அத்தியாயம் 17
திறன்பேசியில் ஓங்கி ஒலித்த அந்த அலாரச் சத்தம் அகல்யாவின் உறக்கத்தை நிர்மூலமாக்கியது. கண்களைத் திறந்தவளுக்குச் சோர்வு கொஞ்சமும் குறையவில்லை.
அந்தச் சத்தம் வேறு இன்னும் அவளுக்கு எரிச்சலூட்டியது. எட்டி அதனை அணைத்தவள், அருகே படுத்திருந்த அவள் அம்மா ராதிகாவைப் பார்த்தாள். அந்தச் சத்தம் பெரிதாக அவரைப் பாதிக்கவில்லை. மெல்லிய குறட்டையுடன் கூடிய ஆழ்ந்த உறக்க நிலையில் இருந்தார்.
அவளின் சோர்வுக்கான முக்கியக் காரணமே அவர்தான். இரவெல்லாம் அப்படியொரு புலம்பல். எதுவும் பேசக் கூடாது என்று அவளும் வாயை இறுகப் பூட்டிக் கொண்டாள். ஆனாலும் முடியவில்லை. ஒன்றிரண்டு வார்த்தைகள் அவளையும் மீறிவந்துவிட்டன. அவ்வளவுதான்!
கோபம், அழுகை என்று அவளுடைய உறக்கமும் அப்போதைய நிம்மதியும் மொத்தமாகப் பறிபோனது. இருப்பினும் கண்களை மூடிக் கிடந்தவளுக்கு எப்போது உறங்கினோம் என்றே தெரியவில்லை. உறங்கினோமா என்றே சந்தேகமாக இருந்தது.
மெதுவாக எழுந்து தலையைச் சேர்த்துக் கட்டிய போது தொடைகளுக்கு இடையில் ஒருவித பிசுபிசுப்பான உணர்வு. அவசரமாக எழுந்து படுக்கையைப் பார்த்தாள்.
‘நல்ல வேளை’ என்று பெருமூச்சுவிட்டவள் கழிவறைக்குச் சென்றாள். தன்னைச் சத்தம் செய்து கொண்டு வெளியே வர, அம்மா படுக்கையில் இல்லை. அடுப்பங்கரையில் எதையோ உருட்டிக் கொண்டிருந்தார்.
“என்னம்மா காபி வேணுமா? நான் போட்டுத் தரேன், இப்படி வாங்க.”
“காபி குடிக்கறதை எல்லாம் நான் விட்டு ரொம்ப நாளாச்சு. எங்க நீ வீட்டுப் பக்கம் வந்தாதானே அதெல்லாம் உனக்குத் தெரியும்?”
வாரத்தைக்கு வார்த்தை ஏதாவது ஒரு குத்தல். இவரிடம் பேசாமல் இருப்பதுதான் நல்லது என்று அமைதியாக ஒதுங்கி நின்றாள். அவர் சுடுதண்ணீரில் ஏதோ ஒரு பொடியைக் கலந்தார்.
“என்னம்மா அது?”
“ஆசிரமத்துல கொடுத்தது, இதைக் காலையில் சூடான தண்ணீர்ல குடிச்சா நல்லது” என்றார். அந்தப் பொடியை எட்டிப் பார்த்தாள்.
‘ம்ஹும்… காலையில சண்டை வேணாம், வாயை மூடிட்டு இருந்துக்குவோம்.’
ராதிகா அந்தப் பொடி கலந்த தண்ணீரை எடுத்துக் கொண்டு வெளியே சென்ற பின்னர், அகல்யா தனக்கான காபியைக் கலந்து கொண்டு முகப்பறைக்கு வந்தாள்.
அப்போது குளியலறைக்குச் சென்றிருந்த ராதிகா திரும்பி வந்ததும், “பீரியட்ஸா உனக்கு?” என்று முறைக்க,“அது ஆமா” என்றாள் தயக்கத்துடன்.
“அப்படியே துணி எல்லாம் போட்டு வைச்சு இருக்க, அதுவும் குளிக்காம அப்படியே வந்து நட்ட நாடு ஹாலில் வந்து உட்கார்ந்திருக்க” என்று சொல்ல, அகல்யாவிற்குக் கடுப்பானது.
“காபி குடிச்சுட்டுப் போய் குளிக்கிறேன் ம்மா.”
“உன்னை நான்தான் வளர்தேனானு சந்தேகமா இருக்கு. எப்படிடி நீ இப்படி மாறிப் போன? இதுல டாக்டருக்கு வேற படிச்சு இருக்கா” என்று ஆரம்பித்து அவர் பேசப் பேச, அவளால் அந்த காபியை குடிக்க முடியவில்லை.
கோபமாக எழுந்தவள் அதனை அப்படியே சிங்கில் கொட்டினாள்.
“என்னடி பண்ற?”
“நீதானே குளிக்கணும்னு சொன்ன, அதான் போறேன்” என்று பல்லைக் கடித்தபடி சொல்லிவிட்டு, குளியலறையில் புகுந்தாள்.
தண்ணீரைத் திறந்த விட்டவள் அப்படியே முகத்தை மூடிக் கொண்டு குலுங்கிக் குலுங்கி அழுதாள்.
கடந்த ஐந்து மாதமாக வரிசையாகப் பிரச்னைகள். அதுவும் சந்துருவிடம் முடியாது என்கிற பிறகுதான் இதெல்லாம் தொடங்கியது. அவன் அம்மா, அக்கா என்று ஒவ்வொருவராக அவளிடம் தூது வந்தனர். அவர்களை எப்படியோ சமாளித்து முடிக்கும் போது, விஷயம் அம்மாவின் காதிற்குப் போய்விட்டது.
“சந்துருவை நீ ஏற்கெனவே லவ் பண்ணியாமே அப்படியா?”
“ம்மா அதெல்லாம் பழைய கதை.”
“எனக்குப் பழைய கதை எல்லாம் வேண்டாம், இப்போ ஏன் சந்துருவை நீ வேண்டாங்குற?”
“சந்துருன்னு இல்ல, எனக்குப் பெருசா கல்யாணத்துலயே விருப்பம் இல்ல.”
“இதேதாண்டி நீ ஆரம்பத்துல இருந்து சொல்ற. எனக்கு ஒண்ணுமே புரிய மாட்டேங்குது”
“நான் என்னதான் விளக்கிச் சொன்னாலும் உங்களுக்குப் புரியாது. என்னை இப்படியே விட்டுருங்களேன். ப்ளீஸ்.”
“விட்டுருங்கனு சுலுவா நீ சொல்லிடுவ, நான்தானே சொந்தகாரங்க முன்னாடி எல்லாம் அசிங்கப்படணும்.”
“ஆமாக்கா, எந்த விசேஷத்துக்கு போனாலும் எல்லோரும் கேட்குறாங்க, உனக்குக் கல்யாணம் பண்ணாதது பத்தி, போதாகுறைக்கு அக்காவை விட்டுட்டுக் கல்யாணம் பண்ணி புள்ளை பெத்துக்கிட்டேன்னு வேற சொல்றாங்க” என்று தம்பியும் அவருடன் சேர்ந்து ஒத்து ஊதினான்.
“அடுத்தவங்க சொல்றத எல்லாம் நீ ஏண்டா காதுல வாங்குற?”
அந்த வார்த்தைகளைக் கேட்டதுமே ராதிகா சீற்றமானார்.
“நீ வேலைன்னு ஏதோ ஒரு ஊருக்குள்ள போய் உட்கார்ந்துக்கிட்டு இருக்க, நாங்கதானே இங்கே இருந்து இந்தப் பேச்சை எல்லாம் கேட்டுக்கிட்டு இருக்கோம்.”
“உங்களுக்கு வேணும்னா நீங்களும் வந்து என்கூட இருங்க” என்றதும் அவர் முகத்தைத் திருப்பிக் கொண்டு, “ஒண்ணும் தேவை இல்ல” என்றார். அதற்கு மேல் அவரிடம் என்ன பேசுவது?
அவள் அந்தப் பேச்சைத் தொடரவில்லை. அன்றிரவே அங்கிருந்து கிளம்பிவிட்டாள். ஆனால், பிரச்னை அத்துடன் முடியவில்லை. ராதிகாவிற்கு மாரடைப்பு என்கிற தகவல் வந்தது. அடித்துப் பிடித்து மருத்துவமனைக்கு ஓடினாள்.
சிகிச்சையளித்த மருத்துவர் ஆஞ்சியோ செய்ய வேண்டுமென்றார். அவளும் மருத்துவர்தான். இதெல்லாம் இப்போது சாதாரண சிகிச்சை முறையாகிவிட்டது என்கிற போதும் மனம் பதறியது.
சிகிச்சை முடிந்து கண் விழித்தவரை அவள் ஆவலுடன் சென்று பார்த்தாள்.
“இவளுக்கு ஏண்டா சொன்ன, இவளுக்கு நான் செத்தாலும் எந்தப் பிரச்னையும் இல்ல” என்று சொல்ல, அதற்கு மேல் அவளால் அங்கே நிற்க முடியவில்லை. சிகிச்சை முடித்து அவர் வீட்டிற்குத் திரும்பியதும் அவளும் ஊருக்குத் திரும்பிவிட்டாள். ஆனால், அவளால் நிம்மதியாக இருக்க முடியவில்லை. குற்றவுணர்வு குத்தியது.
‘இப்போ என்ன கல்யாணம்தானே, பண்ணிக்கிட்டா என்ன? பேசாம சந்துருகிட்ட பேசிப் பார்க்கலாமா?’ என்று அவள் மனம் ஒரு நிலையில் இல்லை. நிறைய யோசித்து குழம்பியது.
அப்போது அவள் தம்பி, “என் மாமியார் வீட்டுல எல்லோரும் டூர் போறோம். ஒரு மூணு நாள் நீ அம்மாவைப் பார்த்துக்க முடியுமா? அதுவும் அவங்க ஹெல்த் கன்டிஷன்ல அவங்களைத் தனியா விட்டுப் போக வேண்டாம்னு பார்க்குறேன்” என்றான்.
“நான் பார்த்துக்கறேன், நீ கொண்டு வந்துவிடு” என, அவனுக்கு அம்மாவைச் சம்மதிக்க வைப்பதுதான் பெரும்பாடாகிப் போனது.
அவர் வரபோகிறார் என்றதும் அகல்யா பணிப்பெண்ணிடம் சேர்ந்து வீட்டை முழுமையாகச் சுத்தம் செய்தாள். சமையலறையை ஒழுக்கப்படுத்தினாள். ஆனால் அவர் வந்ததுமே, “ஒரு பூஜை ரூம்கூட இல்லையா இங்க?” என்று குறைபட்டார்.
சில மனிதர்களை என்ன செய்தாலும் திருப்திப்படுத்த முடியாது. தம்பி கிளம்பும் போது, “அம்மாகிட்ட எதுவும் தேவையில்லாம பேசிட்டு இருக்காதக்கா, அப்புறம் அவங்க திரும்பவும் டென்ஷனாகி உடம்புக்கு ஏதாவது வந்திட போகுது” என்று அறிவுரை வழங்கினான்.
“நான் டாக்டர், எனக்குத் தெரியும் அம்மாவை எப்படிப் பார்த்துக்கணும்னு, நீ கிளம்பு” என்றாள்.
ஆனால் அவளுடைய மருத்துவப் படிப்பு எல்லாம் அவரிடம் கொஞ்சமும் எடுபடவில்லை. என்ன பேசினாலும் அதில் ஏதோ ஒரு குற்றம் குறையைக் கண்டுபிடித்தார்.
வந்து ஒரு நாள் முடிவதற்குள் அவளுக்குத் தலை சுழன்றது. எல்லாம் சுகாதார நிலையத்திற்குச் செல்லும் வரைதான். தன்னை ஒருவாறு ஆசுவாசப்புத்திக் கொண்டவள் குளித்து முடித்து மஞ்சள் நிறக் குர்தியை அணிந்தாள். அவள் தலையைத் துவட்டியபடி வெளியே வர, சமையலறை அமுளிதுமுளி பட்டுக்கொண்டிருந்தது.
“ம்மா நீ ஏன் இதெல்லாம் பண்ணிட்டு இருக்க? வேலை செய்றவங்க வந்துடுவாங்க, அவங்க வந்து சமையல் எல்லாம் பார்த்துக்குவாங்க.
“இருக்கட்டும் என்ன இப்போ?”
“நீ தனியா இருந்தா வேலை ஏதாவது செய்வனுதான் தம்பி உன்னை இங்க கொண்டு வந்து விட்டுருக்கான், இங்கேயும் வந்து நீ வேலை செஞ்சுட்டு இருக்க.”

“என் உடம்புக்கு என்ன? நல்லாத்தான் இருக்கேன், சரி சரி உட்காரு. டிபன் எடுத்துட்டு வரேன்” என்று ஹாட்பேக் ஒன்றை எடுத்து வந்து மேஜையில் வைத்தார்.
“அதுக்குள்ளே சமைச்சுட்டியா?”
“இது என்ன பெரிய வேலையா”
“என்ன சமைச்ச” என்று கேட்டுக் கொண்டே தண்ணீரை எடுத்து வந்து வைத்தாள்.
“பொங்கல் சாம்பார்.”
“இப்போ உன் உடம்பு இருக்க நிலைமைக்கு… பொங்கல் எல்லாம் சாப்பிடக் கூடாதும்மா. ரொம்ப ஹெவியா இருக்கும்.”
“எனக்குக் கஞ்சி பண்ணிட்டேன். இத உனக்குதான்…”
“எதுக்கு இவ்வளவு வேல?”
“உனக்குப் பொங்கல்னா ரொம்பப் பிடிக்கும் இல்ல, அதான்” என்று சொல்லிக் கொண்டே சுடச்சுட பொங்கலைத் தட்டில் பரிமாறினார்.
இந்த அம்மாக்களே இப்படித்தான் போல. ஒரு பக்கம் சண்டை போட வேண்டியது. மறுபக்கம் பாசத்தைப் பிழியப் பிழிய ஊற்ற வேண்டியது.
ஆவி பறக்க தட்டில் பரிமாறப்பட்ட பொங்கலைப் பார்த்தாள். ஒரு காலத்தில் பொங்கல் அவளுக்குப் பிடித்தமான உணவுதான். ஆனால் இப்போது இல்லை.
அதுவும் காலையில் இவ்வளவு அதிக கலோரிகள் கொண்ட உணவுகளை அவள் சாப்பிடுவதே இல்லை. பழம், பிரட், ஜுஸ். இவைதான்.
“சாப்பிடுறி.”
“நீங்களும் உங்க கஞ்சியை எடுத்துட்டு வாங்க. ஒண்ணா சாப்பிடலாம்.”
“இன்னைக்குக் கிருத்திகை நான் குளிச்சுட்டுதான் சாப்பிடுவேன்.”
‘இது வேறயா’ ஏதோ சொல்ல வாயெடுத்தவள் பின்னர் எதுவும் வம்பு வளர்க்க வேண்டாமென்று சாப்பிடத் தொடங்கினாள். அம்மாவின் அதே கைப்பக்குவம். அந்த ருசி பழைய நினைவுகளை எல்லாம் கிளிறிவிட்டது.
பல நேரம் அவள் படித்துக் கொண்டே உறங்கிவிடுவாள். அம்மாதான் எழுப்பி தட்டில் உணவைப் பிசைந்து ஊட்டிவிடுவார். வீட்டில் தம்பியை விட அவளுக்குதான் செல்லமும் அதிகம். அப்போதெல்லாம் அம்மாவிற்கும் அவளுக்கும் சண்டை எல்லாம் வந்ததில்லை. ஏன் இப்போது அவர்கள் உறவு இப்படிச் சிக்கலாக இருக்கிறது.
யோசிக்கும் போதே கண்கள் கலங்கின.
“என்னாச்சு அகல்யா?”
‘இந்த பீரியட்ஸ் எமோஷன் வேற’ என்றபடி கண்களைத் துடைத்துக் கொண்டவள், “அதெல்லாம் இல்ல. பொங்கல் ரொம்ப நல்லா இருக்கு. நான் இப்படிச் சாப்பிட்டு ரொம்ப நாளாச்சு” என்றபடி ருசித்து சாப்பிட்டாள்.
மகளின் தோளைத் தொட்டவர், “நானும் போன பிறகு உனக்குனு யாரு இருப்பா, அதுக்காகதான் கல்யாணம் பண்ணிக்க பண்ணிக்கன்னு சொல்றேன். உனக்காகன்னு யாராவது இருக்கணும் அகல்யா” என்று நேற்று சத்தமாகச் சொன்னதை இப்போது மெதுவாகச் சொன்னார்.
அவள் தலையை நிமிராமல் அமைதியாகச் சாப்பிட்டு முடித்தாள்.
“இன்னும் கொஞ்சம் வைச்சுக்கோடி.”
“இல்ல இல்ல போதும், காலையில இவ்வளவுதான் என் லிமிட்” என்று கை கழுவிக்கொண்டு வந்தாள்.
“நீயும் சாப்பிடேன்மா… மாத்திரைப் போடணும் இல்ல.”
“இல்ல இல்ல குளிச்சுட்டு வந்துடுறன், ஆமா நீ இப்பவே கிளம்பணுமா இல்ல லேட்டாகுமா” என்று அவர் கேட்க நேரத்தைப் பார்த்தாள்.
“கிளம்பணும்தான் ஆனா இன்னும் வேலை செய்றவங்க வரக் காணோமே” என்கிற அவள் திறன்பேசி எடுத்து அழைத்தாள்.
“போனை எடுக்க மாட்டுறாங்களே….”
“உனக்கு நேரமாவுதுனா நீ கிளம்பு.”
“ஆமா டைமாயிடுச்சு, நான் கிளம்பணும். எப்படியும் வேலை செய்றவங்க வந்துருவாங்க. நீங்க எந்த வேலையும் செய்ய வேணாம், அவங்களே வந்து சமைப்பாங்க.”
“அதெல்லாம் நான் பார்த்துக்கிறேன். நீ கிளம்பு.”
“நீங்க மாத்திரை போடுங்க டைமுக்கு” என்று சொல்லிக் கொண்டே வாசலைத் தாண்டியவள், “கார் சாவியை மறந்துட்டேன்” என்று உள்ளே வந்து சாவியைத் தேட, “அந்த அலமாரில பார்த்தேன் பாரு” என்றார்.
“ஆ இங்கேதான் இருக்கு, சரிம்மா நான் வரேன்” என்று காரை எடுத்தவளுக்கு என்னவோ மனதை நெருடியது. வேலை செய்யும் பெண்ணிற்கு மீண்டும் அழைத்தாள். பதிலே இல்லை.
‘லீவ் எதாச்சும் போட்டுட்டாங்களா?’
இதே குழப்பத்துடன் சுகாதார நிலையம் வந்து இறங்கினாள். அம்மா வீட்டில் தனியாக எப்படி இருப்பார் என்கிற குழப்பம் மனதில் ஓடிக் கொண்டிருந்தது.
உள்ளே வந்ததும் தேவிகாவைப் தேடிப் பிடித்தாள். அவள்தான் நித்யாவை வேலைக்காக அறிமுகம் செய்தது.
“நித்யா வரல, போனையும் எடுக்கல. அம்மா வேற வீட்டுல தனியா இருக்காங்க. ஆமா உனக்கு அவங்க வீட்டுல இருக்க வேற யாருடைய நம்பராச்சும் தெரியுமா?”
“தெரியாதே மேடம், எனக்கு நித்யாவை மட்டும்தான் தெரியும்.”
அவள் கவலையுடன் வந்து இருக்கையில் அமர்ந்தாள்.
“லட்சுமி அம்மாவை வேணா ஒத்தாசைக்கு அனுப்பி வைக்கட்டுமா?”
“வேண்டாம் தேவி, பாவம் அவங்களே இப்பதான் டியூட்டி முடிச்சு கிளம்பி இருப்பாங்க… சரி விடு நான் அப்புறம் அம்மாகிட்ட பேசுறேன். நீ இன்னைக்கு டிஸ்சார்ஜ் லிஸ்ட் எடுத்துட்டு வா” என்று தன் வேலையில் கவனம் செலுத்தத் தொடங்கிய அகல்யா, அதன் பின் அம்மாவிடம் பேச வேண்டும் என்பதையே மறந்துவிட்டாள்.
அன்றைய பரிசோதனைகளை எல்லாம் முடித்து ஓய்வாக இருக்கையில் சாய்ந்தவளுக்கு அப்போதுதான் அம்மாவிற்கு அழைக்க வேண்டுமென்ற நினைவு வந்தது.
“நான் ட்ரை பண்ணேன்? ஆனா அவங்க போனே எடுக்கல.”
“ஒண்ணும் பிரச்னை இல்லடி.”
“மாத்திரை எல்லாம் போட்டீகளா?”
“அதெல்லாம் போட்டேன்… ஆனா கொஞ்சம் தலை சுத்தலா இருக்கு.”
“என்னம்மா சொல்றீங்க. பிபி செக் பண்ணீங்களா?”
“அதெல்லாம் நார்மலாதான்டி இருக்கு.”
“சரி சரி நான் சீக்கிரம் வந்துடுறேன். நீங்க ஏதாவதுனா எனக்கு கால் பண்ணுங்க” என்ற அகல்யா நேரத்தைப் பார்த்தாள். அன்று பார்த்து இரவு நேர மருத்துவர் வருவதற்குத் தாமதமானது. அவனுக்கு அழைத்தாள்.
“வண்டி பஞ்சர், இதோ பத்து நிமிஷத்துல வந்துடுறேன்” என்று தெரிவித்தான்.
தேவிகா அப்போது, “இன்னைக்குதான் கேஸ் ஒண்ணும் இல்லையே, நான் பார்த்துக்கிறேன் நீங்க கிளம்புங்க” என்றாள்.
அம்மாவை நினைத்து கவலையாக இருந்தாலும் ஒரு பக்கம் கிளம்புவதற்கும் தயக்கமாக இருந்தது.
“அட நீங்க கிளம்புங்க மேடம். நான் பார்த்துக்கிறேன்” என்று தேவிகாதான் அவளை வற்புறுத்தி அனுப்பி வைத்தாள்.
அப்போதுதான் ரேகா வீட்டில் மயங்கி விழுந்திருந்தாகச் சொல்லி ஈஸ்வரி அவளை ஆட்டோவில் அழைத்து வந்திருந்தாள்.
அந்த நேரம் பார்த்து அங்கே மருத்துவர் யாரும் இல்லை. அகல்யாவும் அப்போதுதான் கிளம்பினாள்.
“எப்படி விழுந்தாக. ப்ளீடிங் வேற ஆகி இருக்கு… இல்ல இது இங்க பார்க்க முடியாது. நான் அம்புலன்ஸ் அரேஞ் பண்றேன். உடனே பெரிய ஆஸ்பத்திரிக்குக் கூட்டிட்டுப் போயிடு ஈஸ்வரி” என்று அவளைச் சோதித்துவிட்டு தேவிகா கூற, ஈஸ்வரிக்கு ஒன்றும் புரியவில்லை
“ஆமா இந்தப் பொண்ணோட வூட்டுகாரருக்குச் சொல்லிட்டியா?”
“என்கிட்ட நம்பர் இல்லயேக்கா.”
“சரி நான் பேசிக்கிறேன், ஆஸ்பத்திரிக்கு வரைக்கும் நீயும் கொஞ்சம் கூட போறியா?”
ஈஸ்வரிக்கு தான் நிறைமாதக் கர்பிணியாக விழுந்ததும் உயிருக்காகப் போராடியதும் அந்த நொடி அவள் கண்முன்னே வந்து நிழலாடியது.
“நான் கூடப் போறேன்க்கா” என்று சம்மதித்தாள்.
அதன் பின்பு தேவிகா அகல்யாவைத் தொடர்பு கொண்டு விவரத்தைத் தெரிவிக்க, “அந்தச் சரண் இன்னும் வரலயா? நான் கிளம்பி வந்துருக்கவே கூடாது” என்று படபடத்தாள்.
“நீங்க இங்க இருந்தாலும் ஒண்ணும் பண்ணி இருக்க முடியாது. கேஸ் ரொம்ப காம்பிலேக்ஷனாதான் வந்துச்சு, நான் ஹாஸ்பெட்டில் இருக்க ட்யூட்டி நர்ஸுக்கு எல்லாம் விவரமா சொல்லிட்டேன், இனிமே அவங்க பார்த்துப்பாங்க. நீங்க விடுங்க” என்றாள். ஆனால் அகல்யாவின் மனம் அமைதியடையவில்லை.
சில நிமிடங்களில் தேவிகாவிடமிருந்து மீண்டும் அழைப்பு வந்தது.
“கொண்டு போகும் போதே அந்தப் பொண்ணு இறந்துடுசாம்” என்று சொல்ல, அகல்யா தலையிலடித்துக் கொண்டாள்.
(தொடரும்)
படைப்பாளர்

மோனிஷா
தமிழில் முதுகலைப் பட்டம் பெற்றவர். தீவிர வாசிப்பாளர் மற்றும் எழுத்தாளர். இணையத்தில் 27 நாவல்களை இதுவரை எழுதியுள்ளார். அவற்றில் இருபது நாவல்கள், புத்தகங்களாகப் பதிப்பிக்கப்பட்டுள்ளன. பெண்ணியம், சூழலியல் விழிப்புணர்வு இரண்டும் இவரது பெரும்பாலான நாவல்களின் மையக் கருத்தாக அமைந்துள்ளன. சிறார் எழுத்திலும் தற்போது ஈடுபட்டுள்ளார். இவரின் ‘ஒரே ஒரு காட்டில்’ சிறார் நூலை ஹெர் ஸ்டோரீஸ் சமீபத்தில் வெளியிட்டுள்ளது.




