தீண்டாமைஒருபாவச் செயல்
தீண்டாமைஒருபெருங்குற்றம்
தீண்டாமைஒருமனிதத்தன்மையற்றசெயல்
என்கிற வாசகம் முகப்பில் அச்சடிக்கப்பட்ட புத்தகங்களைக் கொண்டு கற்றல்-கற்பித்தல் தொடங்கும் பள்ளிக் கூடங்களிலேயே தீண்டாமைக் கொடுமைகள் தீவிரமாக நிலவிவருகின்றன. பட்டியலினப் பழங்குடியின சிறுபான்மையின மாணவர்களும் பெண்களும் சாதியின் பெயராலும் மதத்தின் பெயராலும் பாலினத்தின் பெயராலும் காலம் காலமாகக் கல்வி வளாகங்களுக்குள் ஒடுக்கப்பட்டும் ஒதுக்கப்பட்டும் வருகின்றனர். அவர்களின் பாதுகாப்பு கல்வி வளாகங்களுக்குள் கேள்விக்குறியாகவே இருந்துவருகிறது. பாகுபாட்டையே மரபாகக் கொண்டியங்கும் சமூகத்தில் பள்ளிக்கூடங்களுமே பாகுபாட்டுக் கூடாரங்களாக இயங்கி வருகின்றன.
திருப்பூர் மாவட்டம் அவினாசி வட்டத்தைச் சேர்ந்த திருமலைக்கவுண்டம்பாளையம் அரசு உயர்நிலைப் பள்ளியில் ஜூலை 2018இல் சத்துணவு ஊழியராகப் பணியில் சேர்ந்த ‘பாப்பாள்’ என்கிற பட்டியலினப் பெண் உணவு சமைத்தால் பள்ளிக்கே வர மாட்டோமென்று பிற்படுத்தப்பட்ட பிரிவைச் சேர்ந்த சாதிவெறிப் பெற்றோர் குழந்தைகளைப் பள்ளியிலிருந்து அழைத்துச் சென்று வகுப்புகளைப் புறக்கணித்தனர்.
2022 டிசம்பரில் ஈரோடு மாவட்டம் பெருந்துறை, பாலக்கரை ஊராட்சி அரசு தொடக்கப் பள்ளியில் பட்டியலின மாணவர்களை ஓர் ஆண்டு காலத்திற்கு மேலாக கீதா ராணி என்கிற சாதிவெறி கொண்ட தலைமை ஆசிரியர் கழிவறைகளைச் சுத்தம் செய்ய வைத்துத் துன்புறுத்தினார். 2023 ஆகஸ்டில் புதுக்கோட்டை மாவட்டம் கீழையூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் எட்டாம் வகுப்புப் படிக்கும் சிறுமியின் குடிநீர் பாட்டிலில் மாணவர்கள் இருவர் சிறுநீர் கலந்துவிட்டு விளையாட்டாகக் கலந்ததாகக் கூறியது போன்ற சாதிய வன்கொடுமைகளும் பாலின ரீதியிலான பாகுபாடுகளும் பள்ளி வளாகங்களுக்குள் தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டே வருகின்றன.
பட்டியல் பிரிவினராகவும் பெண்ணாகவும் பிறந்ததாலேயே மாணவராயினும் ஆசிரியராயினும் பாகுபாட்டுடன் நடத்தப்படுகின்றனர். பாகுபாடுகள் அத்துமீறல்களாகவும் வன்கொடுமைகளாகவும் கொலைகளாகவும் வன்புணர்வுகளாகவும் நிகழ்ந்துகொண்டேதான் இருக்கின்றன. பா.ரஞ்சித், மாரி செல்வராஜ் போன்ற தலித்திய இயக்குநர்களின் வருகைக்குப் பின்னரும் சாதிய மற்றும் பாலினப் பாகுபாட்டு மரபுகளை உடைத்து இயற்றப்பட்ட கலை இலக்கியப் படைப்புகளின் வருகைக்குப் பின்னரும் இது போன்ற கொடுமைகள் புதிதாகத் தோன்றி நிகழ்வதாகவும் அதற்கு முன்பு சமூகம் அமைதிப் பூங்காவகத் திகழ்ந்ததாகவும் பாகுபாட்டுப் பாரம்பரியத்தின் பற்றாளர்கள் சிந்திக்க நினைக்கும் மக்களையும் மூளைச்சலவை செய்து வருகின்றனர்.
இன்றைக்கு இருக்கக்கூடிய தொழில்நுட்ப வசதிகளும் ஒடுக்கப்பட்ட மக்களிடத்தில் தோன்றி வலுவடைந்து வருகின்ற விடுதலை வேட்கைளும் சமத்துவச் சிந்தனையும் இது போன்று தொடர்ந்து நடந்து வருகின்ற வன்முறைகளை வெளியுலகிற்கு எடுத்து வருகின்றன. அது பாகுபாட்டால் பண்பட்ட சமூகத்தின் பழம்பெருமைகளைக் கேள்விக்குள்ளாக்குகிறது. உலக நாடுகள் அதை விமர்சிக்கிற பொழுது தலைகுனிவு ஏற்பட்டுவிடுமே என்று அஞ்சி நடக்கின்ற வன்கொடுமைகளை அதிகார வர்க்கம் மூடிமறைக்கப் பாடுபடுவதும் வழக்கமாகிவிட்டது.
காலம் காலமாகப் பட்டியல் பிரிவினர் மற்றும் பெண்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்டு வருகின்ற கொடுமைகளைப் பேசுவதற்கான, எழுதுவதற்கான, கலையாக்குவதற்கான சூழல் முந்தைய தலைமுறையினரின் கடின உழைப்பாலும் போராட்டத்தாலும் இன்று வாய்த்திருக்கிறது. அந்தச் சூழலை சாமானிய மக்களும் கொண்டாடத் தொடங்கியிருக்கின்றனர். இத்தகைய போக்கை உடைக்கவே சாதி, மத, பாலின வெறிகளால் ஒருவர் பாதிக்கப்படும்பொழுது பாதிப்பின் மூலக்காரணமான பாகுபாட்டு மரபை மூடிமறைக்கவே பாகுபாட்டு மரபை எதிர்த்து எழுதும் படைப்பாளர்கள் மீது பழி சுமத்தப்படுகிறது.
ஆரம்பப் பள்ளி முதல் ஆராய்ச்சிப் படிப்பு வரை படிக்கும் மாணவர்களைக் கல்வி வளாகங்கள் சாதியின், மதத்தின், பாலினத்தின் பெயர்களால் இழிவுபடுத்தி இடைநிற்றலுக்கும் தற்கொலைக்கும் தள்ளிக்கொண்டே இருக்கின்றன. பழங்குடி குழந்தைகளின் கல்வி இடைநிற்றலுக்கு முக்கியக் காரணமாக இருப்பது அவர்களைப் பாகுபாட்டுடன் அணுகும் கல்வி வளாகங்களே. ரோகித் வெமுலாக்களையும் பாத்திமா லத்தீப்களையும் கல்வி வளாகங்கள் ஒருபோதும் கல்வியோடும் அறிவோடும் ஜனநாயகத்தோடும் அணுகியதும் இல்லை; சரியாக அணுக முயற்சிக்கவும் தவறிவிட்டன.
“பாப்பம்மா சமைத்தால் தீட்டம்மா” என்று வெளிப்பட்ட குழந்தைகள் இன்றைக்கு அரிவாளுடன் சக பட்டியலின மாணவனின் வீட்டுக்குள்ளேயே நுழைந்து, சாதியின் பெயரைச் சொல்லி, கொடூரமாக வெட்டி கொலைவெறியுடன் வெளிப்பட்டிருக்கின்றனர்.
திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி பெருந்தெருவைச் சேர்ந்த சின்னதுரை (தா/பெ – அம்பிகா) ராதாபுரம் வட்டம் வள்ளியூரில் உள்ள கண்கார்டியா மேல்நிலைப் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்துவருகிறார். அதே பள்ளியில் சின்னதுரையின் தங்கை சந்திரா செல்வியும் ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார். திருநெல்வேலி மாவட்டச் சுற்று வட்டாரங்களில் பட்டியலின மக்களுக்கு எதிராக தொடர்ந்து நிகழ்த்தப்பட்டு வருகின்ற வன்கொடுமைகளால் அச்சுறுத்தப்பட்டுள்ள பட்டியல் சமூகத்தினர், தங்கள் குழந்தைகளைப் பள்ளிக்கூடங்களில் சேர்ப்பதற்கு முன்பு அந்தப் பள்ளியில் பட்டியலின மாணவர்களுக்குச் சரியான பாதுகாப்பு உள்ளதா, பட்டியலின மாணவர்கள் தொடர்ந்து படித்துவருகின்றனரா போன்று பலவாறு சிந்தித்த பின்பே சேர்க்கின்றனர். நாங்குநேரிக்கும் வள்ளியூருக்கும் சுமார் 15 கி.மீ. தொலைவு இருந்தும் சின்னதுரை பேருந்தில் பயணித்து கண்கார்டியா மேல்நிலைப் பள்ளியில் படிப்பதற்கும் இத்தகைய சாதிய அச்சுறுத்தல்களும் காரணமாக அமைந்திருக்கின்றன.
சின்னதுரை நன்கு படிப்பதையும் நல்ல மதிப்பெண்கள் பெறுவதையும் ஏற்றுக்கொள்ள முடியாத மறவர் சாதியைச் சேர்ந்த சுப்பையா, செல்வ ரமேஷ் ஆகிய மாணவர்கள் சின்னதுரையைச் சாதிரீதியாகவும் வன்சொற்களால் இழிவுபடுத்தியும் வந்துள்ளனர். புத்தகப் பைகளைச் சுமந்து வரச் சொல்வது, சிகரெட் போன்ற பொருள்களை வாங்கி வரச் சொல்வது, விசில் அடிக்கச் சொல்வது என்று பலவாறு சின்னதுரையை மிரட்டியும் சின்னதுரையின் மதிய உணவைப் பிடிங்கி எறிவதுமென தொடர்ந்து துன்புறுத்தி வந்துள்ளனர்.
இக்கொடுமைகளால் உளவியல் ரீதியாகப் பாதிக்கப்பட்ட சின்னதுரை வேறு பள்ளியில் தன்னைச் சேர்க்கும்படியும் இல்லையென்றால் வேலைக்கு அனுப்பும்படியும் வீட்டில் சொல்விட்டுப் பள்ளிக்குச் செல்லாமல் இருந்து வந்துள்ளார். கடந்த 09.08.2023 அன்று சின்னதுரையும் அவரது தாயாரும் பள்ளிக்குச் சென்று ஆசிரியரிடம் சின்னதுரையை வன்கொடுமை செய்துவரும் சுப்பையா, செல்வ ரமேஷ் ஆகிய இருவரின் மீதும் புகாரளித்துள்ளனர். இதை அறிந்த சுப்பையாவும் செல்வ ரமேஷும் இன்னும் சில மறவர் சாதி மாணவர்களுடன் கூட்டாக (6 மாணவர்கள் – சுப்பையா, செல்வ ரமேஷ், சுரேஷ்வானு, செல்வதுரை, வான்முத்து, கல்யாணி) சின்னதுரையின் தெருவுக்குள் அன்றிரவு நுழைந்துள்ளனர்.
சின்னதுரை தங்கையுடன் இரவு உணவு சாப்பிட அமர்ந்த நிலையில் சுப்பையா, செல்வ ரமேஷ், சுரேஷ்வானு ஆகிய மூவரும் வீட்டுக்குள் நுழைந்து அரிவாளால் சின்னதுரையைச் சரமாரியாக வெட்டியுள்ளனர். அரிவாளின் குறி தலைக்கு வருகின்ற போது எல்லாம் கைகளைக் கொண்டு தடுத்த சின்னதுரையின் கை எலும்புகள் நொறுக்கப்பட்டுள்ளன. ஒற்றைப் பெற்றோராக இருந்து, பாடுபட்டு வளர்த்துப் படிக்க வைத்த மகன் கண்ணெதிரே வெட்டப்படுவதைக் கண்டு தாய் அம்பிகா அதிர்ச்சியில் விழுகிறார்; உடலெங்கும் வெட்டுப்பட்டு நிலைகுலைந்த சின்னதுரையின் தலைக்கு மீண்டும் குறி வைக்கப்பட்ட பொழுது பதிமூன்று வயதேயான தங்கை சந்திரா செல்வி அண்ணனின் உயிரைக் காக்க இடையில் சென்று, “எங்கண்ணனை ஒன்னும் செய்யாதீங்க” என்று தடுத்தபொழுது சாதி வெறி மாணவர்கள், சிறுமி சந்திரா செல்வியின் இடது கைகையும் வெட்டியுள்ளனர். அக்கம்பக்கத்தினர் சத்தம் கேட்டு வர, சாதி வெறி மாணவர்கள் தப்பி ஓடியுள்ளனர்.
சின்னதுரையை வெட்டிய சுப்பையா, செல்வ ரமேஷ், சுரேஷ்வானு உட்பட இவர்களுக்கு உதவி, உடன்வந்த கூட்டாளிகளான செல்வதுரை, வான்முத்து, கல்யாணி என ஆறு பேரையும் காவல்துறை கைது செய்துள்ளது.
சின்னதுரைக்குத் திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சையளிக்கப்பட்டு வந்த ஆகஸ்ட் 15 அன்று சந்திக்கச் சென்றிருந்தோம். சின்னதுரையின் அறைக்கு அடுத்துள்ள அறையில் சிகிச்சை பெற்றுவந்தார் சின்னதுரையின் தங்கை சந்திரா செல்வி. காலனியத்திலிருந்து இந்தியா விடுதலையடைந்ததை நாடே கொண்டாடி மகிழ்ந்தது. கொண்டாட்ட அடையாளமாகத் திகழும் நால்வண்ண தேசியக் கொடியை சந்திரா செல்வியும் குத்தியிருந்தார். நால் வண்ணக் கொடியில் இடம்பெற்றுள்ள நீலமும் சாதிய வெறியால் வெட்டுண்ட அவரது இடது கையும் சுதந்திரத்தை கேள்வி எழுப்பி, சமத்துவ ஜனநாயகத்தை எதிர்நோக்கியிருப்பதைப் போல காட்சியளித்தன.
நடந்த வன்கொடுமையைச் சந்திரா செல்வி ஒவ்வொரு முறை விவரிக்கின்ற பொழுதும், “எங்கண்ணனை அந்த மூணு அண்ணங்களும் வெட்டுனாங்க” என்று வெட்டிய சாதிவெறியன்களையும்கூட எந்தவிதப் பகையுணர்வும் இன்றி குறிப்பிடுகின்றார். தன் அண்ணன் வெட்டுப்படும் பொழுது தடுக்க இடையில் சென்றால் தானும் வெட்டுப்பட்டு இறக்ககூட நேரிடலாம் என்கிற அச்ச உணர்வுகளுக்குள் ஆட்படாமல் அண்ணனைக் காக்க குறுக்கே சென்ற பதிமூன்று வயதேயான சிறுமியின் துணிவை எண்ணிப் பார்க்கையில் சந்திரா செல்விகள்தாம் சாதிய சமூகத்தின் குறுக்கே சென்று பாலின சமத்துவத்தையும் சமூக சமத்துவத்தையும் நிறுவப் போராட வேண்டியிருக்கும் என்று தோன்றியது.
“எம் புள்ள வெட்டுப்பட்டுக் கிடப்பதைப் பார்த்துட்டேன். உயிர் போயி வந்திருக்கு. இதற்கு மேல நடக்க என்ன இருக்கு” என்று கூறி ஒருபோதும் வழக்கைத் திரும்பப் பெற மாட்டேன் என்று உறுதியுடன் நிற்கிறார் சின்னதுரையின் தாய். மெலிந்த தேகத்துடன் அத்தனை வலிகளையும் உள்ளுக்குள் சுமந்துகொண்டு சின்னதுரையையும் சந்திரா செல்வியையும் பார்த்துக்கொள்கிறார்.
சின்னதுரையைப் பார்க்க மருத்துவமனை வரும் அனைவரையும் வயது வித்தியாசம் இன்றி பெண்களை அக்கா என்றும் ஆண்களை அண்ணா என்றும் அழைக்கும் அப்பாவியான சின்னதுரையின் தாய்க்கு இவ்வன்கொடுமை எத்தகைய வலிகளைக் கொடுத்திருக்கும்?
சாதிவெறியூட்டபட்ட மூன்று மாணவர்கள் சின்னதுரையை வெட்டுகையில், “நீ எப்படி உங்கம்மாவோட போயி எங்க மேல புகார் எழுதிக் கொடுக்கலாம் பறப்பயலே, தேவிடியா பட்டமாடித்தான் உங்கம்மா ஒன்னையப் படிக்க வைக்கறா” என்று சொல்லி வெட்டியதைக் குறிப்பிட்டு, “இப்படிச் செய்யலாமா, படிக்கிற பசங்க இப்படியெல்லாம் பேசலாமா?” என்று தாய் நம்மிடம் முறையிடுகிறார்.
அவரது முறையீடுகளுக்குக் கல்வி வளாகங்களும் பாடங்களும் பதில் சொல்லியே ஆக வேண்டும். அரசு, அரசு உதவிபெறும் தனியார் பள்ளிகளின் பெயர்களில் இடம்பெற்றுள்ள சாதியப் பெயர்களையாவது குறைந்தபட்சம் அழித்தொழிக்க முடியுமா? பாடத்திட்டங்களில் இடம்பெற்றுள்ள சாதியப் பின்னொட்டுகளையும் பாகுபாட்டுச் சிந்தனைகளையும் எவ்விதப் பற்றுமின்றி நீக்கிவிட முடியுமா? முடியாது என்றால் கல்வி வளாகங்களுக்குள் சாதிகளாகக் குழுமி நட்புகொள்ளும் மாணவர்களிடத்தில் எப்படிச் சமத்துவத்தைச் சாத்தியப்படுத்த முடியும்?
சாதி/மத/பாலினம் போன்றவற்றின் அடிப்படையிலான பாகுபாடுகளை ஒழுக்கமெனவும் பண்பாடெனவும் பிதற்றிக்கொள்ளும் சமூகத்திலிருந்தும் சாதியால், சாதிகளுக்குள், சாதிகளுக்காகவே விரிவுபடுத்தப்பட்ட குடும்பங்களிலிருந்தும் சாதிய அடையாளங்களோடு கல்வி வளாகங்களுக்குள் நுழையும் மாணவர்களிடத்தில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்குக் கல்வி வளாகங்கள் முதலில் சமத்துவ ஜனநாயகத்தைப் பாடம் படிக்க வேண்டும். பிறகு பாடமெடுக்க வேண்டும்.
பன்னெடுங்காலமாக அகமணமுறையான சுயசாதித் திருமணங்களால் விரிவுபடுத்தப்பட்டுவந்த சமூக உறவு நிலை உடைந்து, புறமண முறைகளில் சமூக உறவுகள் ஏற்படுத்தப்படுகின்ற பொழுதே சாதியத்தை ஒழிக்க முடியும். சமூக உறவு நிலைகளில் சாதியத்தை அடிப்படையாக வைத்து பின்பற்றிக்கொண்டே தனிமனிதனிடம் இருந்து சாதிய உணர்வுகளை நீக்கிவிட முடியாது.
கல்வி, வேலை வாய்ப்பு, பொருளாதாரம், அரசியல் போன்றவற்றின் சமநிலை கிளைகளில் சமத்துவத்தை உருவாக்க உதவும். இவற்றின் சமநிலையைக் கொண்டு முழுமையாகச் சாதியத்தை ஒழித்து, நிலையான சமத்துவத்தை நிறுவ முடியாது. புறமணமுறைகள் மூலம் வேர்களிலிருந்து சமத்துவத்தை நிறுவி சாதியத்தை ஒழிக்க வேண்டும்.
சாதியத்தை முற்றிலுமாக ஒழிக்காமல் கல்வி வளாகங்களில் இருந்தும் மாணவர்களின் எண்ணங்களில் இருந்தும் மட்டும் சாதிய உணர்வுகளை ஒழித்துவிட முடியாது. இருப்பினும் சாதி போன்ற பாகுபாட்டுப் பற்றுகளைக் கல்வி வளாககங்கள் துறந்து நிற்கையில் மாணவர்களிடத்தில் நிலவிவரும் சாதியின் தீவிரத்தன்மையைக் குறைக்கவாவது முடியும்.
கல்வி வளாகங்களில் சமத்துவம் கற்பிக்கப்பட வேண்டும். மாணவர்களின் வழி அவர்களது குடும்பங்களுக்கும் சமத்துவம் கடத்தப்பட வேண்டும். அத்தகைய கற்றல்முறை ஏற்பட வேண்டும். “எல்லாரும் சமம்தானே டீச்சர்” என்று கேட்கும் மாணவனைப் போன்று சிந்திக்கும் திறன்கொண்ட, கேள்வி கேட்கும் ஆற்றல் கொண்ட மாணவர்களை உருவாக்குவதே கல்வி வளாகங்களின் நோக்கமாக வேண்டும்.
மாணவர்களிடையேயான சாதிய வன்கொடுமைகள் என்பவை சின்னதுரைக்கு எதிரான வன்கொடுமையோடு தொடங்கியதும் அல்ல; இத்துடன் முடிவடையக் கூடியதும் அல்ல. சாதிய வன்கொடுமைகளாலும் ஆணவப்படுகொலைகளாலும் ஆன நம் பன்னெடுங்கால வரலாறு இனியேனும் மாற வேண்டும் என்பதை ஒவ்வொரு காலத்திலும் பலர் சிந்தித்துள்ளனர்; சிலர் போராடி வந்துள்ளனர்; மாற வேண்டும், மாற்ற வேண்டும் என்பதுதான் நமது கனவாகவும் இருக்கிறது. இத்தனை வலிகளைக் கடந்த சின்னதுரையின் தாயாருக்கும் இத்தகையதொரு கனவு இருக்கிறது. “தன் மகனுக்கு நடந்த கொடுமை வேறு யாருக்கும் நிகழ்ந்துவிடக் கூடாது” என்பது அவரின் கனவு. அவரின் கனவை கல்விக்கூடங்கள் சுமக்க வேண்டும். கல்விக் கூடங்கள் சமத்துவத்தின் கூடங்களாக மாற வேண்டும்.
பி.கு: இந்தக் கட்டுரையில் குற்றவாளிகள் உபயோகித்த வார்த்தைகள், நிகழ்வின் முக்கியத்துவம் கருதி அப்படியே வெளியிடப்பட்டிருக்கின்றன.
படைப்பாளர்:
கல்பனா
அனைத்திந்திய மாணவர் பெருமன்றத்தின் கோவை மாவட்ட துணைத்தலைவராக உள்ளார். மலசர் பழங்குடிகளின் சமூகப் பண்பாட்டு இயங்கியல் என்னும் பொருண்மையில் தன்னுடைய முனைவர் பட்ட ஆய்வுப்பணியினை மேற்கொண்டுவருகிறார். சர்வதேச ஆய்விதழ்களில் ஆராய்ச்சிக் கட்டுரைகளை வெளியிட்டுள்ளார்.