எந்தப் பிரச்னையையும் முழுமையாகத் தீர்க்க முடியாது. ஆனால், குறைக்கலாம். தற்கொலையும் அப்படித்தான். ஒவ்வொருவரும் பிரச்னைகளை வெவ்வேறு கோணத்தில் அணுகுவார்கள். சிலருக்கு மிகப்பெரிய பிரச்னையாகத் தெரிவது மற்றவருக்கு ஒன்றுமே இல்லாததாக இருக்கும்.
நமது காலத்திலும் மாணவர்களின் தற்கொலை, வீட்டை விட்டு ஓடி ஒளிதல் போன்றவை நடந்தனதான். ஆனால், அப்போதெல்லாம் வகுப்பில் தேர்ச்சி பெறாத மாணவர்கள்தாம் இதையெல்லாம் செய்தார்கள். ஆனால், இப்போது நல்ல மதிப்பெண் எடுக்கும் மாணவர்களே இந்த மாதிரி முயற்சியில் கூடுதலாக இறங்குகிறார்கள். இவர்களில் சில குழந்தைகளுக்கு சமூகம் பிரச்னையாக இருக்கிறது; சில குழந்தைகளுக்குப் பள்ளி பிரச்னையாக இருக்கிறது; சில குழந்தைகளுக்கு வீடு பிரச்னையாக இருக்கிறது; சில குழந்தைகளுக்கோ அனைத்துமே பிரச்னையாக அமைந்து விடுகிறது.
தாயின் முகம்தான் குழந்தையின் முதல் பாடப்புத்தகம் என்கிறார் காந்தி. ஆனால், அப்படியா நாம் இருக்கிறோம். மனவலிகளுக்கு வடிகாலாக இருக்க வேண்டிய பெற்றோரே சில நேரம் மனவலிகளை மேலும் குத்திக் கிளறுபவர்களாகி இருந்துவிடுகிறார்கள்
நான் பொதுவாகவே குழந்தை வளர்ப்பு குறித்து யாருக்கும் பாடம் எடுப்பதில்லை. ஒவ்வொரு குழந்தையும் தனித்துவமானவர். அதனால் ஒருவருக்குப் பொருந்துவது மற்றவருக்குப் பொருந்தாது. ஆனால், பொதுப்படையாகச் சிலவற்றைச் சொல்லலாம்.
ஒரு கதை, ஓர் அன்பான குடும்பம். அப்பாவிற்குப் பிறந்த நாள் வருகிறது. மகளுக்கு, நல்ல பரிசு கொடுத்து அப்பாவை மகிழ்ச்சிப் படுத்த வேண்டும் என விருப்பம். கடை கடையாக ஏறி இறங்குகிறாள். அவளுக்குத் திருப்தி வரவில்லை. இறுதியில் தம்மிடம் உள்ளவற்றில், தமக்கு எது மிகவும் பிடிக்குமோ அதைக் கொடுப்போம் என நினைத்து அவளுக்குப் பிடித்த பொருளை அழகான தாளில் சுற்றி, அப்பாவிடம் கொடுத்தாள். திறக்குமுன் அப்பாவிற்கு இருந்த மகிழ்ச்சி, பொருளைப் பார்த்த பின் இல்லை. ஏனென்றால், உள்ளே இருந்தது லிப்ஸ்டிக். அலங்காரத்தில் மிகவும் விருப்பம் கொண்ட அந்தக் குழந்தைக்கு, அது மிகவும் விருப்பமான பொருள். ஆனால், அதை வைத்து அப்பா என்ன செய்வார்?
இதை அப்படியே நமது குடும்பங்களுக்குப் பொருத்திப் பாருங்கள். நமக்கு என்ன பிடிக்குமோ அதை நாம் நமது குழந்தைகளுக்குத் தர முயற்சிக்கிறோம். இதில் சிலர் ‘நான் சிறு வயதில் இதைச் செய்ய வேண்டும் என நினைத்தேன். அதற்கு வசதி இல்லை. நீயாவது செய்’ என உணர்வுபூர்வமாக வேறு, பேசி குழந்தையை அதற்கு சம்மதிக்க வைக்கிறோம். இந்தக் கதையில் மகள் அப்பாவிடம், ‘நீங்கள் கண்டிப்பாக லிப்ஸ்டிக் போட்டே ஆகவேண்டும்; போட்டுத்தான் வெளியில் எல்லாம் வரவேண்டும்’ எனப் பிடிவாதம் பிடித்தால், அப்பாவின் நிலை என்ன?
ஐந்து வயது குழந்தை ஐஸ் கிரீம் விற்பவராக விரும்பும், பத்து வயதில் வேறு ஒன்றைச் சொல்லும். அவர்களிடம் போய், ‘நீ டாக்டராக வேண்டும், இஞ்சினியராக வேண்டும்’ எனத் திணிப்பது எந்த விதத்தில் நேர்மையான செயல்? நம்மிடம் அந்த வயதில் கேட்டால், பதில்கூட வந்திருக்குமோ என்னமோ? அவர்களுக்குக் குறைந்தபட்சம் இதுவாவது சொல்லத் தெரிகிறதே என மகிழ வேண்டியதுதான்.
வீட்டில் பொருள்களை வாரி இறைத்து விளையாடினால், ஓர் அளவு வரையிலாவது விட்டுவிடுங்கள். வாடகை வீடாக இருந்தால் சுவரில் படம் வரைவது எல்லாம் சிக்கல்தான். புரிகிறது. அப்படி இருக்கும் பட்சத்தில், பெரிதாக ஏதாவது வரைவதற்கு வாங்கிக் கொடுங்கள். முடிந்த வரை மாற்று ஏற்பாடு செய்யுங்கள். சில வீடுகளில் அம்மா விட்டாலும், குடும்ப உறுப்பினர்கள் வந்து சொல்வார்கள், ‘நானும் பிள்ளை வளர்த்தேன்; இப்படியா?’ என.
முயற்சி செய்தால் வெற்றி என்றாவது ஒருநாள் கிடைக்கும் என்பதை அவர்களுக்கு உணர்த்திய வண்ணமாகவே இருங்கள். உள்ளேயே பொத்தி வச்சு வளர்க்காமல், தானாக வளர விடுங்கள். மணலில் விளையாடட்டும்; மழையில் நனையட்டும்.
அம்மா அப்பா சொன்னதையும் கேட்டு, பிள்ளைகள் சொல்வதையும் கேட்டு வாழும் ஒரே தலைமுறை நாமாகத்தான் இருக்கும். அப்போது நம்மால் அப்பா, அம்மா பேச்சை மீற முடியவில்லை. இப்போது பிள்ளைகள் பேச்சை மீற முடியவில்லை.
உண்மையில் அப்படிப் பிள்ளைகள் சொல்வதை எல்லாம் கேட்க வேண்டும் என்பது எல்லாம் இல்லை. ‘இல்லை’, ‘முடியாது’ எனச் சொல்லவும் தெரிய வேண்டும். நமது குடும்ப, பொருளாதாரச் சூழ்நிலை ஒத்துப்போகவில்லை என்றால் சொல்லுங்கள், நிலைமையைச் சொல்லுங்கள். தவறே இல்லை.
பிள்ளைகளை அடிக்காதீர்கள். நம்மைவிட வலிமை மிகுந்தவர்களை நாம் அடிப்போமா? பிள்ளைகள் நம்மைவிட வலிமை குறைந்தவர் என்பதால் தானே அடிக்கிறோம்.
அதற்காகக் கண்டிக்கக் கூடாது எனச் சொல்லவில்லை. இப்போது சில பெற்றோர், நமது நிலைமை தெரியாமல் பிள்ளைகள் வாழ வேண்டும் என நினைக்கிறார்கள். பிள்ளை கேட்கிறதே எனத் தனது சக்தியை மீறிச் செய்வது எல்லாம் தேவையே இல்லை. அவர்களுக்கும் சொல்லும்படி சொன்னால் புரியும். அப்போது புரியவில்லை என்றாலும், கொஞ்ச நாள் கழித்தாவது புரியும்.
இவையெல்லாம் அவர்கள் என்றாவது தவறான முடிவு எடுத்தால், அதிலிருந்து மீண்டு வருவதற்கான பாடங்கள். அந்தப் பிள்ளைகள், ‘என் அம்மா, அப்பா நோ சொன்னதில்லை; நீயும் நோ சொல்லக் கூடாது’ எனப் புலம்ப மாட்டார்கள்; துவள மாட்டார்கள். விழுவதும் எழுவதும் வாழ்வில் இயற்கையானது.
சில குழந்தைகள் பெற்றோரைப் பற்றி தனக்குப் பிடித்த உறவினர்களிடம் போய் குறை சொல்வார்கள். அவர்களை அப்படியே விட்டுவிடுங்கள். அது நமது தன்மானத்தைக் குறைப்பதாகத்தான் இருக்கும். ஆனால், நம்மை நாமே திருத்திக்கொள்ள அது உதவும். அப்போதே நாம் தடை போட்டால், குழந்தை மனம்விட்டுப் பேசுவதற்கு உகந்த ஒருவரை இழக்கிறது. அப்படி ஓர் உறவு கிடைப்பது என்பது, குழந்தைக்கு என்றுமே வரம். வளர வளர, பெற்றோரிடம் பகிர முடியாத ஆதங்கங்களைப் பகிர்ந்துகொள்ள, வடிகாலைத் தேடிக்கொள்ள, அந்த உறவினர் உதவியாக இருப்பார்.
நிறைய கதைகளைச் சொல்லுங்கள். குடும்ப உறவினர்கள், நண்பர்கள், நமக்கு உதவியவர்கள் குறித்து நிறைய பேசுங்கள். அவர்களின் படங்களைக் காட்டுங்கள். இவையெல்லாம் பலவிதமான கதாபாத்திரங்களை அவர்கள் மனதில் விதைக்கும். பிற்காலத்தில், அவர்கள் வாழ்வில் அவற்றைப் பொருத்திப் பார்க்க வசதியாக இருக்கும். நமது வாழ்வியல் வரலாறு அந்தக் கதாபாத்திரங்கள் மூலம், அவர்களுக்குத் தெரியவரும்.
வாழ்க்கையைச் செம்மையாக வாழத்தெரிவதைவிட உயர்ந்த கல்வி உலகில் உண்டா?
1923 ஆம் ஆண்டில் கலீல் ஜிப்ரான் எழுதிய கவிதை:
உங்கள் குழந்தைகள்
உங்களுடையவர்கள் அல்லர்
அவர்கள் உங்கள் வழியாக வருகிறார்களேயன்றி
உங்களிடமிருந்து அல்ல
அவர்களுக்கு உங்கள் அன்பைத் தரலாம்;
எண்ணங்களை அல்ல.
அவர்களுக்கென்று சுய சிந்தனைகள் உண்டு.
நீங்கள் அவர்களாக முயலலாம் ;
அவர்களை உங்ளைப்போல
உருவாக்க முயலாதீர்கள்.
படைப்பாளர்:
பாரதி திலகர்
தீவிர வாசிப்பாளர், பயணக் காதலர்; தொன்மை மேல் பெரும் ஆர்வம் கொண்டவர். அயல்நாட்டில் வசித்து வந்தாலும் மண்ணின் வாசம் மறவாமல் கட்டுரைகள் எழுதிவருகிறார்.