சமீபமாக முகநூலில் பேசுபொருளாகியிருக்கிறார் ஓர் இளம் தாய். அவரது குழந்தையுடன் பூ வாங்கிக் கொண்டிருக்கும் போது அந்தப் பூக்காரப் பெண் அந்தக் குழந்தையின் கன்னத்தைப் பிடித்து லேசாகக் கிள்ளிவிட்டாராம். அதற்கு body boundary என்றெல்லாம் எல்லைகள், கோட்பாடுகள் வகுக்கிறார். அவருக்கு ஆதரவாகச் சிலர், எதிராகப் பலர் களத்தில் இறங்கியுள்ளனர். நான் கவலைப்படுவதெல்லாம் குழந்தைமையைத் தொலைத்துக் கொண்டிருக்கும் அந்தக் குழந்தைக்காகத்தான்.

ஒரு சின்னக் குழந்தையைப் பார்க்கும் யாருக்குமே அதன் கன்னத்தை லேசாக நிமிண்டவே தோன்றும். அது அழகாக இருக்கிறதா, இல்லையா என்பதெல்லாம் இரண்டாம் பட்சம்தான். குழந்தைகள் எதையுமே அதிகமாகவே சொல்வார்கள். அது அவர்களின் இயல்பு. ஒரு சின்ன காயத்துக்கு அதீதமாக உணர்ச்சியை வெளிப்படுத்துவார்கள். அதுவே பெரிய காயமென்றால் அம்மாவுக்குத் தெரியக் கூடாது என்று மறைக்கவும் முயல்வார்கள். அதைப் பற்றி பெற்றோருக்குத்தான் முழுக்கத் தெரியும். தெரியவும் வேண்டும். ஒவ்வோர் உடலுக்கும் எல்லை உண்டு. அதை மீறும் உரிமை யாருக்கும் கிடையாது. நாம் அனுமதிக்காமல் நம்மை யாரும் தொடக் கூடாது என்று அந்த இளம் தாய் கூறுகிறார். அப்போது அந்தச் சிறுமி, “இதை ஏன் அவர்கள் பெரியவர்களிடம் செய்ய மாட்டேங்கிறார்கள்?” என்று தாயிடம் கேட்கிறார். அதற்கு அவர், “எனக்குத் தெரியாது” என்கிறார். உடனே அந்தச் சிறுமி தான் குட்டியாக கியூட்டாக இருப்பதால்தான் அந்தப் பாட்டி தன்னுடைய கன்னத்தைப் பிடித்துக் கிள்ளியிருக்கலாம் என்கிறார். ஆனால் தாயாரோ, “ஒரு வேளை குழந்தைகள் வாயைத் திறந்து என்னைக் கிள்ளாதீர்கள், எனக்குப் பிடிக்காது என்று சொல்லமாட்டார்கள் என்பதாலோ என்னவோ குழந்தைகளைக் கிள்ளுகிறார்கள்” என்கிறார். இன்றைய குழந்தைகள் எதுவானாலும் பளிச்சென்று சொல்லிவிடுவார்கள்.

குழந்தைகளைத் தொடும் முன்னர் பெற்றோர் அனுமதி கேட்க வேண்டும் என்று சொல்கிறார். ஒரு குழந்தையைப் பார்த்ததும் இயல்பாக அதைக் கொஞ்சத் தோன்றும். அம்மாவிடம், “உங்க பாப்பா கன்னத்தைக் கொஞ்சம் கிள்ளிக் கொள்ளட்டுமா?” என்று மனுப் போட்டு அனுமதி கிடைத்தபின் கிள்ளினால் உண்மையில் அதில் எந்த உயிர்ப்பும் இருக்காது என்பதுதான் உண்மை. ஏழெட்டுப் பிள்ளைகள் பெற்று வளர்த்தபோதுகூட அந்தக் காலப் பெற்றவர்கள் அவ்வளவு மெனக்கெடவில்லை. பெற்றார்கள். குழந்தைகள் அவர்களாகவே வளர்ந்தார்கள். ஆனால், ஒற்றைக் குழந்தை வைத்திருக்கும் இந்தக் காலத்தில் உலகத்தில் உள்ள எல்லாவற்றையும் தன் குழந்தைக்கு அளித்துவிட வேண்டும் என்று இன்றைய பெற்றோர் பதறுகிறார்கள்.

குழந்தைகளை அடிக்கக் கூடாது என்று சொல்வதில் மாற்றுக் கருத்து கிடையாது. ஆனாலும் சில விஷயங்களை லேசான கண்டிப்புடன் சொல்லும் போதுதான் அது அழுத்தமாகப் பதியும். ஏனெனில் இன்றைய குழந்தைகள் தங்கள் குழந்தைமையை வெகு வேகமாகத் தொலைத்து வருகிறார்கள். புத்தகத்தில் மயிலிறகை வைத்து அது சாப்பிட இரண்டு, மூன்று அரிசிகளையும் வைத்து அது குட்டி போடும் என்று காத்துக் கிடந்த அந்தக் காலமல்ல இது. கையடக்க செல்போனில் எல்லாமே கண்ணில் விழும் காலத்தில் அல்லவா நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். அப்போதெல்லாம் பெரும்பாலான குழந்தைகள் வெகுளித்தனமாகவே இருந்தனர். ஏதோ ஒன்றிரண்டு குழந்தைகளே வயதுக்கு மீறிய பேச்சுடன் இருந்தனர். அவர்களை ‘வெளைஞ்சதுங்க’ என்கிற ஒற்றை வார்த்தையில் குறிப்பிடுவார்கள். ஆனால், இன்றைய காலகட்டத்தில் எல்லாக் குழந்தைகளுமே வெளைஞ்சதாகவே இருக்கின்றனர். ஒரு நிகழ்ச்சிக்குச் சென்றிருந்த போது எனக்குப் பக்கவாட்டு வரிசையில் கொஞ்ச நாள் முன்பு அறிமுகமான ஒரு பெண், தன் மகளுடன் வந்து அமர்ந்தார். அந்தக் குழந்தைக்கு ஏழெட்டு வயது மதிக்கலாம். அவரைப் பார்த்த நான் சந்தோஷமாகக் கைகாட்டி எனக்கு அருகில் காலியான நாற்காலிகள் இருந்ததால், அங்கு வந்து அமர அழைப்பு விடுத்தேன். அவர் தன் மகளிடம் அனுமதி கேட்க, அந்தச் சிறிய பெண் முகத்தைச் சுளித்துக் கொண்டு ஏதோ சொன்னது. உடனே அந்தப் பெண் தாங்கள் அங்கேயே அமர்ந்து கொள்வதாக சைகை காட்டினார். நான் தலையாட்டினேன். அந்தக் குழந்தை அவ்வாறு நடந்து கொண்டது வெகு நேரத்துக்கு உறுத்தலாகவே இருந்தது. அவர்கள் எங்கு வேண்டுமானாலும் அமர்ந்து கொள்ளலாம். மறுப்பதும் ஏற்றுக்கொள்வதும் அவர்கள் சௌகரியம். ஆனால், அதை அந்தக் குழந்தை வெளிப்படுத்திய விதம்தான் எனக்கு உறுத்தலானது.

அன்பை வெளிப்படுத்தும் விதம் ஆளுக்கு ஆள் வேறுபடும். உண்மையான அன்பு எது, போலி எது என்று இனம் பிரிக்கக் குழந்தைகளுக்குக் கற்றுத் தருவோம். சில தொடுகைகள் உறுத்தும் விதமாகத் தோன்றினால் குழந்தைகளே அதைத் தவிர்க்கும். எல்லாரையும் எல்லாச் சூழ்நிலைகளிலும் சந்தேகித்துக் கொண்டே இருந்தால் மனநிலையில் நிச்சயம் மாற்றங்கள் ஏற்படும். நம்பிக்கை தானே வாழ்க்கை. இந்த உலகத்தில் இன்னும் மனிதமும் அன்பும் முழுக்கச் செத்துவிடவில்லை. செல்லும் வழியெங்கும் அன்பை விதைத்துச் சென்றால், திரும்பி வர நேரிடும் போது அன்பையே அறுவடை செய்யலாம். அந்த இன்ஸ்டாகிராம் தாய் தன் குழந்தைக்கு மனிதர்களின் எதிர்மறைப் பகுதிகளை மட்டுமே சொல்லி வளர்க்கிறார் போலும். மனிதர்களிடம் நேர்மறைப் பகுதிகளும் உண்டு என்பதை முதலில் அவர் கற்றுக்கொள்ள வேண்டும். பின்பு குழந்தைக்குக் கற்பிக்க வேண்டும்.

எழுத்தாளர் லஷ்மி எழுதிய ‘ஒரு காவிரியைப் போல’ நாவலில் வெளிநாட்டிலேயே பிறந்து வளர்ந்த தமிழ் வம்சாவளிப் பெண், தன் உறவினர்களைக் காண தனியே தமிழகம் வருகிறார். சரியான வழிகாட்டுதல் இன்றி அவருக்குக் கசப்பான அனுபவங்கள் ஏற்படுகின்றன. தாய்நாடே இப்படித்தான் என்று மனம் நொந்து ஊருக்குக் கிளம்பும் போது கிடைக்கும் ஒரு நல்ல நட்பால் தாய்நாட்டின் நல்ல பக்கங்களைத் தரிசிக்க நேரிடுகிறது. அப்போது தாய்நாட்டைப் பற்றிய தனது எதிர்மறை எண்ணங்களை அவர் மாற்றிக்கொள்வார். அதுபோல அடித்தட்டு, மேல்தட்டு என்று எல்லா இடங்களிலும் மக்கள் இருவித எண்ணங்கள் நிரம்பப் பெற்றவர்களாகவே இருக்கிறார்கள். நாம் எந்த முகத்தை அவர்களுக்குக் காட்டுகிறோமோ அதையொத்த முகமே நம்மிடமும் காட்டப்படும் என்று நாம் மறக்கக் கூடாது.

அந்தக் குழந்தையின் கன்னத்தைக் கிள்ளிய பெண்மணியின் தோற்றமும் பின்புலமும் பொருளாதாரமும்தான் இங்கு உறுத்தலுக்கு முக்கியக் காரணம் என்று நினைக்கிறேன். அந்தப் பெண்மணியின் சூழல் அவரது அன்பை அப்படித்தான் வெளிப்படுத்தச் சொல்லிக் கொடுத்திருக்கிறது. யாருமில்லாத போது அவர் கிள்ளவில்லையே. பக்கத்தில் அந்தக் குழந்தையின் அம்மாவை வைத்துக் கொண்டு தானே கிள்ளி இல்லை இல்லை நிமிண்டியிருக்கிறார். அதற்குப் பதிலுக்கு ஒரு புன்னகையை அந்தக் குழந்தை அந்தப் பெண்மணியிடம் சிந்தியிருக்கலாம். அல்லது வலித்திருந்தால் “அச்சோ பாட்டி… வலிக்குது” என்று சொல்லியிருந்தால், பாட்டி அப்போதே மன்னிப்பு கேட்டிருக்க நேர்ந்திருக்கும். அதைக் கற்றுக் கொடுக்காமல் எல்லாத் தொடுகைகளையும் ‘இது குட் டச்’ , ‘இது பேட் டச்’ என்று தரம் பிரித்துக் கொண்டே இருந்தால் அன்பை எப்போதுதான் எப்படித்தான் உணர்வது? படிக்காத எளிய மனிதர்கள் வெள்ளந்தித் தனமாகச் செய்ததை இப்படிப் பேசு பொருள் ஆக்கலாமா? அவர் அடித்தட்டு, விளிம்பு நிலை வர்க்கத்தைச் சேர்ந்தவர் என்பதுதான் அந்தத் தாயின் பொங்கலுக்கு முக்கியக் காரணமாக நான் நினைக்கிறேன். இதுவே அவரது தோழிகளோ அல்லது உறவினர்களோ இப்படிக் கிள்ளியிருந்தால் இது போல் வீடியோ வந்திருக்க வாய்ப்பிருந்திருக்காது. மனிதர்களின் வாழ்க்கை முறையில் ஏற்றத் தாழ்வுகள் இருக்கலாம். ஆனால், அன்பு செலுத்துவதில் ஒருபோதும் வேறுபாடுகள் இருக்காது என்று அழுத்தமாக நம்புகிறேன்.

படைப்பாளர்:

கனலி என்ற சுப்பு

‘தேஜஸ்’ என்ற பெயரில் பிரதிலிபி தளத்தில் கதைகள் எழுதி வருகிறார். சர்ச்சைக்குரிய கருத்துகளை எழுதவே கனலி என்ற புனைபெயரைப் பயன்படுத்துகிறார். ஹெர் ஸ்டோரிஸில் இவர் எழுதிய கட்டுரைகள், ‘பெருங்காமப் பெண்களுக்கு இங்கே இடமிருக்கிறதா?’ என்ற நூலாக வெளிவந்திருக்கிறது.