வடசென்னையில் இன்றும் குழந்தைத் திருமணம் உண்டு. குழந்தைத் திருமணம் எங்கு இல்லை, இந்தியாவில் எல்லா மூலை முடுக்குகளிலும் உண்டு. ஆனால், இங்கு குழந்தைத் திருமணங்களை, குழந்தைகளே செய்துகொள்கின்றனர். அடுத்து குழந்தைகளின் கையில் குழந்தைகள். இருபது வயதைத் தொடும் முன்பே இவர்கள் வாழ்க்கை முடிந்து விடுகிறது. படிப்பின் முக்கியத்துவம் இன்று வரை இந்தக் குழந்தைகளுக்குத் தெரிந்ததே இல்லை. தெரியப்படுத்தவும் யாரும் இல்லை.
கணவனால் கைவிடப்பட்டு, தனி ஒருத்தியாக நின்று தங்கள் குழந்தைகளை வளர்க்கும் பெண்களே அதிகம். வீட்டு வேலை செய்து, பூ விற்று, இட்லி கடை போட்டு, கூலி தொழில் செய்து தங்கள் குழந்தைகளை வளர்கின்றனர். இங்கு குப்பைத் தொட்டியில் குழந்தைகள் வீசப்படுவதில்லை.
இங்கு வளரும் குழந்தைகளில் ஆண் குழந்தைகள் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றால், பன்னிரண்டாம் வகுப்பு சேர்க்கபடுவார்கள். பன்னிரண்டாம் வகுப்பு தேர்ச்சிப் பெற்றாலும் இல்லை என்றாலும் வேலைக்கு அனுப்பப்படுவார்கள். பெண் என்றால், எந்தக் கட்டத்திலும் படிப்பு பாதியில் நிறுத்தப்பட்டுத் திருமணம் செய்து வைக்கப்படும். இந்தச் சூழ்நிலையில் வளரும் குழந்தைகள் எதிர்காலம் எப்படி இருக்கும்? இளம் வயதில் திருமணம், குழந்தைகள், வாழ்வின் சாவல்களைச் சந்திக்கத் தெரியாத வயதில் வாழ்க்கை தொடங்கி, தொடங்கிய வேகத்திலேயே முடிந்தும்விடுகிறது.
நூற்றாண்டுகள் பல கடந்தாலும் சமூக மாற்றங்கள் நிகழ்ந்தாலும் ஆட்சிகள் பல கண்டாலும் மாற்றம் என்றும் இல்லை, இவர்கள் வாழ்வில். இவர்களுக்குச் சூரியன் உதித்தாலும் இலைகள் துளிர்த்தாலும் பூக்கள் மலர்ந்தாலும் எல்லாமே ஒன்றுதான், வறட்சி மட்டும்தான் மிச்சம்.
தற்போது இடிந்து விழும் நிலைக்கு வந்துவிட்ட கட்டிடங்களை முழுவதுமாக இடித்துவிட்டு, புதிதாக வீடுகள் கட்டப்பட்டுப் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பு மேல் தளம், படிக்கட்டுக்கள், ஒரு பிரிவு வீடுகள் என்று தனித் தனியாக இடித்துக் கட்டப்பட்டது. ஆனால், இப்பொழுது மொத்தமும் இடித்துக் கட்டப்பட்டுள்ளது. ஒன்பது மாடிக் கட்டிடம், முதல் முறையாக ஒரு படுக்கை அறையுடன் கூடிய வீடுகளாக மாறியுள்ளது. சமையல் அறைக்கும் ஒதுங்கிடங்களுக்கும் தண்ணீர்க் குழாய் வசதிகள் உண்டு. ஆனால், காலை ஒரு மணி நேரம் மட்டுமே தண்ணீர் திறந்து விடப்படும். இவர்கள் ஒரு நாளுக்கான தண்ணீரைச் சேமித்து வைத்துக்கொள்ள வேண்டும். கட்டிடங்களின் தரம் குறிப்பிட்ட வருடங்கள் மட்டுமே தாங்கும் சக்தியுடையதால், மீண்டும் இடிக்கப்படும் என்று எடுத்துக் கூறிய பிறகே மக்கள் அனுமதிக்கபட்டதாக, அங்கு குடியேறிய மக்கள் சிலர் கூறுகின்றனர். பெரும் போராட்டத்திற்குப் பிறகே மக்கள் குடியேறினார்கள்.
அம்மா சுலோக்சனா, ஆயா கங்கம்மாவின் மறைவிற்குப் பிறகு ரேகா தன் இரண்டு மகன்களுடன் அம்மா, ஆயாவுடன் அவள் வாழ்ந்த அதே வீட்டில் குடியேறினாள். கணவனால் கைவிடப்பட்டவள், மீண்டும் அந்த வீட்டில், அதே மூன்று உறுப்பினர்கள். ஆனால், ஒரு வித்தியாசம் ஒரு பெண், இரண்டு ஆண் குழந்தைகள்.
ரேகா மிகவும் செல்லமாக வளர்க்கப்பட்டக் குழந்தை. அம்மாவும் பாட்டியும் வேலைக்குச் சென்ற பிறகு கதவுகளை தாழிட்டுக்கொண்டு, தானே குளித்து, தலை வாரி, புத்தகங்களைச் சரிபார்த்து வைத்துக்கொண்டு, அருகில் இருக்கும் அரசுப் பள்ளிக்குச் செல்வாள். நீலப் பாவாடை, வெள்ளைச் சட்டை, இரட்டைப் பின்னல், அதன் கடைசியில் பச்சை ரிப்பனும் இரண்டு பின்னலையும் இணைக்கும் பிறைச் சந்திரன் போல் வைக்கப்பட்ட டிசம்பர் பூக்கள், நெற்றியில் பல வண்ணங்களில் சாந்துப் பொட்டு என்று சிட்டாகப் பறந்து செல்வாள்.
வழியில் யாரிடமும் பேசக் கூடாது, பள்ளி முடிந்ததும் வீடு, வீட்டில் உள்ள பொம்மை, விளையாட்டுச் சாமான்ங்கள், கொஞ்சம் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள். திருமணத்திற்கு முன்பு வரை அவளின் பொழுதுப்போக்கு இதுதான். சில நேரம் மேல் வீட்டு ராதா, அம்பிகாவுடன் விளையாடுவாள். அந்தக் குழந்தைகளுக்கு ரேகாவின் போக்கு என்றுமே வேடிக்கைதான்.
தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கதாநாயகிகளே ரேகாவின் முன்மாதிரிகள். அவர்களைப் போலவே நடப்பாள், சிரிப்பாள், பேசுவாள். எல்லாமே நளினமாக இருக்கும். தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் வரும் காட்சிகளைப் பார்த்துக்கொண்டே, அவர்களைப் போல் நடிப்பாள், ஆடுவாள், பாடுவாள். எப்பொழுதும் சிரித்துக்கொண்டே மகிழ்ச்சியாக இருப்பாள்.
பள்ளி ஆசிரியர்களும் சில தோழிகளுமே அவளின் வெளி உலகம். வீட்டுப் பாடங்களை பள்ளியிலே முடித்துவிடுவாள். படிப்பதும் அங்குதான். அவள் கற்றுக்கொண்ட ஆங்கில வார்த்தைகளை அதிகமாகப் பயன்படுத்துவாள். ரேகாவிற்கு ஆங்கிலம் பேச மிகவும் பிடிக்கும். கதவைத் தட்டும் சத்தம் கேட்டு ஓடினாள்.
“ஏன் ஆயா இன்னைக்கு லேட்டு?” “இல்லடி கண்ணு ஆயா உனக்கு வள்ளிக்கெழங்கு வாங்கியாந்தேன், அதான் லேட்டு, இந்தா துண்ணுடி கண்ணு” என்றாள். ஆயாவிடம் அன்று முழுவதும் பள்ளியில் நடந்ததை கதாநாயகி போன்று, கண்களை உருட்டி, முகத்தில் பாவனையுடன் செய்து காட்டுவாள். மீண்டும் அம்மாவிடமும் அதே கதை. இரவு உணவு முடிந்ததும் உறங்கிவிடுவாள்.
உறவுகள் இல்லை, எந்த நல்லது, கெட்டதுக்கும் ரேகா சென்றதும் இல்லை. அவளின் அம்மாவும் ஆயாவும் சென்றால்தானே ரேகா செல்ல முடியும்? மிகக் குறுகிய வட்டத்தில் வளர்ந்தாள். பெண் குழந்தைகள் பிறப்பதே திருமணத்திற்காக என்று எண்ணும் சமூகத்தில், கங்கம்மாளும் சுலோச்சனாவும் மட்டும் என்ன விதிவிலக்கா? எட்டாம் வகுப்பு முடித்தவுடன் ரேகாவுக்குப் படிப்பு ஏறவில்லை என்று படிப்பை நிறுத்திவிட்டு, சில வருடங்களில் திருமணமும் செய்து வைத்தனர்.
பெண் குழந்தைகளுக்குப் பாதுகாப்பு எங்கு உள்ளது? ஒழுக்கத்தைப் போதிக்கும் பள்ளி, கல்லூரியிலும் இல்லை, பாதுகாப்பு வழங்க வேண்டிய அரசிடமும் இல்லை. இன்று வரை கடமையைச் செய்வதாக நினைத்து, அனைத்து பெற்றோரும் பாதுகாப்பு கருதியே அவசரத் திருமணங்களை முடித்து வைக்கின்றனர். திருமணத்தில் மட்டும் என்ன பாதுகாப்பு உள்ளது, விட்டுச் செல்லும், விட்டுச் செல்ல நினைக்கும் ஆண்களே அதிகம்.
ரேகாவுக்குவெளி உலகம் தெரியாது, கடைக்குச் சென்று காய்கறி வாங்கவும் அரிசிப் பருப்பு வாங்கவும் அவளுக்குத் தெரியாது. ஆனால், வீட்டில் உள்ள அனைத்து வேலைகளும் அவளுக்குத் தெரியும். தெரியும் என்று சொல்வதைவிட, சொல்லிக் கொடுத்து வளர்க்கப்பட்டாள். அதனால் வீட்டோடு மாப்பிள்ளையாகப் பார்த்து திருமணமும் முடிந்தது.
குடும்பத் தலைவி ரேகா, தமிழ் சினிமா சொல்லிக் கொடுத்த பண்பாட்டைக் காப்பற்றும் மனைவி. கணவனை கண்மூடிதனமாக நம்பும் மனைவி. வேலை நிமித்தமாக வாரத்தில் நான்கு அல்லது மூன்று நாட்கள் மட்டுமே வீட்டிற்கு வரும் கணவன், குழந்தைகள் என்று சிரித்துக் கொண்டே வாழ்க்கை ஓடியது.
வாரம் நான்கு நாட்களுக்கு வரும் அவளின் கணவன், வாரம் இரண்டு முறை, ஒரு முறை, மாதத்தில் இரண்டு முறை, ஒரு முறை என்று வரத் தொடங்கினான். மாதங்கள் கடந்து, வருடங்கள் கடந்தன. பிறகுதான் ரேகாவுக்கும் அவளின் அம்மாவுக்கும் தெரிந்தது அவனுக்கு வேறு ஒரு குடும்பம் இருப்பது. ரேகா உடைந்து போனாள். தன்னைப் போல் தன் மகளின் வாழ்வும் ஆனதே என்று மனம் உடைந்த சுலோக்சனாவும் மறைந்தார். ரேகாவுக்கு வெளி உலக அறிவு இருந்திருந்தால் கணவனின் செயல்பாட்டில் இருந்த மாற்றங்களை உணர்ந்திருப்பாள். வாழ்க்கையை மாற்றி வாழ்ந்தும் இருப்பாள்.
இன்று கல்லூரிக்குச் செல்லும் பிள்ளைகளுக்கு ஊட்டி விடும் பெற்றோரே அவர்களின் சட்டைக்கு இஸ்திரிப் போட்டு, மாட்டிவிடும் பெற்றோரே, ‘என் பெண்ணுக்குக் கல்யாணத்துக்கு முன்னாடி வரைக்கும் சமையல்கட்டு எந்தப் பக்கமுன்னுகூடத் தெரியாது’ என்றும் ‘என் புள்ள வருவா, சாப்புடுவா, தூங்குவா, போவா அவ்வளவு தான்’ என்று பெருமை பேசும் பெற்றோரே, சற்று மாறுங்கள். சாதிக்க வேண்டிய குழந்தைகளை சோம்பேறிகளாக மட்டும் அல்ல, வாழவும் தகுதியற்றவர்களாக நீங்கள் உருவாக்குகிறீர்கள்.
தன் தாயின் போராட்டங்களைப் பார்த்து வளர்ந்த ரேகாவுக்கு வாழ்கை கடினமாகத் தோன்றவில்லை. காரணம், இந்த வாழ்க்கைக்கு அவள் பழகியவள். அம்மா, ஆயா இருவரின் சேமிப்புத் தொகையை வைத்து குழ்ந்தைகளை வளர்த்து வருகிறாள். அம்மாவின் வேலை தனக்குக் கிடைக்கும் என்று முயற்சி செய்தபோது, திருமணம் ஆன பெண்ணுக்கு அம்மாவின் அரசு வேலை வழங்கப்பட மாட்டாது என்று யாரோ கூறியதை நம்பி, அந்த முயற்சியையும் கைவிட்டாள். வேலைக்கு எப்படி முயற்சிப்பது என்று ரேகாவுக்கு மட்டும் அல்ல, இங்கு யாருக்கும் தெரிவது இல்லை. சட்டங்கள் மாறுவதும் மாற்றப்படுவதும் இங்கு வாழும் மக்களுக்குத் தெரிவதும் இல்லை, தெரியப்படுத்துவதற்கு ஆளும் இல்லை.
ரேகா வெளி உலகைச் சந்திக்கத் தொடங்கிவிட்டாள். தினசரி தேவைகளையும் உணவுப் பொருட்களையும் வாங்க வெளியில் செல்லத் தொடங்கியவள், பாதுகாப்பு கருதி தன் முதல் மகனையும் அழைத்துச் சென்றாள். அம்மாவுடன் செல்ல பழகியவன், பள்ளி செல்ல மறுத்துவிட்டான். இரண்டாவது மகன் மட்டும் படித்து வருகிறான். இன்று ஒரு குழந்தையைப் படிக்க வைக்க மட்டுமே அவளின் பொருளாதார நிலை உள்ளது.
நல்ல கல்வி, வேலை வாய்ப்பு, வாழ்கைத் தரம் அமைத்துக் கொடுப்பது பெற்றோருக்கு எத்தனை அவசியமோ அதனை விட அவசியம் குழந்தைகளின் உயிரைக் காப்பது. உயிரைக் காக்க உணவு தேவைப்படுகிறது. ரேகா அவள் குழந்தைகளைப் பேணிப் பாதுகாத்து வருகிறாள். இளம் வயதில் குடி, போதை, காதல், திருமணம் என்று திசை மாறும் குழந்தைகளுக்கு மத்தியில் தன் குழந்தைகளை நல்ல முறையில் வளர்க்கிறாள். அவள் அம்மா, ஆயாவின் சேமிப்பு இவளின் வாழ்க்கை ஆனது.
திருமணம் ஆகாத, கணவணை இழந்த பெண்கள் வாழ்வது எத்தனை கடினமோ அதைக் காட்டிலும் ஆயிரம் மடங்கு கடினம் கணவனைப் பிரிந்து வாழ்வது, இந்தச் ஆணாதிக்கச் சமுதாயத்தில். இப்பொழுது அவள் நிஜ கதாநாயகியாகவே மாறிவிட்டாள். தனித்து, துணிந்து வாழும் ஒவ்வொரு பெண்ணும் கதாநாயகிதான்! சின்ன சின்ன விஷயங்களுக்கு எல்லாம் தற்கொலை செய்து கொள்ளும் இளைய தலைமுறையே, ரேகாவைப் பார்த்து வாழக் கற்றுக்கொள்ளுங்கள்.
2021ஆம் ஆண்டில் மட்டும் இந்தியாவில் சுமார் 45,026 பெண்கள் தங்களது உயிரை மாய்த்துக்கொண்டுள்ளனர். அதில் சுமார் 23,000 பேர் திருமணமான பெண்கள் என்று தேசிய குற்றப்பதிவு ஆவணக் காப்பகத்தின் அறிக்கை தகவல் இது. தற்கொலை எதற்கும் தீர்வு இல்லை. ரேகாவைப் போல் எவ்வளவோ பெண்கள் தங்கள் வாழ்க்கையை எப்படி வாழ்க்கிறார்கள் என்று ஒரு நிமிடம் யோசித்தாலும் நாம் வாழ்வதற்கு நம்பிக்கை பிறக்கும்!
(தொடரும்)
படைப்பாளர்:
எம்.கே. வனிதா. உயிர்வேதியியல் துறையில் முனைவர் பட்டம் பெற்றவர். பல ஆராய்ச்சிக் கட்டுரைகளை வெளியிட்டுள்ளார். தமிழில் முதுகலைப் பட்டம் பெற்றிருக்கிறார். தனியார் கல்லூரியில் உதவி பேராசிரியராகப் பணியாற்றியிருக்கிறார். பட்டிமன்றங்களிலும் பேசி வருகிறார்.