மிகச் சரியாக நமக்குப் பின் ஒரு மணி முப்பது நிமிடங்கள் கழித்து சோம்பலுடன் எட்டிப் பார்த்தது சூரியன். வெளியே வந்தோம். நம் ஊர் க்ளைமேட் போலத்தான் இருந்தது. பெரிதாக வித்தியாசமில்லை. எங்களை அழைத்துச் செல்ல ஏர்போர்ட்டுக்கு வருவதாக மகன் மெசேஜ் அனுப்பியிருந்தான். ஊரில் பக்கத்துத் தெரு அண்ணாச்சிக் கடைக்கு வழி தெரியாது என அடம்பிடித்து சாதிப்பவன், இங்கு வந்து ஒரே நாளில், புது நாட்டில், புது இடத்திலிருந்து விமான நிலையம் செல்லும் பொதுப் பேருந்தைக் கண்டுபிடித்து எங்களை அழைக்க வந்ததைப் பார்க்க ஆச்சரியமாக இருந்தது.
அடுத்த 8 நிமிடங்களில் அறை இருக்கும் பகுதிக்குச் செல்லும் பேருந்து நாங்கள் நின்றிருந்த இடத்துக்கு வந்துவிடும் என்பதையும் இணையத்தில் பார்த்துச் சொன்னான். நம் ஊர் நினைப்பில், “ஆமா, எட்டு நிமிஷத்தில வந்துட்டாலும்…” என அசால்ட்டாக அரட்டை அடித்துக் கொண்டிருந்தோம். ஆனால், ஏழு நிமிடம் 58 விநாடிகளில் வந்து நின்ற பேருந்தைப் பார்த்து வியர்த்து போனோம். உலகின் பல நாடுகளிலும் அவர்கள் நிர்வகிக்கும் நேர மேலாண்மை எப்போதும் என்னை வியக்க வைக்கிறது. இந்தியர்களுக்கு மட்டும் ஏன் இது சாத்தியப்படுவதேயில்லை என நினைத்துக்கொண்டே பேருந்தில் ஏறினேன். பேருந்தில் எங்களின் அத்தனை லக்கேஜை வைப்பதற்கும் இடம் வசதியாகவே இருந்தது. வழக்கம்போல சிரித்த முகத்துடன் நடத்துநர். அவர் பேசிய மொழி புரியாததால் அவரைப் போலவே சிரித்து வைத்தேன். அக்ஷய் சிரித்துக்கொண்டே, “ஒரு டிக்கட் இருபதாயிரம் கொடுங்க” என்றதும் உலுக்கிப்போட்டது. என்னது… இருபதாயிரமா? இந்திய ரூபாய்க்குக் கணக்குபோட்டுப் பார்த்து ஏறக்குறைய 70 ரூபாய் என்பதை அறிந்து நெஞ்சு வலியிலிருந்து மீண்டோம். வியட்நாமில் முதல் செலவு இருபதாயிரம் ரூபாய்க்குப் பேருந்துக் கட்டணம். அதற்குப் பின், பத்தாயிரம் டாங்கு (dong) என்பது இந்திய மதிப்புக்கு கிட்டத்தட்ட 35 ரூபாய் என உருப்போட்டுக் கொண்டோம். சில நேரம் ஏதாவது பொருள் வாங்கிவிட்டு, லட்சங்களில் பணம் எடுத்துக் கொடுக்கும்போது வேடிக்கையாக இருந்தது. ஜன்னலோரம் அமர்ந்து புத்தம்புது தேசத்தை ஸ்கேன் பண்ண ஆரம்பித்தேன்.
உயர உயரமான கட்டிடங்கள் மேகத்திற்கு ஹாய் சொல்லி, குசலம் விசாரித்துக் கொண்டிருந்தன. எங்கெங்கு காணினும் இருசக்கர வாகனப் போக்குவரத்து. ஒவ்வொரு சிக்னலிலும் பலாப்பழத்தை மொய்க்கும் ஈக்கள் போல இருசக்கர வாகனங்கள் குவிந்துவிடுகின்றன. தைவானுக்கு அடுத்தபடியாக வியட்நாம் உலகின் இரண்டாவது பெரிய மோட்டார் சைக்கிள் உரிமம் கொண்ட நாடாக இருக்கிறது எனப் படித்தது நினைவு வந்தது. ஆறுபேர் கொண்ட குடும்பம் ஒன்று மோட்டார் சைக்கிளில் சிரித்துக்கொண்டே சென்றதைப் பார்க்கப் பயமாக இருந்தது. இருசக்கர வாகனங்கள் வாடகைக்கும் கிடைக்கின்றன. பார்த்த வரையில் ஹோ சி மின் போக்குவரத்து நெரிசல்கள், சலசலப்பு, பெருங்கூட்டம் கொண்ட சராசரியான ஆசிய நகரமாகத் தோன்றியது.
தென்கிழக்கு ஆசியாவில் தென் சீனக் கடலில் உள்ள நீண்ட மெல்லிய தேசமான வியட்நாம், இந்திய பாஸ்போர்ட் வைத்திருப்போருக்கு எப்போதும் கனவுப் பிரதேசம்தான். இந்திய – வியட்நாம் அரசுகளுக்கு இடையேயான சுமூக உறவு, எளிமையான விசா முறைகள், அதிக அளவிலான விமானப் போக்குவரத்து, சுற்றுலாப் பயணிகளைக் கவர்ந்திழுக்கும் இடங்கள் எனப் பாங்காக்கிற்கு சவால்விடும் வகையில் இந்தியப் பயணிகளை ஈர்ப்பதற்கான காரணங்கள் வியட்நாமிடம் நிறையவே இருக்கின்றன. அதுமட்டுமல்ல, பட்ஜெட்ஃப்ரெண்ட்லி தேசம் என்பது போனஸ். இரு நாடுகளின் சுற்றுலாவை மேம்படுத்துவதற்காக, ஹோ சி மின் சிட்டியில் இருநாட்டுத் தூதர்களும் அவ்வப்போது விவாதித்து, தேவையான முயற்சிகளை முன்னெடுக்கிறார்கள். சுற்றுலாவைத் தவிர்த்தும் வியட்நாம் தனது நாட்டை MICE (Meetings, Incentives, Conference, Exhibitions) கான இடமாக முன்னிலைப்படுத்தி ஊக்குவிக்கிறது. தற்போது வெளிநாட்டுத் திருமண மண்டபமாகவும் (Overseas Wedding Venue) வியட்நாம் பிரபலமாகி கல்லா கட்டுகிறது.

‘வியட்நாம் சமவுடைமைக் குடியரசு’ என்பதே இதன் அதிகாரப்பூர்வமான பெயர். 1802இல் பேரரசர் ஜியா லோங்கின்தான் ‘தெற்கு வியட்’ என்கிற பொருள்படும் ‘வியட்நாம்’ என்கிற பெயரை முதன் முதலாகப் பயன்படுத்தினார். பிரெஞ்சுப் போர், உள்நாட்டுப் போர் எனப் பல போர்கள் வியட்நாமை சிதிலமாக்கி, சின்னாபின்னமாக்கியிருந்தாலும் அதிலிருந்து கம்பீரமாக எழுந்து வந்திருக்கும் வியட்நாம் கனன்று கொண்டிருக்கும் சாம்பலிலிருந்து எழுந்துவரும் ஃபீனிக்ஸ் பறவையாக, தகதகக்கும் அழகுடன் சுற்றுலாவாசிகளைக் கவர்ந்திழுக்கிறது. இதன் தலைநகரம் ஹனோயாக இருந்தாலும், பெரிய நகரமாகத் திகழ்கிறது ஹோ சி மின் சிட்டி. இதன் பழைய பெயரான சைகோன் என்கிற பெயர்ப் பலகையையும் பல இடங்களில் பார்க்க முடிந்தது. ஆங்காங்கே தலைவர் ஹோசி மின் சிலைகள் கம்பீரமாக நிற்க, பல அதிகார மையங்களைக் கடந்து ஹோ சி மின் சிட்டி உருவான வரலாறு நினைவுகளில் சுழல்கிறது.
17ஆம் நூற்றாண்டு வரை இந்நகரம் கெமர் மொழியில் Prey Nokor – Forest City என்றும், Preah Reach Nokor – Royal city என்றும் அழைக்கப்பட்டு, கம்போடியா நாட்டின் துறைமுகமாக, கெமர் மக்களின் சிறிய மீன்பிடி கிராமமாகத்தான் இருந்திருக்கிறது. வியட்நாமியர்கள் அதைக் கைப்பற்றி ‘கியா டின்’ எனப் பெயர் சூட்டிக்கொண்டனர். 18ஆம் நூற்றாண்டில் பிரெஞ்சு வியாபாரிகளும் கிறிஸ்தவ மிஷனரிகளும் உள்ளே நுழைய, 1859இல் (வழக்கம்போல) பிரெஞ்சு அரசு இந்த நகரத்தை முழுமையாகக் கைப்பற்றிக்கொண்டதாக அறிவித்தது. அதைத் தொடர்ந்து 1862 இல் அப்போதைய வியட்நாமிய பேரரசர் (Tu Duc) ‘சைகோன் உடன்படிக்கை’யின்படி ஒட்டுமொத்த நகரத்தையும் பிரெஞ்சின் கையில் தாராள மனத்துடன் தாரை வார்த்தார். அன்றிலிருந்து, பிரெஞ்சு குடியேற்ற நாடான கொச்சிஞ்சீனாவின் (Chochinchina) தலைநகராக ‘சைகோன்’ என்கிற பெயரில் அழைக்கப்பட்டது,
ஒரு பெரிய துறைமுக நகரமாக, அழகான வில்லாக்கள் நிரம்பிய பெருநகர மையமாகத் தன் உருவை மாற்றிக்கொள்ள ஆரம்பித்தது சைகோன். அழகிய பொதுக் கட்டிடங்கள், வசதியான நடைபாதைகள், மரங்கள் நிறைந்த அவென்யூக்கள், வடக்கிலும் தெற்கிலும் பாய்ந்து செல்லும் ரயில் பாதைகள் எனப் பிரெஞ்சு காலனித்துவத்திற்கான ஒரு பெரிய நகரமாக, பிரெஞ்சுக்காரர்களால் திட்டமிட்டு மாற்றப்பட்டது. தாவரவியல் பூங்கா, நோரோடோம் அரண்மனை, ஹோட்டல் காண்டினென்டல், நோட்ரே டேம் கதீட்ரல், பான் தான் சந்தை போன்ற பிரெஞ்சு பாணியக் கட்டிடங்கள் உருவாகத் தொடங்கின. மீகாங் நதி டெல்டாவில் விளையும் அரிசியை ஏற்றுமதி செய்யும் சேகரிப்பு மையமாகவும் சைகோன் மாறியது. ‘கிழக்கின் முத்து’ (Pearl of the Orient அல்லது Paris of the Extreme Orient) என்று பிரெஞ்சு காலனித்துவ காலத்து சைகோன் பெருமையுடன் அழைக்கப்பட்டது.
1940இல் ஜப்பானியர்கள் சைகோனை ஆக்கிரமித்துக்கொண்டாலும், பிரெஞ்சு காலனித்துவ அதிகாரிகளே 1945 வரை வியட்நாமை நிர்வகித்து வந்தனர். ஜப்பானின் ஆதிக்கத்துக்குள் சென்றதால், இரண்டாம் உலகப் போரால் சைகோன் பெரிதாகப் பாதிக்கப்படவில்லை. 1945இல் ஜப்பான் சரணடைந்த பிறகு, வியட்நாம் சுதந்திரம் அடைந்ததாக ஹோ சி மின் தலைமையிலான ‘வியட்மின் அமைப்பால்’ ஹனோயில் நகரத்தில் அறிவிக்கப்பட்டது. ஆனால், சைகோனில் சுதந்திரக் கொண்டாட்டங்கள் சந்தோஷமானதாக இல்லாமல் மிகப்பெரும் கலவரங்களாக மாறின. பிரெஞ்சு துருப்புகள் சைகோன் நகரத்தைக் கட்டுப்படுத்தின, கைப்பற்றின. விளைவு, முதல் இந்தோசீனா போர் (பிரெஞ்சு எதிர்ப்புப் போர்) தொடங்கியது. 1946இல் தொடங்கிய இந்தப் போர் 1954இல் வியட்நாமை வடக்கு, தெற்கு மண்டலங்களாகப் பிரித்த ஜெனீவா மாநாட்டுடன் முடிவுக்கு வந்தது. தெற்கு வியட்நாமின் தலைநகரமாக சைகோன் மாறியது. வடக்கு வியட்நாமிலிருந்து அகதிகள் சாரைசாரையாக வந்து சைகோனில் குவியத் தொடங்கினர். அதன் காரணமாக சைகோனின் கலாச்சார, அரசியல் வாழ்க்கை வளப்படுத்தப்பட்ட அதே வேளையில் மிகப்பெரும் சிக்கலாகவும் மாறியது.
1954 முதல் 1975 வரை தெற்கு வியட்நாமின் தலைநகராக சைகோன் இருந்தது. அந்த இருபதாண்டுகள் வியட்நாமில் நடந்த நெடும் போரின் (இரண்டாம் இந்தோசீனா போர் அல்லது அமெரிக்க எதிர்ப்புப் போர்) ஒரு முக்கிய மையமாக, சாட்சியாக இந்நகரம் இருந்திருக்கிறது. அமெரிக்க ராணுவ நடவடிக்கைகளின் தலைமையகமாக சைகோன் மாற்றப்பட்டது. 1968ஆம் ஆண்டு நடந்த போரில் நகரின் சில பகுதிகள் அழிக்கப்பட்டன. ஏப்ரல் 30, 1975இல் வட வியட்நாம் துருப்புகள் சைகோனைக் கைப்பற்றிய போதுதான் போர் முடிவுக்கு வந்து வடக்கு வியட்நாமும் தெற்கு வியட்நாமும் ஒன்றிணைந்திருக்கின்றன. மே 1, 1975இல் வியட்நாமிய கம்யூனிசத் தலைவர் ஹோ சி மின் நினைவாக, ஹோ சி மின் நகரம் உருவானது.
மக்கள் தொகையின் அடிப்படையில் வியட்நாமின் பெரிய நகரமாக ஹோ சி மின் இருக்கிறது. பொருளாதாரத்தில் நிறைவுடன் செழிக்கிறது. மக்கள்தொகையில் சுமார் 94 சதவீதம் கின் இனத்தைச் சேர்ந்த வியட்நாமியர், 4 சதவீதம் சீனர்கள், 0.5 சதவீதம் கெமர் இனக்குழு, மற்றொரு பழங்குடி இனமான சாம் மக்கள் 0.1 சதவீதம் எனக் கலந்து வாழ்கின்றனர்.
நகரத்தின் ஒவ்வோர் அசைவிலும் பிரெஞ்சு செல்வாக்கைப் பார்க்க முடிகிறது. பழமையான மேற்கத்திய பாணி கட்டிடங்கள் ஐரோப்பிய நகரத்தின் மங்கலான தோற்றத்தை நினைவுபடுத்துகின்றன. நேர்த்தியான வானளாவிய கட்டிடங்கள் ஒருபுறம், பழமையான பிரெஞ்சு காலனித்துவ அடையாளங்கள் நிரம்பிய கட்டிடங்கள் மறுபுறம் எனப் பழமையும் புதுமையும் கலந்து கிடக்கிறது. அழகிய கட்டிடக்கலையும் கலாச்சாரமும் வரலாறும் நிறைந்த தொன்மையான நகரமாகக் காணப்படுகிறது. 300 ஆண்டுகளுக்கும் மேலான பதிவுசெய்யப்பட்ட வரலாற்றில் ஹோ சி மின் நகரம் வியட்நாமின் அரசியல், பொருளாதாரம், கலாச்சாரம், கல்வி, சுற்றுலாவில் மிக முக்கியப் பங்காற்றியிருக்கிறது. அழகிய கட்டிடங்கள், வியட்நாமிய போர் வரலாற்று அருங்காட்சியகங்கள், கு ச்சி (Cu chi tunnels) சுரங்கங்கள், திரும்பிய திசையெங்கும் போரின் எச்சங்கள், சுற்றிப் பார்க்க உகந்த பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த இடங்கள் போன்றவற்றால் ஒவ்வோர் ஆண்டும் 80 லட்சம் சர்வதேச பார்வையாளர்களைத் தன்வசப்படுத்துகிறது ஹோ சி மின் சிட்டி. வடக்கு ஹனோயிலிருந்து தெற்கில் ஹோ சி மின் நகரத்திற்கு ‘ரீ யூனிஃபிகேஷன் எக்ஸ்பிரஸ்’ என்று அழைக்கப்படும், 1726 கிலோமீட்டர் நீளத்திற்கு இயக்கப்படும் ரயில்கள் உள்நாட்டிற்குள் நம் பயணத்தை எளிமையாக்குகின்றன.
இந்தியர்கள் விரும்பும் முக்கிய விஷயமான மலிவுவிலைப் பயணங்களில் ஒன்றாக வியட்நாம் இருக்கிறது. ஆடம்பர ஹோட்டல்கள்கூட, நம் பணப்பையைப் பதம்பார்க்காமல் காப்பாற்றுகின்றன. ஷாப்பிங் பிரியர்களுக்கான வியட்நாம் ஆடைகள், நகைகள், கைவினைப்பொருள்கள் அத்தனையும் நியாயமான விலையில் கிடைக்கின்றன. வரலாற்று ஆர்வலர்கள், இயற்கை விரும்பிகள், உல்லாசப் பிரியர்கள், பட்ஜெட் பத்மநாபன்கள், ஷாப்பிங் ராணிகள் என அத்தனைபேரின் விருப்பத்தையும் நிறைவு செய்யும் வகையிலும் அனைத்துத் தரப்பினரும் காதல் கொள்ளத்தக்க நாடாகவும் வியட்நாம் இருக்கிறது.
“ம்மா, இறங்க வேண்டிய இடம் வந்தாச்சு, எழுந்திருங்க” என்கிற மகனின் குரல் கேட்டு நினைவலைகளைத் தள்ளிவிட்டு மீண்டேன்.
(தொடரும்)
படைப்பாளர்:

ரமாதேவி ரத்தினசாமி
எழுத்தாளர், அரசுப்பள்ளி ஆசிரியர். பணிக்கென பல விருதுகள் வென்றவர். இவர் எழுதி வெளிவந்துள்ள ‘கனவுகள் மெய்ப்படட்டும்’ கட்டுரைத் தொகுப்பு பரவலாக கவனம் பெற்றுள்ளது. 2014, 2015ம் ஆண்டுகளில் ஐ நா சபையில் ஆசிரியர் பேச்சாளராகக் கலந்துகொண்டு உரையாற்றியுள்ளார். அடுப்பங்கரை டூ ஐநா தொடரில் அவரது ஐ நா அனுபவங்களை நகைச்சுவையுடன் விவரித்திருக்கிறார். இலங்கை ‘எழுதித் தீராச் சொற்கள்’ என்கிற பெயரில் இலங்கை அனுபவங்களை அழகாக எழுதியிருக்கிறார். இவை இரண்டும் ஹெர் ஸ்டோரிஸில் தொடர்களாக வந்து, பின்னர் ஹெர் ஸ்டோரீஸ் வெளியீடாகப் புத்தகங்களாகவும் வெளிவந்து பாராட்டுகளைப் பெற்றுள்ளன. வியட்நாம் அனுபவங்கள் இவரது மூன்றாவது தொடர்.