எதையும் நாளைக்கு நாளைக்கு என்று தள்ளிப் போடுவான், போடுவாள், என் நண்பன், தோழி சரியான சோம்பேறி என்று யாரைப் பற்றியாவது சொன்னதுண்டா?

இதெல்லாம் ஒரு வேலையா, சுலபமா முடிச்சிடுவேன் என்று நீங்களோ உங்கள் வட்டத்தில் உள்ளவர்களோ வேலையைத் தள்ளி போட்டதுண்டா ?

நாம் இது போன்ற மக்களைச் சோம்பேறித்தனமானவர்கள் என்று சுலபமாகக் கடந்து போகிறோம். என்ன செய்ய வேண்டும் என்று தெளிவாகத் தெரிந்தும், அதைத் தவிர மற்றவற்றைச் செய்வது சோம்பேறித்தனமல்ல.

எதையுமே செய்யப் பிடிக்காதவர்கள்தாம் சோம்பேறிகள். ஆனால், இன்னொரு வகை மக்கள் பிடித்த வேலையை விரைவாகச் செய்வார்கள், பிடிக்காததை, ஏதோ ஒரு வகையில் மனதுக்கு ஒவ்வாததை அல்லது தனக்குத் தெரியாததைத் தள்ளிப் போடுவார்கள். அந்த நேரத்தின் மன நிலையும் வேலையைத் தள்ளிப்போட காரணமாகும். இதைத் தவிர தன் திறமையின் மீதுள்ள அதீத நம்பிக்கை காரணமாக எல்லாம் பார்த்துக்கொள்ளலாம் என்று தள்ளிப் போடுவார்கள். இது நமது மனநிலை சம்பந்தபட்ட ஒரு சவால். உதாரணத்திற்கு ஒருவருக்கு உடற்பயிற்சி செய்யப் பிடிக்காது, ஆனாலும் மருத்துவரும் அவரது மருத்துவ அறிக்கையும் உடற்பயிற்சி அவசியம் என்கிறது. செய்ய வேண்டுமெனத் தெரியும் ஆனாலும் அடுத்த மாதத்தில் இருந்து அல்லது புது வருடத்தில் இருந்து ஆரம்பிப்போம் எனத் தனக்குதானே காரணம் சொல்லிக்கொள்வார்.

ஏதோ ஒரு பணி நமக்கு விரும்பாத / மறக்க விரும்பும் நிகழ்வையோ / உணர்வையோ நினைவுக்குக் கொண்டு வரலாம். அது எவ்வளவு முக்கியமான வேலையாக இருந்தாலும் மனம் முரண்டு பிடிக்கும். அதே நாம் மற்ற வேலைகளைத் திறம்படவும் குறித்த நேரத்திலும் செய்திருப்போம்.

இது ஒரு விதமான மனநிலை, பல வாய்ப்புகளைப் பறிக்கக்கூடிய, முன்னேற்றத்தைத் தடுக்கக்கூடிய மனநிலை.

அந்த வேலை எவ்வளவு முக்கியம் என நமக்குத் தெரியும், அதைச் சரியாகச் செய்து முடிக்க வேண்டிய அவசியமும் புரியும். ஆனாலும் அதற்குரிய நேரத்தைத் தராமல், அதில் ஈடுபாடு இல்லாமல் அவசரமாகக் கடைசி நிமிடத்தில் செய்வதனால் அதன் தரம் எதிர்பார்த்தபடி அமைவதில்லை, நம்மைப் பற்றியும் ஒரு தவறான எண்ணம் மற்றவருக்கு, ஏன் நமக்கே தோன்றும். இந்தத் தள்ளிப் போடும் பழக்கம் நம்மை அறியாமலேயே கவலை, மன அழுத்தத்தைத் தோற்றுவிக்கும். நமது சுய மதிப்பீட்டைக் குறைக்கும். உடல் நலம் சார்ந்த பிரச்னைகளையும் உருவாக்கும்.

ஆனால், யாரோ ஒருவர் எங்கோ ஒருவர் அப்படி என்று இதைக் கடந்து போக முடியாது. நாம் ஒவ்வொருவரும் ஏதோ ஒரு வேலையிலோ அல்லது ஒரு நேரத்திலோ அப்படி நடக்கிறோம், நம்மை அறியாமலேயே. இதை எப்படி எதிர்கொள்வது ?

  1. முதலில் இதற்காக நம்மை நாம் பரிவோடு அணுக வேண்டும். இது ஒரு பொதுவான சவால், எனக்கு மட்டுமல்ல என்று நினைக்க வேண்டும்.
  2. நான் இந்தச் சவாலை எதிர்கொண்டு வெற்றி கொள்வேன் என்கிற நேர்மறை எண்ணத்தோடு எதிர்கொள்ள வேண்டும்.
  3. உங்களைப் புரிந்துகொள்ள முயலுங்கள், எதற்காகத் தள்ளிப் போடுகிறீர்கள் என்பதைத் தெளிவாகத் தெரிந்து கொள்ளுங்கள். (தன்னை அறிதல்) பிரச்னையின் ஆணி வேரைப் புரிந்த பின் கையாளுவது சுலபம்.

ஒரு வேளை

3.1 குறிப்பிட்ட அந்த வேலை உங்கள் மன, உடல் நலனுக்கு ஊறு விளைவிக்கும் என்றால் அந்த வேலையைச் செய்யப் போவதில்லை என முடிவெடுத்துவிடலாம்.

3.2 உங்களின் வாழ்வு முறையில் உள்ள அதிருப்தி இந்தத் தள்ளி போடுதலுக்குக் காரணமாக இருக்கலாம். அப்போது நமது தினசரி வாழ்வில் தேவையான மாற்றங்களைக் கொண்டு வரலாம்.

3.3 அது ஒரு கடினமான வேலை, நம் சக்திக்கு மீறியது என்பது மனதில் பதிந்து அதன் காரணமாக நம் மனம் செய்ய விடாமல் முரண்டு பிடிக்கலாம். அப்போது நேர்மறையான உறுதிமொழிகளை ( positive affirmations ) தினமும் சொல்லி / கேட்டு நம்மால் முடியும் என்கிற நம்பிக்கையை மனதில் பதிய வைக்கலாம். அதோடு வேலையைச் சிறு சிறு பகுதிகளாகப் பிரித்து செய்யும்போது ஒவ்வொரு பகுதி முடியும் போதும் நம் தன்நம்பிக்கை அதிகரிக்கும்.

3.4 இது எனக்கு மிகவும் சுலபம், இதெல்லாம் ஐந்து நிமிடம் போதும் என்கிற எண்ணம் காரணம் என்றால், அந்த ஐந்து நிமிடத்தை இப்பொழுதே தந்துவிடுங்கள், நிஜமாகவே ஐந்து நிமிடம் போதுமா இல்லையா என்பது தெளிவாகிவிடும்.

3.5 ஒரு சிலருக்கு எப்போதோ நேர்ந்த கசப்பான அனுபவமோ, வலி மிகுந்த தோல்வியோ மனதில் ஆழமாகத் தங்கி சில வேலைகள் தன்னால் முடியாதென முடிவு செய்து விடுவோம். யானையைச் சிறு வயதில் சங்கிலியால் கட்டுவது போலதான். பிற்காலத்தில் போதிய பலம் பெற்ற பின்பும் சங்கிலியை உடைக்கும் எண்ணம் யானைக்குத் தோன்றாது. இதற்கான தீர்வு நமது ஆழமான எதிர்மறை நம்பிக்கைகளைக் களைவதுதான். Rewiring of Brain, நேர்மறை உறுதி மொழிகள் (Positive affirmations) போன்ற சிறு சிறு மாற்றங்களே போதுமானது.

  1. 15 நிமிட சவால்.

நாம் வெகு நாளாகத் தள்ளிப் போடும் ஒரு செயலில் 15 நிமிடங்கள் வேலை செய்வது என்று தீர்மானித்து ஆரம்பிக்கலாம். நமக்கே அந்தச் செயலில் ஓர் ஆர்வம் வர வாய்ப்புண்டு, இல்லையெனில் நிறுத்திவிட்டுச் சிறிது நேரம் கழித்து தொடரலாம்.

  1. பணியிடத்தில் உங்களின் ரசனைக்கேற்ப சில மாற்றங்களைக் கொண்டுவருவதால், மனதிலும் மாற்றம் வரும்.
  2. எப்போதும் கடினமான வேலையை முதலில் செய்ய பழகலாம்.
  3. நீங்கள் செய்ய வேண்டிய வேலைகளை இன்றைய பணிகள் என்று பட்டியலிட்டு (to do list) ஒவ்வொன்றாக முடிக்க மேலும் செய்ய உற்சாகம் வரும். அதை நம்பிக்கைக்குரிய நண்பரிடமோ இணையிடமோ மேலாளரிடமோ பகிரும்போது, நாம் முடித்தாக வேண்டிய அழுத்தத்தை உருவாக்கலாம். உற்சாகப்படுத்திக் கொள்வதா இல்லை அழுத்தம் கொடுப்பதா என்பது உங்கள் முடிவு.
  4. அனைவருக்கும் உள்ள ஒரு சவால் கவனச் சிதறல், ஐந்து நிமிடம் மட்டும் என ஆரம்பிக்கும் தொலைக்காட்சி / கைபேசி நேரம் பல மணி நேரத்தையும் கடக்கும் சில நேரம். இதுபோல ஒவ்வொருவருக்கும் வேறு விதமான கவனச் சிதறல்கள் ஏற்படலாம். நம்மை நாமே கண்காணித்துக் கொள்ள வேண்டும். அவ்வப்போது ஓர் அரை மணிக்கோர் அலாரம் வைத்துக்கொண்டு, நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்று கண்காணியுங்கள்.
  5. தள்ளிப் போடும் பழக்கம் உள்ளவர்களிடம் உள்ள பொதுவான பழக்கம், அதிகமான நேரம் ஒரே இடத்தில் இருப்பது. அவ்வப்போது உடலியக்கத்தை அதிகப் படுத்துவதும் ஒரு நல்ல தீர்வாகும்.

நம்மை நாம் அறிந்துகொண்டு லட்சியத்தை நோக்கி நடை போடும்போது இந்தத் தள்ளிப் போடும் பழக்கத்தினால் வெற்றி தள்ளி போகலாமா?

வாருங்கள் சரியானதை, சரியாக, சரியான நேரத்தில் செய்வோம்.

(தொடரும்)

படைப்பாளர்:

யாமினி

வாழ்க்கைக் கல்வி மற்றும் மென்திறன் பயிற்சியாளர், இயற்கை விரும்பி, நெகிழி ஒழிப்பு ஆர்வலர், திடக் கழிவு மேலாண்மை பயிற்சியாளர். பயிலரங்குகள் நடத்துகிறார். உறவு மேலாண்மை தனிபட்ட ஆலோசகர். குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு விழிப்புணர்வை உருவாக்குவதின் மூலமே நாட்டின் நலம், இயற்கை வளம், சரிவிகித சமுதாயத்தை அடைய முடியுமென்று தீவிர நம்பிக்கை உள்ளவர். எல்லாச் சூழ்நிலைகளிலும் வாழ்தலைக் கொண்டாடுபவர்.