26-7-1956 அன்று புனித ஞானப்பிரகாசியார் உயர்நிலைப் பள்ளி திறக்கப்பட்டது. ஊரில் உள்ள மூன்று நடுநிலைப் பள்ளிகள், மூலைக்காடு, துரைகுடியிருப்பு, சௌந்தர பாண்டியபுரம், கிழவனேரி பள்ளிகள் என ஏழு பள்ளிகளுக்கு ஒரே உயர்நிலைப் பள்ளி. மிகச் சிறந்த ஆசிரியர்களால் பல மாணவர்கள் உருவான பள்ளி. என்னை உருவாக்கிய பள்ளி. ஆசிரியர்கள் என்றால் இரண்டாவது பெற்றோர் என எங்கள் அனைவருக்கும் உணர்த்திய பள்ளி.
1978ஆம் ஆண்டுதான் +2 என்னும் முறை வந்தது. அதற்குமுன் SSLC என்பது பதினோராம் வகுப்பு. பன்னிரண்டாம் வகுப்பு கல்லூரியில் புதுமுக வகுப்பாக (PUC) இருந்தது. அதனால் பட்டப் படிப்பு படிப்பதற்கு முன் கல்லூரியில் ஓர் ஆண்டு படிக்க வேண்டும். பன்னிரண்டாம் வகுப்பு பள்ளியில் வரும் போது அது மாணவர்களுக்கு எளிது. இதனால் உருவான சிறப்பான திட்டம்.
வள்ளியூரில் இரண்டு மேல்நிலைப் பள்ளிகள் அரசால் வழங்கப்பட்ட சூழலில், அருகில் இன்னொரு மேல்நிலைப்பள்ளிக்கு அனுமதி கொடுப்பது குறித்து அரசு பரிசீலனையில்தான் வைத்திருந்திருக்கிறது. மிகவும் சிரமப்பட்டுத்தான், அருள்தந்தை தனிஸ்லாஸ் பாண்டியன் மேல்நிலைப் பள்ளிக்கான அனுமதியைப் பெற்றார். அவ்வாறு மேல்நிலைப்பள்ளி இல்லாது இருந்திருந்தால், கள்ளிகுளத்தின் கல்விச்சங்கிலி அறுந்து போயிருக்கும். பதினோரு, பன்னிரண்டு படிக்க வெளியூர் சென்றுவிட்டு, மீண்டும் கள்ளிகுளம் கல்லூரியில் வந்து படிப்பைத் தொடர்வது என்பதெல்லாம் எத்தனை பேருக்குச் சாத்தியமாகி இருக்கும் எனத் தெரியவில்லை.
அனுமதி பெற்றது மட்டுமல்லாமல், கடடிடங்களையும் கட்டினார். பள்ளியின் கலையரங்கம் இன்று அவரின் பெயர் தாங்கி நிற்கிறது.
தலைமை ஆசிரியர் வேளாங்கண்ணி செல்வி.
11.07.67 அன்று, ஏழுபேர் கொண்ட குடும்பத்தில் ஐந்தாவது பிறந்தவர் வேளாங்கண்ணி. அனைவரும் உயர் கல்வி கற்றவர்கள். அக்கா இந்திரா மதுரை பாத்திமா கல்லூரிப் பேராசிரியராக இருந்தவர். ஒரே அண்ணன். அண்ணன் அந்தக் காலத்திலேயே பி.இ. சூரத் சென்று படித்து, அரசுப் பணியிலிருந்தவர்.
அம்மா தெரசம்மாள் அப்பா. எம்.ஜி. தாமஸ். அன்பான குடும்பம்; அமைதியான வாழ்க்கை. பிறருக்கு உதவும் பெற்றோர் என வளர்ந்தவர். ஷண்முக சுந்தரம் என்று குடும்ப நண்பர் உண்டு. அவரது மகள் வயதிற்கு வந்த உடன், பிள்ளை கழுத்து வெறுமனே இருக்கக் கூடாது என்று சொல்லி, பெரிய செயினை தாமஸ் கொடுத்திருக்கிறார். ஆண்டுக்கணக்கில் அவர், அந்தச் செயின்தான் போட்டிருந்தாராம். இப்படிச் சாதி மதம் கடந்து பல உறவுகளைச் சம்பாதித்து வைத்தவர்.
தந்தையாரின் 95 ஆவது பிறந்த நாளில் அண்ணன் மற்றும் அப்பாவுடன் வேளாங்கண்ணி. மிகச் சமீபத்தில்தான் தந்தை மறைந்தார்.
உள்ளூரில் பள்ளிக் கல்வியை முடித்த வேளாங்கண்ணி, இளங்கலை வேதியியல், நாகர்கோவில் திருச்சிலுவை (HOLY CROSS COLLEGE), .மதுரை பாத்திமா கல்லூரியில் முதுகலைத் தமிழ், கோவை அவினாசிலிங்கம் கல்லூரியில் பி.எட். சிறப்பான முறையில் கற்றவர். எம்.பில். தொலைத்தொடர்பு மூலம் கற்றவர்.
1995 வேளாங்கண்ணி -பிரான்சிஸ் பீட்டர் திருமணம். இரண்டு மகன்கள். ஒருவருக்குத் திருமணம் சமீபத்தில்தான் ஆகியிருக்கிறது. சிறப்பான குடும்பம். பெரிய பையன் பி.இ. ஆதித்தனார் கல்லூரியில் படித்திருக்கிறார். இளையவர் எம்.பி.ஏ. துபாயில் கனடா யுனிவர்சிட்டியில் படித்துக் கொண்டு இருக்கிறார். மொத்தக் குடும்பமே கல்வியால் உயர்வைக் காணுகிறது.
அவ்வப்போது ஓரிரு மாதங்கள் வேலை செய்து வந்த வேளாங்கண்ணிக்கு, 1998ஆம் ஆண்டு, தான் படித்த பள்ளியிலேயே நிரந்தரமாக ஆசிரியர் பணி கிடைத்தது. 2020 தலைமை ஆசிரியராகப் பதவி உயர்வு பெற்றிருக்கிறார். குடும்பமே இணைந்து ஒத்துழைப்பு கொடுக்க, குழந்தை வளர்ப்பு, பள்ளிப்பணி குடும்பத்தை வழிநடத்துதல் என அனைத்தையும் சிறப்பாகச் செய்ய இயலுகிறது.
அவர் பணியில் சேர்ந்த முதலாம் ஆண்டு மாணவர்களுடன்
பணி என்றால் சமரசமில்லாத உழைப்பு, கண்டிப்பு என முழுமையாகத் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு, அரசின், தாளாளர் தந்தையின் வழிகாட்டுதல்களை அப்படியே செயல்படுத்துபவர்.
‘தூய்மை நெறியில் மலரினை வென்று
துலங்கும் அறிவில் சுடரினைக் கொண்டு
தாய் போல் தியாகச் செயல்களில் நன்று’
என்கிற பள்ளிப் பாடல் போன்றே வளர்ந்தவர். அதைத் தனது பணியிலும் கடைப்பிடிக்கிறார். மிகவும் நேர்மையானவர் எனப் பெயர் பெற்றிருக்கிறார். எக்காரணம் கொண்டும் யாரையும் பழிவாங்க மாட்டார்; அது உடன் பணியாற்றும் ஆசிரியர்கள் என்றாலும் சரி; தவறுகள் செய்த மாணவர்கள் என்றாலும் சரி. ஊதிய உயர்வு, பணி உயர்வு, மாணவர்களுக்கான நலத்திட்டங்கள் போன்றவற்றை எப்பாடு பட்டாவது வாங்கிக் கொடுத்து விடுவார்.
இவ்வாறு மிகச்சிறந்த ஆசிரியராக மட்டுமல்லாமல் மனித நேயம் கொண்டவராகவும் வாழ்ந்து வருகிறார் என்பது பள்ளி பெற்றிருக்கும் பெரும் கொடை. அவரின் பெரும் முயற்சியால், பள்ளி சிறப்பான முறையில் தேர்ச்சி விகிதத்தைத் தொடர்ந்து பெற்று, சிறந்த பள்ளி என்கிற பெயரைத் தக்கவைத்துக் கொண்டிருக்கிறது.
கணவன் என்கிற முறையில்.”நீங்கள் எல்லாம் தெய்வத்தை நேரில் பார்த்திருக்க மாட்டீர்கள் நான் தெய்வத்தோடே வாழ்ந்து வருகிறேன்” என்கிறார் அவரது கணவர் பீட்டர். ஒருவர் அனைத்துத் தரப்பிலும் நல்ல பெயர் எடுப்பது என்பது அவ்வளவு எளிதல்ல. அதற்கு அவ்வளவு அர்ப்பணிப்பு வேண்டும். குடும்பத்தின் ஒத்துழைப்பு வேண்டும். இவை எல்லாம் ஒருங்கே பெற்று வாழும் வேளாங்கண்ணி ஆசிரியர் மேலும் மேலும் வாழ்விலும் பணியிலும் சிறக்க வாழ்த்துவோம்!
படைப்பாளர்
பாரதி திலகர்
தீவிர வாசிப்பாளர், பயணக் காதலர்; தொன்மை மேல் பெரும் ஆர்வம் கொண்டவர். அயல்நாட்டில் வசித்து வந்தாலும் மண்ணின் வாசம் மறவாமல் கட்டுரைகள் எழுதிவருகிறார். ஹெர் ஸ்டோரிஸில் இவர் எழுதிய கட்டுரைகள், ‘பூப்பறிக்க வருகிறோம்’, ‘சினிமாவுக்கு வாரீகளா?’ என்கிற புத்தகங்களாக, ஹெர் ஸ்டோரிஸில் வெளிவந்திருக்கிறது. தற்போது ‘சினிமாவுக்கு வாரீகளா – 3’ மற்றும் ‘சாதனை படைக்கும் சாமானியர்’ என்கிற இரண்டு தொடர்களை ஹெர் ஸ்டோரீஸ் வலைத்தளத்தில் எழுதிவருகிறார்.
அத்தியாயம் 16 குணா ஊர் முழுக்கவும் மனைவியைத் தேடி அலைந்தான். ஆனால், அவள் எங்கே தேடியும் கிடைக்கவில்லை. சோர்ந்து களைத்து அவன் ஏமாற்றத்துடன் வீட்டிற்குத் திரும்ப, கதவு திறந்திருந்தது. மகள் வாசலில் விளையாடிக் கொண்டிருந்தாள்….
நெதர்லாந்துக்குச் சென்று வந்ததின் அடையாளமாக, நீங்கள் உங்கள் நண்பரை ஏதேனும் வாங்கி வரச் சொன்னால், அவர் ஷூ அடையாளமிட்ட ஒரு பரிசுப் பொருளை வாங்கி வந்து கொடுத்தால் எப்படி இருக்கும்? என்னை அவமானப்படுத்துகிறாயா என்று…
வாழ்க வளமுடன்