“மீனா…”
“சொல்லுங்க வருண்.”
”நாளைக்கு ஈவினிங் ஒன் அவர் பெர்மிஷன் வேணும்.”
“வருண். இன்னிக்குக் காலைலதான் மீட்டிங்ல சொன்னேன். ப்ராஜெக்ட் டெட்லைன் ரொம்ப டைட்டா இருக்கு. க்ளைண்ட்ஸ் ரெஸ்ட்லெஸ்சா இருக்காங்க. ஜான்சி, ஷீலா, நானெல்லாம் ஸ்ட்ரெட்ச் பண்ணி வொர்க் பண்ணிட்டு இருக்கோம்…”
“தெரியும் மீனா.. ஆனா என் பொண்ணு பர்த்டே நாளைக்கு. என் மாமனார் திடீர்னு ஈவினிங் அவுட்டிங் ப்ளான் பண்ணிட்டார்.”
”ஓ… மை பெஸ்ட் விஷஸ். ஆனா, பொண்ணு பர்த்டேனு உங்களுக்கு இன்னிக்குதான் தெரியுமா வருண்? “ என்று குரலில் அப்பட்டமான நக்கலுடன் கேட்டார் மீனா.
“ஹிஹி இல்ல மீனா. ஆனா, நான் ஏற்கெனவே எனக்கு அசைன் பண்ண டாஸ்க்ஸ் எல்லாம் 95% முடிச்சிட்டேன். அப்புறம் ஜான்சி, ஷீலாவோட வொர்க்கை ரெவ்யூ…”
அவசரமாக இடைமறித்தார் மீனா. “இட்ஸ் ஓகே! சரி, அப்போ நெக்ஸ்ட் வீக் புது க்ளைண்ட் ப்ரெசெண்டேஷன் ஷீலாவே பண்ணட்டும். யூ ரிலாக்ஸ்.”
“ஐயோ மீனா, நாளைக்குச் ஜஸ்ட் ஒன் அவர். ப்ரெசெண்டேஷன் நான் அல்மோஸ்ட் முடிச்சிட்டேன்.”
“வெரி குட். ஹாண்ட் இட் ஓவர் டு ஷீலா.”
“இல்ல மீனா, அது நான் ஃபுல்லா ரிசர்ச் பண்ணி வொர்க் பண்ணது… ஐ வாண்டட் டு ப்ரெசெண்ட்.”
மீனா சிரித்தார்.
“லுக் வருண். இதுல பெர்சனலா எடுத்துக்க ஒண்ணுமில்ல. நாம எல்லாரும் ஒரே டீம்தான். ஷீலாக்கு க்ளையண்ட்ஸ்கூட நல்ல ரிலேஷன்ஷிப் இருக்கு. இப்போ நாளைக்கு உங்க வேலையும் சேர்த்து அவங்ககிட்டதான் கொடுக்கப் போறேன். சோ அவங்களே ப்ரசெண்டேஷனையும் பண்ணிடட்டும். எங்க ரெண்டு பேருக்கும் இமெய்ல் பண்ணிடுங்க. சாரி, எனக்கு இன்னும் டூ மினிட்ஸ்ல ஒரு மீட்டிங் இருக்கு!”
நகர்ந்துவிட்டார் மேனேஜர் மீனா.
வருணுக்குத் தொண்டை அடைத்தது. எப்போதும் இப்படித்தான். கஷ்டப்பட்டு ஒரு வேலைக்கான அத்தனை தயாரிப்புகளையும் செய்து முடிப்பான். பெயர் தட்டிக் கொண்டு போவது ஷீலாவோ ஜான்சியோதான். இவனுக்கென்று சரியாக அப்போது வீட்டுக் கடமைகள் லீவோ பெர்மிஷனோ வேறு போட வைக்கும்.
”ப்ரெசெண்டேஷன் அடுத்த நாள்தானே? ஏன் அந்த மீனா அப்படிப் பண்ணாங்க?” வருண் சொன்னதை எல்லாம் கேட்டுக் கோபமுற்ற நிலா கேட்டாள்.
“அதான் தெரியல நிலா. ஆனா, டீம்ல நான்தான் ஒரே பையன். டிஸ்க்ரிமினேட் பண்றாங்களோன்னு தோணுது. அவங்கல்லாம் ஒண்ணா சாப்ட போவாங்க, ஸ்மோக் பண்ணப் போவாங்க… அதுனால மீனா எப்பவும் பொண்ணுங்களுக்குப் பார்ஷியலாதான் இருக்காங்க நிலா.”
“டோண்ட் பீ சில்லி! நீ அசெர்டிவா இருக்கணும். தைரியமாப் பேசணும். வாய் எல்லாம் வீட்லதான். போன மாசம் ப்ரமோஷன் வாங்குனானே சுரேஷ், உன்கூட ஜாய்ன் பண்ணவன்தானே?”
“ஆமாம் நிலா… ஆனா?”
“என்ன ஆனா ஆவன்னா. இங்க பாரு வருண். மாங்கு மாங்குன்னு வேலை பார்த்தா மட்டும் போதாது. ஸ்மார்ட்டாவும் இருக்கணும்.”
“…”
வருணுக்கு என்னவோ உறுத்தியது.
“நிலா…”
“ம்…”
“போன மாசம் எனக்கு ஃப்ரீ டைம் இருந்தப்போ எங்கயாச்சும் ட்ரிப் போலாம்னு கேட்டேன். நீ வேலை இருக்குன்னு சொல்லி முடியாதுன்னு சொல்லிட்டே.”
“ஆமாம், அதுக்கென்ன இப்போ?”
“ஆனா, நாளைக்கு ஈவினிங் எனக்குக் கஷ்டம்னு சொன்னப்போ நீ ஏத்துக்கலை.”
“ஹேய் லுக்! அங்கே சுத்தி இங்கே சுத்தி என்கிட்ட வர்றீயா? உனக்கு அவ்ளோ முக்கியமான வேலைன்னா நீதான் சொல்லி இருக்கணும். நான் ஒண்ணும் கம்பெல் பண்லியே?”
“இல்ல… அத்தையும் மாமாவும் குழந்தை பிறந்த நாளைவிட அப்டி என்னதான் வேலை முக்கியமோன்னு முணுமுணுத்தாங்க…”
அவ்வளவுதான் நிலாவுக்குச் சுருக்கென்றது.
“அதானே, என்னடா, மூட் அவுட் ஆனதுலேருந்து எங்கம்மா அப்பாவை இழுக்கலியேன்னு பார்த்தேன். உனக்கு ஆபிஸ்ல பிரச்னைனா அதுக்கும் அவங்கதான் காரணமா? கேவலமா இல்ல?”
“நான் அப்டியா சொன்னேன்?”
“இதுக்குதான் உன் ஆபிஸ் விஷயத்துல தலையிடவே கூடாதுன்றது, எல்லாம் ‘எங்க’ தப்பாயிடுச்சுல்ல இப்போ?”
“வருண், என்ன இப்டிப் பேசுற?”
“நான் என்னடா பேசுனேன்? நீ எதுக்குடா தேவையில்லாம எங்கம்மா அப்பாவை இழுக்குற? அவ்ளோ வேலைன்னா சொல்லித் தொலைஞ்சிருக்க வேண்டியதுதானே?”
நிலாவின் குரல் தானாக உயர்ந்தது.
“உங்க அண்ணா ஃபேமிலி வேற வெண்பா பர்த்டேக்காக வர்றாங்களே… அதான் சொல்ல முடியல.”
“அதானே பார்த்தேன். அவங்களையும் வர வேண்டாம்னு சொல்லிடலாமா? ச்சே. ஒரு குழந்தை பிறந்தநாளை சந்தோஷமா எல்லாரும் கொண்டாடணும்னு நினைக்கிறீயா நீ? அதுல இவ்ளோ பிரச்னை.நீ எல்லாம் ஒரு அப்பாவாடா?”
“அபாண்டமா பேசாதே நிலா!” – எல்லாரும் வந்தால் வேலை அதிகம் என்று மனதுக்குள் குமைந்து கொண்டிருந்தாலும், எல்லாருடனும் வெளியில் போவதெல்லாம் வருணுக்கு மகிழ்ச்சிதான். அதைக் கூடச் சந்தேகப்படுகிறாளே என்று மனதில் குத்தியது.
“இந்த ஆட்டிட்யூடை மாத்திக்கோ. இல்லாட்டி கெரியர்லயும் உன்னால முன்னேற முடியாது. ச்சை… ஜாலியா வந்தேன் வீட்டுக்கு. உன்கிட்ட பேசி மூடே ஸ்பாயில் ஆயிடுச்சு. நான் போய் ஃப்ரெண்ட்ஸப் பார்த்துட்டு வரேன்.”
“…”
“நிலா, நிலா எப்ப வருவே?”
பேசிக் கொண்டிருக்கும் போதே ஒரு சார்பாகத் தன்மீதே எல்லாப் பழிகளையும் சுமத்திவிட்டு, அவள் போவது மனதை அறுத்தது. கண்கள் தானாகக் கலங்கின.
“ஐயோ… இப்ப எதுக்கு அழுற. உன் டார்ச்சர் தாங்க முடியல. வந்து தொலையறேன். எப்போன்னெல்லாம் சொல்ல முடியாது.”
கதவை அடித்துச் சாத்திவிட்டு மறைந்த நிலா, விட்டுச் சென்ற இருள் மெல்ல மெல்ல வருணைச் சூழந்தது.
(ஆண்கள் நலம் தொடரும்)
படைப்பாளர்:
ஜெ.தீபலட்சுமி
பெண்ணிய செயற்பாட்டாளரும் எழுத்தாளருமான ஜெ.தீபலட்சுமி தொடர்ச்சியாக பெண்ணுரிமைக் குரலை எழுப்பி வருபவர். ‘இப்போதும் வசந்தி பேக்கரியில் பெண்கள் காணப்படுவதில்லை’ என்ற நூலை எழுதி இருக்கிறார். ஊடகங்களில் இவர் எழுதிய பெண்ணியக் கட்டுரைகள், ’குத்தமா சொல்லல, குணமாதான் சொல்றோம்’ என்கிற நூலாக ஹெர்ஸ்டோரீஸ் பதிப்பகத்தில் வெளிவந்திருக்கிறது. ஆங்கிலம், தமிழ் என இரு மொழிகளிலும் சரளமாக எழுதியும், பேசியும் வருகிறார். எழுத்தாளர் ஜெயகாந்தனின் சிறுகதைகள் சிலவற்றைத் தொகுத்து ‘The Heroine and other stories’ என்ற நூலாக மொழிபெயர்த்திருக்கிறார்.