செங்கல்பட்டு மாவட்டத்தில் அமைந்திருக்கும் மிகப் பெரிய தனியார் பள்ளி அது. அங்கு 7ஆம் வகுப்பு படிக்கும் குழந்தை யாழினி. கொரோனா காலகட்டத்திற்குப் பிறகு படிப்பதில் மிகவும் கவனக் குறைவுடன் இருப்பதாகவும் சொல் பேச்சைக் கேட்பதில்லை எனவும் அவர் அம்மா லட்சுமி டீச்சரை அலைபேசி வழியாக அணுகி மிகவும் வேதனைப்பட்டார். மகளை எப்படி மீண்டும் பழைய நிலைக்கு அழைத்து வருவது எனவும் அவளுடைய எதிர்காலம், படிப்பு, வேலை
என இப்போதே பெரும் கவலைகள் அடங்கிய வளையத்துக்குள் தன்னை ஆட்படுத்தி வருந்துகிறார் அந்த அம்மா.
அவர் மட்டுமல்ல, ரோஷன், ஹரிதா, காவ்யா, சரண்யா, கனிஷ்கர், அன்சுகா எனப் பட்டியல் நீள்கிறது. இணையவழி ஜூம் செயலி வழியாக குழந்தைகளையும் பெற்றோரையும் சந்திப்பதாக முடிவு செய்து இரு தினங்களில் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டு, குறிப்பிட்ட அந்தப் பள்ளியின் சில குழந்தைகளையும் பெற்றோரையும் சந்தித்து உரையாடினார் லட்சுமி டீச்சர்.
அப்போது தான் புரிந்தது, அதிகமாக உரையாட வேண்டியது குழந்தைகளைக் காட்டிலும் அவர்களின் பெற்றோரிடம் தான் என்று. ஆம், ஒவ்வொரு பெற்றோரும் அதீதக் கவலையுடன் மனம் விம்முகின்றனர். ‘எப்போது பார்த்தாலும் வீடியோ கேம் விளையாடுகின்றனர், டிவி பார்க்கின்றனர், படிப்பின் அவசியத்தைப் புரிந்துகொள்ள மாட்டேங்கிறாங்க, எவ்வளவு கஷ்டப்பட்டு அதிகமான ஃபீஸ் கட்டேறோம் தெரியுங்களா? பின்னாடி எப்படி நல்ல வேலை கிடைக்கும்? எப்படி செட்டில் ஆவாங்க’ என்பது வரை பெற்றோருக்குள் பல விதமான கவலைக் குப்பைகள் நிறைந்து இருந்தன என்பதைப் புரிந்துகொள்ள முடிந்தது. குழந்தைகளைக் குழந்தைகளாக வாழவிட அவர்கள் தயாராக இல்லை என்பது மட்டும் நன்றாகப் புரிந்தது.
அவர்களை வெளியே அனுப்பிவிட்டு தனியாகக் குழந்தைகளிடம் பேசும் போது மிகவும் கவலையாக இருந்தது லட்சுமி டீச்சருக்கு. கொரோனா ஊரடங்கின் போது எப்போதும் ஆன்லைன் க்ளாஸ் எனப் பள்ளி ஒரு நாளில் 8 மணி நேரத்திற்குக் குறைவில்லாமல் இவர்களை லேப் டாப் முன்பு அமர வைத்துள்ளது. அதிகளவில் மொபைல் போனில் கேம்கள் விளையாடியே தங்கள் மீதி நேரத்தைக் கழித்துள்ளனர். பள்ளி திறந்த பிறகும் பாடங்களைப் பற்றியும் படித்தல், மனப்பாடம் செய்தல், தேர்வு எழுதுதல் எனத் தொடர்ந்து அழுத்துகின்றனராம்.
பள்ளியில் என்ன விளையாட்டு விளையாடுவீர்கள், லைப்ரரி இருக்கா? மாரல் எஜுகேஷன் பீரியட் இருக்கா எனக் கேட்டதற்கு, ‘விளையாடவிட மாட்டேன்றாங்க, மாரல் பீரியட் எல்லாம் சப்ஜெக்ட்ஸ் டீச்சர்ஸ் எடுக்கறாங்க… ஸ்கூல்ல பிரெண்ட்ஸ்கிட்டயும் பேச முடியல. வீட்ல அம்மா, அப்பாவும் எங்க பிரச்னைகளைக் கேட்க மாட்டேங்கிறாங்க… ஸ்ட்ரெஸ்ஸா இருக்கு’ என்றனர்.
‘கதைகள் கேட்கப் பிடிக்குமா? என்ன புத்தகம் படிச்சீங்க?’ என்ற உரையாடலுக்கு அவர்களிடமிருந்து வெற்றுப் பார்வைகளே பதிலாகக் கிடைத்தன. கதைகள் எல்லாம் தொலைக்காட்சி கார்ட்டூன் கதைகள் மட்டுமே அறிந்திருந்தனர் ஒரு சிலர். குழந்தைகளிடம் மனம் திறந்து பேச யாருமில்லை என்பது மிகவும் கவனிக்கத் தக்கது.
பெற்றோரிடம் மீண்டும் பேசிய லட்சுமி டீச்சர், குழந்தைகளுக்குக் கதைப் புத்தகங்களை அறிமுகப்படுத்தியும் அவர்களுக்குப் பிடித்த விஷயங்களைக் குறித்து அவர்களிடம் அன்றாடம் உரையாடவும் நேரம் ஒதுக்குங்கள் என்று, பெற்றோரிடம் பேசினார். அதோடு குழந்தைகளை எப்போதும் படி படி என்று அழுத்தாதீர்கள், உங்களுடைய கனவுகளையும் அவர்கள் மீது திணிக்காதீர்கள், அவர்களுக்கு என்று ஒரு விருப்பம் இருக்கும், அதை அவர்கள் புரிந்துகொள்ள சூழலை ஏற்படுத்திக் கொடுங்கள், நிச்சயமாக அவர்கள் புரிந்துகொண்டு நடப்பார்கள் என்று உரையாடி அந்த நாளின் சந்திப்பை முடித்தார்.
இந்தப் பள்ளியின் ஆசிரியருடனும் பேசும் போது, ‘மேனேஜ்மென்ட்டை எதிர்த்து எங்களால் எதுவும் செய்ய முடியாது மேடம், நானே பேரன்ட்ஸ் கிட்ட சொல்லி அரசுப் பள்ளியில் சேர்த்து விடுங்கன்னு சொன்னேன் மேடம், அவங்க பயப்படறாங்க கவர்ன்மென்ட் ஸ்கூலுக்குப் போக’ என்று வருந்தினார். பயப்படும் அளவிற்கு அங்கு கொடுமைகள் இல்லை என்பதைக் கூற இங்கு ஆட்கள் இல்லை, இது ஒரு புறம்.
அதன் பிறகு சில நாட்கள் கழித்து குழந்தைகள் குறித்து விசாரித்தபோது, கொஞ்சம் ஒத்துழைப்பு தருவதாகவும் ஆர்வமுடன் படிக்கும் வேலைகளில் ஈடுபடுவதுமாகக் கூறி, பெற்றோர் சற்றே மகிழ்ச்சி அடைந்ததாக அந்த ஆசிரியர் லட்சுமி டீச்சரிடம் பகிர்ந்தார். குறிப்பாக யாழினி தொடர்ச்சியாகச் சில முறை லட்சுமி டீச்சரிடம் பேச, இப்போது மொபைல் கேம் விளையாடுவதைப் பெரும்பாலும் தவிர்த்துவிட்டாளாம். கதைகள் படிக்க ஆரம்பித்துள்ளதாகவும் தற்போது கிச்சா பச்சா கதைப் புத்தகத்தைப் படித்து முடித்துவிட்டதாகவும் லட்சுமி டீச்சரிடம் மனம் திறக்கிறார்.
அதே செங்கல்பட்டு மாவட்டத்தில் மிகப் பெரிய அரசுப் பள்ளி , பெண்கள் பள்ளி. பத்தாம் வகுப்புக்காக மாணவர்களைத் தயார்படுத்த படாத பாடுபடும் ஆசிரியர்கள் ஒருபுறம். கொரோனா பெருந்தொற்று, பள்ளிகள் மூடப்பட்டு நீண்ட இடைவெளிக்குப் பிறகு பள்ளி திறந்தாலும் கல்வித் துறையின் வழிகாட்டலுக்கு ஏற்பத் தங்கள் கற்பித்தலுக்கான பாடப் பொருள், கற்பித்தல் முறைகளை
மாற்றி மாற்றி முயற்சி செய்துகொண்டிருந்தனர். இந்தப் போக்கு தமிழகம் முழுவதுமே இருந்தது. திடீரென திருப்புதல் தேர்வு வைத்தனர். விடைத்தாள்கள் வேறு பள்ளி ஆசிரியர்கள் திருத்தி மதிப்பெண்கள் வந்தன. நாம் மேற் சொன்ன அரசுப் பள்ளியில், பத்தாம் வகுப்புகளில் ஒரு பிரிவில் கணக்குப் பாடத்தில் 15 குழந்தைகள் அரசு சொல்லும் தேர்ச்சி வரையறைக்குள் வரவில்லை. அதாவது 35 மதிப்பெண்கள் பெறவில்லை. இந்த வருடம் கட்டாயம் பொதுத் தேர்வு நடக்கும் என்று அரசு அறிவிப்பு தந்தது ஒரு புறம்.
பின்தங்கிய மாணவர்களை, பொதுத் தேர்வுக்குத் தயார்படுத்த சில வழிகாட்டுதல்களைத் தரும் பொறுப்பு ஆசிரியர்களுக்கு இருப்பதால் பெற்றோரைப் பள்ளிக்கு வரக் கூறி இருந்தனர். ஆனால், 15 குழந்தைகளில் ஓரிருவர் தவிர மீதி எவருடைய பெற்றோரும் பள்ளியை வந்து எட்டிப் பார்க்கவே இல்லை என்பது தான் யதார்த்தம். இறுதித் தேர்வு நாள் வரும் வரைகூட அவர்களுடைய பெற்றோர் பள்ளிக்கு வந்து ஆசிரியர்களைச் சந்திக்கவே இல்லை. இதை நாம் எளிதாக எடுத்துக்கொள்ள முடியாது. ஏனெனில் இரண்டு ஆண்டுகள் கழித்து குழந்தைகள் பள்ளிக்குச் சென்றது முதல் குறுகிய காலத்தில் தேர்வு எழுதத் தயாராகி விடாமல் தவிக்கும் அவர்கள் மனநிலை என்னவாக இருக்கிறது என்பதெல்லாம் உள்ளபடியே ஆய்வுக்கு உட்பட்டவை. ஆனால், பள்ளிகள் தரப்பிலிருந்து அவர்களை எப்படியாவது தேர்ச்சி பெற வைத்துவிடும் ஒற்றை நோக்கமே மேலோங்குகிறது. வீடுகளிலிருந்து பெற்றோருக்கு அக்கறையும் பொறுப்பும் இருப்பதாகத் தெரியவில்லை. அவர்களைப் பொறுத்தவரை அரசுப் பள்ளிகள் கல்விக் கட்டணம் கேட்காத ஒரு பாதுகாப்பான இடம், அவ்வளவே. அவர்களுக்குத் தங்கள் குழந்தைகள் என்ன படிக்கிறார்கள் என்றோ அல்லது, படிக்கிறார்களா இல்லையா என்றோ பெரும்பாலும் எந்த அக்கறையும் இருப்பதாகத் தெரியவில்லை. கவலைப்படும், அறிந்து கொள்ளும் பெற்றோர் மொத்தமாக 10% க்கும் குறைவாகவே இருப்பார்கள். பெண் குழந்தைகள் மீது இத்தனை அலட்சியம் கொண்ட பெற்றோர் ஆண் குழந்தைகள் மீதும் அதே அலட்சியப் போக்குடன் இருப்பது இயல்பே .
இப்படியான சூழலில் பள்ளிக்கு வரும் குழந்தைகள் நெறி பிறழ் நடத்தைக்குள் செல்வது குறித்தும் வன்முறைச் செயல்களில் ஈடுபடுவது குறித்தும் எந்த அறிதலும் இல்லாமல் தான் இருப்பார்கள். விளைவு மாணவர்களின் நடத்தை மாற்றங்கள் விரும்பத் தகாத முறையில் வளர்ந்து தீர்க்கக் கடினமான பிரச்னைகளாக உருவாகி நிற்கின்றன.
ஆகவே குழந்தைகளின் பெற்றோர் இங்கு குறிப்பிட்ட தனியார் பள்ளியின் மாணவரான யாழினியின் பெற்றோர் போல அதிக கண்டிப்பு, கவலை, குழப்பங்களுடனும் இருக்கக் கூடாது, கண்டிப்பே அன்றி கண்டுகொள்ளாமல் நகரும் அரசுப் பள்ளிக் குழந்தையின் பெற்றோர் போலவும் இருக்கக் கூடாது.
தொடர்ந்து மாதம் ஒரு முறையாவது பள்ளிக்கு வந்து குழந்தைகளின் ஆசிரியர்களுடன் உரையாடி, தங்கள் குழந்தைகளின் நல்லது கெட்டது அறிந்து கண்டிக்கவோ பாராட்டவோ செய்வதை வழக்கமாக்கிக்கொண்டால், மாணவர்களைச் சமூகம் வன்முறையாளர்களாகச் சித்தரிப்பதைத் தடுக்க முடியும். ஆகவே பள்ளி, மாணவர், ஆசிரியர், பெற்றோர் உறவு முறை வலுப்படும் பள்ளிகளில் மாணவர் வன்முறைகள் நிகழ்வதில்லை .
இவர்களுக்கு மட்டுமா பொறுப்பு? துறைக்கும் அரசுக்கும்கூடப் பொறுப்புண்டு. அது குறித்து அடுத்தடுத்த கட்டுரைகளில்
தொடர்ந்து உரையாடுவோம்
படைப்பாளர்:
சு உமாமகேஸ்வரி
உமாமகேஸ்வரி , அரசுப் பள்ளியில் ஆசிரியர் , கல்வி முறை குறித்தும் வகுப்பறை செயல்பாடுகள் குறித்தும் தொடர்ந்து பேசியும் எழுதியும் வருபவர். பாடப்புத்தகம், பாடத்திட்டம் ஆகியவற்றைத் தாண்டி குழந்தைகளது மன உணர்வுகளையும் மகிழ்ச்சியையும் மதித்து, அதற்கு ஏற்புடைய சூழலை அமைத்துத் தர முயற்சி மேற்கொள்பவர்.