ஏதாவது ஒரு பாடல் அல்லது ஒரு டயலாக் ட்ரெண்டிங்கில் வந்துவிட்டால் இங்கே பலரும் இந்த ஷார்ட்ஸ், ரீல்ஸ் போன்றவற்றில் அதைத் தாங்களும் முயற்சி செய்து அப்லோட் செய்துவிடுகிறார்கள். சிறு குழந்தைகள் முதல் வயதானவர் வரை வயது பேதம் இன்றி எல்லாருமே இதில் அடக்கம். இவ்வாறாக ‘ட்ரெண்டிங்’ என்கிற பெயரில் சமூக வலைத்தளங்களில் ஒரு கூட்டமே சிக்கிச் சின்னாபின்னமாகிக் கொண்டிருக்கிறது. இவற்றில் சில ரசிக்கும் படியாகவும் சில முகம் சுளிக்கும் படியாகவும் இருக்கும். ஒரு சில காணொளிகள் எரிச்சல் படுத்தவும் செய்கின்றன.
அதுபோல சமீபமாகச் சின்ன சின்ன பிள்ளைகள் செய்யும் டான்ஸ் ரீல்ஸ் \ ஷார்ட் வீடியோஸ் என்னை அதிகம் எரிச்சலும் கோபமும் கொள்ள வைக்கிறது. லைக்ஸ், கமெண்ட்ஸ், மானிட்டைசேஷன் மூலம் வரக்கூடிய வருமானம் போன்ற ஏதோ ஒன்றுக்காக, இதுதான் என்று ஒரு வரைமுறையே இல்லாமல் இது போய்க்கொண்டிருக்கிறது.
சமீபத்தில் ஒரு பிரபல திரைப்படத்தின் ‘சாங்’குக்காக அந்தப் பாட்டில் நடித்திருக்கும் நடிகை அணிந்திருப்பது போலவே உடை அணிந்து, அதே போலவே சிகை அலங்காரம் மற்றும் முக ஒப்பனையுடன் அப்பட்டமாக அலுக்கிக் குலுக்கும் அதே நடன அசைவுகளுடன் நடனமாடியிருக்கும், ஓர் ஏழு எட்டு வயதில் உள்ள பெண் குழந்தையின் ஷார்ட் வீடியோ ஒன்று திரும்பத் திரும்ப நேற்று முதல் என் கண்களில் பட்டுக்கொண்டே இருந்தது. உண்மையில் அது என்னை மிகவும் மன உளைச்சலுக்கு ஆளாக்கிவிட்டது. உரிய வயதிலிருக்கும் ஒருவர் இதை செய்யும் பொழுது இதுபற்றி கருத்துச் சொல்ல யாருக்கும் உரிமையில்லை. ஆனால், குழந்தைகளை இதில் ஈடுபடுத்துவதைப் பார்த்துவிட்டு லகுவாக கடந்து போக முடியவில்லை.
14 வயதிற்கு உட்பட்டவர்கள் குழந்தைகள் என்றும் 14 முதல் 18 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் வளர் இளம் பருவத்தினர் என்றும் வரையறுக்கப்படுகிறார்கள். வீட்டு உதவி உட்பட எந்த வேலையிலும் ஒரு குழந்தையைப் பணியமர்த்துவதைத் தடை செய்கிறது குழந்தைத் தொழிலாளர்கள் ஒழிப்புச் சட்டம். ஒரு சில அபாயகரமான தொழில் என்கிற அடிப்படையில் வரும் இடங்களில் வளர் இளம் பிராயத்தினரைப் பணிக்கு அமர்த்தவும் சட்டம் அனுமதிப்பதில்லை.
குழந்தைகளின் குழந்தைப் பருவம், அவர்களின் திறன் மற்றும் அவர்களது கண்ணியத்தை இழக்கச் செய்யும் வேலைகள் போன்றவற்றில் குழந்தைகளை ஈடுபடுத்துதல் அவர்களின் உடல் மற்றும் மன வளர்ச்சிக்குத் தீங்கு விளைவிக்கும் என சர்வதேச தொழிலாளர்கள் அமைப்பு எச்சரிக்கிறது.
அதேபோல பாலியல் சுரண்டல் என்பது ஒருவரை வணிக ரீதியான பாலியல் நடவடிக்கைகளில் ஈடுபடுத்துவது போன்றது. இதற்காகவே ஆண்டு தோறும் பல குழந்தைகள் நம் நாட்டில் கடத்தப்படுகிறார்கள்.
ஒருவேளை சாப்பாட்டுக்காக, வறுமை காரணமாக குழந்தைகளை வேலை செய்ய வைப்பது போக இப்பொழுது அதிகமான லைக்ஸ், கமெண்ட்ஸ், புகழின் மேல் இருக்கும் போதை கூடவே வருமானம் போன்றவற்றிற்காக சமூக வலைத்தளங்களில் \ ரியாலிட்டி ஷோக்களில் குழந்தைகளைத் தவறான முறையில் பெற்றோர்களே ஈடுபடுத்துவது நிச்சயம் கண்டிக்கத்தக்க செயல்.
தொழில்நுட்ப வளச்சியில் விண்ணைத் தொட்டுவிட்ட இன்றைய அதிநவீன காலகட்டத்திற்குத் தகுந்தாற் போல குழந்தைத் தொழிலாளர்கள் தொடர்பான சட்டங்களுக்குள் இது போன்ற செயல்களையும் இணைப்பது பற்றி அரசாங்கம் கருத்தில் கொள்ள வேண்டிய அவசியம் இருப்பதாகத் தோன்றுகிறது.
குழந்தைகளின் ஆபாச வீடியோ (Child Phronography) பார்ப்பது, குழந்தைகளைப் பாலியல் ரீதியாகத் துன்புறுத்துவது போன்ற வக்கிரமான செயல்களில் ஈடுபடுபவர்களை Pedophilic Psychos என்கிறோம். இது போன்ற காணொளிகள் அந்த வக்கிரங்களுக்குத் தீனி போடுவதாகத்தானே அமைகிறது?
POCSO சட்டப்படி பெண்களின் பாலியல் ‘age of consent’ என்பது 18 வயது. அதற்கு உட்பட்டவர்களின் சம்மதத்துடன் அவர்களுடன் பாலியல் உறவு வைத்துக்கொண்டாலும்கூட அது கடும் தண்டனைக்குரிய குற்றம். காரணம் நன்மை, தீமைகளைப் பகுத்தறியும் சமூக அறிவு என்பது அதன் பிறகுதான் அவர்களுக்கு உண்டாகிறது என்று கருதப்படுகிறது.
அதேபோலத்தான் சினிமாவில், தொலைக்காட்சியில், சமூக வலைத்தளங்களில் ஆடல் பாடல் போன்றவற்றையும் பார்த்துவிட்டு, கற்பூரம் போல அதைப் பிடித்துக்கொண்டு தாங்களும் தெளிவாக அதைச் செய்யும் பொழுது, மற்றவர்கள் அதைப் பாராட்டும் பொழுது, அது உண்மையிலேயே பிள்ளைகளுக்கு மகிழ்ச்சிதான் கொடுக்கிறது. ஆனால், இது எத்தனை காலம் நீடுக்கும் என்பது கேள்விக்குறிதான்.
இது போன்ற செயல்கள் பிள்ளைகளுக்கும் மகிழ்ச்சி கொடுத்து, இதையே திரும்பத் திரும்ப செய்வதால், அவர்களுக்கு மன அழுத்தத்தையும் ஏற்படுத்தாமல் பார்ப்பவர்களையும் வக்கிரமாக யோசிக்க வைக்காமல் மகிழ்ச்சியை மட்டுமே கொடுப்பதாக இருக்கும் வரையில் பிரச்னையே இல்லை.
ஆனால், ஒரு கட்டத்தில் இது அவர்களுக்குச் சலிப்பு தட்டி, அவர்களே இதிலிருந்து விலக நினைக்கும் நேரத்தில் அவர்கள் மீது பெற்றோர் கொடுக்கும் அழுத்தம் அவர்களிடம் மோசமான பாதிப்பை விளைவிக்கிறது.
உதாரணமாக, ‘இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் குவீன்’ எனப் போற்றப்பட்ட ஒன்பது வயதே ஆன பிரதிக்ஷா சென்ற ஆண்டு தற்கொலை செய்துகொண்டது நினைவிலிருக்கும்.
இதே போல, சமூக வலைத்தளங்களில் பிரபலமாக இருக்கும் சிறுமியின் பெற்றோருடனான ஒரு நேர்காணலைப் பார்த்தேன். அதில், அவர்கள் பதிவேற்றும் ஒரு காணொளியைப் பதிவு செய்ய எட்டு முதல் பத்து மணி நேரம் கூட ஆகும் என்று சொன்னதைக் கேட்டு ஆடித்தான் போனேன். காரணம் வாரத்தில் நான்கைந்து காணொளிகளை அவர்களுடைய யுடியூப் சேனலில் பதிவேற்றம் செய்கிறார்கள். இதெல்லாம் அந்தக் குழந்தையின் குழந்தைத்தனத்தைச் சூறையாடும் செயலல்லவா.
ஒரு குழந்தைக்கு அடிப்படை கல்வியைக் கொடுப்பது மட்டுமே பெற்றவரின் கடமையே தவிர, அவர்கள் விருப்பத்துக்கு மாறாகத் துறை சார்ந்த கல்வியைப் பிள்ளைகள் மேல் திணிப்பதுகூட தவறான செயல் எனச் சொல்லிகொண்டிருகிறோம்.
அப்படி இருக்க, வயது வந்தோர் அணிவது போன்ற உடைகளைச் சிறு குழந்தைகளுக்கு அணிவித்து, அவர்களுடைய உடல் அங்கங்களை வெளிப்படையாக காண்பித்து, விரசமான நடன அசைவுகளைச் செய்ய வைத்து, அதைச் சமூக ஊடகங்களிலும் போட்டு, பலரது வக்கிரங்களைக் கிளறிவிடுவது மிகப்பெரிய சமுதாய சீர்கேடு. இதற்கெல்லாம் ஒரு நல்ல தீர்வைக் கண்டிப்பாக ஏற்படுத்த வேண்டும். இல்லையென்றால் அடுத்தடுத்து வரக்கூடிய இளைய தலைமுறை, உளவியல் பிரச்னைகளுடன் இந்தச் சமுதாயத்தை எதிர்கொள்ள இயலாமல் அல்லல்படும்.
படைப்பாளர்:
கிருஷ்ணப்ரியா நாராயண். தமிழ் நாவலாசிரியர். சென்னையைச் சேர்ந்தவர். 8 நாவல்கள் புத்தகமாக வெளிவந்துள்ளன. வாசித்தலில் அதிக ஆர்வம் உண்டு
Super Priya