இந்த கோவிட் பெருந்தொற்றுக் காலம் வீட்டிலிருக்கும் நேரத்தை அதிகரித்திருப்பதால் தமிழில் திடீர் எழுத்தாளர்கள் எண்ணிக்கை கூடியிருப்பதாக ஒரு செய்தி பார்த்தேன். இப்படிப் புதிதாக எழுதுபவர்களுக்குத் தமிழில் தட்டச்சு செய்வதில் உள்ள வாய்ப்புகள் பற்றியதுதான் இந்தக் கட்டுரை. பல காலமாகத் தமிழில் எழுதுபவர்களைக் கேட்டுத்தான் கட்டுரையைத் தொகுத்திருக்கிறேன்.
நாம் எந்த மொழியில் தட்டச்சு செய்தாலும் கணினிக்குப் புரிவது இரண்டே விஷயங்கள்தாம். சுழியம் மற்றும் ஒன்று. 9 என்ற எண் கணினி மொழியில் 1001. A என்றால் 01000001. இப்படிக் கணினிக்குப் புரியும் விதத்தில் மாற்ற குறிப்பிட்ட எழுத்துக்குத் தனி அடையாளம் வேண்டும். ஆரம்பத்தில், எல்லா எழுத்துகளையும் ஓர் அட்டவணையில் வைத்து, அதற்கு ஓர் ஆஸ்கி எண்ணைக் கொடுத்தார்கள். ஆஸ்கி கோட் என்றால் தி அமெரிக்கன் ஸ்டாண்டர்டு கோட் ஃபார் இன்ஃபர்மேஷன் இன்டர்சேன்ஞ்ச் The American Standard Code for Information Interchange (ASCII). படி, முழம் என்ற உள்ளூர் கணக்கெல்லாம் எல்லாருக்கும் புரியாது என்பதால் கிலோகிராம், மீட்டர் என உலகம் முழுவதும் ஒப்புக்கொள்ளப்பட்ட அளவீடு அலகுகளை உபயோகிப்பது போலத்தான் இதுவும். எல்லா நாடுகளிலும் A என்றால் ASCII 065 தான் குறியீடு. அதற்குத்தான் ஆஸ்கி கோட். நமக்கு A. உலகம் முழுதும் உள்ள கணினி நிரல் எழுதுபவர்களுக்கு ஆஸ்கி கோட் 065. அது கணினிக்குப் புரியும்படி 01000001 என மென்பொருள் மாற்றிக்கொள்ளும்.
ஆங்கில எழுத்துகள் இருபத்தாறுதான். ஆனால், எண்கள், கேபிடல் எழுத்துகள், ஸ்மால் எழுத்துகள், ஆச்சரியக்குறி, கேள்விக்குறி எல்லாம் சேர்த்து கணக்கிட்டால் அவை நூறைத்தாண்டும். இந்த ஆஸ்கி கோட் முறையில் அதிகபட்சம் 256 எழுத்துகளுக்குத்தான் குறியீடு ஒதுக்க முடியும். உலகில் உள்ள மற்ற மொழி எழுத்துகளுக்கு இடம் தேவை எனும் பிரச்சினை தலை தூக்கியது. அதற்குத் தீர்வாக வந்ததுதான் யூனிகோட் எனப்படும் ஒருங்குறி முறை. இந்த யூனிகோட் முறையில், உலகின் எல்லா மொழிகளுக்கு மட்டுமின்றி எமோஜிகளுக்கும்கூட இடம் இருக்கிறது. இதனால் நீங்கள் எந்தக் கணினியில் இருந்து யூனிகோட் முறையில் தட்டச்சு செய்தாலும், குழப்பமின்றி எல்லாக் கணினியிலும் அதே எழுத்துகள் தெரியும். சுருக்கமாகச் சொல்வதென்றால் யூனிகோட் என்பது உலகம் முழுக்க ஒப்புக்கொள்ளப்பட்ட எழுத்து முறை.
CHARACTER | CODE POINT | UTF-8 BINARY ENCODING |
A | U+0041 | 01000001 |
9 | U+0039 | 00111001 |
😁 | U+1F601 | 11110000 10011111 10011000 10000001 |
இந்த யூனிகோட் முறையினைப் பயன்படுத்துவதால் எந்தக் கணினியில் தட்டச்சு செய்தாலும் உலகின் மற்ற எந்தக் கணினியிலும் அதைப் படிக்க முடியும். மற்ற எழுத்துருகள் சில கணினிகளில் மட்டும் தெரியும். சில கணினிகளில் கட்டம் கட்டமாகத் தெரியும். எழுத்தாகத் தெரியாது. எனவேதான் ஒருங்குறி முறை அவசியமாகிறது. தமிழ் தட்டச்சுக்கு எனத் தனியாக வன்பொருள் எதுவும் தேவையில்லை. வழக்கமான ஆங்கில எழுத்துகள் உள்ள தட்டச்சுக் கருவியே போதும். மென்பொருள்தான் மாறுகிறது.
தமிழில் எழுத தட்டச்சு பயில வேண்டும் எனும் அவசியம் இல்லை. ஆங்கிலத்தில் தமிழ் ஒலிக்கு ஏற்ப தட்டச்சு செய்தாலே போதும். amma எனத் தட்டச்சு செய்தால் அம்மா என வந்துவிடும். இதைத் தமிழ் ஃபொனடிக் தட்டச்சு என்பார்கள். இது தவிர தமிழ்நாடு அரசு அங்கீகாரம் பெற்ற தமிழ்99, இந்திய அரசின் அங்கீகாரம் பெற்ற தமிழ் இன்ஸ்க்ரிப்ட் எனப் பல உள்ளன. அனைத்துமே ஒருக்குறி எழுத்துருகள்தாம்.
விண்டோஸ் கணினியில் தமிழ் தட்டச்சு செய்ய வேண்டுமென்றால், செட்டிங்ஸில் உள்ள மொழி எனும் ஆப்ஷனைத் தேர்ந்தெடுக்க வேண்டும். எல்லா இந்திய மொழிகளையும் காண்பிக்கும். இந்தியத் தமிழ், இலங்கைத் தமிழ் எனப் பல வாய்ப்புகள் இருக்கும். தேவையானதைத் தேர்ந்தெடுத்தால் தமிழில் தட்டச்சு செய்ய முடியும். நடுவில் ஆங்கில வார்த்தை வேண்டுமென்றால் தட்டச்சுப் பலகையில் ஆங்கிலம் என மாற்றினால் போதும். மாற்றி மாற்றி எந்த மொழியில் வேண்டுமோ அந்த மொழியில் தட்டச்சு செய்துகொள்ள முடியும். தட்டச்சு மட்டுமின்றி விண்டாேஸில் தெரியும் எல்லா ஆங்கில வார்த்தைகளையும் தமிழ் டிஸ்ப்ளேவுக்கு மாற்றவும் முடியும். மெயில் என்பது அஞ்சல் எனவும், காலண்டர் என்பது நாள்காட்டி எனவும், செட்டிங்ஸ் என்பது அமைப்புகள் எனவும் எல்லாமே தமிழுக்கு மாறிவிடும். பிடிக்கவில்லை எனில் திரும்பவும் ஆங்கிலத்துக்கே மாற்றிக்கொள்ளலாம்.
திறன்பேசியிலும் இதே போலத்தான். செட்டிங்ஸ் பகுதியில் தமிழ் மொழியைத் தேர்ந்தெடுத்தால் போதும். கூகுள் கீபோர்ட் செயலியைத் தரவிறக்கம் செய்தால் பலகையில் எழுதுவது போலத் திறன்பேசித் திரையில் எழுதினாலே அதை எழுத்தாகப் புரிந்துகொள்ளும். விரலாே அல்லது அதற்கென்று இருக்கும் எழுதுகோலாே பயன்படுத்தலாம். தமிழில் பேசினாலும் வாய்ஸ் டைப்பிங் மூலம் எழுத்தாக மாற்றிக் கொடுக்கும் இந்தச் செயலி.
கணினியில் செட்டிங்ஸ் பகுதியில் மாற்ற விருப்பமில்லாதவர்கள் இணையத்தில் கிடைக்கும் பல தமிழ் தட்டச்சு தளங்களில் ஒன்றைப் பயன்படுத்தலாம். https://tamileditor.org/ எனும் தளம் கவனம் ஈர்க்கும் விளம்பரங்கள் இன்றி உபயோகிக்க எளிமையான தளம். தட்டச்சு செய்து காபி பேஸ்ட் செய்துகொள்ளலாம். தமிழ் தட்டச்சு, தமிழ் ஃபொனட்டிக் என இருவகையிலும் பயன்படுத்தலாம். தமிழ் ஃபொனட்டிக் என்றால் நீங்கள் தமிழில் யோசிக்கும் வார்த்தையின் ஒலி, அதற்குப் பொருத்தமான ஆங்கில எழுத்துகள் என மூளை அதிகம் வேலை செய்ய வேண்டியிருக்கும். தமிழ் தட்டச்சு தெரியும் என்றால் விரலின் (muscle memory) தசை நினைவுத்திறன் கொண்டே வார்த்தைகளைத் தட்டச்சு செய்யலாம். இதன் மூலம் தட்டச்சின் வேகம் கூடும் வாய்ப்புள்ளது. பயிற்சியும் பழக்கமும் இருந்தால் எந்த முறையிலும் வேகமாகத் தட்டச்சு செய்ய முடியும்.
இப்படி இணைய உதவியுடன் தட்டச்சு செய்பவர்களின் முதல் தேர்வாக இருப்பது கூகுள் ட்ரைவில் இருக்கும் கூகுள் டாக்ஸ். இது மைக்ரோசாப்ட் வேர்ட் மாதிரியான மென்பொருள். இதில் படங்களை இணைப்பது, காகித அளவுகளை வரையறுப்பது, எத்தனை வார்த்தைகள், எழுத்துகள் தட்டச்சு செய்யப்பட்டுள்ளன எனக் கணக்கு பார்ப்பது, அட்டவணை சேர்ப்பது மாதிரியான எல்லா வேலைகளையும் ஒரே இடத்தில் செய்ய முடியும். திறன்பேசி போல கையால் எழுதுவதும், குரல் தட்டச்சும்கூட சாத்தியம்.
கூடுதல் பலன்களும் உண்டு. தமிழ் தட்டச்சு, தமிழ் ஃபொனட்டிக், தமிழ்99 என எல்லாவித வாய்ப்புகளும் காண்பிக்கும். உங்களுக்கு விருப்பமானதைத் தேர்ந்தெடுத்து தட்டச்சு செய்யலாம். உங்கள் நண்பர் படித்து கருத்துச் சொல்ல வேண்டும் என நினைத்தால் கோப்பில் அவருடைய இமெயில் முகவரியை இணைத்து கோப்பினைப் பகிரலாம். படித்ததும் வரிக்குவரி கருத்துகளை கமெண்ட்டில் பதிய முடியும். எழுத்தை ஒட்டிய உரையாடலும் வாதப் பிரதிவாதங்களும் அந்தக் கோப்பின் ஓரத்திலேயே இருக்கும். எழுதி முடித்ததும் அந்தக் கோப்பினை வேர்ட் கோப்பாகவோ, பிடிஎஃப், டிஎக்ஸ்டி, இபப் என வேறெந்த வகைக் கோப்பாகவோ, விரும்பும் வகையில் தரவிறக்கம் செய்து கொள்ள முடியும்.
தீவிரமாக எழுதுபவர்கள் இப்படி எல்லா வேலையும் செய்யும் மென்பொருட்களைவிட எளிமையான மென்பொருளையே பயன்படுத்துகிறார். அதிகம் எழுதும்போது வெள்ளைத்திரையைத் தவிர மற்ற எல்லாமே கவனம் கலைப்பவை என நினைப்பதுதான் காரணம். எழுதி முடித்த பிறகு பிழைதிருத்துதல், புத்தக வடிவாக்கம் என அடுத்த நிலைக்கு அதிக ஆப்ஷன்கள் உள்ள மென்பொருட்களைப் பயன்படுத்துபவர்கள் பலர். இப்படித் தீவிர எழுத்தாளர்களுக்கு அவர்களின் வசதிக்கேற்ப எவர்நோட், ஃப்ரீடம் எனப் பலவித மென்பொருட்கள் சந்தையில் இருக்கின்றன.
எழுத்துப்பிழை மட்டுமின்றி இலக்கணப் பிழைகளைக்கூடச் சுட்டிக்காட்டும் பல மென்பொருட்கள் ஆங்கில மொழிக்கு இருக்கின்றன. தமிழிலும் இப்படி பிழை திருத்தவெனச் சில மென்பொருட்கள் உள்ளன. பெரும்பாலானோர் பயன்படுத்துவது வாணி (http://vaani.neechalkaran.com/) தளத்தைத்தான். நீச்சல்காரன் என்ற புனைப்பெயரில் கவிதை, கதை, கட்டுரை புத்தகங்கள் எழுதியுள்ள ராஜாராமன் தன்னுடைய சொந்தப் பயன்பாட்டுக்காக உருவாக்கிய இந்த மென்பொருளை மக்கள் பயன்பாட்டுக்காக இலவசமாகக் கொடுக்கிறார். இவர் விக்கிபீடியா கட்டுரை நிர்வாகியாகவும் உள்ளார். வாணி மென்பொருள் சொற்சொடர்களில் இருக்கும் எழுத்துப்பிழை, சந்திப்பிழை ஆகியவற்றைத் திருத்தித் தருகிறது. கூடவே தமிழகராதியும் இருக்கிறது இத்தளத்தில். புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் வாணி எடிட்டர் https://vaanieditor.com/ புத்தகங்கள், வலைப்பங்கங்கள் பிழைகளைத் திருத்த மிகப் பயனுள்ளதாக இருக்கும்.
இப்படி எழுதுவதை ஃபேஸ்புக் பக்கங்கள் மட்டுமின்றி ப்ளாக் எனப்படும் வலைப்பக்கங்களிலும் பதிவிடலாம். வலைப் பக்கங்கள் விளம்பர வருவாய் ஈட்டும் வாய்ப்பையும் கொடுக்கிறது. நிறைய எழுதினால் கிண்டில் போன்ற தளங்களில் புத்தகமாகப் பதிப்பிக்கலாம். படிப்பவர் எண்ணிக்கைக்கு ஏற்ப ராயல்டி கிடைக்கும். டிஜிட்டல் தளங்களில் தொடர்ந்து எழுதி, பின்னர் அச்சுத்துறையில் கால்பதித்த பிரபல எழுத்தாளர்கள் பலர் உள்ளனர். பயிற்சி, ஆர்வம், தொடர்ச்சியாக முயலும் குணம் இருந்தால் எழுத்தாளர் கனவு வசப்படும்.
(தொடரும்)
படைப்பாளர்:
இரா. கோகிலா. இளநிலை கணிப்பொறி அறிவியல் படித்தவர். சிறுவயதில் இருந்தே வாசிப்பில் ஆர்வம் உண்டு. புனைவுகளில் ஆரம்பித்த ஆர்வம் தற்போது பெரும்பாலும் பெண்ணியம், சமூகம், வரலாறு சார்ந்த அபுனைவு வகை புத்தகங்களின் பக்கம் திரும்பியிருக்கிறது. பயணம் செய்வது பிடிக்கும். கல்விசார்ந்த அரசுசாரா இயக்கங்களில் தன்னார்வலராகச் செயல்படுகிறார்.