நாம் எல்லோருக்கும் மகிழ்ச்சியாக இருக்கத்தான் பிடிக்கும். ஆனால், அதற்கான எதிர்பார்ப்புகளை வைத்திருக்கிறோம். அந்த எதிர்பார்ப்புகள் நடந்தால் மட்டுமே மகிழ்ச்சியாக இருக்க முடியும் எனவும் நம்புகிறோம்.
பதில்களும் தயாராகவே இருக்கும் நம்மிடம்…
சொந்தமாக வீடு வாங்கிவிட்ட பின் நான் மகிழ்ச்சியாக இருப்பேன்.
என் மகனுக்கு நல்ல இடத்தில் திருமணம் முடிந்துவிட்டால் நான் மகிழ்ச்சியாக இருப்பேன்.
எனக்கு உடல் நலம் தேறிவிட்ட பிறகு நான் மகிழ்ச்சியாக இருப்பேன்.
என்னுடைய குடும்ப உறுப்பினர்களுக்கு உடல் நலம் தேறிய பின் மகிழ்ச்சியாக இருப்பேன்.
வங்கிக் கணக்கில் இவ்வளவு பணம் இருந்தால் நான் மகிழ்ச்சியாக இருப்பேன்.
இந்தத் தேர்வை எழுதி பாஸாகி, எனக்கு வேலை கிடைத்துவிட்டால் நான் மகிழ்ச்சியாக இருப்பேன்.
என்னுடைய காதலுக்குச் சம்மதம் கிடைத்துவிட்டால் நான் மகிழ்ச்சியாக இருப்பேன்.
இவற்றில் சொந்த வீடு வாங்கினால் மகிழ்ச்சி என முடிவு செய்துவிட்டால், அந்தச் சொந்த வீடு வாங்குவது வரை ஓடிக்கொண்டே இருப்போம். அதிலேயே கருத்தாக, அதற்கான தயாரிப்புகளைக் கொண்டே இருப்போம். அதை வாங்கியவுடன், ஓரிரு மாதங்களுக்கு மகிழ்ச்சியாக இருப்போம். பின்பு ஒரு கார் வாங்க வேண்டும் என்றோ அல்லது இன்னும் ஒரு வீடு வாங்கிவிட வேண்டும், ஒரு பிளாட் வாங்கிவிட வேண்டும்… இப்படி இன்னும் எதையோ ஒன்றை உருவாக்கிக்கொண்டு அதற்காக ஓடுவோம்.
என் மகனுக்குக் கல்யாணம் முடிந்துவிட்டால் நான் மகிழ்ச்சியாக இருப்பேன் என்று சொன்னவர், அடுத்து என் மகனுக்கு குழந்தை பிறந்து என் பேரக் குழந்தையைப் பார்த்துவிட்டால், நான் மகிழ்ச்சியாக இருப்பேன் எனச் சொல்வார்.
பெரும்பாலானோர் அப்படித்தான் மகிழ்ச்சிக்காக ஒவ்வொரு காரணங்களைச் சொல்லிக்கொண்டிருப்போம். ஒவ்வொரு நேரமும் அந்தக் காரணங்கள் நம் வாழ்க்கையில் மாறிக்கொண்டே இருக்கும். புதிதாக முளைத்துக்கொண்டே இருக்கும். ஏனென்றால் நமது மனம் நம்புகிறது சில விஷயங்கள் மட்டுமே மகிழ்ச்சியைத் தரும் என்று.
ஆனால், மகிழ்ச்சி என்பது மனதின் ஒரு நிலையே. அந்த நிலையை நீங்கள் எப்போது வேண்டுமானாலும் அடையலாம். காரணங்கள் தேவையில்லை. மேலும் எந்த நேரத்திலும் அந்த மன நிலையை அடைவது போல் பழக்கப்படுத்திக்கொள்ளலாம்.
ஒவ்வொரு கணத்திலும் ஒவ்வொரு பொழுதிலும் விழிப்புடனும் முழு உணர்வுடனும் மகிழ்ச்சியாக இருப்பதைத் தேர்ந்தெடுங்கள். ஏனென்றால் காலை, மாலை, இரவு என எல்லாப் பொழுதுகளும் உங்களுக்கு இரு வாய்ப்புகளைத் தருகின்றன.
1. அந்தப் பொழுதைச் சந்தோஷமாகக் கடப்பது; சந்தோஷத்தைத் தேர்ந்தெடுப்பது.
2. அந்தப் பொழுதில் சந்தோஷத்தைத் தேர்ந்தெடுக்க முடியும் என மறந்து போவது.
இதற்காக, முதலில் செய்ய வேண்டிய சிந்தனை மாற்றம், ‘என்ன நடந்தாலும் சரி, மகிழ்ச்சியாக இருப்பதையே தேர்ந்தெடுப்பேன்’ என்று தீர்மானம் செய்வது. அந்தத் தீர்மானத்தை எப்படி நடைமுறைப்படுத்துவது என்று பார்க்கலாம்.
வாழ்க்கையில் இலக்குகள் மிகவும் அவசியம். ஆனால், அந்த இலக்குகளை அடைவதை மட்டும் உங்கள் மகிழ்ச்சிக்கான காரணமாக வைத்திருக்க வேண்டாம். ஏனென்றால் இலக்குகளை நோக்கிய பயணமும் மகிழ்ச்சியே.
உதாரணமாக, சென்னையிலிருந்து ஒருவர் தாஜ்மஹாலைப் பார்க்கப் பயணிக்கிறார் என வைத்துக்கொள்வோம். அவருடைய இலக்கு என்ன? தாஜ்மஹாலைப் பார்ப்பது. ஆனால், தாஜ்மஹால் நோக்கிச் செல்லும் பயணத்தை அவர் ரசிக்காமல், மகிழ்ச்சியாக அந்தப் பயணத்தைச் செய்யாமல், பரபரப்புடன் சென்றால், அவருக்கு என்ன லாபம்? நஷ்டமே.
ஏனென்றால் இலக்குகளை அடைவது, எவ்வளவு மகிழ்ச்சியைத் தருமோ அவ்வளவு மகிழ்ச்சியை அந்தப் பயணத்தால் தரமுடியும். அதனால் தான் பின்னாளில் நினைத்துப் பார்க்கும்போது, மிக ஆடம்பரமாக நடந்த திருமண நிகழ்வைவிட காதலித்த தருணங்கள் மிக அழகாக தோன்றும்.
இலக்குகளை அடைய நீங்கள் கடுமையாக உழைக்கிறீர்கள் என்றால் பரவாயில்லை, அந்த உழைப்பையே மகிழ்ச்சியாகச் செய்யும்படி பார்த்துக்கொள்ளுங்கள். கவலை, ஆதங்கம் அல்லது எதிர்காலம் குறித்த பதற்றம் மனதில் இல்லாதவாறு மனதைச் சந்தோஷமாக வைத்துக்கொள்ளுங்கள்.
இங்கு நீங்கள் மகிழ்ச்சியாகத்தான் இருக்க வேண்டும் என முடிவு செய்துவிட்டால் ஒவ்வொரு பொழுதும் மகிழ்ச்சியே. அப்படி ஒவ்வொரு பொழுதும் வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருப்பதாக முடிவு செய்து, மகிழ்ச்சிக்கான காரணங்களைத் தேடுங்கள்.
ஒன்றை மட்டும் நினைவில்கொள்ளுங்கள்; உங்களை வருத்தப்பட வைக்க ஒரு காரணத்தைத் தந்தால், அதற்கு முன்னரே உங்களை மகிழ்ச்சிப்படுத்த பல காரணங்களைத் தந்துவிடதான் போகிறது இந்த வாழ்க்கை. பல நேரம் அது நம் அறிவுக்கு எட்டவில்லை என்பதே உண்மை. மகிழ்ச்சியாக இருப்பதற்கு உரிய ஆயிரம் காரணங்கள் வாழ்வில் கொட்டிக்கிடக்கின்றன. கண்டுபிடிக்க வேண்டியதுதான் நம் வேலை.
இதோ, இந்த நொடி இப்போது வாழத் தேவையான உணவு, உடை, இடம் தேவைக்கு அதிகமாகவே இருக்கிறது, பின்னர் மகிழ்ச்சியாக இருப்பதில் என்ன கஷ்டம்?
நன்றாக யோசித்துப் பார்த்தால், இந்த வாழ்க்கையில் பேரானந்தத்தைத் தரக்கூடிய விஷயங்களான குடும்பம், அறிவு, காதலுணர்வு, குழந்தைகள் எல்லாமே நீங்கள் பெரிதாகக் கஷ்டப்படாமல் வரக்கூடியவைதாம். இயற்கையாக எளிதாக அமையக் கூடிய விஷயங்கள்தாம்.
நம் இயல்பான நிலை மகிழ்ச்சியே. அந்த இயல்பான நிலையை அடைவதில் என்ன சிரமம் இருந்துவிடப் போகிறது? ஆமாம், நாம் எல்லாரும் மகிழ்ச்சிக்குப் பிறந்தவர்கள் தாமே? பெற்றோரின் மகிழ்ச்சியில் உருவானவர்கள் தாமே? மகிழ்ச்சியின் மூலத்தில் உருவாகிய நமக்கு மகிழ்ச்சியாக இருப்பதில் என்ன சிரமம் இருந்துவிடப் போகிறது?
எனவே, என் கணவர் அன்பு செய்தால் மட்டுமே நான் மகிழ்ச்சியாக இருக்க முடியும். எனக்கு உடல் நலமாக இருந்தால் மட்டுமே நான் மகிழ்ச்சியாக இருக்க முடியும் என்று சொல்வது எவ்வாறு இருக்கிறது என்றால், நான் முதலில் அறுவடை செய்துவிடுகிறேன். அதன் பின்னர் உழுது நிலத்தைப் பயிரிட்டுக்கொள்கிறேன் என்பதுபோல் உள்ளது. முதலில் மகிழ்ச்சியாக இருங்கள். அதன் பிறகு அதற்கான பலனாக நீங்கள் கேட்பது அனைத்தும் உங்களை வந்துசேரும்.
சில நேரத்தில் வாழ்க்கை, இழப்புகளையும் கசப்பான அனுபவங்களையும் இக்கட்டான சூழ்நிலைகளையும் தந்துவிட்டுதான் போகிறது. அதிலிருந்து சுலபமாக மீண்டு வருவது எப்படி எனவும் வாய்ப்புகளையும் சாத்தியங்களையும் பயன்படுத்தி, இந்த மன வழக்கத்தை எப்படிப் பழக்கப்படுத்த முடியும் என்பதை அடுத்த பதிவில் பார்க்கலாம்.
மகிழ்ச்சி என்பது மனதின் ஒரு நிலையே. அந்த நிலைக்கு மனதைப் பழக்கப்படுத்திக் கொண்டால் வாழ்க்கை ஒரு கொண்டாட்டமே. எனவே மனதைப் பழக்கப்படுத்த, ஒவ்வொரு பொழுதும் மகிழ்ச்சியாக இருப்பதையே தேர்ந்தெடுத்து வாழ்வைக் கொண்டாடுவோம்.
(தொடரும்)
படைப்பாளர்:
ஜான்சி ஷஹி
மனநல ஆலோசகர். மன நலத்திற்கான தெரப்பிகளையும் ஆற்றுப்படுத்துதலையும் வழங்கி வருகிறார். வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழவும், பிடித்த எதிர்காலத்தை அமைத்துக்கொள்ளவும், பொது மக்களுக்கு பயிற்சிப் பட்டறைகளை நடத்திவருகிறார். இவர் பெங்களூர் கிரைஸ்ட் பல்கலைக்கழகத்தில் மாணவர் மன நல ஆலோசகராக (student counsellor) பணியாற்றியது குறிப்பிடத்தக்கது.