ஸ்ஸ்ஸ்… மப்ளரை இறுகச் சுற்றிக்கொண்டேன். மார்ச் மாத கோடை வெயிலில் தமிழ்நாடே தகதகத்துக் கொண்டிருக்க, எனக்கோ முகத்தில் அறைந்த குளிர்காற்று மூச்சு விடமுடியாமல் நடுக்கியது.
நீங்கள் நினைப்பதுபோல நான் நின்றிருந்தது சிம்லாவோ, மணாலியோ இல்லை. ‘தமிழ்நாட்டின் சொர்க்கம்’, ‘தென்னகத்து காஷ்மீர்’ என்றெல்லாம் முகப்புப்படம் வைத்து விருப்பக்குறியீடுகளை அள்ளுவதற்காக தேனி இணையதளவாசிகளால் பெருமை பீற்றிக் கொள்ளப்படும் போடிமெட்டுதான். ஆனால் இந்த வழக்கமான மிகைப்படுத்தல்களில் உண்மை இல்லாமலும் இல்லை.
புறச்சூடோ, மனச்சூடோ… வெக்கையாக, இறுக்கமாக உணர்ந்தால் டக்கென கிளம்பி, இரு சக்கர வாகனம், மகிழுந்து, ஜீப், பேருந்து என கிடைப்பதில் ஏறிச்சென்று போடிமெட்டு பேருந்து நிறுத்தத்தில்(!) இருக்கும் கடையில் ஒரு தேநீர் அருந்தி விட்டு, கொஞ்ச நேரம் அங்குமிங்கும் உலாத்தி ஆரோக்கியமான காற்றை சுவாசித்து விட்டு திரும்பி வந்தால், அடுத்த பதினைந்து நாட்களுக்கான புத்துணர்ச்சிக்கு நான் உத்தரவாதம்!
காரணமில்லாமலே எத்தனையோ முறை சென்றிருந்தாலும், இந்தக் ‘கட்டுரை எழுதுவதற்காக’ என சின்னப்பிள்ளைபோல ஒரு காரணம் சொல்லி தேனியின் சொர்க்கத்தை(!) நோக்கி மீண்டும் ஒரு பயணம் கிளம்பியிருந்தோம். மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடரில் தமிழ்நாடு – கேரளா மாநில எல்லையில் கடல் மட்டத்திலிருந்து 4500 அடி உயரத்தில் அமைந்திருக்கிறது மனதை மயக்கும் அந்த அழகிய மலைவாழ் கிராமம் – போடிமெட்டு.
தேனியிலிருந்து 22 கி.மீ. சமவெளிப்பயணத்தில் போடியின் எல்லையான ‘முந்தலில்’ தொடங்குகிறது மலைப்பாதை. வாகனம் நகர்ந்த சில மணித்துளிகளில் குளிர்ந்த காற்று மனதை இலகுவாக்க, இயற்கை நம்மை வரவேற்கத் தொடங்கி விடும். அங்கிருந்து 17 கொண்டைஊசி வளைவுகளில் 20 கிலோமீட்டர் தூரத்திற்கு மலைப்பகுதியில் சென்றால் வந்துவிடும் போடி மெட்டு. எனக்கென்னமோ பேருந்து, மகிழுந்து பயணத்தைவிட மூடுபனிகளுக்கிடையே ஜீப்பிலோ, (அம்மாவிடம் திட்டு வாங்கிக்கொண்டு) இருசக்கர வாகனத்திலோ பயணிப்பதுதான் பரமசுகமாய் இருக்கிறது.
ஏழாவது கொண்டைஊசி வளைவைத் தாண்டினால் வருகிறது ‘காற்றுப்பாறை’. அந்த குறிப்பிட்ட இடத்தில் பாறையில் நின்றால், ‘பொதபொத’ வென அடித்துவரும் காற்று நம்மைக் கீழே தள்ள முயற்சிக்கிறது. கால்களை பூமியில் அழுந்த ஊன்றிக்கொண்டே புகைப்படம் எடுத்துவிட்டு திரும்பிப் பார்த்தால், அதல பாதாளம்… தலைசுற்றுகிறது.
புகைப்படம் எடுக்கும் ஜோரில் ஒரு அடி தள்ளி வைத்தால், மேலே போக வேண்டிய வைகுண்டத்துக்கான(?) வழி கீழே தெரிகிறது. தூரத்தில் சிதறிக்கிடக்கும் போடி நகரை இரசித்து விட்டு மேலேறினோம். மூணாறு, பூப்பாறை, கொழுக்குமலை போன்ற பகுதிகளுக்கு போடிமெட்டு வழியாகத்தான் செல்ல வேண்டும் என்பதால், இவ்வழியே வரும் பேருந்துகள் வளைந்து நெளிந்து செல்லும் சாலைகளில் அசமந்தமாய் புழுபோல நெளிந்துகொண்டிருப்பது தூரத்திலிருந்து பார்க்க வேடிக்கையாக இருந்தது.
‘வன விலங்குகள் சாலையைக் கடக்கும் இடம்’ என ஆங்காங்கே தென்படும் அறிவிப்புப் பலகைகளைக் கண்டுகொள்ளாமல், ஒவ்வொரு கொண்டைஊசி வளைவிலும் இடது புறத்தில் நின்று ரசித்தபடி செல்கிறார்கள் பயணிகள். தேனி வனச்சரக எல்லைக்குள் புலிகள் கிடையாது, சிறுத்தைகள் உண்டு என்கிறது தேனி வனச்சரகத்தின் புள்ளிவிபரம். கேரளாவின் மூணாறு அருகே சின்னக்கானல் பகுதிகளில் தேயிலைத் தோட்டங்களில் புலிகள் நடமாட்டம் இருப்பதாக அவ்வப்போது பத்திரிக்கைச் செய்திகளில் படிக்கும்போதும், மேற்கு தொடர்ச்சி மலைவழிச் சாலையான போடி மெட்டு சாலைகளில் புலிகள் நடமாடுவதாக பேச்சுகள் அடிபடும் போதும்கூட பயந்ததில்லை.
ஆனால் கடந்த ஆண்டு(2024) 12 வது கொண்டை ஊசி வளைவு அருகே வாகனத்தில் மோதி பலத்த காயத்துடன் பகல் நேரத்தில் நடு ரோட்டில் நின்றுகொண்டிருந்த புலியை பயணி ஒருவர் எடுத்த புகைப்படம், சமூக வளைதளங்களில் உலா வந்ததிலிருந்து மனதிற்குள் கொஞ்சம் கிலிதான்.
ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு மத்திய அரசின் சார்பில் மேகமலை உள்ளிட்ட மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகள், புலிகள் சரணாலயமாக அறிவிக்கப்பட்டதுடன் வனவிலங்குகளின் எண்ணிக்கையை பெருக்கும் பொருட்டு புலி, சிறுத்தை, செந்நாய், நரி, கரடி போன்ற விலங்குகளின் குட்டிகளை வனத்துறையினர் வனப்பகுதிகளில் விட்டதாகவும் அந்தக் குட்டிகள் வளர்ந்து பெரிதாகியதால் விலங்குகளின் நடமாட்டம் அதிகரித்திருப்பதாகவும் போடிமெட்டு வாசிகள் கூறுகிறார்கள்.
பயணத்தின் ஊடாக வலதுபுறம் வருகிறது புலிஊத்து அருவி. உடல் தழுவும் சிலுசிலுவென்ற காற்றும் பனிமூட்டங்களுக்கிடையே நீர்த்திவலைகளை தெறித்தபடி (கோடையென்பதால்) ஆர்ப்பாட்டமின்றி விழும் அருவியும் கண்களுக்கும் மனதுக்கும் குளிர்ச்சியாக இருக்கிறது. மழைக்காலங்களில் அருகில் நெருங்க முடியாத அளவுக்கு தனது மற்றொரு முகத்தைக் காட்டும் இந்த புலியூத்து அருவி, இன்றைக்கெனவோ புது மாமியார் முன் பதுங்கும் மருமகன் போல சமர்த்தாக இருந்தது.
மழைக்காலங்களில் செல்லும் வழியெங்குமே மலை முகடுகளில் வெள்ளி உருக்கினாற்போல ஆங்காங்கே குட்டி குட்டி நீர்வீழ்ச்சிகள் தலை காட்டும். சில சமயங்களில் தொடர் மழையினால் கொண்டைஊசி வளைவுகளில் ராட்சச பாறைகள் உருண்டு விழுந்து பயமுறுத்துவதுடன், சாலைப் போக்குவரத்தை முற்றிலுமாக துண்டித்துவிடும்.
புலியூத்து அருவி விழும் பாறையை தொட்டுக்கொண்டிருக்கிறது 18 படிகளுடன் ஒரு குட்டி கருப்பண்ண சாமி கோவில். கடாவெட்டு நேர்த்திக்கடன் போலும்… ரோட்டோரமாகவே வாழையிலைப் பந்தியில் சிறுசிறு குன்றென குவிக்கப்பட்டிருந்த ‘கறிச் சுக்கா’வின் மணம் அந்த இடமெங்கும் பரவி சுண்டியிழுக்க, “யக்கா… சாப்பிட்டு போங்கக்கா” என கிடைத்த அழைப்பை புன்னகையால் மறுத்து வாகனத்தை நோக்கி நகர்ந்தோம்.
அதுவரை நம்மை ஆதூரத்துடன் தழுவிச்சென்ற காற்று, மேலே செல்லச் செல்ல தீரா மோகத்துடன் கட்டியணைக்க, கூடவே பூப்போல மழைத்தூவலும் சேர்ந்து கொள்ள, குளிர், உடலுக்குள் ஊடுறுவி நடுக்குகிறது. அந்தக் குளிருடன் சேர்த்து காற்றில் மிதந்து வருகிறது இதமான மணம்…
ஆஹா ஒவ்வொரு வீட்டு சமையலறையிலும் பத்திரமாய் பதுங்கிக் கொண்டிருக்கும் அதே மணம்… பச்சைத் தங்கம் ஏலக்காய். ஒரு நிமிடம் கண்கள் மூடி பிரணாயமம் செய்வது போல காற்றை மெதுவாக உள்ளிழுத்து அந்த நறுமணத்தை நுரையீரலெங்கும் நிரப்பிக் கொள்கிறேன்.
தோட்டங்களில் மட்டுமல்ல, வீடுகளில் மட்டுமல்ல, சாலையோரங்களில்கூட செழித்து வளர்ந்து நம்மைப் பார்த்து சிரிக்கின்றன ஏலக்காய் செடிகள். சாலையோரத்தில் யார் கொண்டு வந்து இந்தச் செடிகளை வைத்திருப்பார்கள்? இதற்கு யார் தண்ணீர் ஊற்றுவார்கள்? இந்தக்காய்களை யார் பறிப்பார்கள்? என யோசித்துக்கொண்டே வண்டியிலிருந்து இறங்கி வழக்கம் போல இருகை நிறைய ஏலக்காய்களை பறித்து நுகர்ந்து கொண்டே பயணித்தால் மன அழுத்தமாவது… மண்ணாங்கட்டியாவது… எல்லாம் போயே போச்… கை நிறைந்து கிடக்கும் ஏலக்காய்களூடே அதன் வரலாறு மனதில் ஓடுகிறது.
‘மசாலா வேதியியல்’ (Chemistry of Spices) என்ற நூலில், ‘மனித இனத்தைப்போலவே ஏலக்காயும் பழமையான வரலாற்றைக் கொண்டுள்ளது’ என்று குறிப்பிடுகின்றனர் கேரளாவின் கோழிக்கோட்டில் உள்ள இந்திய மசாலா ஆராய்ச்சி நிறுவனத்தின் ஆராய்ச்சியாளர்களான பி. செம்பகம் மற்றும் எஸ் சிந்து இருவரும். அந்த நூலில் கிடைக்கும் ஏலக்காய் பற்றிய செய்திகளும் ‘Cardamom – The Queen of Spices and its Global Journey’ – KISSANAGRO என்ற வலைத்தளம் கொடுக்கும் செய்திகளும் வியக்க வைக்கின்றன. பொ.ஆ.மு. நான்காம் நூற்றாண்டைச் சேர்ந்த ஆவணப்படுத்தப்பட்ட குறிப்புகளில் முதன்முதலாக ஏலக்காய் பற்றிய செய்திகள் இடம் பெற்றிருக்கிறது. மலைவளம் பற்றி பேசும் பண்டைத்தமிழ் இலக்கியங்களிலும் ஏலக்காய் மணக்கிறது.
ஏலக்காய், முறையான விவசாயமாகப் பயிரிடப்படுவதற்கு முன்பு, மேற்குத் தொடர்ச்சி மலைகளின் பசுமையான காடுகளுக்கு மத்தியில் ஒரு காட்டுப் பயிராக வளர்ந்து கிடந்தது. ஆதிகால மனிதர்கள் புதரில் விளைந்த மசாலாவின் சமையல் பண்புகளைக் கண்டறிந்து, சமையலில் பயன்படுத்தினர். பின்னர் காட்டுப்பகுதிகளில் மலைவாழ் பழங்குடியினரால் சேகரிக்கப்பட்ட ஏலக்காய், உள்ளூர் வணிகர்களுக்கு விற்கப்பட்டது. பின்னர் அது கைகள் மாறி, கடல்கள், மலைகள் கடந்து, அரேபியர்களின் தேநீருக்கும் காபிக்கும் சுவையூட்டும் பண்டமாக மாறியது. ரோமானியர்கள் மற்றும் கிரேக்கர்களின் சுவையற்ற பல உணவுகளுக்கு உயிர் கொடுத்தது.
நாளடைவில் வனப்பயிரான ஏலக்காய் பணப்பயிராக மாறியது. மனிதர் ஊடுறுவ முடியாத காடுகள் தோட்டங்களாக மாறின. 12ஆம் நூற்றாண்டில் மத்திய கிழக்குச் சந்தைகளில் இது மிகவும் விருப்பத்திற்குரிய பொருளாக மாறியது. பச்சை ஏலக்காயின் உலகளாவிய பரவலால், ஸ்பானிஷ் காலனியவாதிகள் அதை மத்திய மற்றும் தென் அமெரிக்காவிற்குக் கொண்டு சேர்த்தனர். போர்த்துகீசிய வணிகர்கள் ஐரோப்பாவில் அறிமுகப்படுத்த, ஐரோப்பிய மன்னர்களின் அரச உணவுகளை ஏலக்காய் அலங்கரித்தது. பொ.ஆ. 1000 ஆண்டில் இந்தியாவிலிருந்து வர்த்தகம் செய்யப்பட்ட பொருள்களில் ஏலக்காய் முக்கிய இடம் பெற்றிருக்கிறது. அதுமட்டுமல்ல, ஏலக்காயும், கிராம்பும் நெடுங்காலமாக ஆயுர்வேத மருத்துவத்தில் பயன்படுத்தப்பட்டு வந்திருக்கிறது.
திருவிதாங்கூர் ராச்சியம், தங்களது எல்லைக்குட்பட்ட பகுதிகளிலிருந்து ஏலக்காய் கடத்தப்படுவதைத் தடுக்க, சாகுபடி பகுதிகளிலும் மாநில எல்லைகளிலும் பெரும் எண்ணிக்கையில் தனது ராணுவத்தை நிறுத்தியது என்ற செய்தியிலிருந்து ஏலக்காயின் மதிப்பைப் புரிந்து கொள்ள முடிகிறது. இந்த நறுமணப்பொருளை ஆரம்ப காலங்களில் பயிரிட்டவர்கள் பிரிட்டிஷ் மிஷனரிகள், காலனித்துவ அதிகாரிகளின் வாரிசுகள் மற்றும் தமிழ்நாட்டின் மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த (அன்றைய சென்னை மாகாணம்) விவசாயிகள். 1928 ஆம் ஆண்டு ஆங்கிலேயர் காலத்தில் ஏலக்காயை கொண்டு செல்வதற்காகவே மதுரை போடி ரயில் சேவை அமைக்கப்பட்டது. மேற்குத் தொடர்ச்சி மலைகளில் விளைந்த ஏலக்காய், குரங்கணிக்கு ஒரு பெரிய விஞ்ச் மூலம் கொண்டுவரப்பட்டு, போடியிலிருந்து ரயில் மூலம் நாட்டின் பிற பகுதிகளுக்குக் கொண்டு செல்லப்பட்டது.
இந்தியக் காடுகளிலிருந்து உலகம் முழுவதும் உள்ள உணவு மேசைகளை சென்றடைந்த ஏலக்காய், இன்று இலங்கையின் பசுமையான கிராமப் புறங்கள் முதல் குவாத்தமாலாவின் மூடுபனி மலைப்பகுதிகள் வரை பல்வேறு காலநிலைகளில் வளர்கிறது. வழக்கமான தேநீருக்கு கூடுதல் சுவையூட்ட, பாயாசத்தின் சுவை கூட்ட, பிரியாணிக்கு மணமூட்ட என மாயாஜால சுவையை உருவாக்குகிறது இந்த மசாலாப்பொருள்களின் ராணி. குங்குமப்பூ, வெண்ணிலாவைத் தொடர்ந்து உலகின் மூன்றாவது மிக விலையுயர்ந்த மசாலாப் பொருள் என்ற பெருமையுடன் வலம் வருகிறது ஏலக்காய்.
வரலாற்றில் ராஜ்ஜியங்களின் எழுச்சிக்கும் வீழ்ச்சிக்கும் மசாலாப் போர்களுக்கும் காரணமாக இருந்த ஏலக்காய்க்கான உலகச் சந்தை போடியில் அமைந்திருப்பது உண்மையில் தேனி மாவட்டத்திற்கு பெருமைக்குரிய விஷயம்தான்.
கம்பம், புதுப்பட்டி, கூடலூர், காமயகவுண்டன்பட்டி, அனுமந்தன்பட்டி, கோம்பை, பண்ணைப்புரம், தேவாரம், போடி பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகளுக்கு கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் ஆனவிலாசம், சாத்தான் ஓடை, நெடுங்கண்டம், கட்டப்பனை, பெள்ளியமலை, உடுப்பன் சோலை, பாறத்தோடு போன்ற பகுதிகளில் சுமார் 2 லட்சம் ஏக்கரில் விவசாய நிலங்கள் உள்ளன. இதில் 1.5 லட்சம் ஏக்கரில் ஏலக்காய் சாகுபடி செய்து வருகின்றனர். இவை தவிர போடி மற்றும் கேரள எல்லைப்பகுதிகளான பூப்பாறை, வண்டமேடு, தோண்டிமலை, ராஜா காடு, பியால் ராவ், கஜானா பாறை போன்ற பகுதிகளிலும் சேர்த்து மொத்தமாக சுமார் 2.50 லட்சம் ஏக்கர் பரப்பளவில் ஏலக்காய் பயிரிடப்பட்டு வருகிறது.
‘வாழ வைக்கும் ஏலக்காய்’ என்பது போடி நாயக்கனூர் மக்களின் நம்பிக்கையாக இருக்கிறது. வருடத்தில் எட்டு மாதம் முதல் பத்து மாதம்வரை விளைவிக்கப்பட்டு ஆறு எடுப்புகளாக அறுவடை செய்யப்படுவதால் வருடம் முழுவதும் ஏலக்காய் சார்ந்த ஏதோ ஒரு தொழில் நடந்து கொண்டிருக்கும். ஏலக்காய் பறிப்பு காலங்களில் போடியிலிருந்து ஆணும் பெண்ணுமாய் போடிமெட்டுக்கும் அதைக்கடந்து கேரளப்பகுதிகளுக்கும் ‘எஸ்டேட் வேலைக்கு’ போய் விடுகிறார்கள். அதிகாலையில் ஊரின் முக்கிய தெருக்களில் நின்று தொழிலாளர்களை ஏற்றிக்கொண்டுச் செல்லும் (ஏலக்காய் தோட்ட முதலாளிகள் அனுப்பும்) ஜீப்பும் வேனும் மாலை மூன்று, மூன்றரை மணிக்கெல்லாம் திரும்பி விடுகிறது. பெரும்பாலும் பெண்கள்தான் வண்டியிலிருந்து இறங்குகிறார்கள். எஸ்டேட்டிலேயே தங்கி வேலைபார்க்கும் தொழிலாளர்களும் அதிக அளவில் இருக்கின்றனர். வருடத்தின் எட்டு முதல் பத்து மாதங்கள் குளிரிலும் மழையிலும் வெயிலிலும் காற்றிலும் அட்டைக்கடியிலும் வாடும் பல்லாயிரக்கணக்கானோரின் கடுமையான உழைப்பை உறிஞ்சித்தான் ஏலக்காய்கள் நம் சமையலறைக்கு வருகின்றன. ஏலக்காய் எஸ்டேட் தொழிலாளர்களின் வாழ்க்கையை எழுதினால், மற்றுமொரு ‘எரியும் பனிக்காடு’ போன்ற நூல் கிடைக்கும்.
போடி நகருக்குள் நுழைந்தவுடன் குடிசைத்தொழில் போல தெருவுக்கு நான்கு ஏலக்காய் கிட்டங்கிகள் இருக்கின்றன. அங்கு தரம் பிரிக்கும் வேலை பரபரப்பாக நடந்து கொண்டிருக்கும். காலை எட்டு மணிக்கு தொடங்கும் வேலை முடிவதற்கு, இரவு ஏழு மணியாகி விடுகிறது. சமயங்களில் ஏலக்காய் வரத்து அதிகம் இருக்கும்போது ‘நைட்டு வேலை’ யும் பார்க்க வேண்டும். ஆனால் அதற்கு அதிகப்படியான சம்பளமும், இரவுச்சாப்பாடாக புரோட்டாவும் கிடைக்கும் என்பதால் அதற்கும் தயாராகவே இருக்கிறார்கள். இங்கும் பெண்கள் ராஜ்ஜியம்தான். இவர்களைக் கண்காணிப்பதற்காக ‘கொத்துக்காரம்மா’ என்று அழைக்கப்படும் மேற்பார்வையாளர் ஒருவர் இருக்கிறார். அவர் கண்பார்வையிலிருந்து ஒரு நிமிடம்கூட வேலை செய்யாமல் தப்பிவிட முடியாது. அத்தனை கடுமையானவராக இருப்பவர்களையே ‘கொத்துக்காரம்மாக்களாக’ தேர்ந்தெடுப்பார்கள்.
“எட்டு பருவட்டு (8 மி.மீ.), ஏழு பருவட்டு (7 மி.மீ.), ஆறு பருவட்டு (6 மி.மீ.) னு தரம் பிரிக்கனும். குனிஞ்ச தலை நிமிராம வேலை பார்க்கறதுல குறுக்கு செத்திரும், உஸ்ஸுனு ஒரு பத்து நிமிசம் உட்கார முடியாது, என்ன செய்யறது? இதை விட்டா எங்களுக்கும் வேற பொழப்பு இல்ல… நாப்பது வருசமா இந்த வேலை செஞ்சுதான் என் பிள்ளைகளை படிக்க வைச்சு, கல்யாணம் பண்ணிக்கொடுத்தேன். இப்ப எல்லா வேலைக்கும் மிசினு வந்துருச்சு, ஹிந்திக்காரங்க நிறைய பேரு வேலைக்கு வந்துட்டாங்க, இன்னுங்கொஞ்ச நாளில, உள்ளூர்காரய்ங்களுக்கு வேலை இருக்காது போல” என நாற்பது வருட அலுப்புடன் கூறுகிறார் பார்வதி அம்மா.
ஏலக்காய் வர்த்தக மையம் மற்றும் பல்வேறு தனியார் மையங்கள் மூலம் ரகம் பிரிக்கப்பட்ட ஏலக்காய்கள், போடி நகரில் உள்ள மத்திய நறுமணப்பொருள் வாரியத்தின் மேற்பார்வையில் மின்னணு முறையில் காலை, மாலை என ஒரு நாளைக்கு இருமுறை ஏலம் விடப்படுகிறது. இங்கிருந்து டெல்லி, மும்பை, கொல்கத்தா, அஹமதாபாத், ஜெய்ப்பூர் போன்ற இடங்களுக்கும் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.
ஏலக்காய் மாலை தொடுக்கும் தொழிலும் ஏலக்காய் சார்ந்த மற்றொரு உப தொழிலாக மாறியுள்ளது. அரசியல்வாதிகளின் கழுத்து முதல் அத்திவரதரின் சிற்பம்வரை அலங்கரிக்கப்படும் ஏலக்காய் மாலைகள் இங்கிருந்தே செல்கின்றன. 7 மற்றும் 8 பருவட்டு காய்கள் தான் மாலைகட்ட உகந்தது என்கிறார்கள். உப்பு நீரில் ஊறவைத்து சுத்தப்படுத்தப்படும் ஏலக்காய்கள் புகைபோட்டு உலர்த்தப்பட்டபின் மாலை தொடுப்பதற்கு தகுந்தவாறு உறுதியாகிவிடுமாம். திருவாச்சி மாலை, மல்லிகை மொட்டு மாலை என விதவிதமாய் தயாரிக்கப்படும் மாலைகட்டும் தொழில் பல பெண்களின் வாழ்வில் வெளிச்சத்தைக் கொண்டு வந்து சேர்த்திருக்கிறது.
C.M.சொக்கையா, ஏலக்காய் வணிகர்
“உலகிலேயே ஏலக்காய் உற்பத்தியில் மத்திய அமெரிக்க நாடான கவுதிமாலா முதல் இடத்திலும் இந்தியா இரண்டாம் இடத்திலும் இருக்கின்றன. பொதுவாக இந்திய ஏலக்காய்க்கு வெளிநாடுகளில் மிகுந்த வரவேற்பு இருக்கிறது. ஏனெனில் இந்தியாவில் விளையும் ஏலக்காய்கள் மருத்துவ குணமுடையவை. காரத்திலும் மணத்திலும் தரமானவை. அதேபோல் இந்தியாவில் ஏலக்காய் விவசாயச் செலவும் தொழிலாளர் சம்பளமும் அதிகமாக இருப்பதால், விலையும் அதிகமாக இருக்கிறது. ஆனால் கவுதிமாலாவில் ஏலக்காய் மானாவாரியாக பயிரிடப்படுவதாலும் அதிக மணம், காரம் மருத்துவ குணமின்றியும் உள்ள ஏலக்காய்கள் அதிக அளவில் உற்பத்தி செய்யப்படுவதாலும் விலை குறைவாக இருக்கிறது. சில சமயங்களில் கவுதிமாலா ஏலக்காயை இந்தியாவிற்குள் கொண்டு வந்து நமது ஏலக்காயுடன் கலந்து விலை குறைத்து விற்பனை செய்யப்பட்ட நிகழ்வுகளும் நடந்தது உண்டு. அதன்பின் இந்திய அரசு இறக்குமதி சட்டங்களைக் கடுமையாக்கியதால், அது தடுக்கப்பட்டது. சம்சாரியிடம் இருந்து வாங்கும் ‘பல்க்’ என்று சொல்லப்படும் ஏலக்காய்களை தரம்பிரித்து ஐந்து கிலோ பைகளாகக் கட்டி பின் ஐம்பது கிலோ மூடைகளாகக் கட்டி, ஏலத்திற்குக் கொண்டு செல்வோம். தரம்பிரிக்கும் போது கழிக்கப்படும் ‘சண்டு’ கூட நல்ல விலைக்குப் போகும். உதிர்ந்திருக்கும் ஏலக்காய் விதைகளைக்கூட புடைத்து சேகரித்து அவையும் தனியாக விற்கப்படும்” என்று ஏலக்காய்த் தொழில் குறித்த நெளிவு சுளிவுகளைக் கூறுகிறார் பல ஆண்டுகளாக ஏலக்காய்த் தொழிலில் இருக்கும் திரு.சொக்கையா என்பவர்.
தரத்தில் சிறந்த இந்திய ஏலக்காயும் விலையில் குறைந்த கவுதிமாலா ஏலக்காயும் உலக சந்தையில் போட்டிக்கு நிற்க, வழக்கம்போல தரத்தை கீழே தள்ளி, மலிவானது வெற்றிப் படிக்கட்டை நோக்கி முன்னேறுகிறது. பொதுவாக ஏலக்காய் என்பது பெண்களுக்கு கடின உடல் உழைப்புக்கான தொழிலாகவும் ஆண்களுக்கு லேபர் ஏஜென்ட், கங்காணி, கமிஷன் ஏஜென்ட், மொத்த வியாபாரி, சில்லறை வியாபாரி என வாய்வீச்சுக்கான தொழிலாகவும் இருக்கிறது.
ஏலக்காயின் வரலாற்றை யோசித்துக்கொண்டே, போடிமெட்டை அடைந்து விட்டோம். சாலையில் போகும் பேருந்தை ஓரங்கட்டினால் அதுதான் பேருந்து நிறுத்தம். இருந்த இரண்டு டீ கடைகளும் அப்போதுதான் உள்காட்டிலிருந்து வந்திருந்த தொழிலாளர்களால் நிரம்பியிருந்தன. அந்த மாலை நேரத்தின் மழைச்சாரல் குளிருக்கு இதமூட்ட சுடச்சுட புரோட்டா கல்லில் வெந்து கொண்டிருந்தது. 15 ரூபாய் புரோட்டாவும் ‘தண்ணி சால்னாவும்’ அமிர்தமாக இருந்தது. வெளிநாட்டுப் பயணிகளைக் குறிவைத்த அலங்கார கலைப்பொருள்கள் விற்கும் கடை காற்றாடிக் கொண்டிருந்தது. மலையையும் மழையையும் விடாது ரசித்துக்கொண்டே புரோட்டாவுடன் தேநீரை அருந்தினோம்.
சாலையின் எல்லையில் இந்திய தேசிய சின்னத்துடன் ஒரு உலோகக் கம்பம். போடி – போடிமெட்டு மலைச்சாலை திறப்பு விழா கல்வெட்டு தெரிகிறது. 13.10.1961 ல் திறப்பாளர்: திரு.K.காமராஜ் அவர்கள், முதல் அமைச்சர், தமிழ்நாடு, விழாத்தலைவர்: திரு. P.கக்கன் அவர்கள், மராமத்து அமைச்சர், தமிழ்நாடு. A.S. சுப்பாராஜ், M.L.A., சங்கத்தலைவர் என பிராந்திய தென்னிந்திய ஏல விவசாயிகள் சங்கத்தால் 64 வருடங்களுக்கு முன்பு வைக்கப்பட்டுள்ள கல்வெட்டு தெரிவிக்கிறது. இருபெரும் தலைவர்களின் காலடித்தடம் பெற்ற இடத்தில் நாம் நிற்கிறோம் என வியந்தவாறே நடக்கிறோம்.
சாலையின் இடதுபுறத்தில் ஒரு பழைய கட்டிடம். TRAVANCORE CUSTOMS HOUSE, BODI METT என்ற எழுத்துகளுக்கூடாக, முந்திய திருவிதாங்கூர் ராச்சியத்தின் சின்னமான சங்கு கட்டிடத்தின் நுழைவாயிலை அலங்கரிக்கிறது. 1905 ஆம் ஆண்டு அப்போதைய திருவிதாங்கூர் மன்னர் ஸ்ரீ மூலம் திருநாள் ராமவர்மா ஆட்சிக்காலத்தில் அரச குடும்பத்தினரால் கட்டப்பட்ட கட்டிடம். அதன் பின்னர் ஸ்ரீ சித்திர திருநாள் பலராம வர்மா ஆட்சிக்காலத்தில் புதுப்பிக்கப்பட்டிருக்கிறது. ராஜ பரம்பரையின் மரபாக, பயன்பாட்டில் இருந்த சில கட்டிடங்களில் ஒன்றாக இருந்தது. இந்தக் கட்டிடம் சுங்கம் வசூலிக்கும் வசதிக்காக செயல்பட்டதுடன், சுங்கமாக சேகரிக்கப்பட்ட மலை விளைச்சலின் ஒரு பகுதி அங்கு வைக்கப்பட்டதால், சுங்கபுரா என்றும் சுங்க இல்லம் என்றும் அழைக்கப்பட்டது. போடி மெட்டில் உள்ள பிரதான மலைச்சாலை வழியாக மெட்ராஸ் மாகாணத்துக்கு மசாலாப் பொருள், குறிப்பாக ஏலக்காயும் மிளகும் கடத்தப்படுவதைத் தடுக்கும் சோதனைச் சாவடியாகவும் பயன்படுத்தப்பட்டது.
இந்தியா சுதந்திரம் அடைந்த பின் மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட போது இந்தக் கட்டிடம் வணிக வரித்துறையினரின் சோதனைச் சாவடியாகவும், பொருள்கள் சேகரித்து வைக்கும் கிடங்காகவும் மாறியது. கற்கள் மற்றும் சுர்கி (செங்கல் அல்லது எரிந்த களிமண் உருண்டைகளைப் பொடி செய்து தயாரிக்கப்படும் கட்டுமானப்பொருள்) பயன்படுத்தி 120 வருடங்களுக்கு முன்பு கட்டப்பட்ட கட்டிடம் பல்வேறு வரலாற்று நிகழ்வுகளின் சாட்சியாய் இன்று காலத்தின் அழிவுகளைத் தாங்கி நிற்கிறது.
‘வீட்டுக்கு குறுக்கால கோடு ஒண்ணு போடுடி… கோதாவரி’ என்ற அரசின் கட்டளைக்கேற்ப சாலையின் குறுக்கே வெள்ளைப் பெயிண்டால் கோடு ஒன்று போடப்பட்டுள்ளது. இந்தப்பக்கம் தமிழ்நாடு, அந்தப்பக்கம் கேரளா. போடிமெட்டிலிருந்து கீழ்நோக்கி வளைந்து வளைந்து பூப்பாறை செல்லும் அழகிய சாலைகளை இரசித்துக்கொண்டே கேரளாவிற்குள் காலாற நடக்கிறோம். எல்லை கடக்கக்கூடாது என இரு மாநில அரசுகளும் அறிவித்த கடும் கொரோனோ காலத்திலும்கூட குடும்பமாய் போய் எல்லையில் கால் வைத்துவிட்டு எவெரெஸ்ட்டில் கால்வைத்த பெருமையுடன் வந்தோம்.
“செந்தாழம்பூவில் வந்தாடும் தென்றல்…” என யேசுதாஸ் காதுகளுக்கு இனிமையாக பாடிக்கொண்டிருக்க, மனமும் வயிறும் நிரம்பிய திருப்தியில் தேனி நோக்கித் திரும்பிக் கொண்டிருந்தோம். இருபுறமும் வனக் காட்சிகள், சில்லென்ற காற்று, கிட்டத்தட்ட எப்பொதும் மூடுபனியில் மூழ்கியிருக்கும் சாலைகள், குட்டி குட்டி அருவிகள், அழகான வியூபாயின்ட்கள், வரலாற்றுச் சின்னங்கள் என தன்னைத் தேடி வருபவர்களுக்கு நீங்காத நினைவுகளைத் தரக் காத்திருக்கிறது போடிமெட்டு.
மகள் வழக்கம்போல ஏக்கத்துடன் சொல்கிறாள், “பிறந்தது பிறந்தோம் ஒரு 20 கிலோமீட்டர் தாண்டி இங்கு பிறந்திருக்காம போயிட்டோம் மா…” திரும்பிப்பார்த்து சொன்னேன், “இங்கு வாழ்வது மட்டுமல்ல, இங்கு பயணிப்பதே இனிமைதான் பாப்பா”.
படைப்பாளர்
ரமாதேவி ரத்தினசாமி
எழுத்தாளர், முன்னாள் அரசுப்பள்ளி ஆசிரியர். பணிக்கென பல விருதுகள் வென்றவர். இவர் எழுதி வெளிவந்துள்ள ‘கனவுகள் மெய்ப்படட்டும்’ கட்டுரைத் தொகுப்பு பரவலாக கவனம் பெற்றது. 2014, 2015ஆம் ஆண்டுகளில் ஐ நா சபையில் ஆசிரியர் பேச்சாளராகக் கலந்துகொண்டு உரையாற்றியுள்ளார். ‘அடுக்களை டூ ஐநா’ தொடரில் அவரது ஐ நா அனுபவங்களை நகைச்சுவையுடன் விவரித்திருக்கிறார். ‘இலங்கை – எழுதித் தீராச் சொற்கள்’ என்கிற பெயரில் இலங்கை அனுபவங்களையும் ‘என்ன செய்கிறது ஐநா – பெண் கல்வித் தடைகள் உடைபடும் தருணங்கள்’ என்கிற கட்டுரைத் தொடர்களையும் நம் வலைதளத்தில் எழுதினார். இம்மூன்று தொடர்களும் நூலாக்கம் பெற்று, ஹெர் ஸ்டோரீஸ் வெளியீடுகளாக வெளிவந்து பாராட்டுகளைப் பெற்றுள்ளன.
‘போர்களின் தேசத்தில்’ என்ற பயணக் கட்டுரை நூல் அவரது பயண அனுபவங்களைப் பேசுகிறது. இது தவிர, ‘பிள்ளையாரும் 22 நண்பர்களும்’ என்ற இளையோர் நாவலையும் ‘குட்டிப் பெண்களின் பெரிய கதைகள்’ என்ற சிறார் பற்றிய சிறுகதைத் தொகுப்பையும் எழுதியுள்ளார். பயணக் கட்டுரைகள், சிறுகதைகள், சிறார் எழுத்து, கல்வியியல் கட்டுரைகள் என பல தளங்களில் எழுதும் ஆற்றல் மிக்கவர். ‘தேனி – பண்பாடு, வரலாறு, வாழ்வியல்’ இவர் ஹெர் ஸ்டோரீஸ் வலைதளத்தில் எழுதும் ஆறாவது தொடர் ஆகும்.
வாசிக்கும் அனைவரும் தேனி மாவட்டத்தை நேசிக்கும் அளவிற்கும், போடிமெட்டு பகுதியை நேரில் பார்த்த உணர்வினைத் தரும் வகையில் துள்ளல் நடையில், உயிர்த் துடிப்புடன் கட்டுரையை எழுதியுள்ள ரமாதேவிக்கு வாழ்த்துக்கள்…!!!
J.RAJARAMPANDIAN
12 days ago
கட்டுரையை வாசிக்கும் அனைவரும் தேனி மாவட்டத்தை நேசிக்கும் வகையிலும், நேரில் சென்று போடிமெட்டு பகுதியை பார்த்ததைப் போன்ற அனுபவத்தையும் தனது துள்ளலான எழுத்து நடையால் வழங்கியுள்ள எழுத்தாளர் ரமாதேவிக்கு வாழ்த்துக்கள்…!!!
ஜெ.இராஜாராம் பாண்டியன்
பொ.ஆ.16 ஆம் நூற்றாண்டு வரையில் மக்களிடம் வரி வசூல் செய்வதில் திருவிதாங்கூர் அரசு கொண்டிருந்த நிலைப்பாடு தொடர்ந்து வந்த எதிர் காலங்களில் (18, 19ஆம் நூற்றாண்டுகளில்) நிலைகுலைந்தது ஏன்? திருவிதாங்கூர் அரசுக்கு உருவான நெருக்கடி…
வனங்களுக்கு அருகில் இருக்கும் நிலப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கு அடிக்கடி வனவிலங்குகளால் தொல்லை எழுவது தினசரி நிகழ்வாகப் பார்க்கப்படுகிறது. அந்த மக்கள் விலங்குகளிடம் இருந்து காப்பாற்றக் கோரி அரசாங்கத்திடம் கோரிக்கை வைப்பதும், அரசாங்கம் அதற்குத் தக்க…
வாசிக்கும் அனைவரும் தேனி மாவட்டத்தை நேசிக்கும் அளவிற்கும், போடிமெட்டு பகுதியை நேரில் பார்த்த உணர்வினைத் தரும் வகையில் துள்ளல் நடையில், உயிர்த் துடிப்புடன் கட்டுரையை எழுதியுள்ள ரமாதேவிக்கு வாழ்த்துக்கள்…!!!
கட்டுரையை வாசிக்கும் அனைவரும் தேனி மாவட்டத்தை நேசிக்கும் வகையிலும், நேரில் சென்று போடிமெட்டு பகுதியை பார்த்ததைப் போன்ற அனுபவத்தையும் தனது துள்ளலான எழுத்து நடையால் வழங்கியுள்ள எழுத்தாளர் ரமாதேவிக்கு வாழ்த்துக்கள்…!!!
ஜெ.இராஜாராம் பாண்டியன்