உலகத்தோடு உறவாடலாம் (Interpersonal relationship)

நம் வாழ்க்கை அழகாவதும் அர்த்தமுள்ளதாவதும் நாம் கொண்ட வெற்றிகளாலோ இல்லை சேர்த்த செல்வ வளங்களாலோ இல்லை. நாம் சேர்த்த, நம்மைக் கொண்டாடும் உறவுகள் அமைய பெறும்போதுதான் அழகும் அர்த்தமும் கூடுகிறது.

நாம் பிறந்ததில் இருந்து கடைசி மூச்சு வரை, நம் வாழ்வு உறவுகளாலும், நண்பர்களாலும் நிரம்பி இருக்கிறது. தனிபட்ட வாழ்விலும் பணி இடங்களிலும் நாம் எவ்வாறு உறவாடுகிறோம் என்பதைப் பொறுத்தே வெற்றி, நிம்மதி, மகிழ்ச்சியை அடைய முடியும். பணி தொடர்பான உறவுகள் அந்தப் பணி இடத்தோடு முடியும், ஆனால் தனிப்பட்ட உறவுகள் அப்படி அல்ல.

ஒவ்வோர் உறவும் வாழ்வின் பாதையில் குறிப்பிட்ட தூரம் வரை தொடர்ந்து வருகிறது. சில உறவுகள் கடைசி வரை, சில பாதி தூரம் வரை, எப்படியாயினும் நமக்கு அது சுமுகமான உறவாக இருக்கும் போது, அது தொடராத போதிலும், மனதில் அந்த இனிமை மட்டுமே இருக்கும்.

நம் வாழ்வின் இனிமைக்கு சுமுகமான உறவுகள் அவசியம். சில உறவுகள் தூரம் காரணமாக ஏற்படும் இடைவெளியால் விலகும். அது இயற்கையாக நிகழ்வதால் நமக்கு எந்த மன வருத்தமும் இருப்பதில்லை, மாறாக நினைக்கும் போது இனிமை மட்டுமே.

சில உறவுகளில் மன பேதங்களால் பிரிவு ஏற்படும். ஆனாலும் நன்கு பழகிய காலத்தை மனதில் நிறுத்தி உராய்வு இல்லாமல் சுமுகமாக நிகழும்போது அது மகிழ்ச்சியைத் தராவிடினும் வலியைத் தராது.

சில உறவுகள் கருத்து வேறுபாடு, மன பேதம், சில நேரம் சண்டையில் முடிந்து பிரிவு ஏற்படும். இது காலத்திற்கும் வலி, வெறுப்போடு நெஞ்சில் நிலைக்கும். இந்த வெறுப்பு புதிதாக அமையும் உறவிலும் எதிரொளிக்கும். ஆறாத காயங்கள் நமக்கு மறுபடியும் அதே உணர்வுகளையே ஈர்த்து வரும். பலன் நமக்கு எவரோடும் இனிமையான உறவு அமைவதில்லை. அமைந்தாலும் நம் மனம் நம்ப மறுக்கும். விளைவு மன உளைச்சல், நிம்மதியின்மை.

நம் வாழ்வு முழுவதும் மகிழ்ச்சி நிரம்பி இருக்க, நல்ல உணர்வுகளால் சூழ்ந்திருக்க நமக்கு ஒவ்வோர் உறவும், அது தரும் அனுபவமும் உணர்வும் நன்றாக இருக்க வேண்டியது முக்கியம்.

இங்கு நாம் கற்க வேண்டியது:

  1. மகிழ்ச்சிகரமான உறவை எப்படி ஏற்படுத்துவது?
  2. அந்த உறவை எப்படித் தக்க வைப்பது?
  3. ஒரு வேளை பிரிவு மட்டுமே சரியான தீர்வாக இருக்கும் பட்சத்தில், அதை எப்படி நேர்மறையாகச் செயல்படுத்துவது ?
  4. வாழ்க்கையில் எப்போதும் நாம் மட்டுமே நம்மோடு முழுதாகப் பயணிப்போம். மற்ற அனைவரும் ஓர் எல்லை வரையே.

மகிழ்ச்சியான உறவென்பது இரு பக்கமும் முயன்று விருப்பமுடன் வென்றெடுக்க வேண்டிய ஒன்று. ஒருவர் மட்டுமே விரும்பும் விஷயமல்ல.

சிறப்பான உறவமைவதற்குச் சில திறன்கள் நமக்குத் தேவை.

  1. நமக்கு நம்மைத் தெரிந்திருக்க வேண்டும் (தன்னை அறிதல்). உறவில் நமக்கான தேவை புரிந்தால்தான் நீண்ட காலம் நிலைத்திருக்கக்கூடிய ஒன்றைத் தேர்ந்தெடுக்கவோ உருவாக்கவோ தக்க வைக்கவோ முடியும்.
  2. அதே நேரம் நமக்கு அடுத்தவரின் நிலையில் இருந்து உணரவும் தெரிந்திருக்க வேண்டும்.

நம்மைச் சரியாக அறியாமல் இன்னொருவரை நண்பராகவோ துணைவராகவோ அல்லது மனதுக்குகந்த உறவாகவோ தேர்ந்தெடுத்தால், நமது தேவைகளைப் பற்றிய தெளிவில்லாததால் அது பொதுவாகக் கிடைப்பதில்லை. எப்போதும் அடுத்தவரின் வசதியை மட்டும் யோசிக்கும் போது நம்மை மீறிய ஒரு சலிப்பு உண்டாகும். நீண்ட காலம் உறவு தொடர இந்தச் சலிப்பு தடையாகும்.

நம்மை நன்கறிந்து, அடுத்தவரை அறியாது போனாலும் அவருக்குச் சலிப்பு ஏற்படும்.

உறவு செழிக்க நம்மை நன்கறிய வேண்டும், அடுத்தவரையும் புரிந்து கொள்ளும் திறன் வேண்டும்.

  1. தன் தேவையை உணர்வது எத்தனை முக்கியமோ அத்தனை முக்கியம் அதைச் சரியாக வெளிப்படுத்துவது.
  2. எப்போதெல்லாம் No சொல்ல வேண்டுமோ அதற்காக எந்த வருத்தமும் தயக்கமும் இன்றி சொல்லத் தெரிய வேண்டும்.

எது ஆரோக்கியமான உறவென்பதை எப்படிக் கண்டறிவது?

  1. யாரோடு இருக்கும் போது நீங்கள் நீங்களாக இருக்க முடிகிறதோ…
  2. யாரிடம் நீங்கள் நினைப்பதை எந்தத் தயக்கமும் இன்றி பேச முடியுமோ…
  3. யாருடன் இருக்கும் போது சௌகரியமாக உணர்கிறீரகளோ…
  4. யார் உங்களின் உணர்வுகளை மதித்து, அவர்களின் எல்லையை மதித்து, உங்களின் மறுப்பைக்கூடப் புரிந்து கொள்கிறார்களோ…

அவர்கள் நிச்சயம் ஆரோக்கியமான உறவு தான்

அடுத்த அத்தியாயத்தில் உறவைத் தக்க வைப்பதில் ஆரோக்கியமான அணுகுமுறை, உறவு சிக்கல்களைக் கையாளுதல், விலகுதல் என முடிவெடுக்கும் பட்சத்தில் அதையும் ஆரோக்கியமாக எப்படிக் கையாளுவது எனப் பார்ப்போம்.

(தொடரும்)

படைப்பாளர்:

யாமினி

வாழ்க்கைக் கல்வி மற்றும் மென்திறன் பயிற்சியாளர், இயற்கை விரும்பி, நெகிழி ஒழிப்பு ஆர்வலர், திடக் கழிவு மேலாண்மை பயிற்சியாளர். பயிலரங்குகள் நடத்துகிறார். உறவு மேலாண்மை தனிபட்ட ஆலோசகர். குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு விழிப்புணர்வை உருவாக்குவதின் மூலமே நாட்டின் நலம், இயற்கை வளம், சரிவிகித சமுதாயத்தை அடைய முடியுமென்று தீவிர நம்பிக்கை உள்ளவர். எல்லாச் சூழ்நிலைகளிலும் வாழ்தலைக் கொண்டாடுபவர்