வனங்களுக்கு அருகில் இருக்கும் நிலப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கு அடிக்கடி வனவிலங்குகளால் தொல்லை எழுவது தினசரி நிகழ்வாகப் பார்க்கப்படுகிறது. அந்த மக்கள் விலங்குகளிடம் இருந்து காப்பாற்றக் கோரி அரசாங்கத்திடம் கோரிக்கை வைப்பதும், அரசாங்கம் அதற்குத் தக்க நடவடிக்கை எடுப்பதும் இயல்பானதே. ஆனால், ஒரு பணிச் சூழலில், அது தனக்குப் பாதுகாப்பாக இருக்கும் என்று நம்பிக்கையுடன் உள்நுழையும் பெண்களுக்கு, அந்தச் சூழலே கல்லறைகளாகும்போது, சுற்றி உள்ள மனிதர்களே மிருகங்கள் ஆகும்போது அதிலிருந்து காப்பாற்றிக் கொள்ளவும் சட்டத்தின் துணை தேவைப்படுகிறது.
சோஹன்லால் பர்த்தா வால்மீகி என்னும் துப்புரவுத் தொழிலாளிக்கு விடுப்பு எடுப்பதற்கு அனுமதி மறுத்ததாலும், அவன் சரியாகப் பணி செய்யாததைப் பற்றி மேலிடத்தில் புகாரளிப்பேன் என்று சொன்ன காரணத்தாலும் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமாகத் தாக்கப்பட்டார் செவிலியர் அருணா ஷான்பாக். தான் பணிபுரிந்த மருத்துவமனையிலேயே கோமா நிலையில் 41 வருடங்கள் கழித்த பிறகு அவர் உயிர் பிரிந்தது. 1973இல் அருணா ஷான்பாக்கிற்கு நடந்தது போல் எந்த ஒரு பெண்ணிற்கும் நடக்காமல் இருக்கும் அளவிற்குப் பெண்களுக்கானப் பணிச்சூழல் மேம்பட்டு இருக்கிறதா? இல்லை என்பதற்குச் சென்ற வருட கொல்கத்தா ஆர்ஜி கார் மருத்துவமனை சம்பவமே சாட்சி.
1992ஆம் ஆண்டு, ராஜஸ்தான் அரசின் மகளிர் மேம்பாட்டுத் திட்டத்தில் சமூகப் பணியாளராகப் பணியாற்றிய பன்வாரி தேவி, ஒரு வயது சிறுமியின் திருமணத்தைத் தடுக்க முயன்றதற்காக 5 ஆண்களால் கூட்டுப்பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். இந்தக் குற்றத்திற்கு எதிராகத் தாக்கல் செய்த மனுக்களை விசாரித்த உச்ச நீதிமன்றம், பணியிடங்களில் பாலியல் துன்புறுத்தலைத் தடுப்பதற்கு எந்தவொரு சட்டமும் இல்லாததைக் குறிப்பிட்டு, 1997இல் விசாகா வழிகாட்டுதல்களை அடிப்படையாகக் கொண்டு சட்டம் இயற்ற வேண்டி வலியுறுத்தியது.
பெண்களுக்கு எதிரான அனைத்து வகையான பாகுபாடுகளையும் ஒழிப்பதற்கான The Convention on the Elimination of all Forms of Discrimination against Women (CEDAW) ஒப்பந்தத்தில் 1993ஆம் ஆண்டு இந்தியா கையெழுத்திட்டது. பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்கும் வகையில் சட்டங்கள் உருவாக்க வேண்டியத் தேவையை இந்த ஒப்பந்தம் ஏற்படுத்தியது.
2012இல் நாட்டையே உலுக்கிய நிர்பயாவின் கொடூர மரணத்திற்குப் பின்னர்,
பிப்ரவரி 2013இல், இந்திய நாடாளுமன்றம் பணியிடத்தில் பெண்கள் மீதான பாலியல் துன்புறுத்தலைத் தடுப்பதற்கான Prevention of Sexual Harassment of Women at Workplace (Protection, Prohibition and Redressal) Act, 2013 POSH சட்டத்தை நிறைவேற்றியது. டிசம்பர் 09, 2013 அன்று நடைமுறைக்கு வந்த இந்தச் சட்டம், பணியிடத்தில் பாலியல் துன்புறுத்தலில் இருந்து பெண்களைப் பாதுகாக்க முயல்கிறது. நன்றாகக் கவனியுங்கள், சட்டம் பாதுகாக்க முயற்சி மட்டுமே செய்கிறது. குற்றம் நிகழாமல் தடுப்பது குற்றவாளியின் கைகளில்தான் உள்ளது.
இந்தச் சட்டத்தின் கீழ் அனைத்துப் பெண் ஊழியர்களுக்கும் பாதுகாப்பான பணிச்சூழலை வழங்குவது கட்டாயம் ஆகிறது. 10 நபர்களுக்கு மேல் பணிபுரியும் எந்த ஒரு நிறுவனமாக இருந்தாலும், இந்தச் சட்டத்தைக் கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டும். POSH சட்டத்தின் விதிகள் குறித்து ஊழியர்களுக்கான விழிப்புணர்வு திட்டங்களை ஆண்டுதோறும் ஏற்பாடு செய்ய வேண்டும். பாலியல் துன்புறுத்தல் தொடர்பான புகார்களை விசாரிக்க உள் குழுவை (Internal committe) உருவாக்க வேண்டும். மேலும் உள் குழு உறுப்பினர்களுக்கு அவர்களின் பணிகள், பொறுப்புகள் குறித்துப் பயிற்சி அளிக்கப்பட வேண்டும். ஆண்டுதோறும் பதிவு செய்யப்பட்ட புகார்களின் எண்ணிக்கையை மாவட்ட அதிகாரியிடம் சமர்ப்பிக்க வேண்டும். பணியிடங்களில் பாலியல் துன்புறுத்தல் புகாரின் தீவிரத்தைக் கருத்தில் கொண்டு அதற்கான தண்டனைகள் நிர்ணயிக்கப்படுகின்றன. எச்சரிக்கை, கண்டனம், கட்டாய ஆலோசனை, எழுத்துப்பூர்வ மன்னிப்பு, பதவி உயர்வு அல்லது ஊதிய உயர்வு நிறுத்தப்படுதல், பாதிக்கப்பட்ட பெண்ணுக்குப் பண இழப்பீடு, இடமாற்றம், வேலையை விட்டு நீக்குதல் இவற்றில் ஏதேனும் ஒன்று உள் குழுவின் முடிவாக இருக்கலாம்.
இத்தனை விதிமுறைகள் இருந்தாலும் இந்தச் சட்டம் முறையாக அமல்படுத்தப்படுகிறதா? இது பெண்களுக்குப் பாதுகாப்பான பணிச்சூழலை உறுதி செய்கிறதா என்று கேட்டால் நிச்சயம் இல்லை என்றே சொல்லலாம்.
இந்தச் சட்டம் அமலுக்கு வந்து 10 ஆண்டுகளுக்கு மேல் ஆனாலும் இதில் பதிவாகும் குற்றங்களின் எண்ணிக்கை மிகவும் குறைந்த அளவிலேயே இருக்கிறது. முதல் ஆண்டான 2013-14 நிதியாண்டில், இந்தச் சட்டத்தின் கீழ் 161 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. ஒரு வருடத்திற்குள், இந்த எண்ணிக்கை 465 ஆக உயர்ந்து 2021-22 நிதியாண்டில் 767 ஆக அதிகரித்தது, பின்னர் அடுத்த ஆண்டில் 51.2 சதவீதம் அதிகரித்து 1,160 ஆக உயர்ந்தது.
தங்கள் நிறுவனத்தில் பதிவாகும் புகார்களின் எண்ணிக்கையை ஆண்டறிக்கையில் சேர்க்க வேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இருந்தபோதிலும் பெரும்பாலான நிறுவனங்கள் ஒரு புகார்கூட அளிக்கப்படவில்லை என்றே பதிவு செய்கின்றன. 2022-23 நிதியாண்டில் பதிவான 1,160 வழக்குகள் 81 நிறுவனங்களில் இருந்து மட்டுமே பதிவாகியுள்ளன, அதிலும் 50 சதவீத வழக்குகள் 8 நிறுவனங்களில் மட்டுமே பதிவாகியுள்ளன. 2013-14 நிதியாண்டில் இருந்து, ஒரு சில நிறுவனங்கள் மட்டுமே POSH சட்டத்தின் கீழ் புகார்களைப் பதிவு செய்துவருகின்றன. இவை பெரும்பாலும் பெரும் நிறுவனங்கள் மட்டுமே. சிறிய நிறுவனங்கள் POSH வழக்குகளைப் பட்டியலிடவில்லை.
இந்தப் புள்ளி விவரங்கள் சொல்ல வருவது, சிறு நிறுவனங்களில் எந்தப் பாலியல் துன்புறுத்தலும் நிகழவே இல்லை என்பது அல்ல. POSH சட்ட விதிமுறைகளை இந்த நிறுவனங்கள் பின்பற்றவில்லை. சட்டத்தைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தாமல், உள் குழுவை நியமிக்காமல், தினம் தினம் நிகழும் பாலியல் சீண்டல்களைப் பெண்கள் சகித்துக்கொள்ளச் சொல்கின்றன. தினசரி வேலை செய்யும் சூழலில் பாலியல் துன்புறுத்தல் என்கிற பயத்துடனே இருக்கும்போது பெண்களுக்கு அது ஒரு உளவியல் சுமையாக மாறுகிறது. இந்த சுமையுடன் பயணிக்கும்போது பெண்கள் உயர் பதவிகளை அடைவதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு.
பணியிடங்களில் பாலியல் சீண்டல்கள் தொடர்பாகப் புகாரளிக்கக்கூடிய தைரியம் இன்னமும் எல்லாப் பெண்களுக்கும் வரவில்லை. இத்தகைய சம்பவங்களைப் பற்றி குடும்பத்தில் உள்ளவர்களுடன் பகிர்ந்துகொள்ளும்போது, அவர்களிடம் இருந்தும் எந்த ஓர் ஆதரவும் பெண்களுக்குக் கிடைப்பதில்லை. மாறாக, பெண்களின் உடை குறித்தும், நடந்துகொள்ளும் முறை குறித்தும் மேலும் விமர்சனங்கள் எழுகின்றன.
பெண்களும் ஆண்களைப் போலவே கல்வி கற்று, எல்லாவிதமான போட்டித் தேர்வுகளிலும் தங்கள் திறமையை நிரூபித்து அடையும் பதவியைக்கூட, குடும்பத்தின் பொருளாதாரம் மேம்பட வேலைக்கு வந்தவர்களாக மட்டுமே பார்க்கின்றனர். இப்படி வரும் பெண்கள் சிறு பாலியல் சீண்டல்களைச் சகித்துக்கொள்ள வேண்டியதுதான் என்று ஆண்கள் நினைப்பதுதான் இத்தகைய குற்றங்கள் நடைபெறக் காரணமாக உள்ளது. “நீங்கள் அணிந்திருக்கும் மஞ்சள் நிறப் புடவை எனக்கு மிகவும் பிடித்தமானது” என்று உடன் பணிபுரியும் ஆண்கள் சொல்லும் கருத்துகள் பெண்களுக்கு மகிழ்ச்சி அளிக்கக்கூடியவை அல்ல. நாளை இது என்னென்ன வடிவங்கள் எடுக்குமோ என்று கவலைகொள்ளவே செய்கிறது. அப்படியே இப்படிப்பட்ட கருத்துகளுக்கு மகிழ்ந்து நன்றி சொன்னாலும், ஆஹா சிக்னல் கிடைத்து விட்டது என்ற எண்ணத்துடன் அடுத்து பாலியல் சீண்டலுடனான கருத்துகள் முன் வைக்கப்படாது என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை.
உங்கள் பக்கத்து இருக்கையில் அமர்ந்து பணிபுரிபவர் எந்தப் பாலினத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும், பாதுகாப்பான மரியாதையான பணிச் சூழலை உருவாக்கித் தர வேண்டியது ஒவ்வொருவரின் கடமை. இந்த உணர்வு மட்டுமே நாகரிகம் அடைந்த மனித சமூகத்தின் அடையாளம். வாருங்கள்! நாகரிகத்துடன் நடந்துகொள்வோம். அனைத்துப் பாலினத்தவர்க்கும் பாதுகாப்பானப் பணிச்சூழலை உருவாக்குவோம்.
(தொடரும்)
தரங்கிணி

எல்சீவியர் என்னும் தனியார் கம்பெனியில் பணியாற்றி வருகிறார். வாசிப்பில் நாட்டம் உடையவர். பெண்ணியம் சார்ந்த சமூக முன்னெடுப்புகளில் பங்களிப்பதில் ஆர்வம் உடையவர்.