எல்லைக் கோடு (Setting Boundaries). இந்தச் சொற்றொடர் சமீபமாகப் பல முறை காதில் விழுகிறது. ஏன் ஓர் எல்லைக்கோடு தேவைப்படுகிறது?

நமக்கு முந்தைய தலைமுறை இதையெல்லாம் தெரிந்து கொண்டா வாழ்ந்தார்கள்? சந்தோஷமாக வாழவில்லையா எனக் கேட்டால், நிச்சயம் வாழ்ந்தார்கள். ஆனால், மகிழ்ச்சி நிறைந்த வாழ்க்கையா என உங்கள் அம்மா, பாட்டிகளுடன் உரையாடி தெரிந்துகொள்ளலாம்.

ஆண்களிடம் இந்த எல்லைக்கு வெளியே நின்றே பழகும் இந்தச் சமூகம், பெண்களுக்கு அப்படி ஒரு வாய்ப்பைத் தருவதில்லை. இதில் விதிவிலக்குகளும் உண்டு.

பெண்களுக்கும் அப்படி ஒரு தேவை இருந்திருக்கவில்லை. நல்ல கணவர் (கொஞ்சம் அப்படி இப்படி இருந்தாலும் கல்லானாலும் கணவர் போன்ற பழமொழிகள் மனதைத் தேற்றிவிடும்), அன்பு பிள்ளைகள், புகுந்த வீட்டில் நல்ல பெயர், பிறந்த வீட்டின் பெருமை குலையாமல் வாழ்ந்தது என அதிலேயே தன்நிறைவடைய மூளைச்சலவை செய்யப்பட்டதால் குறை என்று ஏதும் இருக்கவில்லை.

ஆனாலும் வாழ்ந்து முடிக்கப் போகும் வேளையில் நிதானமாக வாழ்ந்த விதத்தை நினைத்தால், நம் முடிவுகளை நாம் எடுத்ததே இல்லை, நமக்கான தேர்வும் இருந்ததில்லை எனப் புரியும்போது அது தரும் வலியும் கோபமும் இன்றைய மகளிரின் சுதந்திரமும் (கொஞ்சம்தான் என்றாலும்) உறுத்துகிறது.

இதனாலேயே பலப் பெண்களே அடுத்த தலைமுறை பெண்களுக்கு எதிரியாகிறார்கள். மன நிறைவின்றி வாழ்ந்து முடிப்பதைவிட வாழும் போதே நம் வாழ்க்கையைக் கையிலெடுப்பதுதானே புத்திசாலித்தனம்?

எல்லைக்கோடென்பது கண்ணுக்குத் தெரியாத, கருத்தால் மட்டுமே உணரக்கூடிய எல்லை. எந்த அளவுக்கு மற்றவர் உங்கள் வாழ்வில் தலையிடலாம், கருத்துச் சொல்லலாம், கேள்வி கேட்கலாம் என்ற எல்லை.

இது ஒவ்வோர் உறவுக்கும் நட்புக்கும் மாறுபடும் ஆனாலும் நமக்கென ஓர் எல்லை இருக்கிறதெனத் தெளிவுடன் நம்மைச் சுற்றி உள்ளவர்கள் நடந்துகொள்ளும்போது, நாம் நம் வாழ்க்கையை நம் போக்கில் வாழ இயலும், எந்த உறவுச்சிக்கலும் எழாது.

அது எவ்வளவு நெருக்கமான உறவோ நட்போ அந்த எல்லையை மதிக்கும் போது, உறவு இனிமையாகவும் பலமாகவும் உருவாகிறது. இதற்கு முதலில் நம்மை நாம் அறிந்திருக்க வேண்டும், எத்தனை தூரம் மற்றவர் தலையீட்டை அனுமதிக்கலாம், யாரை எங்கே நிறுத்துவது நம் மன நிம்மதிக்கு நல்லது என்கிற தெளிவு தேவை. சில நேரம் இந்த எல்லையின் காரணமாகச் சில உறவை, நட்பை இழக்க நேரலாம். தன் சுய நேசமும் மதிப்பீடும் நன்றாக உள்ள ஒருவர் அதற்கஞ்சுவதில்லை. மாறாக ஆரோக்கியமில்லாத உறவோ நட்போ தொடராதது பற்றி நிம்மதியே அடைவர். ஆரோக்கியமான உறவுக்கு ஆரோக்கியமான எல்லையும் அதைத் தெளிவாக எடுத்தியம்பும் தைரியமும் அவசியம்.

ஆரோக்கியமான எல்லைக்கோடென்பது உங்கள் உடல், நேரம், உணர்வுகள், தனிப்பட்ட உரிமைகள், பாலியல் தேர்வு / உரிமை, மத, இன நம்பிக்கை / தேர்வு, ஒழுக்கம் சார்ந்த நெறிமுறைகள், நிதி மற்றும் அனைத்து உடைமைகள் ஆகியவற்றில் மற்றவரின் எல்லை எதுவென்பதை நீங்கள் முதலில் உணர்தல், பின் அதைச் சம்பந்தப்பட்ட நபரிடம் எடுத்துரைத்தல்.

நம்மோடு இருக்கும் நபருக்கு அவருக்கான எல்லை புரியும் போது, அதை மீற முயற்சி செய்ய மாட்டார். ஒரு வேளை தவறி செய்தாலும் அதைத் திருத்திக் கொள்ளவே முயல்வர். அதை விடுத்து எனக்கு உன்னிடம் இல்லாத உரிமையா என அதை மீறும் போது ஒன்று அவருக்குப் புரியும் வரை விளக்கலாம் அல்லது ஆரோக்கியமில்லாத உறவில் இருந்து விடுபடலாம்.

எல்லைக்கோட்டை நிர்ணயிப்பது, எதை அனுமதிப்பது எதை மறுப்பதென்ற முடிவு நமதாகிறது. இதெல்லாம் புரிந்தாலும், நடைமுறைப்படுத்துவது எளிதல்ல, அதுவும் பெண்களுக்கு. காலம் காலமாக நமது வாழ்க்கையை முடிவு செய்தே பழகிய சமூகமும் உறவுகளும் அத்தனை எளிதாக இதை அனுமதிக்காது. ஆனால், அது முக்கியமல்ல, நாம் என்ன முடிவு செய்கிறோம் என்பதுதான் முக்கியம்.

ஜீ தொலைக்காட்சியின் ‘அயலி ‘ ஒரு நல்ல உதாரணம். ஊரின் கட்டுப்பாட்டில் இருந்து விடுபட்டுத் தன் சிறகுகளை விரிக்க ஆசைப்படும் சிறுமி, தன் உடல், கனவு, செயல்பாடுகளில் எவ்வளவு மற்றவரை அனுதிக்கலாம், தன் தாய் உட்பட என்ற தெளிவோடு தன் லட்சியத்தை நோக்கி செல்கிறாள். முதலில் அதை எதிர்த்தாலும் போகப் போக மற்றவர்கள் புரிந்துகொண்டனர். ஒரு வேளை புரிந்து கொள்ளாவிட்டாலும் அவள் உறுதியோடுதான் இருந்திருப்பாள். காரணம், அவள் கனவின் மேலிருந்த காதல். தன் மேல் இருந்த நம்பிக்கை.

அதே நம்பிக்கையோடும் காதலோடும் நம் வாழ்க்கையை கையிலெடுப்போம் வாருங்கள் தோழிகளே!

(தொடரும்)

படைப்பாளர்:

யாமினி

வாழ்க்கைக் கல்வி மற்றும் மென்திறன் பயிற்சியாளர், இயற்கை விரும்பி, நெகிழி ஒழிப்பு ஆர்வலர், திடக் கழிவு மேலாண்மை பயிற்சியாளர். பயிலரங்குகள் நடத்துகிறார். உறவு மேலாண்மை தனிபட்ட ஆலோசகர். குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு விழிப்புணர்வை உருவாக்குவதின் மூலமே நாட்டின் நலம், இயற்கை வளம், சரிவிகித சமுதாயத்தை அடைய முடியுமென்று தீவிர நம்பிக்கை உள்ளவர். எல்லாச் சூழ்நிலைகளிலும் வாழ்தலைக் கொண்டாடுபவர்.