“ஆஹா… பொழுது விடிஞ்சும் விடியாமயும் உம் பொண்டாட்டி உக்காந்துட்டாளா..? நல்ல சகுனம். இன்னிக்கு அம்மன் கோயிலுக்கு தக்காளி சோறு ஒரு பெரிய குண்டான் நெறைய செஞ்சு கொண்டு போகணும். நூத்தியெட்டு எலுமிச்சம் பழத்தை மாலையா கோக்கணும். ரெண்டு நாள் முன்னாடியே கேட்டேன். நாளாயிடுச்சான்னு. அப்பவே சொல்லித் தொலைச்சிருந்தா, நான் தக்காளி சோறு செஞ்சிட்டு வரேன்னு பூசாரி கிட்ட சொல்லியிருக்க மாட்டேனே… இப்ப இத்தனை வேலையையும் நான் ஒருத்தியேவா செய்யறது..? பதினொரு மணிக்கெல்லாம் கோயிலுக்குப் போகணுமே…” நாகரத்னா புலம்பிக் கொண்டே சமையல்கட்டுக்குள் நுழைந்தார். முன்தினம் இரவே எடுத்து வைத்திருந்த அரிசியும், அரியக் காத்திருந்த வெங்காயம், தக்காளியும் அவரைப் பார்த்துக் கண் சிமிட்டின. அவரது கோபம் கொளுந்துவிட்டு எரிந்தது.
அடுப்படியில் இருந்து ‘கடமுடவென்று’ பாத்திரங்களின் ஓசை கேட்டது. கூடவே அம்மாவின் சத்தமும் சேர்ந்து கொள்ள, எரிச்சலுடன் கண்விழித்தான் கிருஷ்ணா. “ப்ச்…” என்று சூள் கொட்டியபடியே எழுந்தவன் பார்வையில் அறைக்கதவுக்கு அருகில் கட்டிலுக்கு கீழே கைகளை முழங்காலைச் சுற்றிக் கட்டிக்கொண்டு, தலையையும் முழங்காலில் கவிழ்த்தவாறு உட்கார்ந்திருந்த தர்ஷினி விழுந்தாள்.
அவன் எழுந்து போர்வையை அரைகுறையாக மடித்து தலையணை மீது போட்டு விட்டு கவனமாக அவளைத் தொடாமல் நகர்ந்து வெளியே போனான். தர்ஷினி நிமிர்ந்து அவன் போவதைப் பார்த்துவிட்டு மீண்டும் முழங்காலில் கவிழ்ந்து கொண்டாள். வயிறு சுண்டி இழுத்தது. வயிற்றுக்குள் என்னென்னவோ செய்தது. வலி தாளாமல் கண்களில் கண்ணீர் திரண்டது. இது அவளுக்கு மெனோபாஸ் பருவம். வயதும் நாற்பத்தி எட்டைத் தாண்டி விட்டிருந்தது. எப்போது மாதவிலக்கு வரும் என்று தெரியாமல் இருந்தது. திடீர் திடீரென்று நேரங்கெட்ட நேரத்தில் வந்து கொண்டிருந்தது.
தர்ஷினி கிருஷ்ணாவைத் திருமணம் செய்து கொண்டு வரும்போது இருபத்தி நான்கு வயது. இந்த இருபத்தி நான்கு வருடமும் மாதவிலக்கு நேரங்களில் அவள் தவறாமல் ஒதுக்கி வைக்கப்பட்டதோடு, வசை பாடுகளையும் வாங்கிக் கொண்டிருந்தாள்.
“ஏண்டா.. ஒரு நாள் கிழமை பாக்குறாளா..? எப்பப் பாரு நல்ல நாளுகள்ல ஒதுங்குறதே வேலையாப் போச்சு. அப்பத்தான் சொகுசா உக்காந்து திங்கலாம்னு பிளான் போடுறாளோ என்னவோ..?” நாகரத்னா கத்தியை எறிவாள். ஆனால் ஒருநாளும் கேடயமாய் கிருஷ்ணா நின்றதில்லை.
அவர்களுக்குத் திருமணமாகி முதல் மாதம் அவள் மாதவிலக்கான போதே நாகரத்னா அழுத்தந் திருத்தமாகச் சொல்லி விட்டாள். “இதோ பாரும்மா… எனக்கு தூரமாகி வீட்டுக்குள்ள உலாத்துறதெல்லாம் பிடிக்காது. அந்தக் காலத்துல மாதிரி உன்னை பின்கட்டுல உக்கார வைக்க இங்க அபார்டமெண்ட்ல முடியாது. என்ன பண்றது..? பல்லைக் கடிச்சிட்டு வேற வழி இல்லாம உன் ரூம்லயே இருக்க வேண்டியதுதான். தூரம் முடியற வரைக்கும் வெளியே வந்துராதே. உன் மாமனாருக்கு இதெல்லாம் கட்டோட பிடிக்காது. அவரு ரொம்ப ஆச்சாரம்…” எச்சரித்து விட்டிருந்தாள்.
கிருஷ்ணா அவன் வீட்டுக்கு ஒரே பிள்ளை. அதிர்ஷ்டவசமாக அவனுக்கு பெண் உடன்பிறப்பு யாரும் இல்லை. அதேபோல் அவனுக்கும் ரோஹித் ஒரே பையனாகப் பிறந்துவிட்டான். இளநிலைக் கல்லூரிப் படிப்பை முடித்துவிட்டு, மேல்படிப்புக்காக பெங்களூரில் தங்கிப் படித்துக் கொண்டிருந்தான். அவனுக்குப் பாட்டி தாத்தாவின் கட்டுப்பெட்டித்தனம் அடியோடு பிடிக்காது. விடுமுறை நாள்களில் வீட்டுக்கு வந்தாலும், எப்போதடா கிளம்புவோம் என்று காலில் வெந்நீரைக் கொட்டிக் கொண்டு நிற்பான்.
“ம்மா.. நீ எப்படித்தான் இங்க இருக்கியோ..? அதைத் தொடாத, அங்க நிக்காத, இங்க உக்காராதன்னு கொன்னு எடுக்குறாங்க. இன்னும் அம்பது வருஷத்துக்கு முன்னாடியே இருக்காங்க. என்னால முடியலை. மூச்சு முட்டுது…” புலம்புவான். அப்புறம் இரண்டு நாள்கள் கழித்து வேலை இருப்பதாகச் சொல்லி விட்டுக் கிளம்பி விடுவான். ‘நீ கிளம்பிடுவே, ம்கூம்ம்.. நான் எப்படி அத்துட்டு கிளம்புறது..?’ தர்ஷினி மனதுக்குள் புலம்புவாள்.
ரோஹித் பிறந்த பிறகு ஒருநாள் வீட்டில் வரலட்சுமி பூஜை வைத்திருந்தது. சர்க்கரைப் பொங்கலுக்கு எல்லாம் கலக்கிக் குக்கரில் வைத்து விட்டுத் திரும்பியவள் சுரீரென்று வயிற்றைத் தாக்கிய மின்னல் வலியில் துவண்டு போனாள். அப்படியே வயிற்றைப் பிடித்துக் கொண்டு சமையல் அறைக்குள்ளுக்குள்ளேயே சுருண்டு உட்கார்ந்து விட்டாள். ஐந்து நிமிடம் கழித்து உள்ளே தண்ணீர் குடிக்க வந்த மாமனார் சடகோபன் முகத்தைச் சுளித்துக் கொண்டு சட்டென்று நகர்ந்தார். அந்த நிமிடத்தின் முடிவில் மாமியார் உள்ளே வந்தார்.
“என்னாச்சு தர்ஷினி..?” சர்வ ஜாக்கிரதையாக தள்ளி நின்று கொண்டே கேட்டார்.
“பையன் பொறந்து ஆறு மாசம் தானே ஆச்சு.. அதுக்குள்ள விலக்காயிட்டியா..? ம்கூம். எங்க காலத்துல நாங்க பிரசவத்துக்கு அப்புறம் ஒரு வருஷத்துக்காச்சும் தூரமாக மாட்டோம்…” நொடித்துக் கொண்டாள். “எந்திரிச்சுப் போய்க் குளி. ரூமுக்குள்ளயே இரு…” என்றார் வெறுப்பாக.
தர்ஷினி உடனே வெளியில் சென்று விட்டாள். “அந்தச் சர்க்கரைப் பொங்கலை எடுத்துக் குப்பைல வீசிட்டு, கிச்சனைக் கழுவி விட்டுட்டு திரும்பச் சமை. ச்சை… நினைச்சாலே அருவெறுப்பா இருக்கு..” மாமனார் சொல்லிக் கொண்டிருந்தது கேட்டது. அறைக்குள் நுழைந்து தாளிட்டுக் கொண்டாள். அழுகை பீறிட்டது.
அன்றிரவு. உள்ளே வந்து ஒன்றும் பேசாமல் படுத்துக் கொண்ட கணவனை இருமுறை அழைத்தாள். அவன் திரும்பாமல் கிடக்கவே, மெல்லத் தோளைத் தொட்டுத் திருப்பினாள். சட்டென்று எழுந்தவன் எரிந்து விழுந்தான்.
“வாயால கூப்பிட வேண்டியது தானே? எதுக்குத் தொடுறே..?” என்றதும் அவளுக்கு வாயடைத்துக் கொண்டது. மதியம் நடந்த விஷயத்தை சொன்னதும் அவன் முகத்தில் எந்த உணர்ச்சியும் இல்லை. மாறாக, “சரி.. அதுக்கு என்ன பண்றது இப்ப..? அவங்க கிராமத்தில் இருந்தவங்க. அப்படியே இருந்துட்டாங்க. என்ன பண்ணச் சொல்றே..? அதுவுமில்லாம இது பொம்பளைங்க விஷயம். நான் என்னன்னு கேக்குறது..? அதுவும் அம்மாகிட்ட போயி. பேசாமத் தூங்கு…” என்றவாறே திரும்பிப் படுத்துக் கொண்டான்.
“இல்லைங்க.. உங்கப்பா வேற நான் ஏதோ கொலைக் குத்தம் பண்ண மாதிரி முறைக்கிறாரு. எனக்கு ரொம்ப சங்கடமா இருக்கு.” பதிலுக்கு அவனிடமிருந்து குறட்டைச் சத்தம் மட்டுமே எழுந்தது. தர்ஷினி சற்று நேரம் அவனையே பார்த்துக் கொண்டிருந்துவிட்டு சுருண்டு படுத்துக் கொண்டாள்.
ஐம்பது கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் அம்மா வீட்டுக்குக் குழந்தையை எடுத்துக் கொண்டு சென்றுவிடலாம் என்று தோன்றிய எண்ணம் உடனேயே வடிந்தது. அங்கு போய் அவர்களுக்குச் சுமையாக இருக்க மனம் இல்லை. மேலும் அவர்களுக்கும் இது மிகச் சிறிய விஷயமாகத்தான் இருக்கும் என்று தோன்றியது. இரவு முழுவதும் விழித்தே கிடந்தாள்.
மெனோபாஸ் வந்ததில் இருந்தே எதுவும் அவள் கட்டுப்பாட்டில் இல்லை. திடீரென்று உறங்கிக் கொண்டிருக்கும்போது உடல் சூடாகி வியர்த்துக் கொட்டும். வயிற்று வலி பின்னி எடுக்கும். சுடுதண்ணி வைத்துக் கொடுக்கக்கூட ஆளிருக்காது. அவள் ‘தலைக்கு’க் குளிக்கும் நாட்களில் மாமனாரின் அருவெறுப்புப் பார்வை எலும்பை ஊடுருவி உறுத்தும். எதையும் தொட விடமாட்டார்கள். தரையில் வெறும் போர்வையை விரித்துப் படுப்பது வலியை மேலும் அதிகரிக்கும். மெத்தையில் படுக்க வேண்டும் என்று கெஞ்சும் உடம்பின் நோவு தாளாது, இரவுகளில் அவள் புரண்டு கொண்டேயிருப்பாள்.
பல ஆண்டுகளாக சாப்பாட்டைக்கூட அறை வாசலில் தட்டில் உணவை வைத்து நகர்த்தி விடுவார் நாகரத்னா. அவள் டம்ளரில் நீரை செம்பை மேலே தூக்கி ஊற்றுவார். நீர் சிதறிய உணவைச் சாப்பிட அவளுக்குப் பிடிக்காது. குழந்தைக்குப் பாலூட்ட வேண்டுமே என்று சகித்துக் கொண்டு உண்ணுவாள். பீரியட் முடிந்ததும் அவள் குளித்து விட்டு, அறையைச் சுத்தம் பண்ணி, அவள் புழங்காத படுக்கை விரிப்பு, தலையணை உறைகள், போர்வை எல்லாவற்றையும் கையிலேயே துவைத்துக் காயப் போட்டுவிட்டு, வீட்டையும் நன்கு கழுவி விட்டு மீண்டும் சமையலறைக்குள் வந்து கரண்டியைக் கையில் பிடிக்க வேண்டும்.
அவளுக்குள் என்னென்னவோ எண்ணங்கள் கரைபுரண்டோடும். இவர்களை எதிர்த்துப் பேச இயலாத தன் கையாலாகாத்தனத்தை நொந்து கொள்வாள். தன் அம்மாவிடம் எதிர்த்துப் பேசாத கணவனின் மீது எரிச்சல் பொங்கும். ‘நல்லவேளைப்பா…நமக்கு பொண்ணு பொறக்கலே’ என்று ஆறுதல் அடைவாள். தனக்கு மருமகள் வந்தால் அவளை இப்படி நடத்தக் கூடாது என்று உறுதி பூணுவாள்.
***
இரண்டு வாரங்களுக்குப் பிறகு வாசலில் காலிங்பெல் அடித்தது. மாமியார் வழக்கம்போல இவளுக்கு வசைப்பாட்டு வைத்து விட்டு, ” இருபத்தி நாலு நாள்தான் ஆச்சு… அதுக்குள்ள தலைகுளிச்சிட்டியா..? இன்னிக்கு வெள்ளிக் கிழமை. கடவுளே…” என்று அலுத்துக் கொண்டு சடகோபனையும் இழுத்துக் கொண்டு கோயிலுக்குப் போய் விட்டிருந்தாள். வேறுவழியின்றி இவளே போய் உள்ளிருந்து பூட்டை விடுவித்துக் கதவைத் திறந்தாள். வெளியே ஒரு இளம்பெண் சிரித்துக் கொண்டே நின்றிருந்தாள். இருபத்தெட்டு வயதிருக்கும் என்று நினைத்துக் கொண்டே, “யாரும்மா… யார் வேணும்..?” என்றாள்.
“ஹாய் ஆண்ட்டி.. என் பேர் ஸ்ருதி. உங்க பக்கத்து பிளாட்டுக்கு குடி வந்திருக்கோம். இன்னிக்கு காலைல பத்து மணிக்கு பால் காய்ச்சுறோம். நீங்க அவசியம் வரணும்” என்றாள் முகம் முழுவதும் புன்னகையைப் பூசிக் கொண்டு.
“வ..வந்து.. நான் வீட்ல இல்லியே..” தர்ஷினி தடுமாறினாள்.
“ஏன்..? என் கண்ணு முன்னாடி இருக்கீங்களே..” மீண்டும் சிரிப்பு.
“இல்லம்மா.. நான் வீட்டுக்கு தூரம்.”
“இல்லியே..உள்ளதான இருக்கீங்க. எங்க வீடும் தூரம் இல்லை” தர்ஷினிக்கும் இப்போது சிரிப்பு வந்துவிட்டது.
“இல்லம்மா..நான் பீரியட்ஸ்ல இருக்கேன். நல்ல விசேஷத்துக்கு வர முடியாதுன்னு சொன்னேன்” அழுத்தந்திருத்தமாகச் சொன்னாள்.
“அதெல்லாம் நாங்க பார்க்க மாட்டோம் ஆண்ட்டி. நீங்க கட்டாயம் வரத்தான் வேணும். இப்பவே வாங்க.” கிட்டத்தட்ட அடம் பிடித்தாள்.
தர்ஷினி கடிகாரத்தை நோக்கினாள். கோவில் போனவர்கள் வர இன்னும் ஒருமணி நேரத்திற்கு மேல் இருக்கிறது. போய்விட்டு வந்தால் என்ன என்ற எண்ணத்தில் கதவைப் பூட்டிக்கொண்டு அவளுடன் பக்கத்து பிளாட்டில் நுழைந்தாள்.
உள்ளே பெரிய பெட்டிகளில் பொருள்கள் பிரிக்கப்படாமல் இருக்க, சமையலறை மட்டும் அழகாக அடுக்கி வைக்கப்பட்டிருந்தது. தர்ஷினி சுற்றும்முற்றும் பார்ப்பதை உணர்ந்து, “பின்ன.. மொதல்ல கிச்சனை செட் பண்ணிட்டோம்னா போதும். மிச்சம் மீதியை மெதுவாப் பொறுமையா அடுக்கலாம்ல?” என்றவாறே ஸ்ருதியின் மாமியார் நீலாவதி வரவேற்றார்.
பால் காய்ச்சி காஃபி போட்டு எடுத்து வந்தாள் ஸ்ருதி. “உங்களைக் கேட்காம காஃபி போட்டுட்டேன் ஆண்ட்டி. டீத்தூள் காலியாய்டுச்சு. சாரி. அட்ஜெஸ்ட் பண்ணிக்கோங்க.” என்றாள்.
அவள் கணவன் காஃபி குடித்த பின், “நிகில்… கடைக்குப் போய் கொஞ்சம் மளிகை சாமான்கள் வாங்கிட்டு, எனக்கு மெடிக்கல்ல ஸ்டேஃப்ரீ நாப்கின் பாக்கெட்ஸ் வாங்கிட்டு வந்துருங்க” என்று இயல்பாகச் சொல்லியவாறே ஒரு பையை அவனிடம் கொடுத்தாள். தர்ஷினிக்குச் சங்கடமாக இருந்தது. ‘என்னதிது..? புருஷன் கிட்ட போயி நாப்கின் வாங்கிட்டு வரச் சொல்றா. அதுவும் அவங்கம்மா முன்னாடியே..’ நினைத்துக் கொண்டாள். நிகில் கிளம்பினான்.
அவரோ புன்னகைத்தவாறே, “ஆமா.. வேற யார் கிட்ட சொல்லுறது..? புருஷன் தானே வாங்கிட்டு வரணும். எனக்கு என் புருஷன்தான் வாங்கிட்டு வந்து தருவாரு. அப்புறம் நிகிலும் வாங்கிட்டு வந்து தருவான். இதிலென்ன இருக்கு..? வீட்டுப் பொம்பளைங்க வலியை முதல்ல வீட்டு ஆண்கள் தானே உணரனும்.” என்றவாறே பெட்டியைப் பிரிக்க ஆரம்பித்தார்.
தர்ஷினி மெதுவான குரலில் தன் வீட்டு நிலைமையைச் சொன்னாள்.
“ஆண்ட்டி.. பாத்ரூம் போற மாதிரி இதுவும் நம்ம உடம்பில் ஏற்படுற இயல்பான விஷயம் தானே..? அதை முதல்ல நாம புரிஞ்சுக்கணும். அப்புறம் நம்ம வீட்டு ஆண்களுக்குப் புரிய வைக்கணும். தொட்டா ஒண்ணும் கரைஞ்சுட மாட்டாங்க. அருவெறுப்பா பார்த்தா நீங்க சொல்லணும், “இந்த அருவெறுப்பில்தான் நீங்களும் உங்கம்மா வயித்துல பத்து மாசம் மிதந்துட்டு இருந்தீங்கன்னு…”ஸ்ருதி, மாமியார் பிரித்து வைத்த பொருட்களை அடுக்க எடுத்துச் சென்றாள்.
“அந்தக் காலத்தில் என் மாமியார் என்னை இந்த மாதிரி சமயங்களில் ரொம்ப கேவலமா நடத்துவாங்க. பின்கட்டுல மாட்டுத் தொழுவம் பக்கத்தில்தான் வெறும் தரையில் படுக்கணும். அதுவும் மாட்டு சாண நாத்தம், மூத்திர நாத்தத்தை பொறுத்துக்க முடியாது. ஒருதடவை அப்படி படுத்திருக்கும் போது நல்ல நிலா வெளிச்சத்தில் பாம்பு ஒண்ணு ஊர்ந்து வர்றதைப் பார்த்தேன். அவ்வளவுதான். அடிச்சுப் பிடிச்சு எந்திரிச்சு உக்காந்துட்டேன். அது பாட்டுக்கு போயிருச்சு. அப்ப முடிவு பண்ணேன். என் மருமகளுக்கு இந்த மாதிரி நான் பண்ணவே கூடாதுன்னு. ஆனா அந்த சம்பவம் மனசுலயே நின்னுடுச்சு. இப்பவும் சிலசமயம் மேல பாம்பு ஊருற மாதிரி உடம்பு சிலிர்த்துக்கும்” நிஜமாகவே உடம்பை சிலிர்த்தார் நீலாவதி.
“என் மாமியார் சொல்லுவாங்க, பாவம் பண்ணினவங்கதான் நல்ல நாள், கிழமைகள்ல ஒதுங்குவாங்கன்னு…” மெல்ல முனகினாள் தர்ஷினி.
“ஏம்மா.. நீ படிச்சவதானே..? அஸ்ஸாம் மாநிலத்தில காமாக்யா கோவில்னு கேள்விப்பட்டிருக்கியா..?” தர்ஷினி என்ன பேசுவதென்று தெரியாமல் அமர்ந்திருந்தாள்.
“அங்கே பெண்ணோட யோனியைத்தான் கும்புடுறாங்க தெரியுமா..? சக்தியின் உடல் பாகங்கள் சிதறியதுல, யோனி விழுந்த இடம் அதுன்னு கடவுள் நம்பிக்கையுள்ளவங்க சொல்லுறாங்க. அதுவுமில்லாம அந்த இடத்தில் கொட்டி வெச்சிருக்கிற குங்குமத்தைத்தான் பிரசாதமாத் தர்றாங்களாம். பீரியட் ஆகி கோவிலுக்குப் போனா எந்த சாமியும் நம்ம கண்ணைக் குத்திறாது. இதையெல்லாம் உங்க வீட்ல எடுத்துச் சொல்லு” காலிப் பெட்டியைத் தூக்கிக் கொண்டு வெளியே சென்றார் நீலாவதி.
அப்போது உள்ளிருந்து வந்த ஸ்ருதி மெல்ல தர்ஷினியின் தோளில் கை வைத்தாள்.
“ஆண்ட்டி.. உங்க தயக்கம் எனக்குப் புரியுது. எல்லாரையும் நம்மால் கன்வின்ஸ் பண்ணிட்டே இருக்க முடியாது. எப்பவும் கைல வாளும், கேடயமுமா போர்க்கோலத்தோடயே இருக்க முடியாது. நம்ம லைஃபையும் வாழணும்ல. அதுவும் நிம்மதியா..?” என்றாள் சிரித்தவாறே. “எல்லாத்தையும் எல்லார்கிட்டயும் ஒப்பிக்கணும்னு அவசியம் இல்லை ஆண்ட்டி. சில விஷயங்கள் நமக்குள்ளேயே இருக்குறது நமக்கும், அடுத்தவங்களுக்கும் எப்பவுமே நல்லது. உங்களுக்குப் புரிஞ்சிருக்கும்னு நினைக்கிறேன்.” தோளை மென்மையாக அழுத்தினாள். தர்ஷினிக்குப் புரிந்தது.
சில மாதங்கள் நகர்ந்தன.
அன்று காலை நாகரத்னா சமையலறைக்குள் நுழைந்த தர்ஷினியை மேலும் கீழுமாகப் பார்த்தார்.
“ஆமா..உனக்கு தூரம் நின்னுடுச்சா என்ன..? இப்பல்லாம் நீ ஒதுங்குறதே இல்லை.” கேள்விக்குறியாய்க் கேட்டார்.
“எப்படியோ ஒருவழியா நின்று தொலைஞ்சிருச்சே. போகட்டும் விடு.. நாளைக்கு நம்ம குலதெய்வ கோயிலுக்குப் போய் பொங்கல் வெச்சிட்டு வந்துரலாமா..?” அவளுக்கு அடிவயிற்றில் சுரீலென்று மின்னல் வெட்டியது.
“சரிங்கத்தை. போகலாம்.” தர்ஷினி மெல்ல அவள் அறைக்குள் நுழைந்து,நாப்கின் பாக்கெட்டை எடுத்துக் கொண்டு கழிவறைக்குள் புகுந்தாள்.
***
படைப்பாளர்
கனலி என்கிற சுப்பு
‘தேஜஸ்’ என்ற பெயரில் பிரதிலிபி தளத்தில் கதைகள் எழுதி வருகிறார். சர்ச்சைக்குரிய கருத்துகளை எழுதவே கனலி என்ற புனைபெயரைப் பயன்படுத்துகிறார். ஹெர் ஸ்டோரிஸில் இவர் எழுதிய கட்டுரைகள், ‘பெருங்காமப் பெண்களுக்கு இங்கே இடமிருக்கிறதா?’ , ‘அவள் அவன் மேக்கப்’ , ’இளமை திரும்புதே’ ஆகிய நூல்களாக வெளிவந்திருக்கின்றன.
இளம் வயதில் பள்ளிக்கூடம் போகாமல் மட்டம்போட வயிறு வலிக்கிறது என்று சொல்வது சகஜம்தான். அலுவலகத்தில் வேலையில் சேர்ந்த பிறகுகூட ‘ஆஸ் ஐயாம் ஸபரிங் ஃபிரம் ஃபீவர்’ என்று பொய்க் காரணம் எழுதிய விடுப்புக் கடிதம்…
‘கர்னல் ஜான் பென்னிகுவிக் (John Pennycuick) நினைவு மணிமண்டபம்’ என்ற பெயரைத் தாங்கிக்கொண்டு, அந்த பச்சை நிறக் கட்டிடம் ஒரு வரலாற்று நாயகனுக்கு நன்றி செலுத்தும் விதமாக நின்று கொண்டிருந்தது. பின்னணியில் மனதைக் கவ்வும்…