ஒரு பெண்ணுக்கு குழந்தைப் பருவம் முதல் கிழவியாகும் வரை அதிக மனஅழுத்தத்தை தரும் விஷயம் ஒன்று உண்டென்றால், அது தனது ‘ so called கற்பை’ நொடிக்கு நொடி நிரூபித்துக் கொண்டே இருப்பதுதான். பத்து வயது சிறுமியாக விளையாடும்போதே, ‘ பாவாடை பறக்குறதுகூடத் தெரியாம அப்படி என்ன விளையாட்டு உனக்கு’, ‘ நீ பெரிய பொண்ணாகிட்டு இருக்கே, பசங்க கூட எல்லாம் விளையாடக் கூடாது’, என்று ஆரம்பிப்பார்கள்.
இந்தக் கட்டுப்பாடுகளும் விமர்சனங்களும் அவள் வயதுக்கு வந்தபிறகு உச்சகட்டத்தை எட்டும். “சுரிதாருக்கு ஷாலை பின்பண்ணிப் போடு”,”ஆறு மணிக்குள்ள வீட்டு வந்துறணும்”, என்று வீட்டில் ஆரம்பித்து, பள்ளியில், அக்கம்பக்கத்தில் என்று ஆளாளுக்கு அட்வைஸ் செய்வார்கள். ” ஸ்கூலுக்கு படிக்க வர்றியா, பசங்களோட அரட்டை அடிச்சு, கூத்தடிக்க வர்றியா?”,” நீ வயசுப் பொண்ணு, அந்தப் பையனோட ரோட்டுல நின்னு பேசுறது கொஞ்சம் கூட நல்லால்ல”, ” எப்படி இறுக்கமா ட்ரெஸ் பண்ணிட்டு போகுது பாரு, இதெல்லாம் எங்க உருப்படப் போகுது?”, என்றெல்லாம் கடுமையான விமர்சனங்கள் முகத்திற்கு நேராகவும், காதில்படும்படியாகவும் வரும்.
கல்லூரிக் காலத்திலும் இது தொடரும். ” எப்ப பார்த்தாலும் போனை நோண்டிட்டே இருக்கே? அப்படி யாருக்கு மெசேஜ் அனுப்புறே, குடு பார்ப்போம்”, ” கிளாஸ் நாலு மணிக்கே முடிஞ்சிருக்கும், இப்ப மணி அஞ்சரை. ஏண்டி இவ்வளவு லேட்டு?”, ” அது என்ன எப்ப பார்த்தாலும் உனக்கு மட்டும் ஸ்பெஷல் கிளாஸ் வக்கிறாங்க, பக்கத்து வீட்டு செல்வி சனிக்கிழமையெல்லாம் வீட்டுலதான் இருக்கா”, என்றெல்லாம் கேள்விகள் வரும். மேலோட்டமாகப் பார்த்தால் இயல்பான கேள்விகளாகவே தெரியும். ஆனால், சந்தேகத்தோடு ஆழம் பார்ப்பது பெண்களுக்கு மட்டும்தான் புரியும். இந்தக் கேள்விகள் அனைத்தும் அப்பா, அம்மா உறவுகள் எல்லோரிடமிருந்தும் வரும்.
கல்யாணத்திற்குப் பிறகு கணவனுக்கும், மாமியார், மாமனார் என்று அத்தனை குடும்ப உறவுகளுக்கும் தன்னை நிரூபித்துக்கொண்டே இருக்க வேண்டும். வேலைக்குப் போகாமல் வீட்டில் இருக்கும் பெண்ணை நோக்கியும் கேள்விகள் வந்தவாறே இருக்கும். ” நான் போன் பண்ணும்போது, போன் பிஸியாக இருந்ததே யார் கூட பேசிட்டு இருந்தே?”,” காய்கறி வண்டிக்காரர்கிட்டே அப்படி என்ன சிரிப்பு?”, ” எங்க போகணும்னு இப்படி சூப்பரா ட்ரெஸ் பண்ணிட்டு இருக்கே?”, என்றெல்லாம் கேட்கப்படும்.
வேலைக்குப் போகும் பெண் என்றால், வேலை முடிந்து வீட்டுக்கு வரும் நேரத்துக்குள் வந்துவிட வேண்டும். லேட்டாக வந்தால் அதற்கும் ஆயிரம் கேள்வி வரும். அன்று அலுவலகத்தில் நடந்தது என்ன, பேசியது என்ன என்று அனைத்தையும் ஒப்பிக்க வேண்டும். அலுவலக விஷயமாக வெளியே போனால்,’ எப்படிப் போனாய், யாருடன் போனாய், அந்த இடம் எங்கே இருக்கு, என்ன வேலை?’ என்றெல்லாம் விசாரிப்பு இருக்கும். அலுவலகம் செல்லும் பெண்ணைக் குடும்பமும் அக்கம்பக்கத்தாரும் கண்காணிப்பது மட்டுமின்றி, அலுவலகத்தின் சக ஊழியர்களும் கண்காணிப்பார்கள். ” அது என்ன உன்னை மட்டும் சூப்பர்வைஸர் திட்டறதேயில்லை?”,” அந்தப் பையன் ஏன் நீ கேட்டா மட்டும் டீ வாங்கிட்டு வந்து தர்றான்?”, என்று அல்ப விஷயத்துக்கெல்லாம் உளவு பார்ப்பார்கள்.
தனித்து வாழும் பெண்கள், ஒற்றைப் பெற்றோராக இருக்கும் பெண்களைப் பற்றிச் சொல்லவே வேண்டாம், அவர்களின் வாழ்நாள் நோக்கமே, `தான் ஒழுக்கமாக இருக்கிறோம்’ என்று நிரூபிப்பதுதான் என்பதுபோலப் பொது சமுதாயம் அவர்களை இரக்கம் இல்லாமல் நடத்துகிறது. வன்மத்தோடு விமர்சிக்கிறது.
எல்லோரின் நோக்கமும் ஒன்றுதான், ” நீ ‘ஒழுக்கமாக’ இருக்கிறாயா?” என்ற வினாதான் இந்த எல்லா விமர்சனங்களிலும், கேள்விகளிலும் அடியோட்டமாக இருக்கிறது. அப்படியெல்லாம் இல்லை, பெண் மேல நம்பிக்கை இருக்கு, சும்மாதான் கேட்கிறோம் என்று யாரும் சப்பைக்கட்டு கட்ட வேண்டாம்.
இந்தச் சமுதாயத்தில் பெண்ணின் ‘ so called ஒழுக்கத்தை’ கேள்வி கேட்கும் உரிமையை, தெரிந்தவர், தெரியாதவர், குடும்பத்தினர், முன்பின் அறிமுகமில்லாதவர் என்று அனைவரும் பெற்றிருக்கிறார்கள். எல்லோரையும் ஆட்டி வைப்பது ‘ கற்பு’ என்ற கருத்தாக்கம்தான். ஆண்களாகப் பிறந்ததாலேயே அவர்களின்கற்பைப்’ பற்றி இந்த உலகத்துக்குக் கவலையில்லை… அவர்களைக் கேள்வி கேட்பதில்லை. பெண்களாகப் பிறந்ததாலேயே நொடிக்கு நொடி ‘தான் கற்புள்ளவள்’ என்று நிரூபித்துக்கொண்டே இருக்க வேண்டியிருக்கிறது.
‘ மற்றவர்கள் பேசுவதைப் பற்றி எனக்கு கவலையில்லை. எனது மனசாட்சிக்கு சரியென்று படுவதை நான் செய்வேன்’, என்று ஒரு பெண் இருந்தால் என்ன? தாராளமாக இருக்கலாம். ஆனால், அவள் ஆகச்சிறந்த சாதனை புரிந்தாலும், அதனை ஒதுக்கி வைத்துவிட்டு,’ஒழுக்கக் கண்ணாடி’ போட்டுக்கொண்டுதான் சமுதாயம் அவளைப் பார்க்கும், மதிப்பிடும்.
ஆணுக்கு இந்த ‘ ஒழுக்கக் கண்ணாடி’ எல்லாம் பெரிதாகக் கிடையாது, அவனின் செயலை மட்டுமே வைத்து மதிப்பிடுவார்கள். அதே போல, குற்றச் செயல்களில் விசாரிக்கப்படும்போது, ‘ அந்தப் பெண்ஒழுக்கமில்லாதவள்’, என்று பொதுப்புத்தி முடிவு செய்யுமானால், அவள் உண்மையிலேயே குற்றம் செய்திருக்காவிட்டாலும் அவள் வார்த்தையும் வாதமும் அங்குப் பெரிதாக எடுத்துக் கொள்ளப்படாது.
பொதுபுத்தியின் அடியாழத்தில், ‘ பெண் உடல் பொத்திப் பாதுகாக்கப்பட வேண்டியது. அவளின் கணவனாகப் போகிறவன்/ கணவனுக்கு மட்டுமே உரியது. அதனை தூய்மை கெடாமல் காக்க வேண்டும்’ என்ற ஆணாதிக்கக் கருத்து அழுத்தமாகப் பதிந்திருக்கிறது. அதனால்தான் அவள் பாதுகாப்பைப் பற்றி சமுதாயம் கவலைப்பட்டுக்கொண்டே இருக்கிறது. பெண்ணுக்கு பாதுகாப்பு வேண்டும் என்று இங்கு எழுப்பப்படும் குரல் எல்லாம், அவளது ‘ so called கற்பை’ பாதுகாக்க வேண்டும் என்பதில்லாமல் வேறொன்றுமில்லை. அவளுக்கு தன் உடல் மீதான அடிப்படை உரிமையே மறுக்கப்படுகிறது.
ஆணாதிக்கச் சிந்தனையிலிருந்து, கற்பு என்ற கருத்தாக்கத்திலிருந்து மொத்த சமுதாயமும் விடுபட்டால் மட்டுமே பெண் விடுதலை உணர்வைப் பெறமுடியும். தனது முழு ஆற்றலுடன் செயல்பட முடியும். சமுதாயத்திற்கு பங்களிக்க முடியும். ‘ பெண்கள் சுயநலத்துடன் இருக்கிறார்கள், சமுதாயப் பணிக்கு பெரும்பான்மையினர் வருவதில்லை’, என்று குற்றம் சாட்டுகிறார்கள். இங்கே வீட்டை விட்டு வெளியே வேலைக்கு போய் வருவதே பெரிய காரியமாக இருக்கிறது. அதைத் தாண்டி சமுதாயப் பணிக்கு போனால், குடும்பம் மட்டுமல்ல, சமுதாயத்தின் ‘ ஒழுக்க’ கேள்விகளையும் எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது என்ற ஆயாசத்தில் பெரும்பாலான பெண்கள் முடங்கிவிடுகின்றனர். இது பேரிழப்பு.
சதாசர்வ காலமும் இந்த அழுத்தத்துடன் இயங்கும் பெண்களால் எப்படி சுதந்திரமாக சிந்திக்க முடியும், செயல்பட முடியும் ? பெண்கள்தான் பெண்களைப் பற்றி மோசமாகப் பேசுகிறார்கள், பெண்ணே பெண்ணுக்கு எதிரி என்று சொல்வது மிக மேலோட்டமான, பலவீனமான வாதம். ஆணாதிக்கச் சிந்தனை ஆணிடமும் இருக்கிறது, பெண்ணிடமும் இருக்கிறது. இருவரும் காலங்காலமாக இந்த சிந்தனையால் மூளைச் சலவை செய்யப்பட்டவர்கள்தாம்.
இவை எல்லாவற்றையும் தாண்டி, சமுதாயப் பணி செய்யும் தோழியரைப் பாராட்ட வேண்டும். அவர்கள் துணிவைப் போற்ற வேண்டும்.
தோழர்களே, கற்பு என்ற கருத்தாக்கம் மிகக்கற்பனையானது, செயற்கையானது, பெண்ணை அடிமையாகவே வைத்திருக்கும் மோசமான உத்தி. தன் வாழ்க்கையை எப்படி வாழ வேண்டும் என்ற அறிவு ஒவ்வொரு பெண்ணுக்கும் இருக்கிறது. எந்த உறவிலும் பெண்ணின் நம்பிக்கையைப் பெறுவதுதான் முக்கியம். அது தாய் மகள் உறவாகட்டும், கணவன் மனைவி உறவாகட்டும், சக தோழமைகளாகட்டும். நம்மைச் சுற்றியிருக்கும் பெண்களை `ஒழுக்கக் கண்ணாடி’யால் எடைபோடாமல், விமர்சிக்காமல் இருப்போம். முன்முடிவுகள் (ஜட்ஜ்மெண்டலாக) இல்லாமல், நட்போடு உறவாடுவோம், மனிதத்துடன் இயங்குவோம், அன்பு செய்வோம்.
கீதா பக்கங்களின் முந்தைய பகுதி
படைப்பாளர்
கீதா இளங்கோவன்
‘மாதவிடாய்’, ‘ஜாதிகள் இருக்கேடி பாப்பா’ போன்ற பெண்களின் களத்தில் ஆழ அகலத்தை வெளிக்கொணரும் ஆவணப் படங்களை இயக்கியிருக்கிறார். சமூக செயற்பாட்டாளர்; சிறந்த பெண்ணிய சிந்தனையாளர். அரசுப் பணியிலிருக்கும் தோழர் கீதா, சமூக வலைதளங்களிலும் தன் காத்திரமான ஆக்கப்பூர்வமான எழுத்தால் சீர்திருத்த சிந்தனைகளைத் தொடர்ந்து விதைத்து வருகிறார்.
Super comrade
கற்பு என்று ஆணாதிக்கத்தால் கற்பிக்கப்பட்டு பெண்களை அடிமையாக்க ஒரு கண்டுபிடிப்பு
உண்மை தோழர்