ஆவே ஆவே மரியா

வாழ்க வாழ்க மரியா…

மிக மிக மெலிதான குரல் அந்த வனத்தில் அலைந்து கொண்டிருந்தது. அந்த வசீகரக் குரலே மனதை அமைதி கொள்ளச் செய்யப் போதுமானதாக இருக்கிறது. கருணை பொங்க, புன்னகைத் தவழ எங்களை வரவேற்ற மரியா எத்தகைய துன்பத்திற்கும் மருந்திடும் வல்லமையுடையவராகக் காட்சியளிக்கிறார். ஈழத்தின் பண்பாட்டு, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த மன்னார் மாவட்டத்தின் மடுப்பிரதேசத்தில் அமைந்துள்ளது 400 வருட பழமை வாய்ந்த அந்த ரோமன் கத்தோலிக்க தேவாலயம். Baroque Revival என்ற ஐரோப்பிய வகை கட்டிடக்கலை பாணியில் கட்டப்பட்டுள்ளது. லத்தீன் திருச்சபை முறையிலான (Latin Rite) வழிபாட்டுச் சடங்குகள் பின்பற்றப்படுகின்றன. தமிழ், சிங்கள கத்தோலிக்கர்களுக்கு மட்டுமல்லாது, பௌத்தர்கள், இந்துக்கள், புராட்டஸ்டன்ட்கள் என அத்தனை மதத்தினருக்கும் அருள்பாலித்து தன்பால் ஈர்த்து வைத்திருக்கிறார் அங்கு உறைந்திருக்கும் மடுமாதா.

ஈழத்தமிழ் தேசமெங்கும் ஒவ்வொரு நூறு அடிக்கும் ஒரு வரலாறு புதைந்து கிடந்து நம்மை ஆச்சரியப்படுத்துகிறது. அப்படிப்பட்ட ஒரு வரலாறை நண்பர் அன்ரனி மடுத்தீனும் அவர் மனைவி மெரினாவும் எங்களுக்கு அறிமுகப்படுத்த, வரலாற்றின் காலம் எங்களைப் பின்னோக்கி அழைத்துச் சென்றது. காலத்தின் கைப்பற்றி நாங்களும் சுவாரசியத்துடன் பயணிக்கத் தொடங்கினோம்.

காலம்: 16 ம் நூற்றாண்டு: யாழ்ப்பாணம், யாழ்குடா, மாந்தை பெருநிலப்பரப்பு, மன்னார்த்தீவு அனைத்தும் சேர்ந்ததே யாழ்ப்பாண ராச்சியமாக இருந்தது. அங்கு, கிறிஸ்தவம் பெரிதாக அறியப்படவில்லை. இந்தியாவின் தென்கரையோரங்களில் வசித்து வந்த கிறிஸ்தவர்களால் மெல்ல மெல்ல, இந்தியாவிலிருந்து மன்னார் வழியாக யாழ்ப்பாணம் நோக்கி, கிறிஸ்தவம் பரவத் தொடங்கியது. இந்தியாவிலிருந்த போர்த்துக்கீசிய மிஷினரிகள் புனித பிரான்சிஸ் சேவியர் அதிகாரத்தின்கீழ் யாழ்ப்பாண ராச்சியத்திற்கு ரோமன் கத்தோலிக்க மதத்தைக் கொண்டு வந்ததாகவும் வரலாறு கூறுகிறது. அந்தச் சமயத்தில் பல்வேறு சமயச் சண்டைகளுக்கும் கிறுஸ்தவத்திற்கு மாறியவர்கள் அடைந்த இன்னல்களுக்கும் குறைவில்லை.

செபமாலை மாதாவென்று தற்போது அழைக்கப்படும் மருதமடு மாதாவின் உண்மையான சுரூபத்தின் ஆதி இருப்பிடம் மாந்தை திட்டியில் அமைந்துள்ள தற்போதைய லூர்த்துக்கெபி கோயிலாகும். போர்த்துக்கீசியர்கள் காலத்தில் மன்னார் தீவு மற்றும் மாந்தை முழுவதிலும் கிறிஸ்தவம் வெகு வேகமாகப் பரவ ஆரம்பித்தது. 1658இல் டச்சுக்காரர்கள் மாந்தையைக் கைப்பற்ற, மாதாவின் சுரூபத்திற்கு ஆபத்து நேரிடலாம் எனக் கருதி அங்குள்ள கிறிஸ்தவர்கள் சிலகாலம் சுரூபத்தை வன்னிக்கு எடுத்துச் சென்றிருக்கின்றனர். அதன்பின், 1670இல் இருபது குடும்பங்கள் இணைந்து சுரூபத்தை எடுத்துக்கொண்டு கால்நடையாகவே மருதமரங்களினால் சூழப்பட்ட தட்சனா மருதமடு என்ற அந்த அடர்ந்த வனப்பகுதிக்குள் வருகின்றனர். அதே நேரத்தில் மேலும் 700 கத்தோலிக்கர்கள் யாழ் குடாநாட்டில் இருந்து வன்னிக் காடுகளுக்குக் குடிபெயர்கின்றனர். இந்த இரு சமூகங்களும் மடுவில் சந்திக்கிறார்கள். யானையும் புலியும் சிறுத்தையும் சர்வ சுதந்திரமாக வலம் வந்துகொண்டிருந்த அந்த அடர்ந்த வானப்பகுதி ஏனோ மாதாவிற்கான இருப்பிடமாக அவர்களுக்குத் தோன்றியிருக்கிறது. அனைவரும் ஒன்றிணைந்து மரியாளுக்கென புதிய விகாரையை நிறுவுகின்றனர். மடுதேவாலய சரித்திரப் புத்தகத்தில், 1670இல் ஆரோக்கிய அன்னை எனும் பெயரில் ஒரு கோயில் இருந்ததாகவும், அதை வன பிதா பெட்ரோ டீ பெற்றாங்கோ (Our Lady of Good Health built by Fr.PEDRO DE BETANCO) கட்டியதாகவும் கூறப்பட்டுள்ளது. போர்த்துக்கீசிய தளபதியின் மகளான லேனா என்ற பெண் மடுவில் இருந்த சுங்க அதிகாரியை மணம்புரிந்து, மருதமடு மாதாவிற்குக் கோயிலைக் கட்டுவித்ததால், சீலேனாமருதமடு என்ற பெயரும் விளங்கி வருகிறது.

அடர்ந்த அந்தக் காட்டில் அதற்குப் பின் விஷ சர்ப்பங்களின் தீண்டுதல் குறைந்துள்ளது. மடுமாதாவின் தலத்து மண்ணை மக்கள் நம்பிக்கையுடன் எடுத்துச் சென்று தமது தீராத நோய்களைத் தீர்த்துக்கொள்கிறார்கள். ஆங்கிலேயர் இலங்கையைக் கைப்பற்றியதும் கத்தோலிக்க மதம் தழைத்தோங்க, கானகத்தில் வீற்றிருந்த மருதமடு அன்னையைக் காண நாலாபுறங்களிலிருந்தும் பக்தர்கள் நூற்றுக்கணக்கில் வரத் தொடங்கினர். 1900ஆம் ஆண்டுகளில், அரசு ஊழியர்கள் தங்கி, பணிபுரிய அரசு விடுதி, அருட்சகோதரிகளின் சேவைகளுக்காக ஒரு கன்னியர் மடம், நோயாளிகளுக்கான வைத்தியசாலை, தபால் தொலைபேசி காரியாலயம், திருவிழாக் காலங்களுக்கென காவல் நிலையம், நீதிமன்றம் என மடுச்சுற்றாடல் விரிவடைகிறது.

1950இல் வெளிநாட்டிலிருந்து மார்பிளால் தயாரிக்கப்பட்ட மருதமடு அன்னையின் திருச்சுரூபம் இரண்டைத் தருவித்து தேவாலயத்தின் முகப்பிலும், மடுரோடு, மன்னார் மதவாச்சி சந்தியில் அமைந்துள்ள நுழைவாயிலிலும் ஸ்தாபித்ததற்கான சான்றுகள் உள்ளன. கருணை வழியும் அந்தச் சுரூபம் புன்னகையுடன் நம்மை வரவேற்கிறது. விழாக்காலங்களில் பத்து லட்சம் மக்கள் கூடி மடு தேவாலயத்தைச் சுற்றியுள்ள 50 ஏக்கருக்கும் அதிகமான அடர்ந்த மரங்களின்கீழ் கூடாரங்கள் அமைத்து தங்குவதும், உணவைக் கூட்டாகச் சமைத்து சாப்பிடுவதுமாக மத வேறுபாடின்றி மடுமாதாவைக் கொண்டாடித் தீர்த்திருக்கிறார்கள்.

அப்படிப் பெருவாழ்வு வாழ்ந்த மரியாவுக்கும் சோதனைகள் சூழ்ந்தன. அரசுப் படைகளுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் தொடர்ந்த உக்கிரமான சண்டைகளுக்கு மடுமாதாவும் தப்பவில்லை. 1990ஆம் ஆண்டிற்குப் பின்னர் வடக்கில் இலங்கை அரசின் யுத்த நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்ட பல்லாயிரக்கணக்கான மக்கள் நகர்த்தப்பட்டு, இடம் பெயர்ந்து, மடுப்பிரதேசம் வரை தூக்கி எறியப்பட்டனர். யாழ்ப்பாணம், கிளிநொச்சி, வவுனியா, மன்னார் போன்ற பகுதிகளைச் சேர்ந்த மக்கள் இலங்கை அரசுப் படைகளின் போர் நடவடிக்கையால் பாதிக்கப்பட்டு மாதா தங்களைக் கைவிடமாட்டாள் என்ற நம்பிக்கையுடன் மடு தேவாலயத்தில் தஞ்சமடைந்தனர். ஆலய வளாகம் அகதிகள் முகாமானது. ஒருநாள் அந்த அகதிகள் முகாம் அவல முகாமானது.

மார்ச் 22, 1999 அந்த நாள் விடிந்திருக்கவே வேண்டாம் எனத் தோன்றுகிறது. அடைக்கலம் தேடி அன்னையின் பாதங்களைச் சரணடைந்தவர்களின் எண்ணிக்கை ராணுவத்தினர் கண்களை உறுத்தியது. உயர் அதிகாரிகளிடமிருந்து ஆணைகளைப் பெறுகிறார்கள். ‘ரணகோச’ என்ற ஆக்கிரமிப்பு ராணுவ நடவடிக்கை தொடங்கியது. தங்களுக்குள் கூடிப்பேசுகிறார்கள். பண்டிவிரிச்சானிலிருந்த ஒரு மதுபானச் சாலையை உடைத்து அங்கிருந்த மதுவை அருந்துகிறார்கள். அவர்கள் மரபணுவில் உறைந்திருந்த இனப்படுகொலை வெறி கட்டவிழ்க்கப்பட்டது. பாலம்பிட்டி, சின்னப் பண்டி விரிச்சான் காடுகளின் ஊடாக மடு நோக்கிப் போர் தொடுக்கப்பட்டது.

இந்தச் சம்பவத்தில் படுகாயமடைந்து உயிர்தப்பித்த தெய்வசேகரம் அமர்சிங்கத்தின் வாக்குமூலம் இப்படிச் சொல்கிறது. “மடு தேவாலயத்தைச்சுற்றி சனங்கள் கிடைத்த இடங்களில் முகாமிட்டிருந்தனர். மடு ஆலய வளாகத்தில் வசித்த மக்கள் அனைவரையும் ஆலய மண்டபங்களில் தஞ்சமடையுமாறு ராணுவத்தினர் அறிவிப்பு செய்தனர். ஆலயத்தில் தஞ்சமடைந்திருந்த மக்கள் உறங்கச் செல்வதற்குத் தயாராகிக்கொண்டிருந்த வேளை சரியாக இரவு 9.15 மணியிருக்கும். இருண்டு போன அந்த நாளில் துப்பாக்கிப் பிரயோகங்கள், எறிகணைகள், செல்கள் என அடுத்தடுத்து, மடு தேவாலயம் நோக்கி வரத் தொடங்கின. இரவு 11 மணி: சனங்கள் என்ன செய்வதென தெரியாது வானத்தை நோக்கி ‘மடுமாதாவே எங்களைக் காப்பாற்றும்’ என இறைஞ்சியபடி இருந்தனர். முதலாவது ஏறிகணை திருக்குடும்பக் கன்னியர் மடத்தில் விழுந்து வெடித்தது. அடுத்த எறிகணை ஆலயத்தின் முன் நின்ற ஆலமரத்தில விழுந்து வெடித்தது. கடைசியாக ஏவப்பட்ட எறிகணை நான் இருந்த இடத்திற்கு மேலிருந்த இரும்புக் கம்பியில் வீழ்ந்து வெடித்தது. எனது அம்மா, அக்காள், அவரது மகன், பெரியப்பாவின் மகன், மனைவி, மகள், மருமகன் உள்ளிட்ட பல உறவினர்களும் என் கண்முன்னே பலியாயினர். இந்த எறிகணைத் தாக்குதலின் பின்னர் வேறெந்த வெடிச் சத்தமும் இல்லை. ஒரே அமைதி. மயான அமைதி. ஆலய மண்டபம் குருதி வெள்ளத்தில் நனைந்தது. உயிரைக் காக்க தஞ்சமடைந்த சனங்கள் கொல்லப்பட்டு கிடந்தார்கள். குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் என அவ்விடத்தில் மட்டும் 44பேர் கொலை செய்யப்பட்டனர். 60க்கும் மேற்பட்டோர் உடல் உறுப்புகளை இழந்து கடுமையாகப் பாதிக்கப்பட்டனர். இறந்தவர்களின் உடல் மடுவிலேயே விதைக்கப்பட்டது. அன்றிரவு மடு தேவாலயப் பகுதியை முழுமையாக இலங்கை அரசுப் படைகள் கைப்பற்றின. அது நாள்வரை தமிழீழ விடுதலைப்புலிகள் தங்கள் கட்டுப்பாட்டில் இருந்து வந்த மடுப் பிரதேசத்தை, போர் தவிர்ப்பு வலயமாகவும், புனித பிரதேசமாகவும் கையாண்டனர். விடுதலைப்புலிகள் தமது நடமாட்டத்தைத் தவிர்த்த அந்த நாளில், மடு தேவாலயத்தில் நிராயுத பாணியாகத் தனித்திருந்த மக்களையே ராணுவத்தினர் படுகொலை செய்தனர்.” அந்த வாக்குமூலத்தின் வார்த்தைகள் ஒவ்வொன்றும் மனத்தைக் கனக்கச் செய்கிறது.

நண்பர்களுடன் ரமாதேவி

“தாம் வணங்கும் மடு தேவாலயத்தில் வைத்து, மடுபாதா பார்த்துக்கொண்டிருக்கவே எமை இனக்கொலை செய்தனர். மடு மாதாவின் முகத்தில் எங்கள் சனங்களின் குருதி பட்டுத் தெறித்தது. மாதாவின் சந்நிதானம் மனித சதைப்பிண்டங்களால் நிறைந்து கிடந்தது. மடுமாதாவே இந்த இனப்படுகொலையின் வரலாற்றுச் சாட்சி. வன்முறையை வெறுக்கும், குருதி சிந்துதலை எதிர்க்கும் இந்த ஆலயத்தில் தமிழர்கள் குருதி சிந்த வைக்கப்பட்டனர். இலங்கை அரசுப் படைகள் தெய்வங்களையும் படுகொலை செய்பவர்கள். ஆலயங்களையும் அழிப்பவர்கள் சைவ, கிறிஸ்தவ இஸ்லாமிய ஆலயங்களை அழிப்பதும் அங்கு தஞ்சமடைந்த மக்களைக் கொன்றழிப்பதும் அவர்களுக்குப் புதிதல்ல, வடகிழக்கில் பல இடங்களில் நடைபெற்ற சம்பவங்கள்தாம். நவாலி தேவாலயம், புதின பேதுருவானவர் ஆலயம் என இனப்படுகொலைகள் நடைபெற்ற தேவாலயங்கள் பல உண்டு” – கண்ணீர் கனக்க வெடிக்கிறார், இந்தத் தாக்குதலில் தன் உறவுகளை இழந்த தோழி ஒருவர்.

தேவாலயப் பகுதியைக் கைப்பற்றிய ராணுவத்தினர் பெரும் ராணுவ வெற்றியாக அதைக் கொண்டாடி மகிழ்ந்தனர். விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் இருந்துவந்த மடு இலங்கை ராணுவத்தினர் வசம் வந்தது. மடு தேவாலய நுழைவாயில் அருகில் ராணுவத்தினரால் பௌத்த விகாரை அமைக்கவும் முயற்சி எடுக்கப்பட்டு தோல்வியில் முடிந்தது. மடு தேவாலயம் சிங்களவர்களாலும் வணங்கப்படும் தலம் என்பதால் அதனை ஒரு போர் வெற்றியாகக் காட்டி சிங்கள மக்களை கவர்ந்து, போர் வெற்றி சூடிய அரசியாக, அடுத்து வந்த தேர்தலில் தன்னை அடையாளப்படுத்திக்கொண்டார் சந்திரிகா.

மீண்டும், 2008 ஏப்ரலில் இலங்கை ராணுவத்தினர் நடத்திய பலத்த எறிகணை வீச்சினால் ஆலயம் சேதத்திற்குள்ளாகியது. அதனால் அங்கு அடைக்கலமடைந்திருந்த மக்கள் அனைவரும் பாதுகாப்பான இடம் நோக்கி நகர்ந்தனர். அன்னையின் திருவுருவச் சிலையின் பாதுகாப்புக் கருதி 2008 ஏப்ரல் 4இல் மன்னார் தேவன்பிட்டி புனித சவேரியர் ஆலயத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டு, மீண்டும் யுத்தம் முடிவுற்றபின் மடுவிற்குக் கொண்டுவரப்பட்டிருக்கிறது.

மழைச்சாரல் பரவ, வேண்டுதல் முடித்து நாங்கள் திரும்பத் தொடங்கியிருந்தோம். “ஆவே ஆவே மரியா வாழ்க வாழ்க மரியா…” இப்போது வனம் முழுக்கக் காற்றில் பரவிய அந்த மெல்லிய குரலுக்குள் மறைந்திருந்த வலியை உணர முடிந்தது.

(தொடரும்)

படைப்பாளர்:

ரமாதேவி ரத்தினசாமி

எழுத்தாளர், அரசுப்பள்ளி ஆசிரியர். பணிக்கென பல விருதுகள் வென்றவர். இவர் எழுதி வெளிவந்துள்ள ‘கனவுகள் மெய்ப்படட்டும்’ கட்டுரைத் தொகுப்பு பரவலாக கவனம் பெற்றுள்ளது. 2014, 2015ம் ஆண்டுகளில் ஐ நா சபையில் ஆசிரியர் பேச்சாளராகக் கலந்துகொண்டு உரையாற்றியுள்ளார். அடுப்பங்கரை டூ ஐநா தொடரில் அவரது ஐ நா அனுபவங்களை நகைச்சுவையுடன் விவரித்திருக்கிறார். இந்தத் தொடர் ஹெர் ஸ்டோரீஸ் வெளியீடாகப் புத்தகமாக வெளிவந்து பாராட்டுகளைப் பெற்று வருகிறது. இலங்கை இவருக்கு இதில் இரண்டாவது தொடர்.