ஹாய் தோழமைகளே, நலம்தானே?

பிரபுவும் இசையும் பள்ளி நாட்களில் இருந்தே நண்பர்கள். அதுவும் கே.ஜி. படிக்கும் போதே நண்பர்கள்.

வளர்ந்து பெரியவர்களானதும் நட்பு மெல்ல காதலாக பூத்ததை, இவர்களுக்கு முன்பே எதிர்பார்த்த பெற்றோர் சந்தோஷமாகத் திருமணமும் முடித்தனர். காதல் துணை, இருவருக்குமே நல்ல வேலை, பெற்றோரின் ஆதரவு, தேவையான செல்வம் என நியாயமாகப் பார்த்தால் தேவதைக் கதைகளில் வருவது போல் அதற்குப் பிறகு இருவரும் காலம் முழுக்க இனிமையாக வாழ்ந்தனர் என்று முடிந்திருக்க வேண்டிய கதை.

இசைக்குப் பிரபுவையும் பிரபு குடும்பத்தாரையும் சிறு வயதிலிருந்தே தெரியுமாதலால் அவர்களிடம் புகுந்த வீடு என்கிற விலகல் இன்றி ஒன்றிப் போனாள். பிரபுவின் தாயும் இசையைத் தன் மகளைப்போலதான் பார்த்தார். ஆனால், கொஞ்சம் பழங்காலப் பெண்மணி. ஆரம்பத்தில் அழகாகப் போய்க்கொண்டிருந்த வாழ்க்கை, இசைக்குக் கிடைத்த ஒரு வேலை உயர்விற்குப் பிறகு தடுமாற ஆரம்பித்தது.

இசையின் புதுப் பொறுப்பால் வீட்டிற்கு வந்த பின்பும் அவளுக்கு இரவு நேர மீட்டிங்குகள் இருந்தன. இரவு எட்டு மணிக்கு ஆரம்பிக்கும் மீட்டிங்குகள் முடிய பதினோரு மணிகூட ஆகலாம். அதற்கு முன்பே இரவு சாப்பாட்டை முடித்தால்தான் அவளால் மீட்டிங்கில் கவனம் செலுத்த முடியும்.

ஆனால், இரவில் தாமதமாக ஒன்பது மணிக்கு மேல் சாப்பிட்டுப் பழகிய குடும்பத்தாருக்கு இந்த ஏற்பாடு வசதியாக இல்லை. ஆறு மணிக்கு வேலை முடித்து வரும் இசைக்கும் அடுத்த இரண்டு மணி நேரத்தில் இரவு உணவு முடித்து மறுபடியும் வேலை செய்ய தெம்பு இல்லை.

வீட்டில் உள்ளவர்களோ இட்லி, தோசை ,சப்பாத்தி எல்லாம் நாங்கள் உண்பதற்குள் ஆறிப் போய், சாப்பிட முடியவில்லை எனக் குறைகூற ஆரம்பித்தனர். இசை இந்த ஓட்டத்தில் சரியான சாப்பாடு, ஓய்வு, தூக்கமின்றி வாடிப்போய் இருந்தாள்.

மீட்டிங் இல்லாத, ஒரு வெள்ளிக்கிழமை இரவு அனைவரும் சேர்ந்து தளர்வான மனநிலையில் சாப்பிட்டுக் கொண்டிருக்கையில் தனது பிரச்னையைக் கூறினாள். அவளது மாமியாரும், “ஆமாம் இசை நானும் கவனித்தேன் நீ ரொம்ப வாடிப் போயிட்ட, பேசாம வேலையை விட்டுடேன், நீ சம்பாதித்துதான் ஆகணும்னு என்ன?“ என்று கேட்டார். இசை அதிர்ந்து போய் அவரைப் பார்த்தாள், சமையல் செய்ய ஒருவரை வைத்துக்கொள்ளலாம் என்று பேச நினைத்தால், இவர்கள் வேலையைவிடச் சொல்கிறார்களே என.

“இல்லம்மா, நான் சமையல் வேலைக்கு ஒரு அம்மாவை ஏற்பாடு செய்யலாம்னு நினைச்சேன்.”

“நம்ம வீட்டுக்கு இதெல்லாம் சரியா வராதும்மா, வெளியாள் வீட்டுச் சமையல் அறை வரைக்கும் வரதெல்லாம் உங்க மாமாக்குப் பிடிக்காது.”

பெருக்கித் துடைக்கும் பெண் சமையல் அறைக்கு வருகிறாளே என நினைத்துக்கொண்டே, “இல்லம்மா, எனக்கு நைட் சமையல் செஞ்சு முடிச்சுப் பாதி நேரம் சாப்பிட நேரம் இல்லை.  அதான் சொன்னேன்“ என்றாள்.

“அதான் நானும் சொல்றேன், உனக்கு ஏன் இந்தக் கஷ்டம் பேசாம வேலையை விட்டுடு, வீட்டை, உன் புருஷனை நல்லா கவனிச்சிக்கோ, நல்லா ரெஸ்ட் எடு. சீக்கிரம் ஒரு குழந்தைய பெத்து எங்ககிட்ட குடு.“

இசைக்கு மூச்சடைத்தது. ஏதோ அவள் பிறந்ததே, இந்தக் குடும்பத்தைப் பார்த்துக் கொள்ளவும், ஒரு குழந்தையைப் பெற்றெடுக்கவும்தான் என்பது போலப் பேசுகிறாரே என. மாமியார் நல்லவர்தான், இவள் மேல் அன்புள்ளவர்தான். அவர்கள் பழைய காலத்து ஆட்கள் இப்படித்தான் இருப்பார்கள், கணவனிடம் பேசினால் ஒரு தீர்வு கிடைக்கும் என்று மனதைத் தேற்றிக்கொண்டாள்.

இரவு கணவனிடம் பேச்செடுத்த போது,  “நமக்கு நேரம் கிடைக்கிறதே எப்போவாவதுதான். அப்பவும் ஏதாச்சும் ஒரு பிரச்னையத் தூக்கிட்டு வராத டார்லிங்“ என்றான்.

கொஞ்சம் நாம் பேசுவதைக் காது கொடுத்துக் கேட்பான், எல்லோரும் ஒத்துக்கொள்ளும் தீர்வைச் சொல்வான் என்று நினைத்தவளுக்குக் கொஞ்சம் அதிர்ச்சியாக இருந்தது. காதல் கணவன், பெரிதாக குற்றம் சொல்ல முடியாத புகுந்த வீட்டு மக்கள்தான், ஆனால் இதற்காகவெல்லாம் வேலையை விடுவதில்லை என்று முடிவெடுத்துக்கொண்டாள். முடிவெடுப்பது சுலபம், அதை நடைமுறைக்குக் கொண்டு வருவது எப்படி  என்று புரியாமல் குழம்பித்தான் போனாள்.

இப்போது இந்த மூன்று குண நலனில் ஒவ்வொரு முறையிலும் அவளுக்கு ஏற்படப் போகும் அனுபவங்களைப் பார்க்கலாம்.

முதலில் அடிபணிந்து நடப்பவர் (submissive)

காலையில் எழும்போதே இசைக்கு அலுப்பாக இருந்தது. வேலையை விடப்போவதில்லை, வீட்டு வேலைக்கும் உதவி கிடைக்க போவதில்லை என்பதே அலுப்புக்குக் காரணம். வேறு வழி இல்லாமல் வழக்கம் போல் நாளை தொடங்கினாள். நாட்கள் செல்லச் செல்ல ஒவ்வொரு நாளும் தொடங்குவதும், முடிவதும் அதற்கு நடுவில் இயந்திரம் போல் உழைப்பதும் அவளுடைய மனதிற்குப் பழகி இருந்தாலும் உடல் ஒத்துழைக்க மறுத்தது. ஒரு நாள் காலையில் சமையலறையிலேயே மயங்கி விழுந்தாள்.

 மருத்துவமனையில் அட்மிட் செய்து எல்லாப் பரிசோதனைகளும் செய்து மிகவும் பலவீனமாக இருப்பதாகக் காட்டின. அதற்கு மருத்துவம் பார்த்து ஒரு வாரம் ஓடிவிட்டது. வீட்டிற்கு வந்த பின்பும் பதினைந்து நாள் ஓய்வுக்கு மருத்துவர் அறிவுறுத்தியதால் அவள் அம்மாவும் அப்பாவும் தங்கள் வீட்டிற்கு அழைத்துச் சென்றனர். அலுவலகமும் இல்லை, அம்மா வீட்டில் பெரிதாக செய்ய வேலையும் இல்லாத போதும் படுத்தே கிடக்க உடல் கெஞ்சிய போதுதான் அவளுக்கு தன் உடல் இந்த ஓய்வுக்கு எப்படி ஏங்கியது என்று புரிந்தது. தனது நலத்திற்காகவும், குடும்ப நலத்திற்காகவும் அவளது தினசரி வாழ்வில் ஓய்வு அவசியம் என நினைக்கும் போதே, உடலுக்கு வேண்டிய ஓய்வு தனது உரிமையும் தானே என்று புத்தி இடித்தது. ஆமாம், என் உடலுக்குத் தேவையான உணவையும் ஓய்வையும்கூடத் தராமல் நான் யாரை சந்தோஷப்படுத்தினேன் எனத் தன்னைத்தானே கசந்து கொண்டாள். அவளை நினைத்து அவளுக்கே கோபம் வந்தது. நினைக்க நினைக்க ஆத்திரம் பற்றிக் கொண்டு வந்தது. கல்யாண வாழ்வே கசந்துதான் போனது. பெரியவர்கள் மனம் நோகக் கூடாதென்று அனைத்திற்கும் அமைதியாகத் தலையாட்டிக்கொண்டிருந்த தன்னையே அவள் வெறுக்க ஆரம்பித்தாள். இனி அங்கே செல்லவே போவதில்லை என்றும் கசப்புடன் மண வாழ்க்கையை முறித்துக் கொள்ளத் தயாரானாள்.

இந்த விஷயத்தை இவ்வளவு தூரம் வளர விட்டு இருக்க வேண்டியதில்லை. அவளது சவால்களைப் பற்றி இன்னும் அதிகமாகப் பேசி இருக்கலாம், கொஞ்சம் கோபமும் காட்டி இருக்கலாம். அமைதியாக எல்லாவற்றையும் சகித்துக் கொண்டதால் அனைவரும் அவளைப் பற்றி அதிகம் சிந்திக்க மறந்தனர். நாம் மிகவும் விரும்பும் ஒருவருக்கு ஒரு துன்பம் வரும்போது, நாம் எந்த அளவிற்கு வேகமாக உதவிக்குப் போவோமோ அதே வேகத்தில் நமக்கு நாம் உதவிட வேண்டாமா? சுய நேசத்தைச் செயல்படுத்தும் போது அது இன்னும் எளிதாகிறது.

இசை முரட்டுத்தனமான குணமானவராக இருந்தால், என்னவாகுமென வரும் என அடுத்த அத்தியாயத்தில் காணலாம்.

(தொடரும்)

படைப்பாளர்:

யாமினி

வாழ்க்கைக் கல்வி மற்றும் மென்திறன் பயிற்சியாளர், இயற்கை விரும்பி, நெகிழி ஒழிப்பு ஆர்வலர், திடக் கழிவு மேலாண்மை பயிற்சியாளர். பயிலரங்குகள் நடத்துகிறார். உறவு மேலாண்மை தனிபட்ட ஆலோசகர். குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு விழிப்புணர்வை உருவாக்குவதின் மூலமே நாட்டின் நலம், இயற்கை வளம், சரிவிகித சமுதாயத்தை அடைய முடியுமென்று தீவிர நம்பிக்கை உள்ளவர். எல்லாச் சூழ்நிலைகளிலும் வாழ்தலைக் கொண்டாடுபவர்.

’உன்னை அறிந்தால்…’ என்கிற தலைப்பில் ஹெர் ஸ்டோரிஸில் இவர் எழுதிய தொடர், ஹெர் ஸ்டோரிஸ் வெளியீட்டில் புத்தகமாக வெளிவந்து, வரவேற்பைப் பெற்று இருக்கிறது.