இன்றுமுதல்… வேண்டாம். யோசிக்க உங்களுக்கு நேரம் தரவேண்டும் இல்லையா? சரி, நாளைமுதல் நீங்கள் பேசவோ எழுதவோ கூடாது எனச் சொன்னால் என்ன செய்வீர்கள்? காதலர்கள், கண்களால் பேசிக்கொள்வார்கள். பாவம், நாம் என்ன செய்வோம்?
“இனி, மேலதிகாரியிடம் பேச வேண்டாம், இல்லையா?” என நிம்மதி தேடும் பெற்றோரின் குரலும், “வீட்டுப்பாடம் எழுத வேண்டாம், இல்லையா?” எனக் கண்களை விரித்துக்கேட்கும் பிள்ளைகளின் ஆர்வமும் நீங்கள் வாய்திறந்து பேசாமலே புரிந்துவிட்டது. ஏதாவது முக்கியமாகப் பேச வேண்டியிருந்தால் சட்டுபுட்டென்று பேசிவிட்டு வாருங்கள். புலனம் (Whatsapp), படவரி (Instagram), வலையொலி (Youtube) இவற்றிற்கெல்லாம் ஓய்வு கொடுங்கள். ஏனென்றால், இப்போது நாம் சொ(செ)ல்லப் போவது இவையெதுவும் இல்லாத, நாம் கடந்து வந்த காலம் பற்றியது.
வேட்டையாடிப் பசியைத் தீர்த்துக்கொண்ட மனிதர், தான் பார்க்கும் விலங்குகளும் பறவைகளும் ஒலி எழுப்புவதைப் போலச் செய்து (Imitation) பார்க்கிறார். அவர், உணர்ச்சிகளை வெளிப்படுத்தும்போது ஆ, ஊ முதலிய குரல் ஒலிகள் பிறந்தன. பேச இயலாதவர்கள் சைகைகள் மூலமாக உரையாடிக் கொள்வதைப் போல் தொடக்கக் கால மனிதரும் தலை, கைகள், விரல்களை அசைத்துக் கருத்துப் புலப்படுத்தினார்.
சமீபத்தில் வெளிவந்த சினிமா பாடல்களை எளிதாக நினைவில் வைத்துக் கொள்கிறோமே எப்படி என்ற கேள்வி எப்போதும் எழுமல்லவா?. ஆராய்ந்து பார்த்தால் உண்மை புலப்படுகிறது. பாட்டு வடிவமே உரைநடையை விடப் பழமையானது. ஆகவே, எதுகை, மோனை, இயைபு என நயங்கள் கொண்ட பாட்டினை வேகமாகக் கற்கிறோம். அப்படியென்றால், சங்க இலக்கியம்கூட பாட்டு வடிவில்தானே இயற்றப்பட்டுள்ளது? அதைப் படிக்க ‘உரை’ ஏன் தேவைப்படுகிறது என்ற கேள்வி தோன்றுவது இயல்பே. இன்றைய பாடல்களில் கையாண்டுள்ள வழக்குகள் தற்காலப் பயன்பாட்டில் உள்ளவை. ஆனால், சங்க இலக்கியப் பாடல்களிலுள்ள சொற்கள் வழக்கிழந்து போனவை. எனவே, உதவிக்கு உரைகளை நாடுகிறோம்.
சரி, விஷயத்திற்கு வருவோம். பாவனை, குரல் ஒலி, சைகை, பாட்டு ஆகியவற்றின் கலவையாக மொழி தோற்றம் பெறத் தொடங்கியது. வரலாறோ இப்படியிருக்க, வடமொழியைப் பாணினியும் தென்மொழியை அகத்தியரும் உருவாக்கினார்கள் எனச் சொல்வது மடத்தனம். அதேபோல தாந்தேவால் இத்தாலி மொழியும் சாசரால் ஆங்கில மொழியும் மார்டின் லூதரால் ஜெர்மன் மொழியும் தோன்றவில்லை. அம்மொழிகளின் வளர்ச்சிக்கு அவர்களின் பங்களிப்பு இன்றியமையாதது எனக் கூறுவதே சாலப் பொருந்தும்.
“மொழியைப் பொறுத்தவரையில், தனிமனிதன் ஆட்சி இல்லை; மக்கள் பலரும் உடன்பட்டு நடத்தும் குடியாட்சி முறையே உள்ளது”, என அமெரிக்க மொழியியலாளர் விட்னி மொழியின் இயக்கத்தைக் கூறியுள்ளார். இந்திய நிலப்பரப்பில் பரவியுள்ள கட்டுக்கதைகளை மனதில் வைத்து, முதன்முதலில் தமிழில் முதுகலைப் படித்தவரான திருமணம் செல்வக் கேசவராயர், “ஈதெல்லாம் புராணக் கற்பிதம். ஒரு பாஷையை ஒருவர் தாமே உண்டாக்கினார் என்பது பாஷா தத்துவ சாஸ்திர முடிவுக்கு முற்றும் முரண்பாடாகும்”, என தெளிவான பதிலைத் தந்துள்ளார்.
எழுத்து, பேச்சு என இரண்டு வழக்குகளைக் கொண்டது மொழி. பேச்சு வடிவிலான மொழி குறுகும் தன்மை கொண்டது. எழுத்து வடிவமோ, மொழி சிதையாமல் காப்பதைக் கடமையாகக் கொண்டிருக்கும். இன்றைக்கு இவ்விரண்டுமே மாற்றம் கண்டுள்ளன. முன்னோர் ஒலித்தவாறு சொற்கள் நம்மால் ஒலிக்கப்படுவதில்லை. பலவகையான மாறுதல்களைப் பெற்று, இன்றைய நிலையைச் சொற்கள் எட்டியுள்ளன. ஆங்கிலத்தில் உள்ள Had என்னும் சொல், Habaidedeime என்ற சொல்லின் திரிபு. எந்தச் சொற்கள் பேச்சில் அடிக்கடி பயன்படுத்தப்படுகின்றனவோ, அந்தச் சொற்களில் திரிபு மிகுதியாக உண்டாகிறன. நாலசை அல்லது ஐந்தசையாக இருந்த சொற்கள், இன்று ஓரசை அல்லது ஈரசையாகத் தேய்கின்றன. இனி திரிவதற்கு இடமில்லை என்ற எல்லைக்கு வந்த பிறகு திரிபடையாமல் நிற்கும். மக்கள் வேண்டுமென்றே இவற்றைச் செய்வதில்லை; அறிந்து செய்வதுமில்லை; தங்களை அறியாமல் இயல்பாகவே செய்கின்ற மாறுதல்களாகும். இலக்கண ஆசிரியர்கள், இதனை மரூஉ எனக் குறிப்பிடுகிறார்கள்.
இது, சொற்கள் திரிதல் அல்லது சுருங்கி ஒலித்தலைக் குறிக்கின்றது. எடுத்துக்காட்டாக, திருநெல்வேலி என்பது நெல்லை என்றும் கோயம்புத்தூர் என்பது கோவை என்றும் மருவியுள்ளன. ஊர்ப்பெயர்கள் மட்டுமின்றி இருக்கிறது என்ற படர்க்கை ஒருமை வினைமுற்று சொல்லானது இருக்குது, இருக்கு, கீது எனச் சுருங்கி வழங்கப்படுகின்றது. இம்மாற்றம் கண்டு சொற்பிறப்பு ஆராய்ச்சியாளர்கள், இலக்கியவாதிகளில் ஒரு பிரிவினர் மொழிச் சிதைவு என வருந்தினாலும் அன்றாடம் இம்மொழியைப் பயன்படுத்தும் மக்களுக்கோ, சொற்கள் பொருள் உணர்த்தி நிற்பது போதுமானதாகும்.
‘பழையன கழிதலும் புதியன புகுதலும்
வழுவல கால வகையி னானே’
என மேற்காணும் இரு வரியைப் போகி நாளில் சமூக ஊடகங்களில் பார்த்திருப்போம். நன்னூல் சொல்லதிகார இறுதியில் புறநடையாகச் (விதிவிலக்கு) சொல்லப்பட்டுள்ள இச்சூத்திரம் எல்லாவற்றுக்கும் பொருந்தக்கூடியதாக அமைந்துள்ளது. காலப்போக்கில் பழைய வழக்குகள் ஒழிந்து, புதுப்புது வழக்குகள் உற்பத்தியாவதைக் கண்கூடாகப் பார்க்கிறோம்; நாமும் அவற்றிற்குப் பங்களிக்கிறோம்; பழகுகிறோம். அரசியல், சமயம், வணிகம் தொடர்பாக ஒரு நாடு மற்றொரு நாட்டுடன் தொடர்பு கொள்ளும்போது மொழிக் கலப்பு ஏற்படும். ஐரோப்பியர்களின் வருகைக்குப் பிறகு போர்ச்சுகீசு, பிரெஞ்சு, ஆங்கிலம் போன்ற மொழிகளின் சொற்கள் தமிழில் கலந்தன. அலமாரி, மேசை ஆகியன போர்ச்சுகீசியர் மூலம் தமிழுக்குள் வந்தன. இன்று தமிழ்ச் சொற்களாகவே அவை மாறிவிட்டன.

1956ஆம் ஆண்டு மொழி அடிப்படையில், இந்திய மாநிலங்கள் பதினான்காகப் (14) பிரிக்கப்பட்டன. மொழி, நம்மை மற்றவர்களிடமிருந்து பிரித்துள்ளது எனச் சொல்வது தவறு. மொழி ஓர் அலகாகப் (unit) பயன்படுத்தப்பட்டு, மக்களை ஒருங்கிணைக்கும் பணியினை மேற்கொண்டுள்ளது என்பதே சரி.
கருத்துப் பரிமாற்றத்திற்காக மொழி என்னும் கருவியை வளர்க்க வேண்டிய சூழல் மக்களுக்கு இயல்பாக உருவானது. மொழி, ஆற்றல் வாய்ந்த ஊடகமாகச் செயல்படத் தொடங்கியது. நாளடைவில் பேச்சு வடிவப் பயன்பாட்டிலிருந்த மொழி, எழுத்து வடிவம் பெற்றது. காகிதம் மற்றும் அச்சு இயந்திர வருகை திருப்புமுனையாக அமைந்தன. இலக்கியம், இதழியல் ஆகியவை மொழியை அடுத்த கட்டத்திற்கு நகர்த்திச் சென்றன. கணினியில் மொழியை உள்ளீடு செய்ததும், இதற்குப் பின்னர் பெரும் மாற்றம் ஏற்படப் போவதில்லை என்ற முடிவுக்கு வந்துவிட்ட நிலையில், செயற்கை நுண்ணறிவின் வருகை ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் ஒருசேர அளித்தது. இவை எல்லாவற்றிற்கும் ஆணிவேராக இருப்பது மனித இனத்தின் உச்ச கண்டுபிடிப்பான ‘மொழி’தான். உணவு, உடை, இருப்பிடம் என்பன மனிதர்களின் அடிப்படைத் தேவைகளாகும். இவை போன்றே மொழியின்றியும் மனிதர்கள் வாழ்வது கடினம்.
மொழி என்பது வெறுமனே கருத்துப் பரிமாற்றத்துடன் நின்றுவிடுவதில்லை. அது சமூகத்தையும் பண்பாட்டினையும் பிரதிபலிக்கும் கண்ணாடியாக விளங்குகிறது. ‘சமுதாயப் பொருளான’ மொழி, நெகிழ்வுத்தன்மை கொண்டது. வீட்டில் பேசுவதைப்போன்று அலுவலகத்திலோ, படவரியில் தகவல் பரிமாறுவதைப் போன்று மின்னஞ்சலிலோ, நண்பரிடம் அளாவுதலைப் போன்று உறவினரிடமோ, தங்கையைத் திட்டுவதைப் போன்று மனைவியையோ, கூகுளிடம் வினா தொடுப்பதைப்போன்று செயற்கை நுண்ணறிவிடமோ இருந்திட முடியுமா என்று கேட்டால் இடம், நபர், காலம் ஆகியவற்றுக்கு ஏற்ப மொழி மாற்றம் பெறுவதைக் காண்கிறோம்.
ஆட்சித்துறை, திரைப்படத்துறை, கல்வித்துறை முதலியவற்றுக்கென மொழி வழக்குகள் கையாளப்படுவதைப்போன்று சமூக ஊடகங்களும் தங்களுக்கென்று மொழி வழக்காறுகளையும் கருத்துப்புலப்பாட்டு முறைகளையும் பின்பற்றுகின்றன. இவையும் நம்மை அறியாமலே அன்றாடப் பயன்பாட்டில் பர்கர், பீட்சா போன்று நுழைந்து இயல்பாகிவிட்டன.
சமூக ஊடகங்கள் எல்லையற்ற சுதந்திரத்தை வழங்கி கொண்டிருக்கின்றன. திறன்பேசி பயன்படுத்தும் ஒவ்வொருவரும் சமூக ஊடகங்களில் கணக்கு (Account) வைத்துள்ளனர். Memes, Emojis, stickers மூலமே கருத்துப் பரிமாற்றங்கள் நிகழ்கின்றன. தமிழில்தான் அளாவுகிறோம்; ஆனால், தமிழில் இல்லை. தமிழ் மட்டும் ஆங்கில எழுத்துகளால் எழுதப்படுவதில்லை; ஹிந்தி (ஹிங்கிலிஷ்), மலையாளம் (மங்கிலிஷ்) முதலிய இந்திய மொழிகளும் ஜெர்மன், இத்தாலி போன்ற உலக மொழிகளுகூட ஆங்கில எழுத்துகளால் ஒலிபெயர்த்து (Transliteration) எழுதப்படுகின்றன. இவற்றிற்குக் காரணம் சமூக-பண்பாட்டு மாற்றங்களின் விளைவுகளே.
மொழி என்பது நம் ஒவ்வொருவரின் அடையாளமாக நாம் எங்குச் சென்றாலும் பின்தொடர்கிறது. கருத்துப்புலப்பாட்டுக் கருவியாகப் பயணத்தைத் தொடங்கிய மொழி, இன்று பல நிலைகளைக் கடந்து சமூக ஊடகங்கள் வழி அதிகாரம் பெறவும் அடிகோலுகிறது. உலகம் திறன்பேசிக்குள் சுருங்கியதைப் போன்று மொழியும் சுருங்கி வருகிறது. விரிவாக இவற்றைக் குறித்துச் சிந்திப்பதற்கும் விவாதிப்பதற்குமான காலம் கனிந்துவிட்டது. கருத்தைப் பகிர்ந்துவிட்டுக் காத்திருங்கள். கொஞ்சமேனும் தினமும் வாசியுங்கள்.
தொடரும்…
படைப்பாளர்

கோதாமணி
தமிழ் மாணவர். எழுத்திலும் பேச்சிலும் வாசிப்பிலும் ஈடுபாட்டுடன் இயங்கி வருகிறார்.





