வடசென்னையில் அப்படி என்னதான் இருக்கிறது? நீ வடசென்னையா? நீ வடசென்னையிலா இருக்கிறே? அவன் வடசென்னை, அவன் அப்படித்தான் இருப்பான். போதும் ஐயா உங்க புராணம். வாருங்கள், எங்கள் வடசென்னை வாழ்க்கையைப் பாருங்கள்!
என்ன இல்லை எங்கள் வாழ்க்கையில்? மகிழ்ச்சியும் ஆனந்தமும் இருக்கின்றன. அன்பு, பாசம், காதல் நட்பு, கருணை, அமைதி, கோபம், சண்டை, சமாதானம், சிரிப்பு, அழுகை, பிறப்பு, பிரிவு, இறப்பு என்று எது இல்லை இங்கு?
வாழ்கையை வாழ்ந்து பார்க்க வேண்டுமா? வாருங்கள் என்னோடு! இங்கு வாழும் மக்களுக்குள் சாதி, மதம் வேறுபாடுகள் இருந்தாலும் எல்லாரும் வடசென்னையின் ஏழைகள். இல்லாதவர்கள் எங்கு இருந்தாலும் அவர்கள் ஒதுக்கப்பட்டவர்களே!
பசியில் சேர்ந்து உண்பார்கள், வலியில் கை கோத்து நிற்பார்கள். மகிழ்ச்சியில் ஆனந்தக் கூத்தாடுவார்கள். இங்கு தினக்கூலிகள் அதிகம். ஆனால், அரசு வேலைதான் லட்சியம். அரசின் கடைநிலை தொழிலாளர்கள்தாம் இங்கு மரியாதைக்குரியவர்கள். பிறப்பு முதல் இறப்பு வரை உள்ள எல்லாச் சான்றிதழ்களின் விண்ணப்பங்களை இவர்கள்தாம் பூர்த்தி செய்ய வேண்டும்.
இவர்கள் வீட்டின் முன்னால் தினமும் யாரோ ஒருவர் காத்துக்கொண்டியிருப்பார். குழந்தைகளை பள்ளியில் சேர்க்க, அரசின் உதவித் தொகைகளை வாங்க, சாதி சான்றிதழ் வாங்கவென்று விண்ணப்பங்கள் பல. பியூன் கந்தசாமியும் சன்மானம் வாங்காமல், தனக்கு மட்டும்தான் அரசாங்க வேலைகள் தெரியும் என்ற பெருமிதத்துடன் எழுதுவார். அவர் மனைவி வருபவர்களுக்கும் காபி போட்டுக் கொடுப்பார்.
இங்கு ஒவ்வொரு பெண்ணும் புதுமைதான்! இவர்களுக்கு வசதியும் குறைவு, படிப்பும் குறைவு. ஆனால், வாழ்கையை வாழும் விதம் , கடின உழைப்பு, தன்னம்பிக்கை, தைரியம் இவற்றை இங்கு வாழும் பெண்களிடம் இருந்துதான் கற்றுக்கொள்ள வேண்டும். இங்கு பெண்கள்தாம் எல்லாம். ஒவ்வொரு பெண்ணும் அல்லிராணிதான். நம் காவியத் தலைவி அமுல்ராணியைப் பார்ப்போம்.
அது என்ன பூ விற்கும் பெண்கள் குள்ளமாகத்தான் இருப்பார்களா? இல்லை, சற்றுக் குள்ளமாக உள்ள பெண்கள் பூக்காரர்களாக மாறிவிடுவார்களோ! அதுவும் நம் பூக்காரர் குள்ளக்கா என்ற அமுல்ராணி குள்ளத்திலும் குள்ளம்.
அவர் அரை முழம் கையில், கால் முழம் பூவை இழுத்து, ஒரு முழம் என்று விற்பார். பூ விற்று வரும் வருமானம்தான் அவர் வீட்டில் உள்ள மொத்த ஜீவராசிக்கும் சோறு. அவர் கணவன் வருமானம் மொத்தமும் டாஸ்மாக்குக்குதான். இவர் தனி ஆளாக நின்று அவருடைய அம்மா, அப்பா, தங்கை, தம்பி, இவருடைய அம்மா, அப்பா, இவர்களுடைய குழந்தைகள், செல்ல நாய்க்குட்டி என்று பெரிய குடும்பத்தை வளர்க்கிறார். இவர் கையை நம்பித்தான் இத்தனை வயிறும் வளர்கின்றன.
ஏழு மணிக்குக் கொஞ்சம் முன்னாடி எழுந்து, பொதுக்குழாயில வரும் தண்ணீரை ஒரு சொம்பு பிடித்து, முகம், கை, கால் கழுவி விட்டு வேலையைத் தொடங்குவார்.
உதிர்ந்து போன ஒரு மரமேசையைத் தூக்கிவந்து தெரு முனையில் ஓர் ஓரம் போடுவார். அந்த மேசை நிறம் என்ன என்பதுகூட அவருக்குத் தெரியாது. அவருடைய மாமியார் காய்கறி விற்றபோது பயன்படுத்தியது. அந்த மேசையின் ஆணி நாலா பக்கமும் தலையை வெளியே நீட்டி, ஒரு நாளைக்குப் பத்து முறையாவது அவர் சேலையில் மாட்டி மாட்டி இழுக்கும். அவருடைய வாழ்க்கையும் அப்படிதான்.
முதல்நாள் கட்டிய பூச் சரங்களை எல்லாம் மேசையின் மேல் தரம் பார்த்துப் பக்குவமாக வைப்பார். பிறகு வேலைக்குப் போகும் பெண்களை அழைத்து, அழைத்து விற்பார்.
பள்ளிப் படிப்போடு நின்ற பெண்கள் அருகில் இருக்கும் பெரியமேடு, சௌகார்பேட்டை, வண்ணாரப்பேட்டை என்று வேலைக்குப் போவார்கள். அவர்கள் இவரை குள்ளக்கா என்று அழைப்பர். முதல்நாள் கட்டிய பூச்சரங்களையும் மிச்சம் நின்ற பூவில் கட்டிய கதம்பப்பூச்சரத்தையும் இவர்களிடம் விற்றுவிடுவார்.
இன்று வருமானம் சற்றுக் குறைவுதான். அதனால் அவர் வியாபார யுத்தியைப் பயன்படுத்தினார். காலையில் வேலைக்குப் போகும் மங்காவைப் பார்த்துவிட்டார். “ஏய், மங்கா எங்கடி விடிஞ்சதும் கெளம்பிட்ட, வாடி ஒரு மொழம் பூ வாங்கித் தலைல வெச்சிக்கினு போவ’’ என்றார்.
“ஏண்டி குள்ளக்கத்திரிக்கா, வீட்டு வேலைக்குப் போறவ பூ வெச்சிகினா போவா? சும்மாவே அவ பாக்குற பார்வைக்குப் பூ வேற… அவனுங்கலே பரவாயில்ல அந்த வீட்டு அம்மா என்னைப் பார்த்தா, கணக்கு தீத்து அனுப்பிடுவா. என் பொழப்புக்கு பூ ஒன்னுதான் கொற’’ என்று பதில் கூறிக்கொண்டே விறுவிறுவென்று ஓடுவார்.
‘நீ மட்டும் பூ வாங்கிட்டாலும், நீ பேசினா கலெக்டராம்மாவே தோத்துடும், நானா பேச முடியும் உங்கிட்ட’ என்று அவள் காதில் பட்டும்படாமலும் சொல்வார்.
அவளைத் தொடர்ந்து வந்த பெண்களில் ஒருத்தி, “யக்கா, முல்ல பூ இல்லையா?”
‘’ஆமாண்டி கண்ணு, மல்லிதான் இருக்கு. எல்லாரும் மல்லி தான் கேப்பாங்க, நீதான்டி முல்லப்பூ கேப்ப’’ என்று பேசிக்கொண்டே மல்லியை விற்றுவிட்டார்.
காலை சூரியன் மிதமாகக் கரங்களை நீட்டும்போது அமைதியாகவும் அன்பாகவும் இருந்தவர் நேரம் செல்லச் செல்ல, அவரின் பூக்களைப் போலவே வாடினார். சூரியனுக்கு என்ன தெரியும் இப்படி ஒருத்தர் பூ விற்பார் என்று! ஆனால், அவருக்குத் தெரியும் உச்சி வேளையில் கணவன் எப்படி இருப்பார் என்று. தண்ணீரைப் பிடித்து அடிக்கடி முகம், கை, கால்களை நனைத்துக்கொள்வர்.
நேரம் மதியம் பன்னிரண்டைக் கடந்துவிட்டது. இனி வியாபாரம் குறைவுதான். வெள்ளி, சனி, விசேஷ நாள்களில் ஒரு மணி வரை ஆள்கள் வருவார்கள். இன்று திங்கள்கிழமை அதனால் வீட்டுக்குள் போனார், வீடும் வீதியும் ஒன்றுதான் அவருக்கு.
கையில் ஒரு பிளாஸ்டிக் ஜக்குடன் வந்தவர், மீண்டும் பொதுக்குழாயில் தண்ணீர் பிடித்து, பல் தேய்த்துவிட்டு, காலையில் அவர் மாமியார் வாங்கி வைத்த இட்லியையும் மிச்சம் இருத்த சாம்பார், சட்னியையும் ஒன்றாகக் கலந்து, ஐந்து விரல்களும் உள்ளங்கையையும் சேர்த்துப் பிசைந்து வேக வேகமாக உண்பார்.
மறுபடியும் கடையின் முன் அமர்ந்துகொண்டு யாராவது கிடைப்பார்களா என்று பார்ப்பார். இவருக்காகவே ஒருவர் வருகிறார்.
“யக்கா, காவேரி யக்கா இங்க வாயேன்.”
“இன்னாடி இன்னிக்கு ஒனக்கு எவளுமே சிக்கலயா, கடைக்குப் போறவள வம்புக்கு இழுக்குற?”
“ஐய, இன்னா யக்கா இப்புடிப் பேசுற, பாப்பாவுக்கு யதாச்சு மாப்புள்ளவூடு வந்துச்சான்னு கேட்க கூப்பிட்டேன்.”
“எங்கடி அந்த மாரியாத்தா கண்ண தொறக்குறா?”
“யக்கா, நாளைக்கு செவ்வாகிழம. புள்ளைய துர்காவுக்கு ஏழுவாரம் விளக்குப் போடச் சொல்லு, மாப்புள்ள தேடி வருவான், இந்தா சாமந்தி பூ வாங்கிகுனு போ” என்று பேசிக்கொண்டே பூவை விற்றுவிட்டார். அவரும் தன் பெண்ணுக்கும் சேர்த்துக் கனகாம்பரத்தையும் வாங்கிச் சென்றார்.
படிப்பு இல்லை என்றாலும் தன் கைகள் மேல் உள்ள நம்பிக்கையில் வாழ்கிறார். பூ விற்கும் காசில்தான் குடும்பத்தைக் கௌரவமாக நடத்துகிறார். இன்று படித்த பெண்களிடம்கூட இந்த நம்பிக்கை இருப்பதில்லை.
சூரியன் நடுவானுக்கு வந்துவிட்டது. கடையைக் கட்டி வைத்துவிட்டு, பூக்கூடையைத் தூக்கி இடுப்பில் வைத்துக் கொண்டு ஒடினார். பூக்கடைக்குச் செல்லும் பேருந்து வந்ததும், படிக்கட்டுக்குப் பக்கத்தில் உள்ள இருக்கையில் அமர்ந்துகொண்டு, “யண்ணா, ஒரு டிக்கட்டு கொடுணா” என்றார். பூக்கடை வரும்வரை அவருக்கான நேரம் இது. வேடிக்கையும் சிரிப்பும் கேலியுமாகச் செல்வார்.
மூன்று மணிக்கு வீட்டுக்கு வந்ததும் மதிய உணவு, பிறகு துவைப்பது, தேய்ப்பது, சமைப்பது, குளிப்பது என்று பல வேலைகள். மாலை வந்ததும், சேலையைத் தூக்கி இடுப்பில் சொருகிக்கொண்டு, அவர் முழங்கையைவிடக் குள்ளமான துடைப்பம் கொண்டு தெருவைப் பெருக்கிச் சுத்தம் செய்து, கடையை விரிப்பார்.
இங்கு சில உறவுகள் பழக்கத்தினால் வந்த உறவுகளாக இருக்கும். இரண்டு, மூன்று தலைமுறைகளாகச் சேர்ந்து வாழ்பவர்கள் வயதுக்கு ஏற்ப உறவுமுறை சொல்லி அழைப்பர். யம்மா, யப்பா, யக்கா, யண்ணா, மாமா, அத்த என்று எல்லாம் உறவுதான். அப்படிப்பட்ட உறவுமுறை அண்ணி ஒருவர் வருவதைப் பார்த்துவிட்டார்.
“அண்ணி , உன்னதான் ஐயயய (ஐயயய என்று சொல்லும் போது, முகத்தை ஒருபுறம் இழுத்து, சுளித்து, கீழ் உதடு இடப்பக்கத் தாடையைத் தொடும் அளவு இழுப்பார்.) வாயே அண்ணி.”
“இண்ணாடி வேணும் உனக்கு?”
“ஐய சும்மா வாயே இங்க. வந்து காப்பி குடிச்சிட்டுப் போ. எப்படி இருக்கா உன் மருமவ மகாராணி?”
“அவளுக்கு என்னடியம்மா கொற மகாராணிதான் அவ, என் பொழப்புதான் நாய் பொழப்பு.” பேசிக்கொண்டே ஒரு தட்டில் இரண்டு மீன் துண்டுகளை வைத்து அண்ணியை வலுக்கட்டாயமாகச் சாப்பிட வைத்து அனுப்புவார். அவரும் தன் மருமகளுக்குப் பிடிக்கும் என்று ஜாதிமல்லியை இரண்டு முழம் வாங்கிச் செல்வார். பணம் இல்லை என்றாலும் உறவுகளைக் காக்கும் வித்தை இவர்களுக்கு ரத்தத்தில் கலந்த ஒன்று.
இரவு எட்டு மணிக்குக் கடையை அடைத்துவிட்டு, வீட்டிற்குள் நுழைவார். வீட்டில் உள்ள வேலைகளை முடித்துவிட்டு, மீதம் உள்ள பூக்களை ஈரத்துணிக்கொண்டு பக்குவமாக மூடி வைப்பார். அதில் இருந்து கணவருக்குப் பிடித்த ஒரு ரோஜாவைத் தன் கொண்டை இடுக்கில் சொருகிக்கொள்வார். அவர் வரும் வரை குழந்தைகளுடன் வீதியில் அமர்ந்து மழலைகளின் சொர்க்கத்தில் அவரும் கரைந்து போவார்.
டாஸ்மாக்கை விட்டு வர விருப்பம் இல்லாமல் ஆடிக்கொண்டே வீடு வருபவர் முதலில் சிரிப்பார். பிறகு அடி, உதை, சண்டை என்று இரவு பதினோரு மணிவரை தொடரும்.
மீண்டும் காலையில் எழுமணிக்குக் கடையை விரித்து விடுவார். “ஏண்டி லட்சுமி, முல்லப் பூ கேப்ப… உனக்காகத் தான் இத வாங்கிவந்தேன், நீ வாங்காம போற” என்று வியாபாரத்தைத் தொடங்கிவிட்டார்.
அவரின் பெரும் கவலை ஒன்றுதான், மிச்சமான பூவை வைத்து அழகு பார்க்கத் தனக்கு ஒரு பெண் குழந்தை இல்லையே என்று!
(தொடரும்)
படைப்பாளர்:
எம்.கே. வனிதா. உயிர்வேதியியல் துறையில் முனைவர் பட்டம் பெற்றவர். பல ஆராய்ச்சிக் கட்டுரைகளை வெளியிட்டுள்ளார். தமிழில் முதுகலைப் பட்டம் பெற்றிருக்கிறார். தனியார் கல்லூரியில் உதவி பேராசிரியராகப் பணியாற்றியிருக்கிறார். பட்டிமன்றங்களிலும் பேசி வருகிறார்.