குழந்தைகளுக்குக் குறிப்பாக, பெண் குழந்தைகளுக்குத் தைரியம், தன்னம்பிக்கை, சுயமாக முடிவு எடுக்கும் திறன் போன்றவற்றைச் சொல்லிக்கொடுத்து வளருங்கள்.

பெண் குழந்தைகளுக்கு எது தேவையோ இல்லையோ கல்வி முதன்மையான

தேவை. பெற்ற கல்வியின் மூலம் பொருளாதாரச் சுதந்திரம் பெற முடியும். இதை ஏன் நான் சொல்கிறேன் என்றால், சிறு வயதிலிருந்தே பெண் என்பவள் மற்றவர்களைச் சார்ந்து வாழ்பவளாக மட்டுமே பெரும்பாலும் இருக்க வேண்டிய சூழல் இருக்கிறது.

சிறுவயதிலிருந்தே ஏதாவது ஒரு கைத்தொழில் ஒன்றைக் கற்றுக்கொடுங்கள், அது குழந்தைகளுக்கு விருப்பமானதாகவோ பொழுதுபோக்காகவோ

அவர்களின் ஆர்வத்தைத் தூண்டுவதாகவோ இருந்தால் கூடுதல் சிறப்பு.

பெற்றோர், “என் பிள்ளைக்கு (ஆண், பெண் இருபாலருக்கும்)சமைக்கத் தெரியாது, கேஸ் ஸட்வ் பற்ற வைக்கத் தெரியாது, துணி துவைக்கத் தெரியாது, எந்த இடத்திற்கும் தனியாகப் போய் வரத் தெரியாது” என்று சுயதம்பட்டம் அடிப்பதைத் தவிருங்கள்.

பெற்றோர் தங்கள் குழந்தைகளுக்கு ஆடம்பர வாழ்க்கை, சொத்துகள் வேண்டும் என்ற எண்ணம் தேவையில்லாதது. நாம் கொடுக்கக்கூடிய ஒரே விஷயம் கல்வி மட்டுமே!

குழந்தைகளிடம், “நாங்க உனக்கு வீடு கட்டியிருக்கோம், புது கார், சொத்து நிறைய சேர்த்து வச்சிருக்கோம். எல்லாம் உனக்காகத்தான்” என்று ஒரு போதும் பெருமையாகப் பேசாதீர்கள்.

நீங்கள் கடந்துவந்த சவால்களையும் பெற்ற அனுபவங்களையும் கதையாகக் கூறுங்கள்.

செழியனுக்கு காரில் பயணம் செய்வதென்றால் பிடிக்கும். நான் அவனிடம் இதைப் பற்றிப் பேசும்போது, “நாங்க உனக்கு கார் வாங்கித் தருகிறோம் என்று கூற மாட்டோம். நீ படிச்சுப் பெரியவனாகி கார் வாங்கணும்” என்றுதான் கூறுவோம். அந்த வார்த்தை என்னவோ அவன் மனதில் ஆழமாகப் பதிந்துவிட்டது. சாமி கும்பிடும்போது, “நான் படிச்சுப் பெரியவனாகி கார் வாங்கணும், எல்லாரையும் கார்ல கூட்டிட்டுப் போய் சாப்பிட அவைக்கணும்” என்று வேண்டுவான்.

நாம் பேசும் ஒரு சில வார்த்தைகளின் வீரியம் குழந்தைகளின் மனதில் ஆழமான உந்துதலையும் அதற்கான எண்ண ஓட்டத்தையும் உருவாக்கும்.

ஸ்கூலுக்கு ஒருநாள் லீவு போட்டாலும் அம்மா, “அண்ண படிச்சு கார் வாங்கிருவானோ?” என்று கேட்கிறான் தம்பி.

குழந்தைப் பருவத்திலிருந்தே குடும்பத்திலிருக்கும் அனைவரையும் கவனிக்கவும், தேவையானதைச் செய்துகொடுக்கவும் பழக்கப்படுத்துங்கள்.

செழியன், மதி இருவரிடமும் நீங்கள் இரண்டு பேரும் பள்ளியிலிருந்து வந்தவுடன், மதியம் சாப்பாட்டை மிச்சம் வைக்காமல் சாப்பிட்டீர்களா, அம்மாவை நினைப்பீர்களா என்று கேட்பேன்.

உடனே செழியன், “அம்மா, நீ சாப்டியா” என்று கேட்பான். வீட்டில் சாப்பிட எது கொடுத்தாலும் நீ சாப்பிட்டாயா என்ற கேள்வியை இருவரும் மறக்காமல் என்னிடம் கேட்பார்கள். அம்மாவுக்கும் பசிக்கும், அம்மாவையும் கவனித்துக்கொள்ள வேண்டும் என்ற எண்ணம் குழந்தைகளுக்கு ஏற்படுத்துவதும் நம் கடமை.

“ஆச்சிக்குக் கால் வலி” என்று என் அம்மா சொன்னவுடன், அந்தப் பிஞ்சு விரல்கள் தைலத்தை நோக்கி விரையும். மறுநாள் கால் வலி சரியாகிவிட்டதா என்று விசாரிப்பார்கள்.

குழந்தைகள் செய்யும் நல்ல செயல்களைப் பாராட்டுவதையும், உற்சாகப்படுத்துவதையும் பழக்கப்படுத்திக்கொள்ள வேண்டும்.

பள்ளி முடிந்து வந்தவுடன், “தம்பி, ஸ்கூல்ல என்ன நடந்தது, நீ என்ன பண்ணுன?” என்று கேட்பது வழக்கம்.

இருவரும் அன்று நடந்த விஷயங்களைக் கூறிவிடுவார்கள்.

நல்ல செயல்கள் செய்யும்போது எப்படிப் பாராட்டுகிறோமோ அதே போல தவறான செயல்களைச் செய்யும்போது, கண்டிப்பதும் பெற்றோரின் கடமை. அந்தக் கண்டிப்பு மென்மையாகவும் அடுத்த முறை செய்யாத அளவுக்கும் இருக்க வேண்டும்.

(தொடர்ந்து பேசுவோம்)

படைப்பாளர்:

திருமலைச் செல்வி. தென்காசி மாவட்டம் கீழக்கலங்கல் என் கிராமம். பொறியியல் பட்டதாரி. எழுத்துகள் மீது என்றும் தீராத தாகம் உண்டு. அனைத்தையும் மாற்றும் வல்லமை எழுத்துகளுக்கு உண்டு என்று நம்புகிறேன்.