நியூயார்க்கை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ஃபஸ்பீட் நியூஸ் (BuzzFeedNews) பத்திரிக்கையின் லண்டன் பிரிவு (BuzzFeed News UK) சர்வதேச நிருபர் மேகா ராஜகோபாலன். இவர் ஐக்கிய அமெரிக்காவின் பத்திரிக்கைத் துறைக்கான உயரிய விருதான புலிட்சர் விருது பெற்றிருப்பது இன்று உலக மக்களைத் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது.
மேகா ராஜகோபாலன்

ஊடகம், இணைய ஊடகம், இலக்கியம் மற்றும் இசை சார்ந்த துறைகளில் இருபத்தியோரு பிரிவுகளின் கீழ் வழங்கப்படும் இந்தப் பரிசு ஆண்டுதோறும் அறிவிக்கப்படுகிறது. இந்த விருதுக்காகத் தேர்வு செய்யப்பட்ட மேகா ராஜகோபாலன் லண்டனில் வசிக்கும் தமிழ் வம்சாவழி. அமெரிக்காவின் வாஷிங்டனில் தனது பெற்றோர்களுடன் வளர்ந்து வந்த இவர் யுனிவர்சிட்டி ஆப் மேரிலேண்டில் பட்டப்படிப்பை முடித்துவிட்டு, தற்போது லண்டனில் வசிக்கிறார்.

சீனா, தாய்லாந்து, இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்தின் சர்வதேச நிருபராக ஃபஸ்பீட் (BussFeedNews) பத்திரிக்கையின் அங்கீகாரம் பெற்றிருக்கிறார். இதற்கு முன்னர் சீனாவில் ராய்ட்டர்ஸின் (Reuters) நிருபராகப் பணியாற்றி உள்ளார். வடகொரியாவின் அணுசக்தி நெருக்கடி முதல் ஆப்கானிஸ்தானின் சமாதான முன்னெடுப்புகள் வரை ஆசியா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் பல சிறப்புச் செய்திகளை வெளியிட்டுள்ளார்.

சீனாவின் மேற்குப் பகுதியில் உள்ள ஜிங்க்ஜியாங்க் (Xinjiang) மாகாணத்தில் தடுப்பு முகாம்களில் (Detention Camp) அடைக்கப்பட்டிருக்கும் பத்து லட்சத்துக்கும் அதிகமான உய்குர் (Uyghur), கஜக்ஸ் (Kazhaks) மற்றும் சில முஸ்லீம் இன மக்களைப் பற்றிய இவரின் பத்திரிக்கை விசாரணைக்காக இந்த விருது அளிக்கப்பட்டிருக்கிறது.

உய்குர் இன மக்கள் சீன அரசால் அங்கீகரிக்கப்பட்ட முஸ்ஸீம் சிறுபான்மை இனக்குழுக்களாகப் பல நூற்றாண்டுகளாக ஜிங்ஜியாங்க் (Xinjiang) மற்றும் கஜகஸ்தான் பகுதிகளில் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு எதிரான அடக்குமுறைகள், வன்முறைகள் மற்றும் இவர்களின் நிலப்பகுதிக்குள் அத்துமீறல்கள் எனச் சீன அரசு பல தொல்லைகள் தந்து வருகிறது.
இது 2017-ம் வருடத்துக்குப் பிறகு மிகவும் அதிகரித்து வருகிறது. அவர்களுக்கு எதிராக அமைக்கப்பட்ட தடுப்பு முகாம்கள் பலவிதமான கட்டுப்பாடுகளுடன் சீன அரசால் தந்திரமாக ஐக்கிய நாடுகளின் கண்களிலிருந்து மறைக்கப்பட்டு வந்தது. அதுபற்றிய விசாரணையில் சீன அரசு தடுப்பு முகாம்கள் எதுவும் செயல்படவில்லை என்று மறுத்தே வந்தது.

இந்த நிலையில் இதற்கான புலனாய்வைத் தொடங்கிய மேகா, சீன அரசாங்கத்தின் பல அச்சுறுத்தல்களுக்கு ஆளாகியிருக்கிறார். அவருடைய பயண விசா தடை செய்யப்பட்டு சீனாவில் அவர் தங்கியிருந்த பீஜிங் (Beijing) நகரத்திலிருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டிருக்கிறார்.

லண்டன் திரும்பிய மேகா விடாப்பிடியாக அங்கிருந்தே தனது பணியை மேற்கொண்டார். இதற்காக அவர் அலிசன் கில்லிங்க் (Alison Killing – geospatial analyst) மற்றும் கிறிஸ்ட்டோ பஸ்செக் (Cristo Buschek- digital security trainer) ஆகியோருடன் இணைந்து தடுப்பு முகாம்களின் செயற்கைக் கோள் புகைப்படங்கள் மற்றும் முப்பரிமாண வரைபடங்களுடன் விசாரணையில் இறங்கினார்.

சீன விசா மறுக்கப்பட்ட நிலையில் புலிட்சர் சென்டர் (Pulitzer Center) என்ற அமைப்பின் மூலமாக உதவித்தொகை பெற்று அண்டை நாடான கஜகஸ்தான் சென்றார். அங்கு அகதிகளாக வசிக்கும் உய்குர் இன மக்களுடன் தனது விசாரணையை நடத்துகிறார். தடுப்பு முகாம்களிலிருந்து விடுதலை பெற்ற பத்துக்கும் அதிகமானவர்களின் நம்பிக்கைக்குரியவராக மாறி, அவர்களின் வாக்குமூலங்களைப் பெற்றார். தடுப்பு முகாம்களில் அவர்களுக்கு நிகழ்ந்த கொடுமைகள் அனைத்தையும் ஆவணப்படுத்தினார். சிறுவர்களின் கல்வி, முதியோர்களின் மருத்துவத்தேவையென அனைத்தும் அவர்களுக்கு மறுக்கப்படுவதையும் ஆவணப்படுத்தினார்.

மேலும், தடை செய்யப்பட்டதாகச் சொல்லும் சில செயலிகளை உபயோகப்படுத்தியதாக இளைஞர்களும் அங்கு அடைக்கப்பட்டிருக்கிறார்கள். கர்ப்பிணிகள், தாய்மார்கள் என்று ஒருவர் கூட அங்கே கருணை கொண்டு பார்க்கப்படுவதில்லை என்றும் அவர்கள் வாக்குமூலம் தருகின்றனர். சீன அரசு அவர்களைப் பழிவாங்கலாம் என்கிற அச்சத்தையும் மீறி அவர்களாக முன்வந்து அளித்த தகவல்களின் அடிப்படையில், செயற்கைக்கோள் புகைப்படங்களின் துணைகொண்டு, தடுப்பு முகாம்களின் முப்பரிமாண வரைபடங்களை நிறுவி அதை ஆவணப்படுத்தினார். இருநூற்று அறுபதுக்கும் அதிகமான முகாம்களை ஆயிரக்கணக்கான கட்டிடங்களில் தொழில்நுட்ப உதவியுடன் கண்டடைய முடிந்தது.

ஒவ்வொரு முகாமிலும் பத்தாயிரத்துக்கும் அதிகமான மக்களை அடைத்து வைக்கும்படியான மிகப்பெரிய முகாம்களாக அவை இருக்கின்றன. இரண்டாம் உலகப்போரின்போது அமைக்கப்பட்ட முகாம்களுக்கு அடுத்தபடியாக அமைந்துள்ள பெரிய தடுப்பு முகாம்கள் இவை என்று பல பத்திரிக்கைகள் விமர்சனம் செய்தன. அதோடு, அங்கே அதிக அளவில் வளர்ந்து வரும் தொழிற்சாலைகளையும் அங்கே முறையான வழிகாட்டுதல் எதுவுமின்றி கட்டாயமாகப் பணிக்கு அமர்த்தப்படும் தொழிலாளர்களையும் அவர்களைப் பற்றிய உண்மைகளையும் வெளிச்சத்துக்குக் கொண்டு வந்தார் மேகா.

இவரது ஜிங்ஜியாங்க் சீரீஸ் (Xinjiang Series) புலனாய்வுத் தகவல்கள் பத்திரிக்கை வழியாக முறையாக வெளியிடப்பட்டன. இவருடைய இந்தச் சர்வதேச அறிக்கைக்காகவே பத்திரிக்கைத் துறையின் புலிட்சர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. ஜிங்க்ஜியாங்க் மாகாணத்தின் தடுப்பு முகாம்களை முதன்முதலாகக் கண்டுபிடித்து நேரடியாகச் சென்று பார்வையிட்டவர் என்ற பெருமையும் மேகாவிற்கு உண்டு. இதற்காக 2018-ம் ஆண்டு Human Rights Press Award இவருக்கு அளிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் நடைபெறும் மத வன்முறைக்கும் முகநூலுக்கும் இடையேயான தொடர்புகளை வெளிக்கொண்டு வந்ததற்காக 2019-ம் ஆண்டு Mirror Award இவருக்கு வழங்கப்பட்டது.

ஹிட்லரின் கையில் இருந்த அறிவியல் லட்சக்கணக்கான மக்களைக் கொன்று குவித்தது. மாறாக மேகாவின் கையில் இருக்கும் அறிவியல் லட்சக்கணக்கான மக்களின் வாழ்வை நிலைநிறுத்துகிறது. தமிழ் மற்றும் மாண்டரின் சீன மொழியில் பேசும் மேகாவுக்கு வாழ்த்துகளைக் கூறுவோம். அறிவியல் மொழியும் தொழிநுட்பமும் ஆக்கப்பூர்வமாக மனித குலத்திற்கு வழிகாட்டட்டும்!

படைப்பாளரின் பிற படைப்புகள்

படைப்பாளர்

சாந்தி சண்முகம்

கோவையைச் சேர்ந்த சாந்தி, தற்போது துபாயில் வசித்து வருகிறார். கல்லூரியில் துணை விரிவுரையாளராகப் பணியாற்றியுள்ளார். பயணங்களிலும் எழுதுவதிலும் ஈடுபாடு கொண்டவர்.