கேள்வி
என் செல்ல மகன் தினேஷ் 8 வயது, 33 கிலோ இருக்கிறான். நன்றாகச் சாப்பிடுகிறான். விளையாடுகிறான். ஆனால், குடும்ப டாக்டர் எடை அதிகம் என்கிறாரே! என்ன மாத்திரை தரலாம்? நான் லீமா.
பதில்
உங்கள் குடும்ப டாக்டர் சரியாகத்தான் சொல்லி இருக்கிறார். தினேஷின் எடை அதிகம்தான்! உங்கள் குழந்தையின் உயரமும் பிறந்த எடையும் தெரிந்தால் இன்னும் சரியாகச் சொல்லிவிட முடியும்.
பிறந்தபோது குழந்தையின் எடையை வைத்து சுமாராக வயதிற்கு ஏற்ப இருக்க வேண்டிய எடையைக் கணக்கிட முடியும். உதாரணமாக 3 கிலோ எடையுடன் பிறந்த குழந்தை 5 வயதில் 15 கிலோ, 7 வயதில் 21 கிலோ, 9 வயதில் 27 கிலோ, 10 வயதில் 30 கிலோ எடை இருக்க வேண்டும் என்று சராசரியாகக் கூறலாம்.
உடல் அடர்த்தி குறியீடு (Body Mass Index – BMI) என்கிற விதியின்படியும் இருக்க வேண்டிய எடையைக் கணக்கிடலாம்.
உடல் அடர்த்தி குறியீடு BMI எண் கணக்கிடும்முறை:
குழந்தையின் எடை (கிலோ)
————————————–
உயரம்2 (செ.மீ)

உதாரணமாக:
எடை=25 கிலோ
———————
உயரம் 1052 செ.மீ (105 X 105 = 11.025)

    25
    --- = 22.7
    11.025

BMI – 22 . 7
சரிபார்க்கும் அட்டவணை:
BMI < 18.5 = எடை குறைவு ( Under Weight)
18.5 – 25 = சரியான எடை ( Normal Weight)
25 – 30 = அதிக எடை ( Over Weight)

30 = பருமன் ( Obese)
இந்தியா முதலான ஆசிய நாடுகளில் மாவுச்சத்து உணவு அதிகமாகவும் உடல் உழைப்பு குறைவாகவும் இருப்பதால் சரியான எடைக் குறியீடு என்பதை 23 என்று குறைத்துவிட்டார்கள். அதற்கு மேல் இருந்தாலே அதிக எடை என்கிற கணக்குதான்.
உடல் எடையைக் கட்டுக்குள் வைத்திருப்பது காலத்தின் கட்டாயம் என்பது புரிகிறதல்லவா?
உங்கள் பையன் இந்தக் கணக்கீட்டில் எங்கு இருக்கிறார் என்று பாருங்கள். BMI 23க்கு மேல் இருந்தால் அதிக எடைதான். குழந்தைகளுக்கு மருந்து, மாத்திரைகளால் எடையைக் குறைக்க முடியாது. சரிவிகித உணவு, உடற்பயிற்சி, மன அமைதி ஆகியவற்றின் மூலம்தான் உடல் எடையைக் கட்டுப்படுத்த முடியும். இதைத்தான் வாழ்வியல் முறைகள் (Life Style Medications) என்று சொல்கிறோம்.
சாப்பாட்டின் அளவைக் குறைப்பதால் மட்டும் எடை குறையாது. உணவில் மாவுச்சத்தும் கொழுப்புச்சத்தும் அதிகம் இருந்தால் எடை ஏறிவிடும். எனவே இவற்றைக் குறைத்து புரதச்சத்துகள், நார்ச்சத்துகள் மற்றும் நுண்ணூட்டச் சத்துகள் நிறைந்த உணவு வகைகளைச் சாப்பிட வைக்க வேண்டும். உதாரணமாக காலையில் 4 இட்லி, உருளைக்கிழங்கு கிரேவி, பொடி எண்ணெய் என்று தருவதற்குப் பதில் 2 இட்லி, ஒரு கப் சுண்டல், காய்கறி நிறைந்த கிரேவி, முட்டையின் வெள்ளைக்கரு தரலாம். வாரம் இரண்டு முறை மீன் வகைகள், இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை சிக்கன் அல்லது மட்டன் மதியம் சாதத்துடன் காய்கறிகளுடன் சேர்த்துத் தர வேண்டும். பல அசைவ உணவு வகைகள் கொழுப்புச் சத்து நிறைந்தவை. அதிகமாகச் சாப்பிட்டால் எடை அதிகரிக்கும். சமைக்கும் முறையும் முக்கியமானது, பொரித்த மீனுக்கும் குழம்பு மீனுக்கும் வேறுபாடு இருக்கிறது.
மாலை பள்ளியிலிருந்து திரும்பியதும் சுண்டல், சிறுதானிய வகை கஞ்சி, சப்பாத்தி, தோசை, கொழுக்கட்டை போன்றவை ஏதாவதும பழங்களும் தரலாம்.
இரவிலும் காய்கறிகள் நிறைய சேர்க்க வேண்டும். சாதம், இட்லி, தோசை சப்பாத்தி போன்ற முதன்மை உணவு வகைகளைக் (Main Course) குறைத்து தொடுகறிகளை அதிகரிக்க வேண்டும்.
பழங்கள், காய்கறிகள், சுண்டல், சிறுதானியங்கள் ஆகியவற்றில் நார்ச்சத்து அதிகம். எனவே வயிறு நிரம்பிய உணர்வைத் தரும். ஜீரணத்திற்கும் மிகவும் நல்லது.
பால் 100- 150 மில்லி காலை, மாலை மட்டும் தரலாம். விளம்பரத்தில் வரும் எந்தப் பவுடரையும் இதில் சேர்க்கத் தேவையில்லை. அவற்றால் பிரயோசனமும் இல்லை. வீண் செலவு மட்டும்தான்!
வீட்டில் அவ்வப்போது செய்யப்படும் வறுத்த, பொரித்த உணவு வகைகளான பஜ்ஜி, வடை, போண்டா, சிப்ஸ், அப்பளம் ஆகியவற்றை அளவோடு சாப்பிடக் கொடுக்கலாம்.
கடையில் விற்கப்படும் நொறுக்குத் தீனிகளை அறவே தவிர்க்க வேண்டும். மென்பானங்களும் கூடாது. பழச்சாறு, சூப் போன்றவற்றை வீட்டில் செய்து தரலாம்.


தினமும் ஒரு மணி நேரமாவது உடற்பயிற்சி தேவை. ஓடி ஆடி விளையாடுவது, சைக்கிள் ஓட்டுவது, நீச்சல் பயிற்சி, நடைப் பயிற்சி, ஓடுவது போன்றவை கட்டாயம் தேவை.
எடை அதிகரித்து விட்டதே என்று கவலைப்படுவது குழந்தைக்கு ஸ்ட்ரெஸ் உண்டாக்கும். இதனால் எடை மேலும் அதிகரிக்கலாம். எனவே நீங்களும் ஸ்ட்ரெஸ் ஆகாமல் நான் நிச்சயம் குழந்தையின் எடையை குறைப்பேன் என்று மனதிற்குள் உறுதி எடுத்துக்கொள்ளுங்கள். அவனுக்குப் புரிய வைத்து நிதானமாகத் திட்டமிட்டு மெதுவாக உடல் எடையைக் கட்டுக்குள் கொண்டுவர வேண்டும். உடனடியாகக் குறைப்பதைவிட, மேலும் அதிகரிக்காமல் இருக்க வைப்பதுதான் முதல் படி.
எடை அதிகமானால் சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம், ரத்தத்தில் அதிக கொழுப்பு ,எலும்பு தேய்மானம் ஆகிய நோய்கள் இளம் வயதிலேயே வர வாய்ப்புகள் அதிகம்.
பள்ளியில், விளையாடும் இடத்தில் ’குண்டு’ என்று பாடி ஷேமிங் செய்தார்கள் என்றால், குழந்தையின் மன அழுத்தம் அதிகமாகும். படிப்பில் கவனம் குறையும். பையன் சாப்பாட்டைக் குறைக்க-தவிர்க்க ஆரம்பித்துவிடுவான். அதனால் களைப்பும் பசியும் அதிகம் ஏற்படும். அது அடுத்த வேளை அதிகம் சாப்பிடத் தூண்டும். இது ஒருவித சுழற்சி (Vicious Cycle). இதில் குழந்தை மாட்டிவிடக் கூடாது.

தைராய்டு ஹார்மோன் குறைவாகச் சுரத்தல், விட்டமின் குறைபாடு போன்றவையும் உடல் எடை அதிகரிக்க காரணங்களாக அமையும். உங்கள் மருத்துவரை அணுகி அடிப்படையான சில பரிசோதனைகள் செய்து கொள்ளலாம். ரத்த அழுத்தத்தை அளவிட்டுக் கொள்ளலாம். ஏதாவது நோய் அறிகுறிகள் தெரிந்தால் அதற்கான சிகிச்சை முறையை மருத்துவரின் ஆலோசனைப்படி மேற்கொள்ளலாம்.
தற்போது குழந்தைகள் மற்றும் வளர் இளம் பருவத்தினரிடையே அதிக உடல் எடை, அதிக பருமன் (Obesity) என்பது அதிகமாக உள்ளது. பள்ளியில் 6- 12% குழந்தைகள் அதிக உடல் எடையுடன் இருக்கிறார்கள் என்று புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. அந்தப் புள்ளி விவரங்கள் குழந்தை மருத்துவர்களை அச்சுறுத்துகின்றன.
குழந்தைகள் பள்ளிக்கூடம் போகும்போது செலவுக்கென்று அதிகப் பணம் கொடுக்கக் கூடாது. பள்ளியிலும் பெற்றோர் ஆசிரியர் கூட்டங்களிலும் பள்ளி கேண்டீனில், பள்ளி வாசலிலும் விற்கப்படும் திண்பண்டங்கள் ஆரோக்கியமானதாக இருக்க தகுந்த அறிவுரையும், ஆலோசனைகளையும் வழங்க வேண்டும்.
பள்ளியில் தினமும் ஒரு மணி நேரம் விளையாட்டு, உடற்பயிற்சி கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.
உடல் எடையைக் கட்டுக்குள் வைத்திருப்பது ஒரு வாழ்க்கை முறை. இது ஒரு நீண்ட பயணம். இதனை நீங்களும் பையனும் மனதில் ஆழமாகப் புரிந்து வைத்துக் கொள்ள வேண்டும். உங்கள் பையனின் கையைப் பிடித்துக் கொண்டு நிதானமாகப் பயணத்தை மேற்கொள்ளுங்கள்.

படைப்பாளர்

மரு. நா. கங்கா

நா.கங்கா அவர்கள் 30 வருடம் அனுபவம் பெற்ற குழந்தை மருத்துவர். குழந்தை மருத்துவம் மற்றும் பதின்பருவத்தினர் மருத்துவத்தில் சிறப்புப் பட்டம் பெற்றவர். குழந்தைகளுக்கான உணவு மற்றும் தாய்ப்பால் ஊட்டுதல் ஆகியவற்றில் சிறப்புப் பயிற்சி பெற்ற உணவு ஆலோசகர். குழந்தை வளர்ப்பில் முனைவர் பட்டமும் பெற்றிருக்கிறார். இந்திய குழந்தை மருத்துவர் சங்கத்தின் “சிறந்த குழந்தை மருத்துவர்” விருது பெற்றவர். குழந்தை வளர்ப்பு பற்றி பல நூல்களை எழுதியிருக்கிறார். வானொலி மற்றும் அச்சு ஊடகங்கள் மூலமாகத் தொடர்ந்து குழந்தை வளர்ப்பு மற்றும் குழந்தைகளின் உடல்நலம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்.