.

“நாம் பொதுவாக மேல்மட்ட அளவுல சட்டமன்றம், நாடாளுமன்றத்தில் எம்.எல்.ஏ., எம்.பி. சதவீதக் கணக்கை எடுத்துப் பெண்கள் சதம் குறைவுன்னு பேசறோம் கண்ணு.”

“அப்ப எங்க எதையும் சேர்த்துப் பேசணும்? மாற்றம் எங்கிருந்து வரணும்னு சொல்றீங்க அப்பா?”

“நம் இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு சிறைச்சாலையில் இருக்கும்போது, வீட்டிலிருந்த தன் 13 வயது மகள் இந்திரா பிரியதர்சினிக்கு உலகத்துல இருக்கற நாடுகளின் வரலாற்றைக் கடிதமாக எழுதி அனுப்பி வைச்சாரு. 13 வயது இந்திராவும் அதைப் படிச்சிட்டு பதில் கடிதம் எழுதுவாங்க. இந்திராவின் அப்பாவும் நம் இந்தியாவின் முதல் பிரதமருமான ஜவஹர்லால் நேரு அப்போ எழுதிய ‘உலக வரலாறு குறித்த பார்வை’ என்ற தலைப்பில் இன்றும் புத்தகமாகக் கிடைக்குது. அவர் அதைச் சிறைச்சாலையில் எந்தப் புத்தகத்தையும் பார்வையிடாமல் தன் நினைவிலிருந்த தகவல்களைக் கொண்டே எழுதியிருப்பது வியக்கத்தக்கதாக இருக்கு. நான் ஏன் சொல்றனா குடும்பத்தில் அரசியல் சார்ந்த அறிவு இருக்கவங்களேகூடப் பொதுவாகப் பெண்களுக்கு அரசியல் சார்ந்த அறிவு கைக்கொள்ள பெரும்பாலும் அனுமதிப்பதில்லை. அப்பா பெண்களை அரசியல்படுத்தும் அந்தப் பாத்திரத்தைக் குறிப்பாக எடுக்கணும். அதற்குக் குடும்பத்துல வாய்ப்பில்லன்னா பள்ளில ஆசிரியர் அந்தப் பொறுப்பை எடுக்கணும். அதுவும் குறிப்பாகப் பதின்ம பருவம் கேள்வி கேட்க, உரையாடத் தொடங்கும் பருவம். அப்போ கட்டாயமாகத் தொடங்கணும். பல உரையாடல்கள் அது சார்ந்து குடும்பத்திலும் வகுப்பிலும் நடைபெறணும். அரசியல்னா என்னன்னு எளிதில் புரியும்படி பாடத்திட்டத்தில் வைக்கப்பட்டு உரையாடல் நடைபெறணும் தென்றல்.”

“வகுப்புல எதாவது பேசினா, வகுப்புல அரசியல் பேசக்கூடாதுன்னு சொல்லிடறாங்க அப்பா.”

அரசியலுக்கும் அரசியல் கட்சி சார்ந்து பேசறதுக்குமான வித்தியாசத்தை அனைவரும் முதலில் உணரணும். பதின்ம வயதுல இந்த உலகத்துல நடக்கிற விசயங்களைக் கேள்வி எழுப்பும், கூடவே தனக்கான ரோல் மாடலைத் தேர்வு செய்து தனக்கான அடையாளத்தைக் கண்டடையத் தொடங்கும் தருணம் அது.”

“சரியாக வழிகாட்டப்படலன்னா அது மூடத்தனமாக நடிகர்களின் அடையாளத் தேர்ந்தெடுத்தலில் முடியும். அவரின் நடிப்பை, உண்மைத்தன்மை இல்லாத பேச்சை, சினிமா மூலம் பின்தொடரத் தொடங்கிடுவாங்க. அந்த இடத்தைச் சமூகத்திற்காகப் பாடுபட்ட உள்ளூர் தலைவர்களை இட்டு நிரப்பணும். பொதுவாக அவர்களின் தந்தை, தாயையும் கூடவே பிடித்த ஆசிரியர்களையும் முன்மாதிரியாக எடுப்பர். அவர்களிடம் முன்மாதிரியாக எடுக்க வைக்கும் மனநிலையை உரையாடல் மூலம் மாற்றத்தை ஏற்படுத்தணும். பள்ளிகளில் தலைவர்களுக்கான விழா, நூலகத்தில் அவர்கள் குறித்த நூல்கள் உள்ளூரில் சமகாலத்தில் வாழும் பங்களிப்பாளர்கள் என இளந்தலைமுறைக்கு வழிகாட்டியாக அமையணும் கண்ணு.”

“அப்போ ஒட்டுமொத்த சமூகமும் பொறுப்பெடுத்து பண்பாட்டு மாற்றம் கொண்டு வரணும்னு சொல்றீங்களா அப்பா?”

“சமூகத்தை முன்னோக்கி நகர்த்த நினைக்கும் அத்தனை பேரும் ஒன்றிணைந்து முன்னெடுக்க வேண்டிய விசயம் குறிப்பாகக் குடும்பங்களில் பள்ளிகளில் முன்னெடுக்கணும் தென்றல்.”

“சட்டமன்றம், நாடாளுமன்றத்துல பிரதிநிதித்துவம் குறைவு எனச் சொல்றோம். மாறணும்னு சொல்றோம். அப்போ எப்போ பிரதிநிதித்துவம் அதிகரிக்கும் சொல்லுப்பா?”

“நம்ம ஊர்ல பொங்கல் விழா, இல்ல தலைவர் பற்றி விழா எடுக்கும் போது பெண்கள் முன்னெடுத்து, அட பங்கெடுத்தாவது பார்த்திருக்கயா? சொல்லு கண்ணு.”

“எனக்குத் தெரிந்து அப்படி ஒரு பொண்ணுகூட முன்னெடுத்ததில்லை. பெண்கள் பங்கெடுத்து நான் பார்த்ததுமில்லைப்பா. ஏன்?”

“பொதுவெளி அதிலும் குறிப்பாக அரசியல் வெளி என்பது ஆண் மையமாக ஆக்கப்பட்டிருக்கு. கீழ்மட்டநிலையே பெண்கள் பங்கெடுக்கலன்னா எங்கிருந்து எம்.எல்.ஏம், எம்.பி. வருவாங்க நீ சொல்லு கண்ணு?”

“அதென்னவோ நீங்க சொல்றது சரிதான்பா.”

“பொதுவாவே சமூகத்துல அரசியல் அறிவு குறைவா இருக்கு. பெண்களுக்கு அரசியலெல்லாம் எதுக்கு? பெண்ணுடலில் கெளரவம், புனிதம் எல்லாம் கட்டமைக்கப்பட்டிருப்பதால், அவள் வெளியே போனால் அது கெட்டுவிடும் எனச் சமூகம் புறக்கணிப்பதெல்லாம் மிகப்பெரிய பின்னடைவு, கிராம அளவுல பண்பாட்டுத் தளத்தில் பெண்களுக்கான வாய்ப்பு கொடுக்கப்படணும். அவர்களுக்கான வாய்ப்பு கொடுக்கப்படணும். அவர்களுக்கான உரிமைகளைப் பேசவாவது இந்தச் சமூகத்தில் அனுமதிக்கப்படணும்.”

“அரசியல் அறிவியல் படிப்போ ஏதோ கடைசியா தேர்ந்தெடுக்கிற மதிப்பில்லாத படிப்பா பார்க்கப்படுது. அதனை விரும்புவர்களும் எடுத்துப் படிப்பதில்லை. விரும்பிப் படிக்கணும்னு இருக்கறவங்களுக்குப் படிக்கும் வாய்ப்பு கிடைக்காமல் இருந்திருந்திருக்கலாம். படிப்பெல்லாம் வருமானம் கிடைக்குமா என்று பார்த்தே தேந்தெடுக்கப்படுவது வேதனைக்குரியது.”

“அரசியல்னா நேர்மையா இருக்க முடியாது. பல தில்லுமுல்லுகள் பண்ணும் அப்படிங்கிற எழுதப்படாத விதி வேற இருக்கு. அரசியலில் நேர்மையா இருக்கணுங்கிற விழிப்புணர்வு எல்லோர்கிட்டயும் வரணும்.”

“உங்களை மாதிரி அப்பா தன் குழந்தைக்குப் பொதுவெளியைப் பயில வாய்ப்பை ஏற்படுத்தணும். கிராம அளவிலிருந்து பெண்களுக்கு உரிமைகள் கேட்கும். அங்கீகரிக்கப்படும் வெளி ஏற்படணும். ஆனா, பல பெண்கள் பங்கெடுத்தால்தான் ஒரு போராட்டமே வெற்றி பெறுது. பெண்கள் போராட்டத்துல பங்கெடுக்கத்தான் போராட்டமே வலுப் பெற்று வெற்றி பெறுது.”

“நீ சொல்றது சரிம்மா. அதானலதான் சமூகத்துல பாதி எண்ணிக்கையில் இருக்கற பெண் சக்தியை இந்தச் சமூகம் பயன்படுத்தினாதான் முன்னேறும் கண்ணு. பெண்ணை வெளில விடாம வைச்சிருந்தா சமூகம் தான் பின்னோக்கிச் செல்லும் தென்றல்.”

“நம் சமூகத்துல மாற்றம் நடக்கும்னு நான் நம்பறேன்பா. நேரு எழுதின உலக வரலாறு ஓர் பார்வை புத்தகத்தை நூலகத்துல பார்த்தேன். அதை எடுத்துப் படிக்கறேன். அப்புறம் அரசியல் தலைவர்கள் பற்றியும் படிக்கணும்னு ஆர்வம் வந்திடுச்சுப்பா. செய்தித்தாள் படிச்சிட்டு நண்பர்களோடு உரையாடறேன். அவங்களும் செய்தித்தாள் படிக்கத் தொடங்கிருப்பாங்கப்பா. சீரியல் பத்தி பேசிக்கிட்டிருந்த நட்புக்குழு இப்போ நாட்டு நடப்பைப் பேசறோம்பா” என்று பெருமிதத்துடன் சொன்னாள் தென்றல்.

இப்படியெல்லாம் அப்பா உரையாடியதன் விளைவோ என்னவோ அரசியல் அறிவியல் எடுத்துப் படித்து இன்று நகராட்சிக்கு சேர்மனா அமர்ந்தாள் தென்றல். தன் அப்பாவின் உரையாடல்களை அசைபோட்டபடி நாளை நகராட்சிக் கூட்டத்திற்குத் தயாரானாள். மிக இளம் வயதில் அந்த நாற்காலியில் அமர்ந்த பெண் என்ற பெயரையும் கைக்கொண்ட பெருமையைக்கொண்டவள் தென்றல் என்று தொலைக்காட்சிப் பெட்டியெல்லாம் ஊரெல்லாம் கூவ, அவள் பெற்றோருக்குப் பெருமிதம் ததும்ப, அவள் பலருக்கு முன்னோடியாக இருக்கிறாள் என்பதை மறுக்க முடியாது. மாற்றம் சமத்துவம் மலர பரவட்டும்.

(தொடரும்)


படைப்பாளர்:

சாந்த சீலா

சாந்த சீலா கடந்த 17 ஆண்டுகளாக ஆசிரியராகப் பணிபுரிகிறார். கும்முடிப்பூண்டியை அடுத்த பூவலை கிராமத்தின் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ஆசிரியர். பேருந்து வசதி கூட சரியாக இல்லாத இந்த ஊரிலேயே தங்கி, பெரும்பாலும் ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த குழந்தைகளுக்கு கல்வியறிவு தருகிறார். இவரால் இந்தப் பள்ளியில் இடைநிற்றல் குறைந்திருக்கிறது. பள்ளி மேலாண்மைக் குழுவின் ஆசிரிய உறுப்பினராகவும் இருக்கிறார். கல்வியின் நோக்கமான படைப்பாற்றல் வெளிப்பட குழந்தை மையக் கல்வி அமைய வேண்டும் என்றும் விளிம்புநிலை குழந்தைகளும் மையநீரோட்டத்தில் இணைய வேண்டும் செயல்படும் அரசு பள்ளி ஆசிரியர். குழந்தைகளைக் கொண்டாடுவோம் கல்வி இயக்கம், குழந்தைநேயப் பள்ளிகள் கூட்டமைப்பு போன்ற அமைப்புகளில் செயலாற்றிக் கொண்டுவருகிறார்.