‘நான் முருனுக்கு மாலை போட்டிருக்கிறேன், இரவு டிபன் சாப்பிட மாட்டேன் என்று உனக்குத் தெரியாதா?’ என்று முறைத்துக் கொண்டான் கணவன். அரைமணி நேரத்தில் வெஜிடபிள் பிரியாணி செய்து அவனுக்குப் பரிமாறினாள் அவன் மனைவி. போனில் அவனுக்கு ஓர் அழைப்பு வந்தது. கோபத்துடன் பேசியவன் முடிவில் தட்டைத் தூக்கி எறிந்துவிட்டு, வெளியே சென்றுவிட்டான். வீடு முழுவதும் சிதறிய சோறு. அவன் மனைவி அதைச் சரி செய்யவே மணி பதினொன்றரை ஆகிவிட்டது. அதன் பின் அந்த மனஉளைச்சலுடன் ஏதோ தூங்கி, அடுத்த நாள் ஏழு மணிக்கு எங்கள் வீட்டிற்கு வேலைக்கு வந்தார் செல்வி.

மதிய உணவு பரிமாறும் அவசரத்தில் வேறு பாத்திரத்திற்கு மாற்றாமல் பிரஷர் குக்கரிலேயே கோழி குழம்பை வைத்து என் மாமாவுக்குப் பரிமாறினார் அத்தை. என் மாமா அந்த குக்கரை குழம்போடு எடுத்துச் சென்று வெளியில் கொட்டிவிட்டு, குக்கரை உடைத்தே விட்டாராம்.

‘என்னுடன் பார்ட்டிக்கு வரும்போது இப்படிப் பட்டிக்காடு மாதிரி உடை அணிந்து வருகிறாய். சிட்டி கேர்ள் என்று ஏமாந்துவிட்டேன். குடிக்கவாவது தெரியுமா?’ என்று என் தோழியை அடித்துவிட்டு, திருமணமாகிய குறுகிய காலத்திலேயே விவாகரத்தும் செய்து விட்டான் அவள் கணவன்.

‘ஜெய ஜெய ஜெய ஜெய ஹே’ திரைப்படத்தில் வரும் ஜெயபாரதிகள் ஏழை, மத்தியதரம், பணக்காரர் என எல்லா வர்க்கத்திலும் உள்ளனர். வீடு அமைப்புகள் மட்டுமே மாறியிருக்கும். ஆண்களின் குணம் மட்டும் ஒரே கல்லூரியில், ஒரே பாடத்தை ஒன்றாக நன்றாகப் படித்து தேர்ச்சியான மாணவர்கள் போலவே இருப்பார்கள்! பிறந்த வீட்டில் பாலின பாகுபாட்டோடும் பாகுபாட்டில்லாமலும் வளர்க்கப்படும் பெண் குழந்தைகள் புகுந்த வீட்டிற்குச் சென்றவுடன் அறியாத உலகத்திற்குள் நுழைந்த குழந்தையைப் போலவே உணர்கிறார்கள். ‘குடும்பப் பெண்’ என்ற பெரிய சுமையை ஒரு குழந்தையின் தலையில் வைப்பது எவ்வளவு அநியாயமான ஒரு செயல் என்று எனக்கு அடிக்கடி தோன்றும்.

படத்தின் கதாநாயகி ஜெயபாரதி போல யுடியூப் உணவு செய்முறை வீடியோக்களைப் பார்த்து விதவிதமாக, ருசியாகச் செய்யும் பெண்களில் நானும் ஒருத்தி. செய்துவிட்டு ஒரு படம் பிடித்து ஃபேஸ்புக்கில் வெளியிடுவேன். வெண்பொங்கலும் சர்க்கரை பொங்கலையும் செய்துவிட்டேன். ஒரு படம் பிடிக்கலாம் என்று என் மொபைலை எடுக்கும் போது என் கணவர், ‘மார்க் ஸுக்கர்பேர்க்குக்கு (ஃபேஸ்புக் நிறுவனர்) நெய்வேதியம் செய்துவிட்டால் எங்களுக்கு அதைப் பரிமாறலாமே’ என்று என் உறவினர்கள் மத்தியில் ஜோக் அடித்தார். அப்போது சிரித்து விட்டேன். ஆனால், சிறுது நேரம் கழித்து நினைத்துப் பார்த்தபோது, ‘பெண்களுக்குச் சமைப்பது ஒரு அங்கீகாரமில்லாத வேலையே தவிர, அதில் ஒரு பெருமிதமோ சிறு இன்பமோ கூட பெண்கள் அனுபவிக்கக் கூடாது’ என்று விரும்புகிறது ஆண் சமூகம்.

சினிமாவில் கிளைமாக்ஸில்தான் எல்லாக் கதாபாத்திரங்களுக்கும் அறிவு வரும் என்னும் நடைமுறையை மாற்றி, முதல் பாதியிலேயே படத்தின் ஹீரோயின் ஜெயபாரதி தன்னைத் துன்புறுத்தி அவமதிக்கும் கணவனை, தான் இதற்காகவே கற்றுக்கொண்ட கராத்தே கொண்டு புரட்டி அடிக்கும் காட்சி வந்தவுடன் குழந்தைகளும் நானும் விசிலடிக்காத குறை! விழுந்து விழுந்து சிரித்தோம்.

நல்லா வாங்கு! உனக்கு இது நல்லா வேணும்! சூப்பர் என்று குழந்தைகள் குதூகலித்தனர். ஒரு நல்ல தலைமுறையை உருவாக்கியுள்ளோம் என்ற பெருமிதம் எனக்கு.

கணவரும் ரசித்துச் சிரித்தார். ஆனால், அவருடைய மைண்ட் வாய்ஸ் எனக்கு வெளியில் கேட்டது. என்னுடைய மைண்ட் வாய்ஸும் அவருக்குக் கேட்டிருக்கும் என்று எதிர்பார்க்கிறேன்.

ஹெர் ஸ்டோரிஸ் எழுத்துப் பட்டறையில் எழுத்தாளர் ஒருவர் பேசியது நினைவிற்கு வந்தது.

‘நிஜத்தில் நான் யாரைத் தண்டிக்க வேண்டும் என்று நினைக்கிறேனோ அவர்களை கதாபாத்திரமாகி என் கதையில் பிரச்சனைகளுக்குத் தீர்வு கண்டு, அவர்களுக்குத் தக்க தண்டனை கொடுத்து விடுவேன்’ என்றார்.

பல பெண்கள் எழுத இது ஒரு முக்கியக் காரணமாக இருக்குமோ என்று எனக்குத் தோன்றியது.

கை நீட்டாமல், வாயை மட்டுமே ஒரு பெரும் ஆயுதமாகப் பயன்படுத்தும் அஹிம்சாவாதி கணவன்மார்களுக்குத் தக்க பதிலடி கொடுக்கும் படத்தை எப்போது டைரக்ட் செய்வார்கள் என்ற எதிர்பார்ப்புடன் நான்!

படைப்பாளர்:

சித்ரா ரங்கராஜன்

கட்டிடக் கலை மற்றும் உட்புற வடிவமைப்பாளராக சென்னையில் தன் கணவருடன் நிறுவனத்தை நடத்திவருகிறார். ஆங்கிலத்திலும் தமிழிலும் எழுதுவதை ஆர்வமாகக் கொண்டுள்ளவர். புத்தகங்களுக்குப் படங்கள் வரைவதிலும் நாட்டம் கொண்டவர். பெண்ணியச் சிந்தனையில் மிகுந்த ஆர்வமுள்ளவர். ஒருவரின் வாழ்க்கையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்துவதில் ஓர் எழுத்தாளருக்கு முக்கியப் பங்குண்டு என்பது இவருடைய வலுவான கருத்து.