பெண்ணின் வாழ்வில் எந்தப் பருவம் இனிமையானது என்று ஆராய்ந்தால் சொல்லிக்கொள்வதற்கான ஒருசில பக்கங்கள்கூட இல்லை என்பதே யதார்த்தம். ஒவ்வொரு நாளும் பெற்றோரின் சொல்படி நடந்து, கணவனின் உத்தரவுக்குக் கீழ்ப்படிந்து, பிள்ளைகளின் விருப்பத்திற்கு ஏற்ப வாழ்ந்து, இச்சமூகத்தின் ஒட்டுமொத்த விருப்பு வெறுப்புகளையும் அவளின் மீது திணித்து வைக்கும் அமைப்பாகத்தானே இன்றைய வாழ்க்கைமுறை அவளுக்கு வாய்த்திருக்கிறது!

பெண்ணின் அதிகபட்ச ஆசை என்னவாக இருக்கும் என்று யோசித்துப் பார்க்கிறேன். முதலில் அம்மாவின் சொல்படி கேக்க வேண்டும், அவர்கள் விருப்பப்படியே படிக்க வேண்டும், கைநீட்டிய ஆடவனை விருப்பமின்றியே திருமணம் செய்துகொள்ள வேண்டும், அப்புறம் தனக்கான கணவனைத் தக்க வைத்துக் கொள்வதற்கான சாமர்த்தியத்தை அவள் மாண்டு மடியும்வரை கடைப்பிடிக்க வேண்டும். பின் எல்லாவற்றின் சாட்சியமாக ஒரு குழந்தை, அதுவும் ஆண் வாரிசைப் பெற்றுக் கொடுக்க வேண்டும். இப்போதைய தலைமுறைக்கு இது கடந்தகாலத்தின் நிழலாகத் தெரிந்தாலும் எனது தலைமுறையின் நிஜம் இதுதானே?

ஒரு பெண் இதைத் தவிர்த்து வேறு எதைச் சிந்தித்தாலும் அவள் தவறான நடத்தையுடையவள் என்று பட்டம் கொடுப்பதுதான் இங்கு வழக்கம். இன்றைய சூழலில் அப்படியெல்லாம் எதுவும் இல்லை, பெண்கள் இப்போது எப்படியெல்லாம் நவீனமாக இருக்கிறார்கள் என்று பிதற்றிக் கொள்ளலாம். ஆனால், உண்மையோ அதற்குப் புறம்பானது. இது ஒரு சில பெண்களுக்கு மட்டும் வேண்டுமானால் பொருந்துமே தவிர மற்றபடி எல்லாருமே இன்றளவும் பலவகையில் நசுக்கப்பட்டுதானே இருக்கின்றனர்.

நிஜத்தில் தனக்காகவென்று எந்தப் பெண்ணும் யோசிப்பதே இல்லையே, அப்படியே யோசித்தாலும் அதுவும் முழுக்க அவளது குடும்பத்தைச் சார்ந்ததாகவே இருக்கிறது. அவளுக்கென்று அவள் எதையுமே செய்துகொள்வதில்லை. ஆனாலும் இந்தச் சமூகம், “இதிலென்ன தவறு இருக்கிறது, பெண்ணென்பவள் எப்போதுமே வீட்டுக்கான ஒழுக்கக் கட்டுப்பாடோடுதான் இருக்க வேண்டும்” என்கிற பஞ்சாங்கம் வேறு.

இதையெல்லாம் சிந்தித்துப் பார்க்கும்போது என் பால்யத்தில் எனக்கும் எனது சித்திக்குமான உறவை யோசித்துப் பார்க்கிறேன். சித்தி அந்தக் காலத்திலேயே பள்ளி இறுதிப் படிப்பைத் தாண்டியவர். அச்சமயம் பள்ளிப் படிப்பென்பது கல்லூரியின் மேற்படிப்பிற்குச் சமம். அப்போது தையற்கலை கற்றுக்கொண்டிருந்தவரை இளமைப்பருவம் தப்பிவிடக் கூடாதென்று உடனே திருமணம் செய்து வைக்க தாத்தாவும் பாட்டியும் முடிவு செய்தனர். அவ்வாறே தூரத்துச் சொந்தமான எனது சித்தப்பாவிற்கு மணமுடித்தும் வைத்தனர். அகமண திருமணத்திற்குத்தான் எத்தனை சாக்குபோக்குகள். ஆனால், சித்தியின் வாழ்வில் அப்போதுதான் துயரத்தின் காற்று வீசத் தொடங்கியது. திருமணம் முடிந்த கையோடு சித்தப்பா எல்லாவற்றிற்கும் கட்டுப்பாடு விதித்தார். முதலில் சுடிதார் அணியக் கூடாது என்று ஆடை விஷயத்தில் ஆரம்பித்த அடக்குமுறை அடுத்தடுத்து பெற்றோர் வீட்டுக்குப் போகக் கூடாது, அக்கா வீட்டுக்கு போகக் கூடாது என்று கட்டளைகளாக நீள ஸ்தம்பித்துப் போனார். இப்படியே அவர் எத்தனை கூடாதுகளைக் கேட்டிருப்பார் என்ற கணக்கெல்லாம் இப்போதும்கூட அவரிடம் இல்லை.

இதையெல்லாம் சகித்துக்கொண்டு வாழப்பழகிக் கொண்ட சித்திக்கு கால இடைவெளியில் அடுத்தடுத்து மூன்று குழந்தைகள் என்றானது. அதன் தொடர்ச்சியாகக் கருத்தடை சிகிச்சையும் கூடவே வயிற்றுப் பகுதியில் உபாதைகளுக்கான அறுவை சிகிச்சையுமான காலத்தை வாதையோடு கடந்தார். இப்படி உடம்பையே கூறுபோட்டபடி படுத்திருந்த காலத்திலும்கூட அவர் யாரையும் பார்க்கப் போகக் கூடாது என்பதிலிருந்து விலக்கு ஏதும் கிடைக்கவில்லை. சித்தப்பாவே உடனிருந்து எல்லாவற்றையும் கவனித்துக் கொண்டார். தன்மீதான பாசம் என்று மட்டும் அவரால் அப்போது சமாதானம் செய்துகொள்ள முடிந்தது. இப்படியே அவரது உலகம் சுற்றிக்கொண்டிருந்தது.

வெளியுலக பார்வைக்கு நல்ல கணவர்தானே, எந்தச் சூழ்நிலையிலும் தாய் வீட்டுக்கு அனுப்பாமல் பார்த்துக் கொள்கிறார் அல்லவா என்றெல்லாம் தோன்றியிருக்கக்கூடும். நிஜத்தில் என்னவோ வீட்டுக்குள் ஒரு போர்க்களமே நடந்தபடி இருந்தது. திடுதிப்பென்று எல்லாவற்றிற்கும் குறைகூறிக் கொண்டிருந்த சித்தப்பாவைப் புரிந்துகொள்ள முடியாமல் சித்தியும் திணறியபடி இருந்தார். அதோடு குடும்பத்தின் அத்தனை காரணகாரிய அம்புகளும் அவரை நோக்கியே எய்யப்பட்டன. அதன் காயங்களால் அவர் வாழ்வு தழும்பேறத் தொடங்கியது.

எல்லாவற்றிற்கும் மேலே மூன்று ஆண் பிள்ளைகள் இருக்கிறார்களே எதையும் பொருட்படுத்தாமல், அவர்களை வளர்த்து ஆளாக்கி வீட்டினுள்ளே பொத்திப்பொத்தி வளர்த்தார் சித்தி. பிள்ளைகளும் அம்மா கிழித்த கோட்டைத் தாண்டாமல் வளர்ந்தார்கள். ஒருகட்டத்தில் காரணமின்றி தாயை அவர்களும் ஏசத் தொடங்கினர். எனக்காக உங்களால் என்ன செய்ய முடிந்தது என்று கணக்கு கேட்கத் தொடங்கினர். இதையெல்லாம் கணக்கு பார்த்து தீர்த்துக் கொள்ள முடியுமா என்றெல்லாம் அவருக்கு ஒன்றும் விளங்கவில்லை.

ஆனால், எல்லாவற்றிற்கும் ஒருநாள் அவருக்கு விடை கிடைத்தது. இன்னொரு பெண்ணுடன் சித்தப்பாவிற்கு இருக்கும் தொடர்பு தெரிந்துவிடாமல் இருப்பதற்காகத்தான் வெளியுலகத்திற்குச் சித்தியை நெருங்க விடாமல் வைத்திருந்தார் என்கிற காரணம் தெரிய வருகையில் அவர் வாழ்வின் இறுதியில் இருந்தார். இதையெல்லாம் உணர்ந்துகொள்கிற வயதில் அவர் குடும்பத்திற்கென உழைத்து உழைத்து நிமிரக்கூட முடியாத கூனியாகி இருந்தார். உடல், அன்பு என்று தனக்குரிய எல்லாவற்றையும் இழந்து இறுதியில் நிற்கதியாகி நின்றார்.

இதையெல்லாம் பேசுகையில் அவரிடம் வெறுப்போடு கேட்டுக்கொண்டிருந்த நேரம், “ஏன் சித்தி, இதெல்லாம் எதுக்காகப் பொறுத்துட்டு இருந்திங்க” என்று கேட்டேன். அதற்கு, “ம்ம்… உங்க சித்தப்பாவ மனசார நேசிச்சேன். அவர்தான் என்னோட உலகம்னு நெனைச்சேன். அப்புறமா கலாச்சாரம்னு ஒன்னு இருக்குல” என்றார். அவரிடம் என்ன சொல்வதென்று தெரியாமல் வெறுப்போடு அவ்விடத்தைவிட்டு நகர்ந்தேன்.

அந்த நிமிடத்திலிருந்து என்னைச் சுற்றி ஏதோ தனிமையின் உணர்வு ஆட்கொண்டுவிட்டது. அதன் நிழலில் என்னைப் புதைத்துக் கொண்டேன். இத்தனை வருடங்களில் சித்தியைப் போன்று எத்தனையோ பெண்களைச் சந்தித்திருக்கிறேன். ஆனாலும் அவர்கள் ஒவ்வொருவரிடமும் காதலுக்காக, கட்டுப்பாடுக்காக, கட்டிய தாலியின் சாஸ்திரத்துக்காக என்று ஏதேனும் ஒரு காரணம் வைத்திருப்பார்கள். இதையெல்லாம் அவர்களுக்கு என்ன சொல்லிப் புரிய வைப்பது?

காதல் என்றால் என்ன… ஒருவர் எப்படியிருக்கிறாரோ அவரவர் நிலையிலேயே ஒருவர் ஏற்றுக்கொள்வதுதானே? இன்னும் கூடுதலாக நம்மோடு பயணித்து அடுத்த நிலைக்கு நம்மைக் கடத்திச் செல்வது. ஆனால், ‘எனக்கு வலிச்சா உனக்கு வலிக்கணும், எனக்கு காய்ச்சல் வந்தா உன்னோட உடலும் கொதிக்கணும், எனக்குக் பசிச்சா உனக்கும் பசிக்கணும்’ என்று இதுபோன்ற விஷயங்களையெல்லாம் பற்றிக் கேள்விப்படும்போது இதை, காதலா கட்டுப்பாடா என்று எப்படிச் சொல்லிப் புரிய வைப்பது?

தன் கணவனுக்காக, குழந்தைகளுக்காக, தன் குடும்பத்திற்காக என்று சிந்தித்து, தனக்கென ஒரு காசுகூடச் சேர்த்து வைக்காமல் எல்லாவற்றையும் இழந்து, அவர்களுக்காக மட்டும் வெளிச்சம் வீசி உருகும் மெழுகாகி, மற்றவர்களுக்காகத் தன் உடல் நலத்தைக்கூடக் கவனிக்காமல் விட்டுவிட்டு, நிமிரக்கூடாத கூனியாகிவிடும் எத்தனையோ பெண்களை இன்றும் கண்முன்னநே பார்த்துக்கொண்டுதான் இருக்கிறோம். வயோதீக நாளில் தன்னைக் காப்பாற்றிக் கொள்ளக்கூட வழி இல்லாமல் நடுவீதிக்கு தள்ளப்படுகின்றனர். வாழும்போதே நமக்காகவும் கொஞ்சம் வாழ்வோம், நம் உடல் நலனையும் கருத்தில் கொள்வோம். குடும்பத்தையும் தாண்டி ஓர் உலகம் இருக்கிறது என்று உணரும் பெண்கள் மட்டும்தானே வாழ்வில் உலகை ஜெயித்துக் கொண்டிருக்கிறார்கள்!

படை ப்பாளர்:

நட்சத்திரா

ஆய்வக நுட்பனராக மருத்துவமனையில் பணிபுரிகிறேன். இதுவரை புத்தக வாசிப்பு மட்டுமே கொண்டிருந்தேன். இது என்னுடைய முதல் எழுத்துப் பணி.