கூகுள் ரிவர்ஸ் இமேஜ் ஸர்ச் பற்றித் தெரிந்துகொள்வதற்கு முன் நாம் கூகுள் எப்படி வேலை செய்கிறது எனப் புரிந்துகொள்ளவேண்டும். கூகுள் என்பது ஒரு தேடுபொறி. உலகளாவிய வலைத்தளங்களில் ஏற்கெனவே இருப்பவற்றைத்தான் நமக்கு கூகுள் விடையாகக் காண்பிக்கும். நாம் தேடும் வார்த்தை அல்லது படம் இதற்கு முன் யாரும் எந்த வலைத்தளத்திலும் பயன்படுத்தவில்லை எனில் கூகுள் இல்லை என்றுதான் கைவிரிக்கும். எப்படி கூகுளுக்கு இந்த வலைத்தளத்தில் இந்த வார்த்தை அல்லது படம் இருக்கிறது எனத் தெரியும்? குறிப்பிட்ட கால இடைவெளியில் எல்லா வலைத்தளத்தையும் க்ராவ்ளிங் செய்து இதைத் தெரிந்து வைத்திருக்கும்.

கூகுள் எப்படி வார்த்தைகளைத் தேடுகிறதோ அப்படிப் படங்களையும் தேடித்தரும். ஒரு படம் இதற்கு முன் வேறெந்த வலைத்தளத்தில் பதிவாகி இருக்கிறது எனப் பின்னோக்கித் தேடித்தருவதால்தான் கூகுள் ரிவர்ஸ் இமேஜ் ஸர்ச் எனப்படுகிறது. இப்படிப் படங்களைத் தேடுவதற்கு கூகுள் தளத்தில் மைக் ஐகான் அருகில் கேமரா போல இருக்கும் ஐகானை அழுத்த வேண்டும். https://images.google.com/ தளத்திற்கும் செல்லலாம்.

படத்தை ஏற்கெனவே பதிவிறக்கி வைத்திருந்தால் அந்தப் படத்தினை அப்படியே இழுத்துப்போட்டு, ட்ராக் அன்ட் ட்ராப் செய்யலாம். அல்லது அப்லோட் எ பைல் என்பதை க்ளிக் செய்து படத்தைப் பதிவேற்றலாம். ஒருவேளை அந்தப் படத்தைப் பதிவிறக்கம் செய்யவில்லை எனில் குறிப்பிட்ட படம் எங்கே இருக்கிறது என லிங்க்கை வைத்து தேடலாம். இங்கு லிங்க் எனச் சொல்வது வலைத்தளத்தின் லிங்க் அல்ல. படத்தின் லிங்க். எடுத்துக்காட்டாக https://herstories.xyz/srilanka-32/ இந்தப் பக்கத்தில் மாதோட்டம் பெயர்ப்பலகையின் படம் இருக்கிறது. இந்தக் குறிப்பிட்ட படத்தைத் தேட வேண்டுமெனில் மேலே கொடுத்திருக்கும் லிங்கைப் பயன்படுத்தக் கூடாது. குறிப்பிட்ட படத்தை இழுத்துப் புதிய டேப்பில் இட்டால் கிடைக்கும் லிங்கைத்தான் பயன்படுத்த வேண்டும். (https://herstories.xyz/wp-content/uploads/2022/11/download-1.jpeg) அல்லது படத்தின் மேல் மவுஸை வைத்து வலதுபுறம் க்ளிக் செய்தால் open image in new tab எனக் காண்பிக்கும். அதை அழுத்தினால் வரும் புதுப்பக்கத்தின் அட்ரஸ்பாரில் உள்ளதுதான் படத்தின் லிங்க். அதைத்தான் இட்டுத் தேட வேண்டும். தற்போது search image with google lens எனவும் காண்பிக்கிறது. அதைத் தேர்ந்தெடுத்தும் தேடலாம்.

கூகுள் இமேஜ் சர்ச் என்பது கணினிக்கும் கூகுள் லென்ஸ் என்பது திறன்பேசிக்கும் என ஆரம்பத்தில் இருந்தது. தற்போது இரண்டையும் ஒன்றாக்கி அதிகப் பயன்பாடுகளை அறிமுகப்படுத்தியுள்ளது கூகுள். ஒன் ப்ளஸ், சோனி உள்ளிட்ட பல திறன்பேசிகளில் படத்தின் மேல் வலது ஓரத்தில் கூகுள் லென்ஸ் இருக்கும். இல்லை என்றாலும்கூட கூகுள் லென்ஸ் செயலியைப் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

இதனால் என்ன பயன் என்கிறீர்களா? நம்முடைய தேவையையும் கற்பனைத் திறனையும் பொறுத்து பலவாறு இதைப் பயன்படுத்தலாம். ஓர் அழகான ஆடையின் படத்தைப் பார்க்கிறீர்கள். அதன் பெயர்கூட தெரியவில்லை. அந்தப் படத்தை கூகுள் லென்ஸில் தேடினால் அந்த ஆடை எங்கே கிடைக்கும்? விலை என்ன? அதன் சிறப்பு என்ன போன்ற தகவல்களைத் தெரிந்து கொள்ளலாம். அணிகலனோ அறைகலனோ எதை வேண்டுமானாலும் வெறும் படத்தைக் கொண்டே தேடித் தெரிந்துகொள்ளலாம். விருப்பமிருந்தால் வாங்கவும் செய்யலாம்.

பெயர் தெரியாத தாவரங்கள், பூக்கள், பறவைகள், பூச்சிகள் என எந்தப் படத்தைத் தேடினாலும் அதைப் பற்றிய பல தகவல்களை நாம் தெரிந்துகொள்ளலாம். குழந்தைகள் அதிக நேரம் திறன்பேசியை வைத்து விளையாடுகிறார்கள் என்பது நம் அனைவரின் புகாராக இருக்கிறது. வீட்டில் பறக்கும் பூச்சியோ அல்லது எறும்பையோ படம் எடுத்து அதைப் பற்றித் தேடிப் பார்க்கச் சொல்லுங்கள். பறவை, செடி, கொடி என வீட்டின் அருகில் இருக்கும் எதுவாகவும் இருக்கலாம். சுற்றுச்சூழல் பற்றிக் குழந்தைகள் அறிந்துகொள்ள இது ஒரு நல்ல வழி.

இது தகவல்களின் காலம். சமூக ஊடகங்களின் காலம். எப்படி மனிதர்களாகிய நாம் இந்தப் பூமியை குப்பைகளால் நிரப்பி வைத்திருக்கிறோமோ அப்படியே வலைத்தளங்களையும் போலிச்செய்திக் குப்பைகளால் நிரப்புகிறோம். ஏன், எதற்கு எனக் கொஞ்சமும் யோசிக்காமல் செய்திகளைப் பகிர்ந்துகொண்டே இருக்கிறோம். சில விநாடிகள் செலவு செய்து இந்தச் செய்தி உண்மையா எனச் சரிபார்க்கவோ அல்லது சிந்தனை செய்யவாே நம்மால் முடியாது. ஆனால், அந்தச் செய்தியைப் பொறுப்பில்லாமல் எல்லாருக்கும் பகிர முடியும்.

காயத்ரி என்ற ஐந்து வயது பெண்ணைக் காணவில்லை என்ற செய்தி பல ஆண்டுகளாக வந்துகொண்டே இருக்கிறது. படம் மாறும். இடம் மாறும். ஆனால், பெயரும் வயதும் அதேதான். நாம் பகிரும் செய்தியை ஒரு முறையாவது படித்தால் இது திரும்பத் திரும்ப வருகிறதே என்பதை உணர முடியும். ஆனால், நாம்தான் பார்த்ததும் ஷேர் செய்து விடுகிறாேமே.

ஒரு குறிப்பிட்ட செய்தி தொலைக்காட்சியின் நியூஸ் கார்டில் ஒரு பாேலிச்செய்தி பரப்பப்படுகிறது என வைத்துக்கொள்வோம். அந்தச் செய்திப்படத்தை கூகுள் இமேஜ் ரிவர்ஸ் ஸர்ச் செய்தால் அந்தப் படம் எங்கே யாரால் முதலில் வலைத்தளங்களில் பதியப்பட்டது எனக் கண்டறியலாம். find image source ஐ பயன்படுத்த வேண்டும். அது அந்தத் தொலைக்காட்சியின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்திலோ அல்லது சமூக வலைத்தளத்திலோ முதலில் பதிவாகவில்லை எனில் அது ஒரு போலிச் செய்தி எனச் சுலபமாக அறிய முடியும்.

இப்படிப் போலிச்செய்திகளை ஆராய்வதற்கு என்றே இருக்கும் யுடர்ன் (https://youturn.in/) போன்ற தளங்களைப் பின்தொடர்வதன் மூலம் போலிச்செய்திகள் குறித்த தகவல்களை உடனுக்குடன் அறியலாம். https://toolbox.google.com/factcheck/explorer என்ற கூகுள் தளத்திலும் செய்தி அல்லது நபரின் பெயரை இட்டு போலிச்செய்திகள் பற்றிய தகவல்களை அறிய முடியும்.

படத்தை வெறும் படமாக அன்றி எழுத்துகளாகவும் தேட உதவுகிறது கூகுள் லென்ஸ். இதன்மூலம் மொழி தெரியாத ஊருக்குச் சென்றாலும்கூடப் பெயர்ப்பலகை உள்ளிட்ட எதையும் அப்படியே மொழிபெயர்த்து அதில் என்ன இருக்கிறது எனப் படித்து தெரிந்து கொள்ளலாம். தொழில்நுட்ப வளர்ச்சியின் வேகம் பல மொழிகள் கற்று வைத்திருப்பது அவசியம் இல்லை என்றாக்கிவிட்டது.

காகிதத்தில் எழுதிய எதையும் கணிணிக்கு எழுத்தாக மாற்ற கஷ்டப்பட்டு தட்டச்சு செய்ய வேண்டாம். கூகுள் லென்ஸ் பயன்படுத்தி டெக்ஸ்ட்டை க்ளிக் செய்தால் எழுத்துகளை அப்படியே காப்பி செய்துகொள்ளலாம். கையெழுத்து சுமாராக இருந்தால் சில எழுத்துப் பிழைகள் வரும். ஆனால், சில பக்கங்களைத் தட்டச்சு செய்வதைவிட பிழைகளைத் திருத்துவது எளிதுதான்.

உங்களுடைய ஓவியம், புகைப்படம் போன்ற கலைப்படைப்புகளை உங்கள் சமூகவலைத்தளத்தில் பதிவிடுகிறீர்கள். அதை அனுமதியின்றி பலரும் பயன்படுத்துகிறார்கள். எனில் உங்கள் படைப்பை இமேஜ் ஸர்ச் செய்தால் அப்படி யார் யார் எல்லாம் பயன்படுத்துகிறார்கள் எனத் தெரிந்துவிடும். காப்புரிமை நடவடிக்கைகளை எடுக்கலாம். இப்படித் தேவையைப் பொறுத்து பல விதங்களில் உபயோகமாகிறது கூகுள் லென்ஸ்.

(தொடரும்)

படைப்பாளர்:

இரா. கோகிலா. இளநிலை கணிப்பொறி அறிவியல் படித்தவர். சிறுவயதில் இருந்தே வாசிப்பில் ஆர்வம் உண்டு. புனைவுகளில் ஆரம்பித்த ஆர்வம் தற்போது பெரும்பாலும் பெண்ணியம், சமூகம், வரலாறு சார்ந்த அபுனைவு வகை புத்தகங்களின் பக்கம் திரும்பியிருக்கிறது. பயணம் செய்வது பிடிக்கும்.  கல்விசார்ந்த அரசுசாரா இயக்கங்களில் தன்னார்வலராகச் செயல்படுகிறார்.