போர்ஷியா. அப்படியானால் இந்த நிலைமையை எப்படி மாற்றுவது? எப்படிப் புரூட்டஸின் நம்பிக்கையைப் பெறுவது? அதற்கோர் உபாயத்தைக் கண்டுபிடித்தார் போர்ஷியா. ரகசியம் காக்கத் தெரிந்திருக்கவேண்டுமானால் சித்திரவதைகளையும் தாங்கத் தெரிந்திருக்கவேண்டும். சவரம் செய்ய பயன்படும் கத்தியை கையில் எடுத்தார். தன் தொடையில் அந்தக் கத்தியை வைத்து கீறிக்கொண்டார். காயம் ஏற்படும்வரை அவர் ஓயவில்லை. வலித்தது. ஆனால், அந்த வலியைப் பொறுத்துக்கொள்ள அவர் கற்றுக்கொண்டார். வலியைத் தாண்டி உள்ளுக்குள் மகிழ்ச்சி படர்ந்தது. நம்பிக்கையும் துளிர்விட்டது. இனி என் கணவர் என்னை நம்புவார். நம்பியே தீருவார்.
பரிசோதனை வெற்றி என்றாலும் காய்ச்சல் கண்டுவிட்டது. ஒன்றிரண்டு நாள் எழுந்திருக்க முடியவில்லை. காய்ச்சல் அகன்றதும் துள்ளிக் குதித்து தன் கணவரிடம் ஓடிச்சென்றார் போர்ஷியா.
புளூடார்க்கின் வார்த்தைகளில் இனி போர்ஷியாவின் வசனத்தைக் காணலாம். ‘என் அன்புக்குரிய கணவரே, நீங்கள் என் உள்ளத்தை நேசித்தாலும், என் உள்ளத்தை நம்பினாலும் என் உடல் குறித்து உங்களுக்குச் சந்தேகம் நேர்ந்திருக்கலாம். அதில் பாதகம் எதுவுமில்லை. எனக்குமேகூட அந்தச் சந்தேகம் இருந்தது. இப்போது அது பறந்தோடிவிட்டது. ஆம், என் உடலை இப்போது நான் நம்புகிறேன். அது எல்லா வதைகளையும் தாங்கிக்கொள்ளும் என்று நம்புகிறேன். இனி அஞ்சவேண்டாம். எத்தனை சவுக்கடிகள் கொடுத்தாலும், நெருப்பில் வாட்டினாலும் ஒரு சொல்கூட என்னிடமிருந்து வராது. நீங்கள் என்னை இனி நம்பலாம். ஒருவேளை இப்போதும் நம்பவில்லையென்றால் நான் உயிர் வாழ்வதில் அர்த்தமேயில்லை.’
தன் மனைவியின் தொடையில் ஏற்பட்ட காயத்தைக் கண்டதும் புரூட்டஸ் மனம் மாறினார். தன்னுடைய சதி திட்டத்தை போர்ஷியாவிடம் பகிர்ந்துகொள்ள அவர் முடிவு செய்தார். ஆனால், அதற்குள் வேறு சில பணிகள் வந்துவிட்டதால் அவர் கிளம்பிவிட்டார். சீஸரைக் கொல்லும் திட்டம் நிறைவேறியது. ஆனால், போர்ஷயா நிலைகொள்ளாமல் தவித்துக்கொண்டிருந்தார். ஆபத்தான பணியில் ஈடுபட்டிருக்கும் தன் கணவன் பத்திரமாக வீடு திரும்பவேண்டும் என்பதே அவர் ஒரே கவலை. தன் திட்டத்தைப் பகிர்ந்துகொள்ள புரூட்டஸுக்கு நேரம் கிடைக்காவிட்டாலும் அதை விவரிக்க அவர் தயாராக இருந்தார் என்பதே போர்ஷியாவுக்கு மனநிறைவை அளித்துவிட்டது.
இதற்கிடையில் புரூட்டஸ் சீஸரைக் கொன்ற கையோடு ஏதென்ஸ் தப்பிச்சென்றுவிட்டார். போர்ஷியா இத்தாலியில் இருப்பதுதான் அவருக்குப் பாதுகாப்பானது என்று சொல்லப்பட்டது. புரூட்டஸ் பாதுகாப்பாக இருக்கவேண்டுமே என்று நினைத்து நினைத்து வருந்தி மயங்கிச் சரிந்துகொண்டிருந்தார் போர்ஷியா. மயங்காதபோது வாய்விட்டுக் கதறி அழுதார். புரூட்டஸ் என்ன செய்தார், எதற்காகத் தப்பியோடினார் என்பது இப்போது ஊரறிந்த ரகசியமாகிவிட்டது. தன் கணவரை நிச்சயம் ரோமானியப் படைகள் பிடித்துக் கொன்றுவிடும் என்று போர்ஷியா அஞ்சத் தொடங்கினார். புரூட்டஸ் இல்லாத வாழ்க்கையை அவரால் நினைத்தும் பார்க்க முடியவில்லை. அவருக்காகவே வளர்க்கப்பட்ட இந்த உடலையும் உயிரையும் வைத்துக்கொண்டு நான் என்ன செய்வேன் என்று அரற்றினார். தற்கொலை செய்துகொள்ள முடிவு செய்தார்.
அதற்கு அவர் தேர்ந்தெடுத்தது வதையின் உச்சத்தை. காற்றுப் புகமுடியாத அறைக்குள் சென்று தாழிட்டுக்கொண்ட போர்ஷியா தகித்துக்கொண்டிருந்த அடுப்புக் கரிகளை அள்ளி அள்ளி வாயில் போட்டு மென்று விழுங்க ஆரம்பித்தார். தொண்டை, வயிறு என்று தொடங்கி முழு உடலிலும் வெப்பம் பரவத் தொடங்கியது. மேலும் மேலும் கரித் துண்டுகளை அள்ளியெடுத்து விழுங்கிக்கொண்டே இருந்தார் போர்ஷியா. மரணம் அணைத்துக்கொள்ளும்வரை அவர் தன்னை வாட்டிக்கொண்டார்.
‘ஆகவே பெண்களே நீங்கள் போர்ஷியா போல் இருங்கள்’ என்று ஒவ்வொரு ரோமானியப் பெண்ணையும் பார்த்துச் சொன்னவர்கள் அவர்களிடமிருந்து என்ன எதிர்பார்த்திருப்பார்கள் என்பதை யூகிப்பதில் சிரமம் இருக்கமுடியாது.
பொருள் 50 : கார்னீலியாவின் நகைகள்
புளூடார்க் விவரிக்கும் மற்றோர் உதாரண ரோமப் பெண், கார்னீலியா. அவருக்கு மொத்தம் 12 குழந்தைகள். மூவர் மட்டுமே பிழைத்திருந்தனர். மணந்துகொள்ளும்போதே முதியவராக இருந்த கணவரும்கூட சில ஆண்டுகளில் இறந்துவிட்டார். செல்வாக்கான குடும்பத்தைச் சேர்ந்தவர், அழகானவர் என்பதால் அவரைத் திருமணம் செய்துகொள்ள சிலர் முன்வந்தனர். அவர்களில் ஒருவர் ரோமானிய மன்னரும்கூட. ஆனால், எல்லா அழைப்புகளையும் நிராகரித்துவிட்ட கார்னீலியா எஞ்சிய தனது வாழ்நாளை குழந்தைகளின் எதிர்காலத்துக்கு மட்டுமே அர்ப்பணிக்கமுடியும் என்று தெளிவாகச் சொல்லிவிட்டார்.
தன் குழந்தைகளை அருகில் இருந்து பொறுப்புடன் கவனித்துக்கொண்ட கார்னீலியா அவர்களுடைய ஒவ்வொரு தேவையையும் பார்த்துப் பார்த்து நிறைவேற்றினார். குழந்தைகளைக் கவனித்துக்கொள்வதைக் காட்டிலும் அவர்களை வளர்த்து ஆளாக்குவதைக் காட்டிலும் மேலான மகிழ்ச்சியோ கடமையோ இருக்க முடியாது என்று கார்னீலியா நம்பினார். இத்தனைக்கும் அவர் வசதியான குடும்பத்தைச் சேர்ந்தவர். செல்வாக்குமிக்க குடும்பத்தில் இருந்து வந்தவர். படித்தவர். பிற்காலத்தில் லத்தீன், கிரேக்கம் உள்ளிட்ட மொழிகளை ஆர்வத்துடன் கற்றுக்கொண்டார். கார்னீலியா நினைத்திருந்தால் மன்னரை மணந்திருக்கலாம். அல்லது செல்வந்தர்கள் யாரையேனும் தேர்வு செய்திருக்கலாம். தன் குழந்தைகளைக் கவனித்துக்கொள்ள பணியாளர்களின் கூட்டத்தையே அவர் நியமித்திருக்கலாம். ஆனால், எதையும் அவர் செய்யவில்லை.
இதுவே கார்னீலியாவின் அடையாளமாகவும் மாறிப்போனது. பார்த்தாயா அந்தப் பெண்ணை, வாழ்ந்தால் அவளைப் போல் வாழவேண்டும் என்று ரோமானிய மக்கள் பேசிக்கொள்ள ஆரம்பித்தார்கள். செல்வமும் புகழம் அழகும் கார்னீலியாவின் ‘தலைக்குள்’ சென்றுவிடவில்லை என்பதை அவர்கள் சொல்லிச் சொல்லி மாய்ந்துபோனார்கள். இவற்றில் எதுவொன்றும் இல்லாமலேயே ‘செருக்குடன்’ நடந்துகொள்ளும் பெண்களை கார்னீலியாவின் பெயரைச் சொல்லி இடித்துரைக்கவும் அவர்கள் தயங்கவில்லை. எப்போதுமே எளிமையாக ஆடை அணிந்துகொள்வாராம் கார்னீலியா. நகைகள்கூட அணிந்துகொள்வதில்லை. ஒருநாள் அவரைப் பார்த்து இன்னொரு பெண் கேட்டிருக்கிறார்: ‘நீ ஏன் இப்படிக் காட்சியளிக்கிறாய்? ஒரு சிறிய நகையாவது அணிந்துகொள்ளலாமே?’ கார்னீலியா தன் குழந்தைகளைச் சுட்டிக்காட்டினாராம். ‘அதோ அவர்கள்தாம் என் நகைகள்.’
டைபீரியஸ், கயஸ் இருவரும் தங்கள் தாயின் ஆளுமையாலும் செல்வாக்காலும் கவரப்பட்டு ரோமனில் பல சீர்திருத்தங்களைக் கொண்டுவந்தார்கள் என்கின்றன வரலாற்றுக் குறிப்புகள். இந்த மாற்றங்களைத் தீவிரமானவையாக இருந்தன என்று அவை குறிப்பிட்டாலும் அவற்றைப் பற்றி மேலதிகம் தெளிவான விவரங்கள் கிடைக்கவில்லை. ரோமானிய சமூகத்தில் நிலவிய பிற்போக்குத்தனமான சமூக, அரசியல் வழக்கங்களை உடைத்து, சில புதிய மரபுகளை அவர்கள் அறிமுகப்படுத்தியிருக்கவேண்டும் என்று யூகிக்கலாம். இந்த மாற்றங்கள் நடைபெறுவதற்கு கார்னீலியா நேரடிக் காரணமாக இருந்தாரா அல்லது அவர் போதித்த கல்வியில் இருந்து இரு மகன்களும் உத்வேகம் பெற்று மாற்றங்களைத் தாமாகவே மேற்கொண்டனரா என்பதும்கூடத் தெரியவில்லை. எப்படியிருந்தாலும் வழக்கமான ஒரு பெண்ணாக இன்றி மாறுபட்ட குணநலன்களும் சிந்தனைகளும் மாற்றுப் பார்வையும் கொண்டவராக கார்னீலியா இருந்தார் என்று நம்பலாம்.
கார்னீலியாவின் மகன்கள் ஏற்படுத்திய மாற்றங்களை ரோமானியச் சமூகம் விரும்பவில்லை என்பதோடு மட்டுமின்றி தீவிரமாக எதிர்க்கவும் செய்தது. கடுமையான மோதல்களும் எதிர்ப்புகளும் அவர்களுக்கு எதிராகக் கிளம்பின. இறுதியில் இருவருமே எதிர்ப்பாளர்களால் தாக்கிக் கொல்லப்பட்டனர். தன் மகன்களைப் பறிகொடுத்த கார்னீலியா அதற்குப் பிறகு தன்னைத் தனிமைப்படுத்திக்கொண்டார் என்கின்றன குறிப்புகள். கார்னீலியாவின் மகன்களை ஏற்காவிட்டாலும் கார்னீலியாவை ரோம நகரம் ஏற்றுக்கொண்டது. அவரது மரணத்துக்குப் பிறகு அவரை வெகுவாகப் புகழ்ந்து கொண்டாடவும் செய்தது. அமெரிக்காவில் உள்ள ஓஹியோ மாநிலத்தில் கார்னீலியாவின் சிலை நிறுவப்பட்டுள்ளது. அரசியல் தலைவர்கள், ராணுவத் தலைவர்கள் ஆகியோருக்கு மத்தியில் கம்பீரமாக உயர்ந்து நிற்கிறார் கார்னீலியா. அவர் தன் இரு கைகளையும் விரித்துவைத்திருக்கிறார். ‘இவர்கள்தாம் என் குழந்தைகள்’ என்னும் முழக்கம் பொறிக்கப்பட்டுள்ளது.
கார்னீலியா கொண்டாடப்பட்டதற்கான காரணங்கள் தெளிவானவை. இறுதிவரை ஒரு விதவையாகவே அவர் நீடித்தார். இறுதிவரை தன் குழந்தைகளை அருகில் இருந்தபடி அவர் கவனித்துக்கொண்டார். இறுதிவரை ஆடம்பரங்களில் அவர் நாட்டம் கொள்ளவில்லை. கார்னீலியா போல் ஒவ்வொரு பெண்ணும் இருந்துவிட்டால் சமூகம் நல்லபடியாகத் தழைக்கும் என்றார்கள் ரோமானியர்கள்.
கார்னீலியாவும் போர்ஷியாவும் மட்டுமல்ல அவர்களுடைய குணநலன்களைக் கொண்டிருக்கும் பெண்கள் பலருக்கு வரலாற்றில் சிறப்பான இடம் அளிக்கப்பட்டுள்ளது. இந்த மேலான குணங்களைக் கொண்டிராத பெண்கள் வில்லிகளாக மாறிப்போனார்கள். அவர்கள் ஏன் கார்னீலியா போல், போர்ஷியா போல் இல்லை என்று கேட்கப்பட்டனர். அப்படி இல்லாமல் போனதால் விமரிசிக்கப்பட்டனர், ஒதுக்கப்பட்டனர், தண்டிக்கப்பட்டனர். மேலும் மேலும் பல கார்னீலியாக்களும் போர்ஷியாக்களும் பெண்களிடமிருந்து உருவாகவேண்டும் என்பதே என்றென்றும் சமூகத்தின் கனவாக இருக்கிறது.
0
படைப்பாளர்:
மருதன்
எழுத்தாளர், வரலாற்றாளர். சே, ஹிட்லர், ஃபிடல் காஸ்ட்ரோ, திப்பு சுல்தான், மண்டேலா, மாவோ, ஸ்டாலின் ஆகிய உலகத் தலைவர்களின் வாழ்க்கை வரலாறுகளை எழுதியுள்ளார். இவரது ஹிட்லரின் வதைமுகாம்கள், முதல் உலகப் போர், இரண்டாம் உலகப்போர், ஷெர்லக் ஹோம்சால் தீர்க்க முடியாத புதிர், துப்பாக்கி மொழி, திபெத்- அசுரப் பிடியில் அழகுக்கொடி, ஒரு புத்திரனால் கொல்லப்படுவேன் ஆகிய நூல்கள் கவனம் ஈர்த்தவை. பிரபல தமிழ் இதழ்களில் தொடர்கள் எழுதிவருகிறார். இந்து தமிழ் திசை மாயா பஜார் குழந்தைகள் இணைப்பிதழுக்கும் கட்டுரைத் தொடர் எழுதி வருகிறார்.