‘கோயிலும் சுனையும் கடலுடன் சூழ்ந்த கோணமாமலை’ என  திருஞான சம்பந்தரும், ‘குரைகடலோத நித்திலம் கொழிக்கும் கோணமாமலை’ எனத்  தேவாரமும் புகழ்ந்து தள்ளும் திருகோணமலையைத் தவிர்த்துவிட்டு இலங்கையின் வரலாற்றை எழுதவே முடியாது என்பதுதான் உண்மை. ஆசியாவின் பழமையான நகரங்களுள் ஒன்றான திருகோணமலையின் பதிவுசெய்யப்பட்ட வரலாற்றுக்கு வயது இரண்டரை ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேல். கோணேஸ்வரம் கோயிலுடன் தொடர்புடைய குடிமக்களின் குடியேற்றத்தில் இருந்து தொடங்கும் இதன் வரலாறு, அகத்தியரால் நிறுவப்பட்டதாக நம்பப்படும்,  தமிழ் சித்த மருத்துவப் பல்கலைக்கழகமான ‘அகத்தியர் தாபனம்’,  வன்னி நாட்டின் கிழக்கு ராச்சியங்களின் தலைநகர், பல்லவ, சோழ, பாண்டிய வம்சத்தினரின் ஆட்சிகள், அதைத் தொடர்ந்த ஐரோப்பிய அரசுகள், இரண்டாம் உலகப்போரின் வன்மம், சுதந்திரம் பெற்றபின் உள்நாட்டுப்போரின் துயரம் என நீள்கிறது.

இலங்கையின் கிழக்குப் பகுதியில் மூன்று மலைகள் சூழ்ந்த வளமிக்க பகுதியான திருகோணம் அரசியல், சமூக, வரலாற்று ரீதியான சிறப்புகளைக் கொண்டு பல உலக நாடுகளின் கனவுதேசமாக இருந்திருக்கிறது, இன்னும் இருக்கிறது. கிட்டத்தட்ட நான்கு லட்சம் மக்கள் வாழும் திருகோணமலையில் மூன்று இன மக்கள் வாழ்ந்தாலும், அவர்களுள் பெரும்பான்மையினர் தமிழர்களே. திருகோணமலை வளைகுடாவானது,  பசுவின் காது என்று பொருள்படும் கோகர்ணம் என்றும் சமஸ்கிருதத்தில் அழைக்கப்படுகிறது.

வரலாற்றுக்கும் முந்திய காலத்தில் விஜயன் இலங்கைக்கு வருவதற்கு முன்னர் இந்தத் துறைமுகத்தையொட்டிய பகுதிகளில் ‘இயக்கர்கள்’ வாழ்ந்து வந்ததாக மகாவம்சம் கூறுகிறது. புராதன காலத்தில் தபசு, பல்லுக என்ற இரு வர்த்தகர்கள் இந்தத் துறைமுகத்தின் வழியாகவே இலங்கைக்குள் வந்திருக்கின்றனர். விஜயன் இலங்கை வந்தபிறகு அவனுக்கு வாரிசு இல்லாமல் போகவே, கலிங்க நாட்டிலிருந்து தமது சகோதரன் சுமித்தனின் மகனான பண்டு வாசுதேவனைத் தனது நாட்டிற்கு அழைக்க, பண்டுவாசுதேவனும், அவனுடைய 32 அமைச்சர்களும், துறவி வேடத்தில் திருகோணமலை துறைமுகத்தை வந்தடைந்தனர் எனவும் மகாவம்சம் கூறுகிறது. கடாரம் நோக்கிப் புறப்பட்ட முதலாம் ராஜேந்திரனின் படைகள் இந்தக் கோகர்ண துறைமுகத்திலிருந்தே புறப்பட்டதாகப் பதிவுசெய்கிறார் சோழர்களின் வரலாற்றை எழுதிய கே.ஏ. நீலகண்ட சாஸ்திரி.

சோழர்கள் இலங்கையைக் கைப்பற்றியபின் பொலனுருவையைத் தலைநகராகக் கொண்டு ஆட்சிசெய்யும்போது அவர்களுக்குப் பெரிதும் உறுதுணையாக இருந்தது இத்துறைமுகமே. சோழர்களின் கல்வெட்டுகள் அவர்களின் தலைநகரமான பொலனறுவையைவிட திருகோணமலையில்தான் அதிகம் கண்டெடுக்கப்பட்டுள்ளன. பொலனுறுவைக்கும் கோகர்ணத்துக்கும் இடையே பெரும் தெருவை அமைத்து, அதற்கு ராஜராஜ   பெருந்தெரு என்று பெயரிட்டிருக்கிறார்கள். கோணேஸ்வரம் கோயிலைப் புனரமைத்திருக்கிறார்கள்.

திருகோணமலையில் இயற்கையாக அமைந்துள்ள  துறைமுகத்தின் சிறப்புக் கருதி போர்த்துகீசியர், ஒல்லாந்தர், பிரெஞ்சுக்காரர்கள் மற்றும் பிரித்தானியர் என அத்தனை ஐரோப்பியரும்  திருகோண நகரையும் துறைமுகத்தையும் அங்கு அமைந்துள்ள பிரட்ரிக் (டச்சு) கோட்டையையும் தமது ஆதிக்கத்தில் வைத்திருப்பதற்காகப் பகீரதப் பிரயத்தனங்கள் செய்து, தலைகீழாக உருண்ட சம்பவங்களை வரலாறு மறக்கவியலாது. இந்துமகா சமுத்திரத்தின் சாவி என்று அழைக்கப்படும் இத்துறைமுகம் இயற்கையாகவே ஆழம் அதிகமாக இருப்பதால், நீர்மூழ்கிக் கப்பல்கள் முதல் சாதாரணக் கப்பல்கள் வரை இங்கே பாதுகாப்பாக இருக்கமுடியும். ‘மலைகளால் சூழ்ந்த இந்தத் துறைமுகத்தில் ஒரு பக்கம் இருக்கும் கப்பலுக்கு, அருகிலுள்ள மற்றொரு கப்பல்கூடக் கண்ணுக்குத் தெரியாதாம்’ என்ற செய்தி ஆச்சரியமாக இருந்தது.

ஆங்கிலேயர்கள் ஆசியாவில் தங்கள் ஆதிக்கத்தை நிறுவ, இத்துறைமுகம் ஒரு முக்கியக் காரணியாக இருந்திருக்கிறது. அப்போது, பிரித்தானிய பிரதமர் இட் என்பவர் தங்கள் நாட்டு பாராளுமன்றத்தில், “இந்து சமுத்திரத்தில் கடலாதிக்கத்தை நிலைநிறுத்த திருகோணமலை துறைமுகம் அவசியம்” என்று பேசியதிலிருந்து இத்துறைமுகத்தின் முக்கியத்துவத்தைத் தெரிந்துகொள்ள முடிகிறது. இரண்டாம் உலகப்போரில் ஜப்பானியர்கள் சிங்கப்பூரைக் கைப்பற்றிய பின்பு, திருகோணமலையே பிரிட்டனின் முக்கியக் கடற்படை தளமாகவும் விநியோக மையமாகவும் செயல்பட்டிருக்கிறது. இத்துறைமுகத்தின் முக்கியத்துவம் கருதியே 1942ஆம் ஆண்டு, ஏப்ரல் 9ஆம் நாள் ஜப்பானியர்களின் குண்டு வீச்சுக்கு இலக்காகி 700 பொதுமக்கள் கொல்லப்பட்டனர். 1957 வரை திருகோணமலை பிரிட்டன் கடற்படையின் முக்கியத் தளமாக இருந்தது. திருமலைக் கோட்டையில் பிரிட்டிஷாரின் பங்களாக்கள் இன்றும்கூட இருக்கின்றன. உலகின் மிக ஆழமான, பெரிதான இயற்கைத் துறைமுகங்கள் வரிசையில் 5வது இடத்தைப் பெற்றுள்ள இத்துறைமுகத்தில் ஒரே நேரத்தில் பல்லாயிரக்கணக்கான கப்பலகள் நங்கூரமிட்டு நிற்கமுடியும். முத்து, மாணிக்கம், யானை, யானைத்தந்தம், கருவா, ஏலம், கிராம்பு போன்ற பொருள்கள் இந்தத் துறைமுகத்திலிருந்தே ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதியாகி இருக்கிறது.  

பொன்னியின் செல்வன் கதையில், தன்னுடைய தம்பிக்கு இளவரசுப் பட்டம் கட்டிவிட்டு வெளிநாடுகளுக்குச் சென்று போர் தொடுத்து வெற்றிகளை ஈட்ட விரும்பிய ஆதித்த கரிகாலன், தனது நண்பனான பல்லவகுல பார்த்திபேந்திரனை இலங்கைக்கு அனுப்பி, தன் தம்பி அருள்மொழிவர்மனை அழைத்து வரச்சொல்வார். இலங்கை வரும் பார்த்திபேந்திரன் திருகோணமலை துறைமுகத்தில் இறங்கி,  வந்தியத்தேவன், ஆழ்வார்க்கடியன், பூங்குழலி சகிதம் இருக்கும் இளவரசர் அருள்மொழிவர்மனைக் கண்டு ஆதித்த கரிகாலன் கொடுத்தனுப்பிய ஓலையைக் கொடுப்பார். இளவரசரிடம் தான் வந்த கப்பலை திரிகோணமலையில் விட்டுவிட்டு வந்திருப்பதாகவும் திரும்பச் செல்லவேண்டுமெனவும் கூறுவார்.                                

இத்துறைமுகத்தின் மீது அமெரிக்காவிற்கு எப்போதும் ஒரு மோகம் உண்டு. 2007ஆம் ஆண்டில் அமெரிக்கா, இலங்கையுடன் இத்துறைமுகம் தொடர்பாகப் பத்தாண்டுகளுக்கு ஓர் ஒப்பந்தம் போட்டுக்கொண்டது. அதன்படி அமெரிக்கக் கப்பல்கள் இங்கே எரிபொருள் நிரப்பிக்கொள்ளவும்,  பிற தேவைகளைப் பெற்றுக்கொள்ளவும் அனுமதிக்கப்பட்டது. விடுதலைப் புலிகளுடனான போரில் தீவிரமாக ஈடுபட்டிருந்த இலங்கை அரசு, தனக்கான ஆதாயம் கிடைக்குமென அமெரிக்காவின்  ஆதரவை  ஏற்றுக்கொண்டு, காட்டிய இடத்தில் கையெழுத்திட்டது. அதனால், அமெரிக்காவின் விமானம் தாங்கிக் கப்பல்கள் முதல்  போர்க்கப்பல்கள் வரை  அடிக்கடி சாவகாசமாக இங்கு வந்து செல்லும். சமீப வருடங்களாக திருகோணமலை, கொழும்பு, ஹம்பந்தோட்ட ஆகிய மூன்று துறைமுகங்களிலும் 28 நாடுகளைச் சேர்ந்த 450 போர்க்கப்பல்கள் இலங்கைத் துறைமுகங்களுக்கு வந்து செல்கின்றன. பதிலுக்கு இலங்கை அரசுக்கு ரோந்து படகுகள், கடலோரப் காவற்படை, சிறு கப்பலகள் என இந்நாடுகள் வழங்கியிருக்கின்றன.

அமெரிக்கா மட்டுமல்ல, இந்தியா, ஜப்பான், சீனாவிற்கும் இலங்கைத் துறைமுகங்கள் மீது ஒருதலைக்காதல்தான். சீனாவைக் கண்காணிப்பதற்காக இந்தியாவுக்கும், இந்து சமுத்திரப் பகுதியில் ஆதிக்கம் செலுத்துவதற்காக அமெரிக்காவிற்கும் இலங்கைத் துறைமுகங்கள் தேவையாக இருக்கின்றன. 1970களில் அமெரிக்க அதிபர் நிக்சன், இங்கு எண்ணெய்க் கிடங்கு அமைக்கவும் அமெரிக்காவின் ஒரு கேந்திரத்தை வைக்கவும் முயற்சிக்க, பிரதமர் இந்திரா காலத்தில் இந்தியா – ரஷ்யா ஒப்பந்தத்தால் அது முறியடிக்கப்பட்டது. இங்கு ஆங்கிலேயர் காலத்தில் அமைக்கப்பட்ட 99 எண்ணெய்க் கிடங்குகளை இந்தியாவைச் சேர்ந்த இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் நிறுவனம் பராமரித்துப் பயன்படுத்துவதற்கான ஒப்பந்தம் மேலும் 50 ஆண்டுகளுக்குச் சமீபத்தில் நீட்டிக்கப்பட்டுள்ளது.

மேற்கத்திய ஆதிக்கத்தின் எச்சமாக நிற்கிறது இங்குள்ள பிரட்ரிக் கோட்டை, அக்கோட்டையினுள்ளே அமைந்திருக்கிறது உலகப் புகழ்மிக்க திருக்கோணேச்சர ஆலயம். இலங்கையை ஆண்ட மனு மாணிக்கராசா என்ற மன்னன் கி.மு. 1300இல் கோயிலைக் கட்டியதாகவும், உலகிலுள்ள வழிபாட்டுத் தலங்களில் மிகப் பழமையானது என்று கூறப்பட்டாலும், அதற்கான எந்தச் சான்றுகளும் இல்லை. ‘முன்னே குளக்கோட்டன் மூட்டு திருப்பணியை பின்னே பறங்கி பிரிக்கவே பூனைக்கண் புகைக்கண் செங்கண் ஆண்டபின் தானே வடுகாய் விடும்’ என்ற கல்வெட்டிலிருந்து குளக்கோட்டன் (குளமும் கோட்டமும் கட்டுவித்தவன் – இயற்பெயர் மறைந்து காரணப்பெயராயிற்று.) என்பானே இக்கோயிலுக்குத் திருப்பணி செய்தான் என்று புரிந்து கொள்ளப்படுகிறது.

ஆயிரம் வருடங்களுக்கு மேலான பழமையான கோயிலை, 1624இல் போர்த்துகீசிய தளபதி கான்ஸ்டண்டைன் டி சா டி மென்சிஸ் இடித்து தரைமட்டமாக்கியதுடன் கோட்டையை உருவாக்க கோயிலின் இடிபாடுகளைப் பயன்படுத்திக்கொண்டான்.  இலங்கை சுதந்திரம் பெற்ற பின்பு சுமார் 450 ஆண்டுகள் கழித்து 1952இல் திருகோணமலை பெரியோர்களால் கோயில் மீளக் கட்டப்பட்டது.

‘தென்கிழக்காசிய மிலேச்சர்களின் உரோமாபுரி’,  ‘தட்சிண கைலாசம்’ என்றெல்லாம் புகழப்படும்  அதே திருகோணமலை நகரின் மற்றொரு மூலையில், தேசம் பிடிக்கும் பேராசையின் விளைவுகளைப் பறைசாற்றி மௌனமாக நிற்கின்றன… இரண்டாம் உலக யுத்தத்தில் தேசம்விட்டு தேசம்வந்து போரிட்ட பிரிட்டானியப் படைவீரர்களின் 303 கல்லறைகள்.

(தொடரும்)

படைப்பாளர்:

ரமாதேவி ரத்தினசாமி

எழுத்தாளர், அரசுப்பள்ளி ஆசிரியர். பணிக்கென பல விருதுகள் வென்றவர். இவர் எழுதி வெளிவந்துள்ள ‘கனவுகள் மெய்ப்படட்டும்’ கட்டுரைத் தொகுப்பு பரவலாக கவனம் பெற்றுள்ளது. 2014, 2015ம் ஆண்டுகளில் ஐ நா சபையில் ஆசிரியர் பேச்சாளராகக் கலந்துகொண்டு உரையாற்றியுள்ளார். அடுப்பங்கரை டூ ஐநா தொடரில் அவரது ஐ நா அனுபவங்களை நகைச்சுவையுடன் விவரித்திருக்கிறார். இந்தத் தொடர் ஹெர் ஸ்டோரீஸ் வெளியீடாகப் புத்தகமாக வெளிவந்து பாராட்டுகளைப் பெற்று வருகிறது. இலங்கை இவருக்கு இதில் இரண்டாவது தொடர்.