தனித்த கடற்பகுதி, அலைகளின் சத்தம், அமைதியான காற்று எனக் கடலோரத்தில் தன் கடந்த காலத்தை அசைபோட்டபடி நிற்கிறது அந்தக் கட்டடம். இல்லையில்லை அந்தச் செங்கற்சுவர்கள் ஒரு காலத்தில் கம்பீரமாக இருந்திருக்க வேண்டும். இன்று தன் உடலின் பெரும்பகுதியைக் கடலுக்குக் காவு கொடுத்துவிட்டு, மிச்சமிருக்கும் பகுதிகளைக் கடலின் உப்புக்காற்றுக்குத் தினம் தினம் தவணைமுறையில் தீனியாகக் கொடுத்துக்கொண்டு, மன்னார் முசலி பிரிவிற்குட்பட்ட அரிப்புக் கிராமத்தின் கடலோரப் பகுதியில் தனிமையில் நின்றுகொண்டிருக்கிறது அந்தச் சிதைந்த கோட்டையின் எச்சங்களாகச் சில செங்கல் சுவர்கள். அது கோட்டையாகத்தான் இருந்திருக்க வேண்டும் என்பதை வெளியிலுள்ள அறிவிப்புப் பலகையும் புகைப்படங்களும் கூறுவதைக்கொண்டே நம்ப வேண்டியிருக்கிறது.

காலம்: கி.மு. 3 ஆம் நூற்றாண்டு: இடம்: முசலிப்பிரதேசத்தின் சிலாவத்துறை துறைமுகம். கடலுக்குள் முத்துக்குளிக்கச் சென்ற ஆட்களை எதிர்பார்த்து கரைகளில் ஒரு கூட்டம் காத்துக்கிடக்கிறது. கரையை ஒட்டிய பகுதிகளில் முத்துகள் அம்பாரமாகக் குவிந்து கிடக்க, ஆண்களும் பெண்களுமாக அதைத் தரம் பிரித்துக் கொண்டிருக்கின்றனர். கீழக்கரை, மதராஸ், மலபார், எகிப்து, ஏமன், மொரோக்கோ, சவுதி அரேபியா, பாரசீகம் போன்ற நாடுகளிலிருந்து அவ்வப்போது வரும் வியாபாரிகள் ஆங்காங்கே நின்று முத்துகளின் தரத்தைப் பரிசோதித்து விலை பேசுகிறார்கள்.

டெரிக் கோட்டையில் ரமா

நறுமணப் பொருள்களைக் கப்பலில் ஏற்றுவதற்கேற்ப தயார் செய்து கொண்டிருக்கிறது மற்றொரு கூட்டம். அங்குமிங்குமாக யானைகளின் நடமாட்டம் அதிகமாக இருக்க, அவற்றைப் பின்தொடர்கிறார்கள் யானை பிடிப்பதில் தேர்ச்சிபெற்ற பயிற்றுநர்கள். இப்படியாகப் பரபரப்பாக இயங்கிக்கொண்டிருக்கிறது அந்த இடம்.

முத்து சிலாபம் எனும் சிறப்புப் பெற்ற அந்தச் சிலாவத்துறை முத்துக்குளித்தல் மட்டுமல்ல, யானை பிடித்தல், வாசனைப்பொருள்கள் மற்றும் யானை ஏற்றுமதி போன்ற பொருளாதார நடவடிக்கைகளும் நடைபெறும் இடமாகத் திகழ்ந்ததோடு, சுற்றியுள்ள 30 கிராமங்களுக்கும் தலைநகராக விளங்கியது. சலாபம் என்பது முத்து குவித்து வைக்கப்பட்டிருக்கும் இடம் அதிலிருந்தே மருவியதே சிலாவத்துறை. சிலாவத்துறையிலிருந்து பெறப்பட்ட முத்துகள் இந்தியாவில் சிறப்புடன் விளங்கிய மகதப்பேரரசுப் பகுதிக்குக் கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்து ஏனைய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டன என்ற செய்தியை, கௌடில்யரின் எழுத்துகளின் வாயிலாக அறிந்துகொள்ள முடிகிறது. கிளியோபாட்ராவின் காதணியில் முசலி சிலாவத்துறை கடலில் இருந்து பெறப்பட்ட ஆணிமுத்து பதிக்கப்பட்டிருந்தது என்ற வரலாற்றுச் செய்தி ஆச்சரியமூட்டுகிறது. மொரோக்கோ பயணியான இபின் பதூதா, தான் இலங்கையில் கரை இறங்கியபோது ஆரியச் சக்கரவர்த்தியின் கட்டுப்பாட்டில் இருந்த முத்து சலாபத்திற்கு அண்மையில் உள்ள பட்டாள நகரில் மரத்தால் செய்யப்பட்ட அடுக்கு மாளிகையில் தங்கியதாகவும், அண்மையில் முத்துகள் குவிக்கப்பட்டிருந்ததையும், அதை அதிகாரிகள் தரம் பிரித்ததையும் கண்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.

1294 ஆம் ஆண்டு மார்க்கோ போலோ வந்தபோது, முத்து அறுவடைக்காலத்தில், அங்கு கிட்டத்தட்ட 500 கப்பல்களும் படகுகளும் சுழியோடிகள் (முத்துக்குளிப்பவர்கள்) மற்றும் வர்த்தகர்களுடன் முத்துகளைத்தேடி வந்திருந்ததாக அவரது பயணக்குறிப்புகள் கூறுகின்றன. வர்த்தகர்கள் தாங்கள் உழைத்ததில் (சம்பாதித்ததில்) 10 சதவீதத்தினை மன்னனுக்கு வரியாகச் செலுத்த வேண்டும். 16 ஆம் நூற்றாண்டுத் தொடக்கத்தில் அரசுக்குச் சொந்தமான முத்துப்படுகைகள் சுழியோடிகளுக்கும் வர்த்தகர்களுக்கும் வாடகைக்கு விடப்பட்டிருக்கிறது. இப்படிப் பல்வேறு காலகட்டங்களில், சிலாவத்துறை குறித்த குறிப்புகள் வரலாற்றில் காணக்கிடக்கின்றன.

காலம் சுழன்றது. கி.பி. 1798. ஆங்கிலேயர்கள் உலகெங்கும் வணிகத்திற்காகக் கால்பதித்து, மெல்ல மெல்ல ஆட்சியைக் கைபிடிக்கத் துவங்கியிருந்தனர். வளம் கொழிக்கும் இலங்கைக்குள்ளும் போர்த்துகீசியர்கள், ஒல்லாந்தர்களைத் தொடர்ந்து நுழைந்தாகிவிட்டது. சிலாவத்துறையின் முத்துவளம் அவர்களுக்கு வியப்பளிக்கிறது. அத்தொழிலை கண்காணிப்பதற்காகவும் வரி வசூல் செய்யவும் நம்பிக்கையான ஆள் தேவைப்பட பிரிட்டிஷ் பிரதமரின் மகன் பிரெட்ரிக் நோத், இலங்கைத் தீவின் முதல் பிரித்தானிய ஆளுநராக இலங்கைத் தீவுக்குள் நுழைகிறார். சிலாவத்துறை அவர் கேள்விப்பட்டதையும்விட பிரமிக்க வைக்கிறது. இத்தனை குட்டித்தீவுக்குள் அத்தனை வளமா! ஆனாலும் அதிகாரிகளை முழுதாக நம்ப முடியாது. இந்தப் பொக்கிஷ பூமியைத் தானே நேரிடையாக கண்காணிக்க விரும்புகிறார். ஆனால், எங்கு தங்குவது? ஆளுநர் தங்கும் அளவுக்கு அந்தக் கடலோரப் பகுதிகளில் எந்த வசதிகளும் இல்லை. பிரிட்டிஷ் பிரதமரின் மகன், இலங்கையின் கவர்னர், சாதாரண மாளிகைகளில் தங்க முடியுமா? அவருக்காகவே உருவாகிறது இந்தச் சிறப்புக் கோட்டை. பழைய கிரேக்க கட்டடக் கலையான டொரிக் (Doric style of Architecture) கட்டடக்கலையின் சாயலில் கட்டி முடிக்கப்பட்டது. மன்னாரிலிருந்து 16 கிலோ மீட்டர் தூரம். சிலாவத்துறையோ கண்ணுக்கெட்டிய தூரத்தில். சில மணித்துளிகளில் அடைந்துவிடலாம். இந்த மாளிகையில் இருந்துதான் முத்து அகழ்வு நடவடிக்கைகள் கண்காணிக்கப்படுகின்றன. ஆங்கிலேயரின் கஜானாக்கள் நிரம்புகின்றன.

காலம் சுழன்றது. காலம் கி.பி. பத்தொன்பதாம் நூற்றாண்டு. தங்க முட்டைக்கு ஆசைப்படும் பேராசைக்காரனாக இயற்கைக்கு எதிராக விலங்கினம் வளர்வதற்கும் பெருகுவதற்கும் இடம் கொடுக்காமல் மனிதன் தொடர்ச்சியாக முத்துகளை அறுவடை செய்து குவிக்க, இறுதி விளைவாக இயற்கை தன் வளத்தை நிறுத்திக்கொண்டது. அள்ளிக்கொடுத்த முத்துக்குளித்தல் தொழில் முடிவுக்குவர, அதன் காரணமாகவே உருவாக்கப்பட்ட மாளிகை கேட்பாரற்று போயிற்று.

அரிப்பு கடலுக்கு அருகில் உள்ள ஒரு கற்பாறையின் மேல் செங்கற்களையும் சுண்ணாம்பையும் கொண்டு கட்டப்பட்டுள்ள இக்கோட்டை சதுர வடிவமாக உள்ளது. கீழ்த்தளத்தில் நான்கு சிறிய அறைகள் உள்ளன. வீட்டின் மத்தியப் பகுதியில் உள்ள படிக்கட்டு வழியாக மேல்மாடிக்குச் செல்ல முடியும். ஒவ்வொரு பகுதியாகச் சென்று தோலுரிந்த சுவர்களைத் தடவித் தடவிப் பார்த்தேன். வாசித்து அறிந்திருந்த வரலாறு, காட்சிகளாக நகர்ந்தது. அப்பிரதேசத்தின் வளமும் வளம் தேடி வந்த மனிதனும் அம்மனிதன் விட்டுச்சென்ற வரலாற்று எச்சங்களும் நிலையாமை என்ற தத்துவத்தைவிட எதைச் சொல்லிவிடப் போகின்றன? காலம் தன் விளையாட்டால் அந்த நினைவுச் சின்னத்தை விழுங்கிக்கொண்டிருந்தது. கடல் அலையின் தாக்கத்தால் கோட்டையின் சில பகுதிகள் கடலில் மூழ்கிப்போய்விட, மிகுதி பாதியும் சுனாமியின் தாக்கத்தால் சிதிலமடைந்து கிடக்கிறது. இக்கட்டடம் அமைக்கும்போது கடல் தூரத்தில் இருந்திருக்க வேண்டும். இன்று கடல் அலைகள் சுதந்திரமாக மிச்சமிருக்கும் சுவர்களை மோதி நலம் விசாரித்துக்கொண்டிருக்கின்றன. யுத்த காலத்தில் பார்ப்பதற்கு அனுமதி இல்லை. இப்போது பார்வையாளர்கள் அரிதாகக் காணப்பட்டாலும், புனரமைப்பு பணிகள் முன்னெடுக்கப்படாமல் கைவிடப்பட்டு விட்டது அரிப்புக் கோட்டை.

1960இல் சிலாபத்துறையில் நோர்த் ஸ்டார், க்னேடியன் ஆகிய படகுகள் மூலம் இலங்கை அரசு முத்துக்குளித்தலில் ஈடுபட்டது. இதுவே முசலிப்பிரதேசத்தின் கடைசி முத்துக்குளிப்பாகும். முத்துகளின் மீதிருக்கும் காதலின் காரணமாக இந்தப் பகுதியலுள்ள மக்களின் பெயர்களுடனும் கிராமங்களின் பெயர்களுடனும் முத்து மரைக்கார், தங்கமுத்து, பாத்து முத்து, முத்து சிலாபம், முத்தரிப்புத்துறை என்று இன்னமும் முத்து ஒட்டிக்கொண்டிருக்கிறது

எந்த வரலாற்று நிகழ்வுக்கும் புனைகதைகள் இருப்பது போன்று இந்த டொரிக் மாளிகைக்கும் பல்வேறு கதைகள் உலவுகின்றன. போர்த்துகீசியர்களால் கட்டப்பட்டு 1658 இல் டச்சுக்காரர்களிடம் ஒப்படைக்கப்பட்டது எனவும், சங்க காலத்தின் அரசியான அல்லி ராணி கட்டிய கோட்டை எனவும், மன்னார் கோட்டையிலிருந்து இந்த மாளிகைக்குச் சுரங்கவழி போக்குவரத்து இருந்தது என்றும் கி.மு.5000இல் ராவணன் கட்டிய கோட்டை எனவும் கதைகள் உலவுகின்றன.

உண்மையில் ராவணனால் கட்டப்பட்டதாக இருந்தால், பல யுகங்களைத் தாண்டி பரிணமிக்கும் உலகின் ஒரேயொரு கோட்டை என்று பெருமையாக நாம் கூறிக்கொள்ளலாம் தான். ஆனால், வரலாற்றுச் சான்றுகள் அவ்வாறு இல்லையே? கோட்டையின் திறப்புவிழாக்காட்சிகளும் அத் திறப்புவிழாவில் பிரட்றிக் நோர்த் குடை பிடித்த வண்ணம் உள்ள படமும்தான் வரலாற்றுச் சாட்சியங்களாக நமக்குக் கிடைத்துள்ளன.

தன்மீது புகுத்தப்பட்ட வரலாறுகளை, புனையப்பட்ட கதைகளை மௌனமாக, மர்மப் புன்னகையுடன் ரசித்துக்கொண்டிருக்கிறது. யாருமற்ற கடற்பரப்பில் தனித்து நிற்கும் ராவணன் கோட்டை, அரிப்புக்கோட்டை, அல்லிராணிக்கோட்டை எனும் டொரிக் மாளிகை.

(தொடரும்)

படைப்பாளர்:

ரமாதேவி ரத்தினசாமி

எழுத்தாளர், அரசுப்பள்ளி ஆசிரியர். பணிக்கென பல விருதுகள் வென்றவர். இவர் எழுதி வெளிவந்துள்ள ‘கனவுகள் மெய்ப்படட்டும்’ கட்டுரைத் தொகுப்பு பரவலாக கவனம் பெற்றுள்ளது. 2014, 2015ம் ஆண்டுகளில் ஐ நா சபையில் ஆசிரியர் பேச்சாளராகக் கலந்துகொண்டு உரையாற்றியுள்ளார். அடுப்பங்கரை டூ ஐநா தொடரில் அவரது ஐ நா அனுபவங்களை நகைச்சுவையுடன் விவரித்திருக்கிறார். இந்தத் தொடர் ஹெர் ஸ்டோரீஸ் வெளியீடாகப் புத்தகமாக வெளிவந்து பாராட்டுகளைப் பெற்று வருகிறது. இலங்கை இவருக்கு இதில் இரண்டாவது தொடர்.