“அவனுக்குத்தான் இது புதுசு. அவளுக்கொன்னும் இது புதுசில்லையே! அவளுக்கென்ன மொறையெல்லாம் பார்க்க வேண்டியிருக்கு” என்று மட்டைக்காயை உரித்துக்கொண்டே ராணி கேட்டாள்.
“அதெல்லாம் ஒனக்குப் புரியாது ராணி, எல்லாம் அந்தந்த மொறைப்படி நடந்தாகணுந்தேன்” என்று நாய்க்குச் சோற்றைக் கொட்டிக்கொண்டே ராசம் சொன்னார்.
“ஆனா, ஒன் மருமவ போன சென்மத்துல வலுவா புண்ணியத்தைக் கட்டிருக்கா, இல்லேன்னா ஒன்னை மாதிரி ஒரு மாமியா அவளுக்கு வாச்சிருக்குமா?”
“சனாதிபதி விருதா வாங்கப் போறேன்? போடி போயி கொழம்பை எறக்குடி. ஒன் புருசன் ட்டான்னு மணியடிச்சாப்ல சோத்துக்கு வந்துருவான்.”
ராணியும் ராசமும் அவ்விடம் விட்டு அவரவர் வீட்டிற்கு நகர்ந்தனர்.
ராணி உரித்துப் போட்டிருந்த தேங்காய் மட்டையைப் பொறுக்கிக் கொண்டு பின்வாசலுக்குச் சென்றார் ராசம். ஏற்கெனவே குவிக்கப்பட்டிருந்த உரி மட்டைகளுடன் கையில் வைத்திருந்ததையும் வீசிவிட்டு, “சமையலு ஆச்சா?” என்றார்.
பின்வாசல் தாண்டி சுவரோடு இணைக்கப்பட்ட கொட்டகை ஒன்றிலிருந்து, “இந்தா தாளிக்கப் போறேன், ஆயிட்டு” என்றாள் லதா.
“சின்னவன் சோத்துக்கு வார நேரம். அவனுக்கு ஆறிப்போய் இருக்கணும் எல்லாமே. சீக்கிரம் அடுப்பை உட்டு எறக்கி காத்தாடிக்குக் கீழ எல்லாத்தையும் கொண்டாந்து வையி. அடுத்த வாரம்லாம் நீதான் பரிமாறணும்.”
தான் நிற்கும் திசைப்பக்கமே வராதவனுக்கு, அவன் வந்தால் ஓடி மறையும் தான் எப்படிப் பரிமாறப் போகிறோம் என்பதை நினைத்து அடுப்புக்கனலுடன் லதாவின் உடலும் கொதித்து வியர்த்திருந்தது.
தன்னைப் பெண் கேட்டு ராசம் வந்தபோது அவளுடன் ஒல்லிக்குச்சியாக ஒட்டிக்கொண்டு வந்தவன் குமார். காபியைக் கொடுக்கக் குனிந்தபோது படக்கென பார்வையைத் திருப்பிக்கொண்டான். அண்ணன் பொண்டாட்டிதான், அண்ணி என்று ஒரு நாளும் அழைத்ததில்லை.
ஆத்திர அவசரத்துக்குக்கூடப் பின்வாசல் கொட்டகைக்கு அவன் வந்ததே இல்லை. லதாவைவிட மூன்று வயதுதான் அவன் இளமை என்றாலும் அவளுக்கென்று ஒரு மரியாதையை அவனே உருவாக்கி வைத்திருந்தான்.
தன் கல்யாணத்திற்கு முதல் நாள் சாயங்காலம்தான் லதா சிவாவைப் பார்த்திருந்தாள். சிவா நல்ல உயரம் நல்ல சிவப்பு.
“அடியே லதா, இந்த ராசம் பொல்லாக் கெழவிடி, கருவாகுறிச்சி திருவிழாவுல உன்னையக் கண்டதும் ரெண்டே மாசத்துல மவனுக்கு எழுதிப்புட்டா பாரேன்! அவனுக்கேத்த வாட்டத்துல பொண்ணைத் தேடிப் புடிச்சிருக்காடி” என்று லதாவின் தோழிகள் ராசத்தைப் பரிகாசம் செய்வதாக, சிவாவைக் கற்பனையில் தழுவிக் கொண்டிருந்தார்கள்.
பெண்ணும் மாப்பிள்ளையும் ஒளிந்து மறைந்துகூடப் பேசிக்கொள்ள முடியா வகையில் அவசர கதியில் தேதி குறித்தாயிற்று. லதாவிற்கு உள்ளுக்குள் ஒத்திகை போய்க்கொண்டே இருந்தது. ஐயர் மந்திரங்களைச் சொல்லி சாங்கியங்களை அனுசரிக்கும் போதும் மனதிற்குள், அவள் கழுத்திற்குள் அவன் புதைந்துகொண்டிருப்பது போல் கற்பனை நீண்டது.
ஒலிக்கும் காதல் பாட்டுகளில் வலுக்கட்டாயமாக இரவை அமைத்து, அதில் தன்னையும் அவனையும் பொருத்தி உடல் வளர்த்துக்கொண்டிருந்தாள் லதா.
அவள் கனவுகளின் கரைகளையெல்லாம் அகலப்படுத்தியிருந்தான் சிவா. உருவப் பொருத்தம் போல் மனப்பொருத்தமும் ஊரெங்கும் மணந்தது.
ராசத்திற்கு ஏற்ற மருமகள். வம்பு தும்பிற்கு வழியற்றுப் போய்க்கொண்டிருந்தது வாழ்வு. ஆண் ஒன்று, பெண் ஒன்று என அடுத்தடுத்து பேரப்பிள்ளைகள். சின்னவனுக்குப் பெண் பார்க்க அவன் கட்டத்தைத் தூக்கிய காலம்.
விடிகாலையிலேயே வயலுக்குப் போயிருந்த சிவா வேகமாக வந்து, தன் வண்டி சாவியைத் தேடி ஓடினான்.
“எலே பெரியவனே! என்னாடா நாலு கால்ல ஒடியாற?” திண்ணையில் கால் நீட்டி உட்கார்ந்திருந்த ராசம் கேட்டார்.
“ஒன்னுல்லம்மா இந்தா வந்துடறேன்” என்று வண்டியை உதைத்துக் கிளப்பிப் பறந்தான் சிவா.
அவன் மறைந்த அரை நொடிக்கெல்லாம் சின்னவன் குமார் ஓடிவந்தான்.
“அம்மா, அண்ணே எங்க?”
“இப்பத்தானடா வண்டியை எடுத்துட்டு போறான். நீ என்னடா இப்படி ஓடியாந்துருக்க? என்னடா நடக்குது சொல்லித் தொலைங்கடா. நெஞ்செல்லாம் தெறிக்குது” என்று படபடப்பாக வியர்த்தாள் ராசம்.
“அம்மா, அண்ணனைப் பாம்பு கடிச்சிட்டாம், இப்பதான் முத்துப்பய ஓடியாந்து சொன்னான்.”
“ஐயோ… என் புள்ள… அவன் வண்டில போய்ருக்கானேடா.
அவன் நெஞ்சு துமுறுக்கு ஓச்சல் இல்லாம போய்ருக்கான். ஓடுடா அவன் பின்னாலயே ஓடுடா சின்னவனே. என் புள்ளய கொண்டாந்துடுடா சின்னவனே…” சாணி கொண்டு மெழுகியிருந்த மண் தரையில் புரண்டு உடலெல்லாம் மண் துகளாக உருண்டார் ராசம்.
நிலைப்படியில் சரிந்து ராசத்தின் புழுதியில் புருசனைத் தேடிக்கொண்டிருந்தாள் லதா. நெஞ்சு வீங்கி வாய் வரை வந்தது போல் ரத்த நாளங்கள் புடைத்தன. வாசல் பந்தலின் நிழல் தாண்டி விரிந்திருந்த வெளிச்சத்தில் கறுப்பு வண்ணம் ஒழுகிக்கொண்டிருந்தது.
தானாகவே சென்று தன்னைக் காத்துக்கொள்ள முயன்ற சிவா, மருத்துவமனை வாசல் வரை மட்டுமே உயிரைக் கொண்டு சென்றிருந்தான். வண்டியுடன் சரிந்தவன் சடலமாக வீடு வந்தான்.
ராசத்தையும் லதாவையும்விட அவன் பிள்ளைகளின் அழுகை ஊரையே இடித்து வைத்திருந்தது. “அப்பாவை எழுப்பு சின்னப்பா?” என அடம்பிடித்த சிவாவின் மகனைக் கட்டிக்கொண்ட போதுதான் குமார் வாய்விட்டு அழுதான்.
காரியங்கள் எல்லாம் முடிந்து வீடு அதன் உரிமையாளர்களுடன் மட்டும் வாழ ஆரம்பித்தது. பேரப்பிள்ளைகளை அழைத்துச் செல்ல லதாவின் அப்பா வந்திருந்தார்.
“ஒரு மாசம் புள்ளைக எங்ககிட்ட இருக்கட்டும், புள்ளைக ஏங்கிக் கெடக்கு” என்று பதுவிசான குரலில் பேசினார் லதாவின் அப்பா.
“அதல்லாம் சரியா வராது. இப்ப நான் யாரையும் எங்கயும் அனுப்புறதா இல்ல” என்றார் ராசம்.
“என் பொண்ணை இந்தக் கோலத்துல ஒங்களை நம்பி எப்புடி உட்றது?” மனதில் வைத்திருந்த கங்குகளை வார்த்தைகளில் அடுக்கி வைத்தார் லதாவின் அப்பா.
“என் ஊட்டுக்குக் கட்டி அனுப்பிட்டில்ல அத்தோடு முடிஞ்சது ஒன் கணக்கு, மீதிப் பேச்சுக்கெல்லாம் ஒன் கொரலுக்கு இங்க சோலியில்ல, நடையக்கட்டு” என்று ராசம் எழுந்து உள்ளே சென்றார்.
அப்பனைக் கட்டிக்கொண்டாள் லதா. “யப்பா, நீ பயப்படாத, நான் நல்லாத்தான் இருப்பேன். என் புள்ளைக இங்க இருக்குறதுதான் சரி. என்னைய அங்க கூப்ட்டுப் போயி அண்ணனுக்கும் அவன் பொண்டாட்டிக்கும் சச்சரவாக்கிடாத. இந்தக் கெளவி வெடுக்குன்னு பேசுவாளே ஒழிய தன் குட்டியளை உட மாட்டா. நீ அஞ்சாம போப்பா. என் புருசன் ஆவி தாங்காதுப்பா நான் இங்க இல்லன்னா.”
பேரப்பிள்ளைகளைக் கொஞ்சிய பிசுபிசுப்பு காற்றில் ஊற ஊர் போய்ச் சேர்ந்தார் லதாவின் அப்பா.
பிள்ளைகள் அடுத்த வகுப்பிற்குத் தேறியிருந்தார்கள். முதல் நாள் வரை காய்ந்த பூ வைத்திருந்த சிவாவின் படத்தில் சந்தனம் குங்குமம் வைக்கப்பட்டு மாலைகள் அடுக்கப்பட்டிருந்தன. முதல் வருட தெவசம் முடிந்து பந்தி போய்க்கொண்டிருந்தது. அவனின் சடலத்தின் முன்பு இரைந்த சோகம் இப்போது யாரிடமும் இல்லை. லதாவிடம் மட்டும் ஒரு சோர்வு தெரிந்தது. பிள்ளைகள் அப்பனைத் தேடவில்லை, விளையாட்டில் ஒளிந்து மறைந்திருந்தனர்.
“இவ என்னாடி ராசம் பொடுசா ஒரு பொட்டு வச்சிருக்காளே!” ராசத்தின் உறவுக்கார கிழவி லதாவைக் காட்டி ராசத்திடம் கேட்டார்.
“என்னாயிப்ப அதுக்கு? அவ மொகரைய பொட்டு இல்லாம காண சகிக்காது. வச்சுட்டு போறா போ” என்று ராசம் முடித்தார்.
“எள வயசுக்காரி புருசன் இல்லாம இருக்கா, நீதான் கொல்லிக்கட்டையா எரிஞ்சி காக்கணும்” என்ற மூத்த கிழவி பாக்கு உரலை இடித்தார்.
“எனக்கு எல்லாம் தெரியும், நீ இடிச்சலை நிறுத்திட்டு ஊட்டைப் பார்க்க கெளம்பு” என்று முந்தியை உதறி வாசலைக் காட்டினார் ராசம்.
அன்றிலிருந்து மூன்றாம் மாதம் சின்னவனிடம் பேச்சை எடுத்தார் ராசம்.
“எம்மா, என்னாம்மா பேச்சு பேசுற நீ? அது அண்ணிமா, என் அண்ணோட பொண்டாட்டி. அதைப் போய் நான் எப்புடி கட்றது?”
“ஆமா அண்ணிதான் ஆரு இல்லன்னா, ஆனா இன்னிக்கி அண்ணன் இல்லியே… அவன் எடத்துல நான் யாரை நிறுத்துறது?”
“அதுக்குன்னு இந்த அசிங்கத்தைப் பண்ணுவியா?”
“எல எதுடா அசிங்கம்? அவன் அவன் கூடப் பொறந்தவன் இருக்கப்பவே அவனுக பொண்டாட்டியைக் கவுத்து போட்ருக்கானுக. உனக்கென்ன கேடுங்குறேன்?”
“உனக்குக் கூறு கெட்டுப் போச்சும்மா. ஒரு பொம்பள அதுவும் நாலு வெவரம் தெரிஞ்ச நீ இந்தப் பேச்சுப் பேசக் கூடாதும்மா. என்னை இதுக்கு மேல வற்புறுத்தாத ஆளை உட்றி ஆத்தா” என்று கையெடுத்துக் கும்பிட்ட வடிவிலேயே வாசல் பந்தலைவிட்டு வெளியேறினான் குமார்.
அவன் எப்போது போவான் எனக் காத்திருந்தவள் போல வீட்டிற்குள்ளிருந்து ஓடிவந்து பந்தலில் நின்று கொண்டிருந்த ராசத்தின் கால்களில் விழுந்தாள் லதா.
“என்னையும் என் புள்ளைகளையும் உட்ரு அத்தே! நாங்க எங்கயாச்சும் போய்ப் பொழச்சிக்கிறோம். இப்புடிச் சேத்தை வாரி என் வாழ்க்கைல வீசாத அத்தே!” பந்தலின் கால்கள் குலுங்க குலுங்க சத்தமிட்டு அழுதாள் லதா.
“சேத்தைக் கொலைக்கிறேந்தான், ஆனா பொக்கரையப் பூசத்தான். ஆம்பள இல்லாம இந்த வயசைக் கடத்துறது எம்புட்டு ரப்சர்னு எனக்குத் தெரியும்டி நல்லாவே, ஒனக்கு முன்னடி தாலி அறுத்தவ சொல்றேன், என் பேச்சைக் கேளு” என்று திண்ணையில் நின்றவாறே சொம்பு நீரை வாசல் பந்தலில் விசிறினார் ராசம்.
“நான் கேட்டனா புருசன் வேணும்னு?” லதா நெஞ்சை விடைத்தாள்.
“என் பேரைப்புள்ளையளுக்கு அப்பன் வேணும்” என்று ராசம் அழுத்தமாக அமர்ந்தாள்.
“எவன் பெத்ததுக்கு எவன் அப்பன்?”
“ரெண்டும் நான் பெத்ததுதான். ஒருத்தன் உட்டுட்டு போனதை மிச்சமிருக்கவனை வச்சி கரையேத்துவேன்” என்று விசிறி மட்டையை விசிற ஆரம்பித்தார் ராசம்.
“என் புள்ளைக வந்ததும் நான் கெளம்புறேன்” என்று லதா நகர்ந்தாள்.
“என் கட்டையைத் தாண்டி ஒரு துரும்பு வெளியேற முடியாது தெரிஞ்சிக்க, சர்பம் மூத்தவனைக் கொண்டு போய்ட்டு ஏமாந்துட்டேன். இனி ஏமாற மாட்டேன். வீணா புடிவாதம் புடிச்சி புள்ளைகள வீதியில உட்றாத, என் காலம் முடியிறதுக்குள்ள ஒங்க எல்லாரையும் கரையேத்தி உட்ருவன். ஒனக்குப் புருசன் வேணாம்னா தாராளமா நீ தள்ளி வாழ்ந்துக்க. ஆனா, ஊரு கண்ணுக்கு நீ சின்னவன் பொண்டாட்டிதான் இனி” என்று முந்தானையைப் பாயாக்கிப் படுத்துக்கொண்டார் ராசம்.
சின்னவனுக்கும் அதே சலுகை கொடுக்கப்பட்டது. “அண்ணின்னு தோனுச்சின்னா அவளை நீ பொழங்க வேணாம். ஊரு கண்ணுக்கு அவளைப் பொஞ்சாதியா நடத்திக்க” என்று கல்யாணத்திற்குத் தேதி குறித்தாயிற்று.
இப்பொழுதெல்லாம் குமாரின் வருகையை லதா எதிர்பார்ப்பது அவளுக்கே நெருடலாக இருந்தது. ஏன் இப்படிப் படபடப்பாக இருக்கிறது என்று தன்னைத்தானே சோதித்துக்கொண்டாள்.
தன்னையறியாமலே உடல் அவனுக்காகத் தயாரானதை அவளால் ஒப்புக்கொள்ளவே முடியவில்லை. இறந்தவன் ஆன்மா மீது இப்பொழுதெல்லாம் ஒரு பயத்தை வளர்த்து வந்தாள். ஆசை தீரத்தீர புதுத்தீ வளர்த்து தினம் தினம் அவளிடம் பொசுங்கியவனைப் பாம்பு கொண்டு போகும் என அவள் அறிந்திருக்கவே மாட்டாள். உலகம் சொல்லி வைத்த ஒருவனுக்கு ஒருத்தியை இதற்கு முன் யாரும் கடந்து அவள் கண்டதில்லை. இன்னொருவனைச் சேர்வதில் அச்சம் இருந்தாலும் உள்மனம் புதியதோர் சாகசத்திற்கு அவளை உந்தியது. குமார் எப்போதாவது அவளைக் கவனிக்கிறானா என நோட்டமிட்டுக்கொண்டாள். ஆனால், அவன் பழைய கொழுந்தன் பதவியிலிருந்து தன்னை விடுவித்துக் கொள்ளவே இல்லை.
“ஏன் கெழவி இப்ப இதே ஒன் சின்னப் புள்ளைக்கி கல்யாணம் ஆகி, இன்னொருத்தி இந்த ஊட்ல இருந்திருந்தா நீ இப்படி ஒரு காரியத்தைப் பண்ண துணிஞ்சிருப்பியா?” என்று இடுப்பில் தண்ணீர் குடத்துடன் பின் வீட்டு வனசா கேட்டாள்.
“அதெப்புட்றி பண்ண முடியும், சின்னவ குடியிலயா நெருப்பை வைக்க முடியும்? ஒன் விதி அவ்ளோதான்டி லதான்னு என் பக்கத்துலயே பாயைப் போட்ருப்பேன்.” எல்லாக் கேள்விகளுக்கும் ராசத்திடம் உரிய பதில் இருக்கும்.
பேரப்பிள்ளைகள் திசை மாறாமல் உள் கொடியிலேயே வளர்வார்கள் என்கிற உறுதியும் தெளிவும் ராசத்திற்கு வலு சேர்த்தது. பெரியவனின் படத்தைக் காணும்போதெல்லாம் “தொணையா நில்லுய்யா என் ராசா” எனக் கண்களைத் துடைத்துக்கொள்வார் ராசம்.
லதாவின் பிறந்த வீட்டிலிருந்து ஆரம்பத்தில் எதிர்ப்பு கிளம்பினாலும் ராசத்தின் நாவிற்கு யாராலும் உரக்க முடியவில்லை. மேலும் லதாவின் அப்பாவிற்கு அதில் ஓர் ஆறுதல் இல்லாமல் இல்லை.
ஆரவாரமற்று சொற்பக் கூடுகையில் அந்தக் கல்யாணம் நடந்தது. சித்தப்பனையும் அம்மாவையும் மணக்கோலத்தில் பார்த்த போது பிள்ளைகளின் கண்களில் ஒரு குழப்பம் உருண்டது. “இனி இவன் சின்னப்பா இல்லடா ஒங்களுக்கு அப்பா” என்று அள்ளி முத்தம் கொஞ்சினார் ராசம்.
மாலையுடன் ராசத்தைப் பார்த்து அரை உதட்டில் சுழித்தான் குமார். “எலேய் என்னாடா நமட்டலா சிரிக்குற?” ராசம் கிண்டினார்.
ராசத்தின் கையைப் பிடித்து பந்தலின் மூலைக்குச் சென்றவன், “மூணு வயசுதான கொறைச்சன்னு கட்டி வச்சிப்புட்ட?” என்றான்.
“அட மடப்பய மருமவனே! அவளுக்குப் பத்து வயசு சாஸ்தின்னாலும் கட்டி வச்சிருப்பேன். நீ என்னா அவளோட குடும்பமா நடத்தப் போற?” என்று தலையைச் சாய்வாக வைத்து ஒரு வெட்டு வெட்டி கைகளை வீசி நகர்ந்தார் ராசம்.
சின்னவனின் கல்யாணத்தை அவனுக்கென்ற பரிவர்த்தனையில் எக்குறையும் இல்லாமல் நடத்தி வைத்தார் ராசம். அதன் முறையிலேயே அன்றைய இரவும் தயாரானது.
ஊர் குற்றம் குறை பேசுவதை நிறுத்திவிட்டு, தம்பதிக்குத் தெம்பு கொடுக்கத் தயாரானது. மணப்பெண்ணை அலங்கரித்துக் கொடுத்தாள் எதிர்வீட்டு ராணி. அறையை மினுக்கி வைத்திருந்தாள் பின் வீட்டு வனசா. பிள்ளைகளைத் தூங்க வைத்திருந்தார் மூத்த கிழவி. இது எதிலுமே ஈடுபாடில்லாதவள் போல வழக்கம் போல் நாடகம் பார்த்துக் கொண்டிருந்தார் ராசம்.
புது ஆண் ஒருவனைத் தன் பழகிய அறைக்குள் எதிர்பார்த்திருந்தாள் லதா. தள்ளியிருத்தலே பெருமதிப்பு என்றும் முடிவெடுத்திருந்தாள். ஆனாலும் தன் உடல் அப்படிச் சொல்லுமா என்பதில் அவளுக்கும் சந்தேகம் இருந்தது. மணப்பந்தலில் அவன் வாசம் அவளைத் துளைத்தபடியே இருந்தது. உடல் ஒரு போக்காகவும் அவள் ஒரு போக்காகவும் போய்க்கொண்டிருந்தார்கள்.
ஆண் நெடி இல்லாமலேயே ஆயுளை முடிப்பது என்பது அவள் கணக்கு. அப்படியொரு புனிதத்தை ஊர் சொல்லக் கேட்டு வளர்ந்தவள் அவள். ஆண் துணையின்றி இந்த ராசம் கிழவி பிள்ளைகளை வளர்த்து பெருமதிப்புடன் வாழ்ந்ததை ஊரே போற்றிக் கொண்டிருப்பது போல் அவளும் ஒரு புகழுக்கு ஆசைக்கொண்டாள். ஆனாலும் அவளுள் ஒரு தீ அவளுக்கு ஒத்துழைப்பதாக இல்லை.
விடியலில் லதா தலை முழுகியிருந்தாள். நேரங்கடந்து எழுந்த குமாருக்குப் பேச்சு வார்த்தை ஏதுமின்றி ஆவி பறந்த இட்லிகளைப் பரிமாறினாள் புதுப்பெண். முதல் நாள் இரவிற்கும் அன்றைய காலை உணவிற்கும் எவ்விதத் தொடர்பும் கொடுக்காமல் சாப்பிட்டு எழுந்தான் குமார்.
அண்ணனின் தெய்வப்படத்திற்கு முன் நின்று வணங்கி திருநீற்றைப் பூசி நிமிர்ந்த சின்னவனைப் பார்த்து ஏளனமாகச் சிரித்தார் ராசம்.
“ஏம்மா சிரிக்கிற?”
“அண்ணணைக் காப்பாத்த வெரசா வண்டியெடுத்தவன், பாலத்து டீக்கடையில ஓஞ்சாப்ல டீயைக் குடிச்சிட்டு சாவுகாசமா போனியாமே… ஒன் கூட்டாளி நேத்து ராத்திரி போதையில ஒளறிட்டுப் பந்தலுக்குள்ள கெடந்தான்” என்றவாறே ராசம் பெரியவனின் படத்தை முந்தானையால் துடைத்தார். ஆனாலும் சிரிப்பு நிற்கவில்லை.
மறுப்பதற்கேதும் இல்லாதவனாக வேகமாக வெளியேறினான் சின்னவன்.
படைப்பாளர்:
அருணா சிற்றரசு
ஆங்கிலமொழி ஆசிரியர் . அரசு உயர்நிலைப்பள்ளி எடகீழையூர், திருவாரூர் மாவட்டம். மன்னார்குடியைச் சேர்ந்தவர். 2012 ஆசிரியர் தகுதித்தேர்வில் வெற்றி பெற்று அரசு பணி பெற்றவர். நாவல்கள் படிப்பதில் அதீத ஆர்வம் கொண்டவர். தமிழ் புதினங்கள் படித்து கருத்துகளை தன் நடைக்கு வளைத்துக்கொள்பவர்.பாவ்லோ கோலோ , கொலம்பிய எழுத்தாளர் மார்க்கீஸ் மீது தீராக் காதல் கொண்டவர். தன்னுடைய யூட்யூப் சேனலில் மாணவர்களுகள் மற்றும் போட்டித் தேர்வாளர்களுக்கான காணொலிகளை வழங்கி வருகிறார்.
டக்குன்னு கொலை காரன் ஆக்கிட்டிங்க 🙄🙄🙄
One doubt mam.. atlast avanukku nejamave anni mela interest ah..illa summa antha paati kalaikurangala..ooru ipdi onnu renda pesuthu nu