அத்தியாயம் 16

குணா ஊர் முழுக்கவும் மனைவியைத் தேடி அலைந்தான். ஆனால், அவள் எங்கே தேடியும் கிடைக்கவில்லை. சோர்ந்து களைத்து அவன் ஏமாற்றத்துடன் வீட்டிற்குத் திரும்ப, கதவு திறந்திருந்தது. மகள் வாசலில் விளையாடிக் கொண்டிருந்தாள்.

“நிகா செல்லம்” என்று மகளை ஓடிச் சென்று அவன் அணைத்துக் கொள்ள, “போ ப்பா… நான் உன்கிட்ட பேச மாட்டேன்” என்று தள்ளிவிட்டாள்.

“அப்பா, தெரியாம பண்ணிட்டேன்.”

“நீ ஒண்ணும் தெரியாம பண்ணல, தெரிஞ்சுதான் அம்மாவை அடிச்ச… நான் பார்த்தேன். அம்மா நெத்தி எல்லாம் ரத்தம்” என்று மகள் சொன்னதைக் கேட்டவன் முகம் சுண்டிவிட்டது.

அப்போது, “நிகா சாப்பிட வா” என்று உள்ளிருந்து ஈஸ்வரியின் அழைப்பு கேட்டது. 

“வரேன்மா” என்று அவன் பிடியை உதறிவிட்டு நிகா உள்ளே ஓடினாள். அவன் மெதுவாக உள்ளே எட்டிப் பார்த்தான்.

ஈஸ்வரி பொட்டலத்தில் இருந்த இட்லியைப் பிரித்து மகளுக்குத் தட்டில் வைத்து சாம்பாரை ஊற்றினாள்.

“நீ சாப்பிடலயாம்மா?”

“மாத்திரை போட்டுட்டு வரேன் கண்ணு “ என்று மாத்திரையை அட்டையிலிருந்து பிரித்து விழுங்கும் போது, குணா வெளியே நிற்பதைக் கண்டாள். ஒரு நொடிதான் அவள் பார்வை அவன் மீது நிலைத்தது.

அதன் பிறகு அவனை அவள் கண்டுகொள்ளவே இல்லை. சாப்பிட்டு முடித்து தட்டுகளைக் கழுவி வைத்தாள். மீண்டும் சில மாத்திரைகளை எடுத்து விழுங்கினாள்.

அவள் நெற்றியிலிருந்த கட்டை பார்த்த குணாவின் மனம் குற்றவுணர்வில் குறுகியது. எப்போதும் இல்லாமல் பார்க்க மிக மிகச் சோர்வாகத் தெரிந்த மனைவியின் முகத்தைக் கவலையுடன் நோக்கினான்.  

மன்னிப்பு கேட்க எண்ணி, “ஈஸ்வரி” என்று அழைத்தான். அவனை அவள் நிமிர்ந்தும் பார்க்கவில்லை.

“இன்னோரு பொட்டலம் உள்ளே இருக்கு” என்று சொல்லிவிட்டுச் சென்று படுக்கையில் சாய்ந்தவள், “போதும் போதும் டிவி பார்த்தது… வந்து படு” என்று மகளையும் அழைத்தாள்.

“ம்மா இன்னும் கொஞ்ச நேரம்…”

“அம்மாவால முடியல தங்கம், உடம்பெல்லாம் வலிக்குது” என்றதும் அடுத்த வார்த்தைப் பேசாமல் டிவியை அணைத்துவிட்டுச் சென்று நிகாவும் படுத்துவிட்டாள். குணா அப்படியே சிலையாக நின்றான்.

அவள் கோபப்படவில்லை. திட்டவில்லை. அவன் எதிர்பார்த்த எந்த உணர்ச்சியும் காட்டவில்லை. என்ன செய்வதென்று புரியாமல் அவனும் பாயைப் போட்டுப் படுத்துக் கொண்டான்.

அடுத்த நாள் காலை எப்போதும் போல விடியற்காலை எழுந்து கொண்டாள். முன்பு போல அவளால் பரபரப்பாக இயங்க முடியவில்லை. அடித்து போட்டது போன்ற வலி, யாராவது உதவிக்கு இருந்தால் நன்றாக இருக்கும் என்று ஏக்கமாக இருந்தது.

பிறந்த வீட்டிற்குச் செல்லலாம். அம்மா ஒத்தாசையாக இருப்பார். கூடவே ‘ஏன் வந்த, எதுக்கு வந்த?’ என்று ஆயிரம் கேள்விகளும் வரும். போதாக்குறைக்கு நெற்றியிலிருக்கும் காயத்திற்கு வேறு பதில் சொல்ல வேண்டும். அறிவுரைகள் கேட்க வேண்டும்.

இதற்கு அமைதியாக இங்கேயே படுத்துக் கிடக்கலாம். செய்ய முடிந்த வேலைகளைச் செய்யலாம். மெதுவாக வேலைகளைத் தொடங்கினாள். மகளைப் பள்ளிக்கு அனுப்பினாள்.

பாலைக் கறந்து, மாட்டுக் கொட்டகையைச் சுத்தம் செய்து என்று  வேலைகள் பாட்டுக்கு நிற்காமல் தொடர்ந்தன. 

போதாக்குறைக்கு, “ஏன் நேத்து கடையைத் திறக்கல” என்று கேட்டுக் கொண்டு வந்த அக்கம்பக்கத்தினர் அவள் நெற்றிக் காயத்தைப் பார்த்து, “என்ன நடந்தது, எது நடந்தது?” என்று ஆர்வமாகக் கதை கேட்க இறங்கிவிட்டனர்.

அவர்களை எல்லாம் சமாளித்து ஒரு வழியாகத் துரத்திவிட்டு, படுக்கையில் சரிந்து கண்களை மூட, “ஈஸ்வரி…” என்று குணா மெல்ல அவள் தோளைத் தொட்டான். அவள் அசையவே இல்லை.  

“என்னை மன்னிச்சிடு ஈஸ்வரி, நான் அப்படி நடந்துன்னு இருக்கக் கூடாது. கண்ணு மண்ணு தெரியாம குடிச்சுட்டு வந்து… தெரியல எனக்கே நான் என்ன பண்ணேன்னு ஒண்ணும் தெரியல” என்று கண்ணீர் விட்டு அழுதான். 

அவள் திரும்பி முறைக்க, ‘என்ன சொல்ல போகிறாளோ?’ என்று திகலாகப் பார்த்தான்.  

ஆனால் அவள் சாதாரணமாக, “சரி, மன்னிச்சுட்டேன்,போய் வேற வேலை இருந்தா பாரு” என்றாள்.

“ஈஸ்வரி…”

“யோவ் போயா, என்னைய கொஞ்ச நேரம் நிம்மதியா தூங்கவிடு” என்று திரும்பிப் படுத்துக் கண்களை மூடிக் கொண்டாள். அவளுக்கு அப்போதைக்குத் தேவையாக இருந்தது அமைதியான உறக்கம். தேவையில்லாமல்  அவனிடம் விவாதம் செய்து, அந்தக் கொஞ்சம் நஞ்ச அமைதியையும் அவள் கெடுத்துக் கொள்ள விரும்பவில்லை.

ஓரிரு வாரங்களில் அவள் உடல் தேறிவிட, பழைய மாதிரி வீட்டுப் பணிகளைச் செய்தாள். ஒருவாறு எல்லாம் இயல்பு நிலைக்குத் திரும்பிய போதும் குணாவிற்கும் அவளுக்கும் இடையிலான உறவு மட்டும் பழையபடி மாறவில்லை. 

மன்னித்துவிட்டதாக அவள் சொன்னாலும் முன்பு போல அவனிடம்  சகஜமாகப் பேசுவதில்லை. திட்டவோ சண்டை போடவோ என்று எதுவும் இல்லை.

அதுதான் குணாவை இன்னும் அதிகமாகக் குத்தியது. அவளின் அந்த விலகலைத் தாண்டி அவனால் அவளிடம் பேசவும் முடியவில்லை. நெருங்கவும் முடியவில்லை.

ஐந்து மாதங்கள் கழிந்தன. அந்த ஆண்டிற்கான சிறந்த மாணவி என்கிற பரிசை நிகாவல்லி வாங்கியிருந்தாள். ஈஸ்வரிக்கு அப்படியொரு பெருமை. அந்த சந்தோஷத்துடன் இனிப்பு எல்லாம் வாங்கிக் கொண்டு அவர்கள் வீட்டிற்குத் திரும்பினர்.

வாசலில் ஈஸ்வரியின் அம்மா கனகவல்லி காத்திருந்தார்.

“யம்மா, நீ எப்போ வந்த. வரப்போறதா ஒரு போன்கூடப் பண்ணல” என்று ஈஸ்வரி பூட்டைத் திறந்து கொண்டே கேட்க, “தங்கச்சி வூட்டுக்குப் போயிருந்தேன் , அப்படியே உன்னையும் பார்த்துட்டுப் போலாம்னு” என்றார்.

அதற்குள் நிகா, “ஆயா இங்க பாரேன்” என்று தான் வாங்கிய பரிசைக் காட்டினாள்.

“பரவாயில்லையே” என்று பேத்தியின் கன்னத்தை வழித்து முத்தமிட்டு, “என் தங்க புள்ள” என்று கொஞ்சினார்.

“பாரு ஆயா, கீழ என் பேரு வகுப்பெல்லாம் போட்டிருக்கு.”

“அப்படியா?” என்று வியப்பாக வாங்கிப் பார்த்தார்.  

“ஆயாகிட்ட காட்டிட்டியா, இப்படிக் கொடு. நான் பத்திரமா எடுத்து வைக்கிறேன்” என்று அந்தப் பரிசை வாங்கி அலமாரியில் வைக்க போக, “ம்மா என் பிரண்டு மலருக்கிட்ட காட்டிட்டு வரவா?” என்று கேட்டாள் நிகா. 

“எடுத்துட்டு போய் எல்லாம் காட்டக் கூடாது. வேணா உன் பிரண்டைக் கூட்டிட்டு வந்து இங்கே காட்டு” என்றதும் நிகா, “சரிம்மா” என்று விட்டால் போதுமென்று ஓடிவிட்டாள்.

குணா யோகேஷின் வண்டி கண்ணாடியை உடைத்ததில் நிகாவிற்கும் மலர்விழிக்கும் இடையில் முட்டிக் கொண்டது.  அதுவும் இருவரும் மாறி மாறி அடித்துக் கொண்டதாகப் பள்ளியிலிருந்து புகார் வந்தது.

ரேகாவிற்கு அந்தச் சூழ்நிலையை எப்படிச் சமாளிப்பது என்று தெரியவில்லை. ஈஸ்வரிதான் அவர்கள் இருவரையும் சமாதானப்படுத்தி மீண்டும் பேச வைத்தாள்.

அதன் பின்பு நிகா பக்கத்து வீட்டிற்குச் சென்று விளையாடுவதும் மலர் இங்கே வந்து படிப்பதும் இயல்பாகிப் போனது. 

மகள் தொடர்ந்து மூன்று வருடங்களாக வாங்கிய பரிசுகளை வரிசையாக அடுக்கிய ஈஸ்வரியின் முகத்தில் பூரிப்பு. 

அதன் பின்பு அமம்விற்குப் பாலை அடுப்பில் வைத்து டீத்தூளை போட, “ஈஸ்வரி” என்றபடி கனகம் அருகே வந்து நின்றார்.

“நீ போய் உட்காரும்மா, நான் போட்டுன்னு வரேன்.”    

“இல்ல ஒரு விஷயம் பேசணும்.”

“என்னது?”

“அது இல்ல, நீ தங்கச்சி சீமந்தத்துக்கும் வரல, இப்போ புள்ள பொறந்ததுக்கும் வந்து பார்க்கலனா… ” என்று தயக்கமாக இழுத்தார்.

“இப்போ அதைக் கேட்கத்தான் கிளம்பி வந்தியாக்கும்?”

“அது இல்ல ஈஸ்வரி, இருந்து இருந்து அஞ்சு வருஷம் கழிச்சு இப்பதான் தங்கச்சிக்குப் புள்ள பொறந்திருக்கு.”

“அதுக்கு?”

“இல்லடி ஒரு எட்டு போய்…”  

“ம்மா அந்த ஆளு தேவையில்லாத விசயத்தை எல்லாம் பேசி என் புருஷன்காரனை ஏத்திவுட்டு இருக்கான், அதுவரைக்கும்  ஒழுங்கா இருந்த மனுஷன் திரும்பியும் குடிச்சிட்டு வந்து…” என்று கோபமாகத் தொடங்கிய ஈஸ்வரி அதற்கு மேல் பேசாமல் அப்படியே நிறுத்திக் கொண்டாள்.

ஐந்து மாதம் கடந்துவிட்டது. ஆனால், இன்னும் அந்த வலி பச்சை ரணமாக அவள் நெஞ்சைக் கீறிக் கொண்டிருக்கிறது. அன்று நடந்த எதையும் மறக்க முடியவில்லை.

‘முழு புள்ளகூட பெத்துக்கலாம், அறை புள்ள பெத்துக்கக் கூடாது’ என்று சொல்வார்கள். அந்த வார்த்தையின் வலிகளை அவள் உணர்வுப்பூர்வமாக உணர்ந்த தருணம் அது.

வயிற்றிலிருந்த கருவைக் கலைத்துவிட்டதை எண்ணி இப்போதும் அவளுக்குக் குற்றவுணர்வு எல்லாம் இல்லை. ஆனால் அந்த வலி…

கனகம் அப்போது, “பழைய விஷயத்தை எல்லாம் பேசி என்னவாக போகுது, சும்மா ஒரு  எட்டு நீயும் உன் வூட்டுக்காரரும் போய் குழந்தையைப் பார்த்துட்டு வந்துடுங்களேன்” என்று கூற, “முடியாதும்மா, அந்த ஆளு மூஞ்சுலகூட நான் முழிக்க விரும்பல” என்று திடமாக மறுத்தாள்.

“அவர் உனக்குத் தாய்மாமன், உங்க அப்பா போன பொறவு உனக்கு எல்லா நல்லதும் முன்னாடி நின்னு செஞ்சது அந்த மனுஷன்தான்” என்று சொல்ல, ஈஸ்வரி படக்கென்று திரும்பினாள்.  

“எது… என் படிப்பை நிறுத்தி ஒரு குடிகாரனுக்கு என்னைய கட்டி வைச்சதைத்தான், நீ நல்லது செஞ்சாருனு சொல்லிக்கிட்டு இருக்கியாக்கும்…”

“தப்புதான்டி, சரியா விசாரிக்காம உன்னைய அவசரத்துல கட்டி வைச்சுட்டோம். இன்னும் அதையே சொல்லிக்கிட்டு இருப்பியா, கஷ்டமோ நஷ்டமோ உன் வாழ்க்கையை நீதான் சீர்படுத்திக்கணும். அதை விட்டு அடுத்தவங்களைக் குத்தம் சொல்லிக்கிட்டு இருந்தா எப்படி?”

“நான் யாரையும் குத்தம் சொல்லல, என் கஷ்ட நஷ்டத்தை நான் சமாளிச்சுக்கிறேன். ஆனா என் வாழ்க்கைல தேவையில்லாம உங்க அண்ணனும் அவர் மவனும் வந்து குட்டய குழப்பாம் இருந்தா போதும்.”

“நீ அந்தப் பக்கத்து வூட்டுக்காரனைப் பத்தி முன்னமே சொல்லி இருந்தா இம்புட்டு குழப்பமே நடந்திருக்காது” என்று கனகம் சொன்ன நொடி ஈஸ்வரிக்குத் தாறுமாறாகக் கோபமேறியது. 

 “பெத்த அம்மாவா நீ எல்லாம், என் வாழ்க்கை நாசமா போனதுக்கு முத காரணமே நீதான்” என்று சமையல் மேடையைப் பிடித்துக் கொண்டு குலுங்கி குலுங்கி அழுதாள்.

அதிர்ந்த கனகம்,  “ஈஸ்வரி” என்று தோளைத் தொட, “அந்த ஆளு யார் என்னனுகூட எனக்குச் சரியா தெரியாது, ஆனா அவனை வைச்சு என் வாழ்க்கைல ஏன் குழப்பம் பண்ணிட்டு இருக்கீங்க எல்லாரும்னு எனக்குச் சத்தியமா புரியல, மத்தவங்கள விடு. பெத்த அம்மா நீயே என்னை நம்ப மாட்டேங்குற. இப்பவும் உங்க அண்ணன் செஞ்சதுதான் நியாயம்னு பேசுற இல்ல நீ” என்று ஆதங்கமாகச் சொல்லி கண்ணீர் வடித்தாள். 

“இல்ல ஈஸ்வரி…”

“உனக்குத் தெரியாதுமா… அவய்ங்க மட்டும் அன்னைக்கு வீட்டுக்கு வராம இருந்திருந்தா, இன்னைக்கு என் வயித்துல ஒரு புள்ள இருந்திருக்கும்.”

“என்னடி சொல்ற, ஏய் ஈஸ்வரி…  என்னடி ஆச்சு? சொல்லுடி” என்று மகளை உலுக்கினார்.

“என்னத்த சொல்ல? நான் மாசமா இருந்தேன், ஆசையா அந்த விஷயத்தை என் புருஷன்கிட்ட சொல்லலாம்னு இருந்த போதுதான் உங்க அண்ணனும் அவர் மவனும் தேவையில்லாத பிரச்னையை இழுத்து வுட்டுப் போனாய்ங்க. இந்த ஆளும் அதை நம்பி குடிச்சிட்டு வந்து என்னைய அடிச்சு…”

“ஐயோ அடிச்சதுல புள்ளைக்கு ஏதாச்சும்…”

“அதெல்லாம் இல்ல, நான்தான் ஆஸ்பத்திரிக்குப் போய் கலைச்சுட்டேன்” என்ற போது அவள் முகத்தில் எந்தச் சலனமும் இல்லை.  

“அடிப்பாவி, ஏண்டி இப்படிப் பண்ண? வயித்துல இருக்க புள்ள என்னடி பாவம் பண்ணுச்சு?”

“தருதல அப்பன்காரனுக்குப் பொறக்குறதே பாவம்தாம்மா” என்று சொல்ல, கனகத்திற்குத் தாங்கவில்லை. 

“எப்படி ஒரு காரியத்த செஞ்சு வைச்சு இருக்க” என்று அவர் கண்டனமாக ச்சொல்லும் போது வெளியே ஏதோ சத்தம் கேட்டது. 

ஈஸ்வரி எட்டிப் பார்க்கவும் வாசலில் குணா செருப்பைக் கழற்றிக் கொண்டிருந்தான்.

அவளுக்குத் தூக்கிவாரி போட்டது. அவனைக் கலக்கத்துடன் நோக்க, “எப்போ வந்தீங்க அத்த” என்று சாதாரணமாக விசாரித்துக் கொண்டே உள்ளே வந்தான்.   

கனகத்திற்குப் பேச்சே வரவில்லை. அவர் பதற்றமாக மகளைப் பார்க்க, அவள் கண் காட்டிவிட்டு உள்ளே சென்றாள்.

அவரும் சுதாரித்துக்  கொண்டு அவன் விசாரிப்பிற்குப் பதில் கூறினார். ஈஸ்வரி டீயை வடிகட்டி எடுத்து வந்து அம்மாவிடம் கொடுத்தாள். கணவனுக்கு எடுத்து வந்த டம்ளரை ஓரமாக வைத்தாள்.

அவர்கள் இருவரின் முகங்களில் தெரிந்த இறுக்கத்தைக் கவனித்த கனகத்திற்கு, அங்கே இருக்க முடியவில்லை. நெருப்பின் மீது நிற்பது போலிருந்தது.

“சின்னவ தனியா இருப்பா, நான் புறப்படுறேன் ஈஸ்வரி” என்று அவர் அவசரமாக அந்தத் தேநீரைக் குடித்துவிட்டு எழுந்து கொள்ள, “ம்மா, சாப்பிட்டு போம்மா” என்றாள்.    

“இல்ல வேணாம், அப்புறம் பஸ் கிடைக்காது, நான் கிளம்புறேன். வரேன் மாப்பிளை” என்று குணாவிடமும் சொல்லிவிட்டு அவர் வாயிலைத் தாண்டினார்.

அம்மாவை வழியனுப்ப வந்த ஈஸ்வரி, “ஏதோ கோபத்துல பேசிட்டேன், மனசுல வைச்சுக்காத” என்று கையுடன் எடுத்து வந்த பர்ஸில், “இந்தா அனுவுக்கு பீஸ் கட்டிடு, போன வாரமே என்கிட்ட சொல்லுச்சு” என்று நீட்டினாள்.

கனகம் மகளை உற்றுப் பார்த்தாள்.

“தெரியாம பேசிட்டேன். தப்புதான், இந்தா பிடி. அனுவைச் சீக்கிரம் பீஸ் கட்டச் சொல்லு” என்று கட்டாயபடுத்தி பணத்தைக் கையில் வைத்து அழுத்தினார். அவள் கண்களில் நீர் திரண்டது.

“ம்மா அழாதேம்மா” என்று அவரை அணைத்த ஆறுதல்படுத்தி அனுப்பியவள், வீட்டிற்குள் வந்து இரவு சமையலுக்கு அரசியை அளந்து போட்டுக் கொண்டிருந்தாள்.

“புள்ள உண்டான விசயத்தையும் சொல்லல, கலைச்ச விஷயத்தையும் சொல்லல” என்று குணா கேட்க , அவள் திகிலுடன் திரும்பினாள்.

“இப்ப வரைக்கும் ஒரு வார்த்தகூடச் சொல்லல இல்ல, என்ன நெஞ்செழுத்தம்டி உனக்கு” என்று குணாவின் குரல் கர்ஜனையாக ஒலிக்க, அவள் முகமும் இறுகியது. 

“சொல்லி இருந்தா என்னய்யா பண்ணி இருப்ப? ம்ம்ம்… என்ன பண்ணி இருப்ப? இல்ல நான் தெரியாமதான் கேட்குறேன். அன்னைக்கு நீ என்னை அடிச்சதால என் வயித்துல இருக்க கரு கலைஞ்சிருந்தா…” என்கிற கேள்விக்கு அவனால் எதுவும் பேச முடியவில்லை.

ஆனால் அவன் பார்வை கூர்மையாக மாற, “என்ன கோபம் வருதா. போ போய் ஏத்தின்னு வந்து என்னைய அடி… மிஞ்சி மிஞ்சிப் போனா உன்னால வேற என்ன செய்ய முடியும்?” என்று சொல்லவும் அவன் கோபம் அதிகமானது. 

அந்தச் சமயம் பார்த்து நிகா பதறி துடித்து வீட்டிற்கு ஓடிவந்தாள். 

“ம்மா மலரு அம்மாவுக்கு…” என்று மகள் தன் வாக்கியத்தை முடிப்பதற்குள் ஈஸ்வரிக்கு ஏதோ தப்பாக நடந்திருக்கிறது என்று புரிந்துவிட்டது. அவள் உடனடியாக அவர்கள் வீட்டிற்கு விரைந்தாள்.  

(தொடரும்)

படைப்பாளர்

மோனிஷா

தமிழில் முதுகலைப் பட்டம் பெற்றவர். தீவிர வாசிப்பாளர் மற்றும் எழுத்தாளர். இணையத்தில் 27 நாவல்களை இதுவரை எழுதியுள்ளார். அவற்றில் இருபது நாவல்கள், புத்தகங்களாகப் பதிப்பிக்கப்பட்டுள்ளன. பெண்ணியம், சூழலியல் விழிப்புணர்வு இரண்டும் இவரது பெரும்பாலான நாவல்களின் மையக் கருத்தாக அமைந்துள்ளன. சிறார் எழுத்திலும் தற்போது ஈடுபட்டுள்ளார். இவரின் ‘ஒரே ஒரு காட்டில்’ சிறார் நூலை ஹெர் ஸ்டோரீஸ் சமீபத்தில் வெளியிட்டுள்ளது.