சென்ற அத்தியாயத்தில் உணர்வு மிகும்போது செய்யும் செயல்களால் வரும் விளைவைப் பார்த்தோம். இந்த வாரம் உணர்வை வெற்றிகரமாகக் கையாள்வதின் மூலம் வரும் நன்மையைப் பார்ப்போம்.
உணர்வு மிகும் போது மட்டுமல்ல, எப்போதுமே அமைதியின்றி ஓர் உணர்வு போராட்டத்திலேயே அல்லது ஏதோ ஓர் உணர்வின் ஆதிக்கத்திலேயே வாழும் சிலரை நாம் பார்த்திருப்போம்.
அடுத்தவரின் கருத்தைப் பற்றி அக்கறை இருக்காது, தான் நினைத்தது மட்டுமே சரி என்கிற உணர்வு, மற்றவரின் கருத்துக்கு மதிப்பளிக்காது அடக்கி ஆளும் எண்ணமுள்ள சிலரையும் பார்த்திருப்போம்.
இவர்களை அடுத்தவரின் சுக துக்கம் பாதிக்காது, குறைந்தபட்சம் தாங்களாவது அமைதியாக, மகிழ்ச்சியாக வாழ்கிறார்களா என்றால் அதுவும் இருக்காது. ஆனால் வாழ்வு முழுவதுமே உணர்வின் பிடியில் சிக்கிக்கொள்ளாமல் அமைதியாக, ஆனந்தமாக வாழவும் வழி உண்டு.
முதலில் நமது conditioned (பயிற்றுவிக்கப்பட்ட எண்ணங்கள் / கருத்துகள்) மனநிலையில் இருந்து வெளி வரவேண்டும். வெற்றி, தோல்வி குறித்து நமக்குச் சொல்லித்தரப் பட்ட கருத்துகளை மறுபரிசீலனை செய்ய தயாராக இருக்க வேண்டும்.
நாம் ஏற்கெனவே, ’உன்னை அறிந்தால்’ தொடரில் பேசிய விஷயம்தான். வாழ்க்கை ஒரு முடிவில்லா விளையாட்டு என்பதை உணர்ந்துகொள்வது, மறுபடி மறுபடி நினைவுபடுத்திக்கொள்வது. விளையாட்டில் ஜெயித்தே ஆக வேண்டுமென்ற அழுத்தம் இருந்தால் நமது முழுத் திறமையோடு ஆட முடியாது. ஒவ்வொரு முறையும் பழைய தவறுகளைத் திருத்திக் கொண்டு நம்மை நாம் மெருகேற்றிக் கொள்வதே வெற்றி.
வெற்றி என்பது நம்மை நாம் ஜெயிப்பதில் என்றில்லாமல் அடுத்தவரைத் தோற்கடிக்க எண்ணி விளையாடும்போது, அது too serious ஆகும் போது மன அழுத்தம் கூடிப்போகிறது, தவறுகள் அதிகமாகிறது. பின்பு வெற்றி எப்படிக் கிட்டும்?
தோனி வெகுவாகக் கொண்டாடப்படுவதற்கு முக்கியக் காரணம், bating, bowling, fielding எது காரணம் என்று கேட்டால் இது எல்லாமும்தான், ஆனால் அதையும் தாண்டி அவரது Cool Captainship தான்.
அவரது வெற்றியின் ரகசியத்தை அவரே ஒரு பேட்டியில் கூறியுள்ளார், “தனது கட்டுப்பாட்டில் உள்ளவற்றைச் சிறப்பாகச் செய்ய விழைவதும், கட்டுப்பாட்டில் இல்லாதவற்றை அப்படியே ஏற்றுக் கொள்வதும்தான் வெற்றிக்கு மூலக் காரணம்.“
மகாபாரதத்தில் கண்ணனைப் பற்றிப் படித்திருப்போம். குழந்தை கண்ணனை வதம் செய்ய எண்ணற்ற அரக்கர்கள் கம்சனால் அனுப்பப்பட்டனர். ஆனால், ஒருவராலும் கண்ணனைக் கொல்ல முடியவில்லை, ஏன்? யோசிக்க விரும்பாதவர்கள் கண்ணன் கடவுள், அவனை யாரால் ஜெயிக்க முடியும் என்று கன்னத்தில் போட்டுக்கொள்ளலாம். ஆனால், கொஞ்சம் ஆழமாக யோசித்தால், அரக்கர்கள் கண்ணனைக் கொல்ல போருக்கு வந்தார்கள், கண்ணனோ அவர்களுடன் விளையாடினான்
தன் பலம் தெரிந்து அதை மட்டுமே ஆயுதமாக்கிய விளையாட்டு. அரக்கருக்கோ கண்ணனை ஜெயித்தே ஆக வேண்டிய அழுத்தம், அழுத்தமாக உணரும் போது வெற்றி எப்படிச் சாத்தியமாகும் ?
குழந்தையாயிருக்கும் போது மட்டுமல்ல, எப்போதுமே எதுவுமே கண்ணனுக்கு விளையாட்டுதான், வெற்றி தோல்வியைப் பற்றிக் கவலைப்படாத விளையாட்டு.
’கடமையைச் செய், பலனை எதிர்பாராதே’ என்பது மிகப்பெரிய பாடம். எதிலும் நம்மை ஆழமாக இணைத்துக்கொள்ளாமல், வெற்றி, தோல்வி பற்றிய பயம் இல்லாதவருக்கே மனம் அமைதியில் திளைக்கிறது. அமைதியான மனமே வெற்றியைக் கவர்ந்திழுக்கும் காந்தம்.
Horace Walpole என்கிற அறிஞர், “Life is a comedy for those who think and a tragedy for those who feel” என்கிறார்.
எப்போதும் உணர்வுகளுக்கு அடிமை ஆகாமல் சிந்தித்து நகர்பவருக்கு வாழ்க்கை நகைச்சுவைதான். ஆனால், உணர்வுகளுக்கு நிறைய முக்கியத்துவம் கொடுத்து அதிலேயே மூழ்குபவருக்கு அது ஒரு துன்பம் நிறைந்த போராட்டமாகிறது.
உணர்ச்சிவசத்தால் ஒரு காரியத்தைச் செய்பவர்களுக்கு மூளை தவறு என்று எச்சரிக்கை செய்யாதா என்றால் நிச்சயம் செய்யும். ஆனால் உணர்வின் கட்டளைக்குச் சக்தியும் வேகமும் அதிகம்.
உணர்வின் ஆதிக்கத்தில் இருக்கும்போது மூளையின் கட்டளைகள் தாமதமாகத்தான் நம்மில் செயல்படுகிறது. அதற்குள் நாம் உணர்வை வெளிப்படுத்தி இருப்போம்.
காதலை மறுத்த பெண்ணின் முகத்தில் ஆசிட் வீசிய ஆண் அதற்கு முன்பு வரை அவளை நினைத்து கனவில் காதலித்தவன்தான், ஆனால் தன்னை மறுப்பதா என்கிற ஈகோ அத்தனையும் மறக்கடித்தது, இதனால் வரும் பின்விளைவை யோசிக்கும் அவகாசத்தை அவன் மூளைக்குத் தரவில்லை. ஏனெனில் கோபம் என்கிற உணர்வின் கட்டுப்பாட்டில் இருந்தான். உணர்வின் உச்சத்தில் நிகழ்ந்த எதிர்மறை விளைவு இது.
கார்கில் போர் நடக்கும் போது, அது எங்கே என்று தெரியாத போதும், என்ன நடக்கிறது என்று அறியாத போதும் நாம் இந்தியன் என்கிற உணர்வில் தன் கடைசி சேமிப்பு வரை போரில் ஈடுபட்ட வீரர்களின் நலனுக்காக தானம் அளித்த மனிதர்களை நாம் பார்த்துள்ளோம். தனது அத்தனை சேமிப்பையும் தரும் போது, இது இல்லாவிடில். பின்னாளில் தான் சிரமப்படலாம் என்று யோசிக்க விடாதது நம் நாட்டிற்காக என்கிற பரவச உணர்வு. என் நாடு என்கிற பற்றுணர்வு. அப்போதும் உணர்வுதான் ஆதிக்கம். இது உணர்வின் நேர்மறை விளைவு.
தன் உணர்வு மேல் கட்டுப்பாடில்லாத ஒரு மன நோயாளிக்கு, சிகிச்சையாக உணர்வை ஆதிக்கம் செய்யும் பாகத்தை (அமிக்டலா) மூளையில் இருந்து அறுவை சிகிச்சை மூலம் நீக்கினர். அவரது உணர்வுக் கட்டுக்குள் வரவில்லை, மாறாக உணர்வே அற்றுப் போனது. கூடவே வாழ்வின் ரசனைகளும் தொலைந்து போனது.
சொல்லப் போனால் வாழ வேண்டுமென்கிற உத்வேகமே போய்விடும். ஆபத்தான சூழ்நிலையில் உடலில் உள்ள ஒட்டு மொத்த சக்தியை உபயோகபடுத்தி ஆபத்தைச் சமாளிக்க கட்டளை இடுவதும் அதே ’அமிக்டலா’தான்.
உணர்வே வாழ்வின் பிடிப்பு, ஆதாரம்.
நீங்கள் தனிமையில் வாழும் மிகவும் வயோதிகர்களைச் சந்திக்க நேர்ந்தால் ஒரு சிலருக்கு மகிழ்ச்சி, துக்கம், கோபம், பரவசம் அனைத்தும் மரத்துப்போய், சலிப்பு மட்டுமே எஞ்சி இருக்கும். வாழ்வின் மேல் உள்ள ஆசை அற்று சலிப்புடன் மரணத்தை எதிர்நோக்கி வாழ்வை நகர்த்துவார்கள்.
சில வயோதிகர்கள் அத்தனை உணர்வுகளையும் எதிர்கொண்டு கையாண்டு நிறைவாக வாழ்வை வாழ்ந்து கொண்டு இருப்பார்கள். இரண்டு வகையுமே மரணத்தைதான் எதிர் நோக்குகின்றனர். ஆனால் இரண்டாம் வகை வாழும் வரை வாழ்வை ரசித்து வாழ்வர்.
There is a very thin line between living a boring life and living a contained life.
உணர்வே இல்லாவிட்டாலும் வாழ்வு ரசிக்காது, அதை எல்லை மீற அனுமதித்தாலும் வாழ்வு கெடும். உணர்வை உணர்ந்து கையாண்டு, அதை நம் நன்மைக்கு உபயோகப்படுத்துபவரே வாழ்வில் வெற்றி பெறுகிறார்.
சார்லி சாப்ளின் பற்றிப் படித்திருப்போம். எண்ணற்ற அவமானங்கள், தோல்விகள். அதனால் ஏற்பட்ட உணர்வு சிக்கல்கள், அத்தனையும் கடந்து தன்னைப் பிறர் கேலி செய்வதையே பெரும் மூலதனமாக்கி வெற்றி கண்டார்.
அது ஒரே நாளில் நிகழ்ந்ததில்லை, படிபடிப்யாக பல சறுக்கல்கள், பாடங்களுக்குப் பிறகு நம் மனம் பக்குவப்படுவதின் மூலமே நிகழ்ந்த ஒன்று.
அந்த மந்திர வித்தையை அடுத்தடுத்த அத்தியாயங்களில் காண்போம்
(தொடரும்)
படைப்பாளர்:
யாமினி
வாழ்க்கைக் கல்வி மற்றும் மென்திறன் பயிற்சியாளர், இயற்கை விரும்பி, நெகிழி ஒழிப்பு ஆர்வலர், திடக் கழிவு மேலாண்மை பயிற்சியாளர். பயிலரங்குகள் நடத்துகிறார். உறவு மேலாண்மை தனிபட்ட ஆலோசகர். குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு விழிப்புணர்வை உருவாக்குவதின் மூலமே நாட்டின் நலம், இயற்கை வளம், சரிவிகித சமுதாயத்தை அடைய முடியுமென்று தீவிர நம்பிக்கை உள்ளவர். எல்லாச் சூழ்நிலைகளிலும் வாழ்தலைக் கொண்டாடுபவர்.
’உன்னை அறிந்தால்…’ என்கிற தலைப்பில் ஹெர் ஸ்டோரிஸில் இவர் எழுதிய தொடர், ஹெர் ஸ்டோரிஸ் வெளியீட்டில் புத்தகமாக வெளிவந்து, வரவேற்பைப் பெற்று இருக்கிறது.