ஹாய் தோழமைகளே, நலம்தானே?

இந்த வாரம், இசை முரட்டுத்தனமாக அவளது சவாலைச் சந்திக்கப் போகிறாள் (aggressive).

இசை, ஒரே மாதிரியான அலுவலக வேலை, வீட்டு வேலை, கணவனை, மாமனார் மாமியரைக் கவனிக்கும் பொறுப்புகள் எனக் கல்யாண வாழ்க்கையைக் கடினமாக உணர ஆரம்பித்தாள்.

முன்பெல்லாம் பிரபுவைப் பார்க்கும் நேரமெல்லாம் ஒரே கொண்டாட்டமாக இருக்கும். இப்போதெல்லாம் காபி, உணவு என அவனின் தேவையைச் சுற்றியே அவர்களது பேச்சு  இருப்பது மிகுந்த அலுப்பைத் தந்தது.

அடிக்கடி வெளியில் சென்று சாப்பிடுவது, ஒரு லாங் டிரைவ் போவது , நிறைய பாடல், சிரிப்பு என்றிருந்த காலங்கள் கனவு போலிருந்தது. இந்த அழகில் அவளுக்கொரு வேலை உயர்வும் வரப்போகிறது. சம்பளமும் உயரும், வேலையும் நன்கு உயரும். இப்போதே நேரமில்லை, அப்போது என்ன செய்யப் போகிறோம் என்று மனதில் அது வேறு உறுத்தியது.

ஒரு ஞாயிற்றுக் கிழமை நிதானமாக  எழுந்து வந்த இசையை, “ என்னம்மா, மாமா காபிக்காகக் காத்திருந்து அலுத்துட்டார், என்னதான் ஞாயிறு என்றாலும் எட்டு மணிக்கா எழுவது?” என்று மாமியார் கேட்டார். இன்னும் தூங்கிக்கொண்டிருக்கும் பிரபுவைப் பற்றிப் பேசவே மாட்டார்கள் எனக் கடுப்புடன் நினைத்தவாறே, “எனக்காக ஏன் காத்திருக்கணும்? நீங்க போட்டுத் தாங்க, இல்லாட்டி மாமாவே போட்டுக்கலாமே? நான் இந்த வீட்டுக்கு வர்ற்துக்கு முந்தி நீங்க காபியே குடிக்காமயா இருந்தீங்க? “ என்று குரலை உயர்த்தி கத்தினாள்.

அவளின் கூச்சலில் கடுப்பான மாமியார், “இதென்னமா, மருமகன்னு வந்தா இதெல்லாம் செய்யறது சகஜம்தானே? இதுக்கு இப்படிக் கத்திப் பேசுற, இதைத்தான் உங்கம்மா சொல்லிக் கொடுத்தாங்களா?“ என்று அவரும் பேசினார்.

“இப்போ வரைக்கும் தூங்கிட்டு இருக்கிற உங்க பிள்ளை கண்ணுல படல, என்னை எதுக்குக் குறை சொல்றீங்க? நானும்தானே அவரைப் போல வேலை பாக்குறேன், வீட்டு வேலையும் பாக்குறேன். எனக்கென்ன உடம்பு இரும்பாலயா செஞ்சிருக்கு?“ என்று கத்திக்கொண்டிருக்கும்  போதே எழுந்து வந்த பிரபு, “இசை என்னாச்சு, ஏன் இப்படிக் கத்திப் பேசற?“ என்று கேட்டான்.

இசை, “இதோ பாரு பிரபு, என்னால முடியல, நானென்ன மிஷினா ? வீட்டிலேயும் வேலை, வெளியேயும் வேலை, உங்க அம்மா, அப்பா சும்மாதானே இருக்காங்க? அவங்க காபியைக்கூடப் போட்டுக்க முடியாதா? ஒரு நாள் லேட்டா எழுந்தது ஏதோ குற்றம் போலப் பேசுறாங்க, என்னால் இந்த வீட்ல இருக்க முடியாது, நான் வேணும்னா, நீங்க வாங்க தனிவீடு பாத்துட்டுப் போலாம், இல்லாட்டி அம்மா கூடவே இருந்துக்கோங்க“ என்று அவனிடம் சண்டைக்குப் போனாள்.

அவளது கஷ்டம் புரிந்தாலும் அதை அவள் சொன்ன விதத்தில் வீட்டினரும் காயப்பட்டிருப்பார்கள் என்று வருத்தமாக இருந்தது.

இசை எப்போதுமே இப்படித்தான், அவளது வாதம் எப்போதும் சரி எனச் சொல்ல முடியாவிட்டாலும், ஒரு சின்ன நியாயமாவது அவள் பக்கம் இருக்கும். ஆனால், அதை வெளிப்படுத்தும் முறையில்தான் பிரச்னை. மற்றவர்கள் வருத்தப்படுவார்கள் என்கிற யோசனை அவளிடம் இருக்காது. தான் பேசுவதில் தவறில்லை எனும் போது இங்கிதமெல்லாம் எதற்காகப் பார்க்க வேண்டுமென நினைப்பாள்.

முதலில் பெற்றவர்களிடம் பேசிவிட்டு, பின்னர் அவளிடம் செல்லலாம் என அம்மாவிடம் வந்தான்.

“அம்மா… “

“என்னடா, ஊரில இல்லாத அதிசயத்த நான் கேட்டுட்டேன்? மாமா காபிக்காகக் காத்திருந்தார்னு சொன்னேன், அவ்ளோதானே?“

“அம்மா, அவ பாவம்மா, எல்லா நாளும் சீக்கிரம் எழுந்துக்குறா, ராத்திரி வரைக்கும் வேலை, ஏதோ ஒரு நாள் அசதியா இருக்காதா? நீயே அந்த காபிய அப்பாக்குக் குடுத்திருக்கலாம்ல?”

“சரிதான், அவ பாவம்தான். அதை மரியாதையா கூடவா ஒருத்திக்குச் சொல்லத் தெரியாது?“

“அது தப்புதான், நா அவ கிட்ட பேசுறேன்.“

“அவதான் இங்க இருக்க முடியாதுன்னு சொல்லிட்டாளே, அப்புறம் என்னத்த பேசுறது?”

“இரும்மா, பாத்துக்கலாம்.”

நேராக இசையிடம் சென்றவன், “என்னாச்சு இசைமா, உன் பிரச்னை என்ன சொல்லு?” என்று கேட்டான்.

இசை, ”நான்தான் சொல்லணுமா? உனக்குத் தெரியாதா? நான் காலைல இருந்து நைட் வரைக்கும் நிம்மதியா உக்காந்து மூச்சுகூட விட முடியல. எப்பவும் ஏதாச்சும் ஒரு வேலை. என் வேலையை ஷேர் பண்ணிக்க யாருக்கும் தோணல. இப்போ எதுக்குப் பஞ்சாயத்துக்கு வர? நா முடிவு பண்ணிட்டேன், ஒண்ணு  வீட்டோட இருந்து சமைக்க ஆள் வைப்போம். இல்லையா தனிக் குடித்தனம் போகலாம், அவ்ளோதான், பேச வேற ஒண்ணும் இல்லை” என்றாள்.

“வீட்டோட ஆள் வச்சுக்க அம்மா ஒத்துக்க மாட்டாங்க இசை, ப்ரைவசி இருக்காதுன்னு சொல்லுவாங்க.“

“சரி, அப்போ தனியா போலாம்.“

“இசை, நான் ஒரே பையன், அவர்களை எப்படித் தனியா விட முடியும்?“

“ பிரபு அது உன்னோட பிரச்னை, நான் எனக்கு என்ன வேணும்னு சொல்லிட்டேன், நீ முடிவு பண்ணிக்கோ “ என்றவாறே அவளின் பெட்டியைத் திறந்தாள்.  

“என்ன பண்ற இசை, நாம பேசிக்கிட்டு இருக்கும்போது என்னதிது, நாம இன்னும் பேசுவோம்.“

“ நீ போய்த் தனியா பேசிக்கோ பிரபு, எனக்குப் பேச ஒண்ணுமே இல்லை“ என அவள் அம்மா வீட்டிற்குக் கிளம்பினாள்.

அனைவருமே அவள் பிடிவாதத்தில் நொந்து போனார்கள்.

“வேலையை ஷேர் பண்ணிக்கலாம், எல்லாம் நீயே செய்யணும்னு அவசியம் இல்லை. நான், அம்மா, அப்பா எல்லாரும் வீட்டு வேலையை ஷேர் பண்ணிக்கிறோம். அப்போ உனக்குக் கஷ்டமா இருக்காது, இத்தன நாள் இதைப் புரிஞ்சிக்காதது எங்க தப்புதான் இசைமா, மன்னிச்சிடு” எனப் பலமுறை பேசிப் பார்த்தான், கெஞ்சிப் பார்த்தான். இசை எதற்கும் ஒப்புக்கொள்ள மறுத்தாள். இறுதியாக வேறு வழியின்றித் தனியாக வீடு பார்த்து,  சமையலுக்கு ஒரு ஆளை அமர்த்திக் கொள்வது என முடிவாகியது.

இசை புது வீட்டிற்கு வந்தாள். அவளுக்கு வேண்டிய ஓய்வும், சரியான நேரத்தில் உணவும் கிடைத்தன. வேலையிலும் நன்றாகக் கவனம் செலுத்த முடிந்தது.

இசை ஹேப்பி அண்ணாச்சி. ஆனால் பிரபு மனதளவில் கொஞ்சம் கொஞ்சமாக விலகிக்கொண்டிருந்தான். அனைத்து விஷயத்திலும் அவளது பிடிவாதம் அவனுக்கு எரிச்சலைத தந்தது. அவளைப் பற்றிச் சிறு வயதிலேயே தெரியுமென்றாலும், இசை தன் பெற்றோரிடம் நடந்து கொண்ட முறை மிகவும் வலித்தது. அவள் எதிர்கொள்ளும் சவால்கள் கடினமானதுதான். ஆனால் அதைப் பேசி, தீர்வை அடைந்திருக்கலாம் என்று அவனுக்குத் தோன்றாமலில்லை. பிரபுவின் விலகல் இசைக்குப் புரிந்த போது, நான் செய்யாத தப்புக்கு இவனிடம் எதற்குப் பேசித் தீர்க்க வேண்டும் என்கிற எண்ணத்திலும், சிறு வயதிலிருந்தே ஒன்றாக வளர்ந்ததால் எங்கே போய் விடுவான், எப்படி இருந்தாலும் அவனால் நான் இல்லாமல் இருக்க முடியாது என்கிற எண்ணமும் அவளை ஆட்சி செய்து கொண்டிருந்ததால், பிரபுவின் விலகல் அவளைப் பெரிதாகப் பாதிக்கவில்லை. இசையின் ஆதிக்க மனப்பான்மை மேல் இருந்த கோபம் பிரபுவிற்கு அதிகமானதே தவிர குறையவில்லை. கடைசியில் விவாகரத்தில் முடிந்தது அந்த அழகிய காதல்.

இதற்கு யார் பொறுப்பு, ஒவ்வொருவரும்தான். அனைவருமே அவரின் இடத்தில் இருந்து மட்டுமே பார்த்தார்கள். ஆனால் மற்றவர்கள் தீர்வை நோக்கி நகரும் போது அவர்களாலான உதவியைச் செய்யத் தயாரானார்கள். ஆனால் இசை தன் பிடிவாதத்தில் கொஞ்சம்கூடத் தளரவில்லை. அவளது பிரச்னையும், வலியும், கோபமும் முற்றிலும் நியாயமே என்றாலும் அதற்குத் தீர்வு கண்ட முறையில் வீட்டில் இருந்த அனைவரையும் காயப்படுத்தி விட்டாள்.  அவளுக்குத் தேவை தீர்வுதானே தவிர, மற்றவர்களை வருத்தப்பட வைப்பது அல்ல. ஆனால் அவளின் பிடிவாதமும், ஆதிக்க மனமும் அதை உணர வைக்கவே இல்லை.

(தொடரும்)

படைப்பாளர்:

யாமினி

வாழ்க்கைக் கல்வி மற்றும் மென்திறன் பயிற்சியாளர், இயற்கை விரும்பி, நெகிழி ஒழிப்பு ஆர்வலர், திடக் கழிவு மேலாண்மை பயிற்சியாளர். பயிலரங்குகள் நடத்துகிறார். உறவு மேலாண்மை தனிபட்ட ஆலோசகர். குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு விழிப்புணர்வை உருவாக்குவதின் மூலமே நாட்டின் நலம், இயற்கை வளம், சரிவிகித சமுதாயத்தை அடைய முடியுமென்று தீவிர நம்பிக்கை உள்ளவர். எல்லாச் சூழ்நிலைகளிலும் வாழ்தலைக் கொண்டாடுபவர்.

’உன்னை அறிந்தால்…’ என்கிற தலைப்பில் ஹெர் ஸ்டோரிஸில் இவர் எழுதிய தொடர், ஹெர் ஸ்டோரிஸ் வெளியீட்டில் புத்தகமாக வெளிவந்து, வரவேற்பைப் பெற்று இருக்கிறது.