1960களில் வரலாற்றில் முதன்முறையாகப் பணியிடத்தில் பெண்கள் ஆண்களை முந்துவதற்கும் வெகுஜன இயக்கத்தைப் பணியிடத்தில் அதிகரிப்பதற்குமான சக்திவாய்ந்த மாற்றத்திற்கு குடும்பக் கட்டுப்பாட்டு மாத்திரைகள் காரணமாக இருந்தன.
கல்லூரிப் படிப்புப் படித்த பெண்கள் உருவாக்கம் பெறத் தொடங்கிய இந்தக் காலப்பகுதி, இல்லத்தரசிகளாக வாழ்வைக் கழிக்கும் அம்மாக்களின் அடிச்சுவடுகளை பின்பற்றுவதை நிராகரிக்கத் தொடங்கிய தலைமுறைப் பெண்களின் காலப்பகுதி. அலுவலகத் திறன்களில் ஆண்களுக்கு நிகராக வெள்ளைக் காலர்களுடன் பெண்களும் ஈடுபட்டனர்.
“பிறப்புக் கட்டுப்பாட்டு மாத்திரை எனக்குக் குழந்தைகளைப் பெறுவதைத் தாமதப்படுத்தவும், எனது சொந்த நிறுவனத்தைத் தொடங்கவும் வாய்ப்பளித்தது” என்றும், “இது இல்லாமல் எனது நிறுவனத்தைத் திட்டமிட எனக்குச் சந்தர்ப்பம் கிடைத்திராது” என்றும் அமெரிக்கப் பெண்கள் பலர் அக்காலத்தில் துணிந்து சொல்லத் தொடங்கினார்கள்.
20 வயதுக்கு முன்பு தாயாக மாறிவிடும் கலாசாரமிருந்த அமெரிக்கப் பெண்கள் 30 வயதுவரையும் கர்ப்பம் தரிக்காதிருக்கத் தெரிந்து கொண்டார்கள். இதனால் வெறுங்காலுடன் வெற்றுத் தரையில் நடப்பதைப் போன்று வெகு சுதந்திரமாகப் பட்டடப் படிப்பை அவர்கள் தொடர்ந்தார்கள். குழந்தை பெறுவதைத் தள்ளிவைக்கும் திறனை மட்டுமல்ல; குடும்பக் கட்டுப்பாட்டு மாத்திரை பெண்களின் மன அழுத்தத்தையும் கணிசமான அளவு தணித்தது. சொந்த உடலின் மீது கட்டுப்பாட்டைக் கொண்டிருப்பதும், சரியானதைத் தேர்வு செய்வதற்கு ஓர் ஆணை நம்பாமல் இருப்பதும் ஒரு பெண்ணுக்கு வாழ்வில் ஏராளமான சுதந்திரத்தை அளிக்கும் என்பதை உணர்ந்த தசாப்தம் இது.
தொழில்முனைவோர், வக்கீல்கள், மருத்துவர்கள், பிற தொழில் வல்லுநர்கள் குழந்தைகளைப் பெறுவதைத் திட்டமிட முடிந்த வாழ்வின் ஒரு பகுதியாகக் குடும்பக்கட்டுப்பாட்டு மாத்திரைகள் மாறத் தொடங்கிய ஆரம்ப கால தசாப்தத்தின் தேர்வுகளின் எதிரொலிகளை இன்றும் உணர முடியும்.
பிறப்புக் கட்டுப்பாட்டு மாத்திரை இல்லாவிட்டால், பெண்கள் நிச்சயமாக அத்தகைய சக்திவாய்ந்த மூத்த பதவிகளைப் பெற்றிருக்க மாட்டார்கள் என்று நம்பக்கூடிய அரசியல், சமூக விருப்பம் நிச்சயமாகவே அக்காலப்பகுதியில் இருந்தது.
பிறப்புக் கட்டுப்பாட்டு மாத்திரையின் வருகை பெண்ணியத்தின் இரண்டாவது அலையுடனும் சம உரிமைகளுக்கான போராட்டத்துடனும் ஒத்துப்போனது. வெகுஜன இயக்கங்களில் ஆண்களுடன் ஆடுகளத்தை சமன் செய்யக் குடும்பக் கட்டுப்பாட்டு மாத்திரை பெண்களுக்கு ஒரு உறுதியான கருவியாகக் கைகொடுத்தது.
பாலியல் புரட்சியைத் தூண்டியதற்குக் கருத்தடை மாத்திரை நிச்சயமாக ஒரு காரணியாக இருந்தது என்பதை மறுப்பதற்கில்லை. கர்ப்பம் தரிப்பதைப் பற்றி அவர்கள் இனி கவலைப்பட வேண்டியதில்லை என்பதால், திருமணத்திற்கு வெளியே உடலுறவு கொள்வதன் பயத்திலிருந்தும் இது அவர்களை விடுவித்தது. மூடப்பட்டிருந்த கதவுகள் வழியாகப் பெண்கள் நடந்து செல்ல இந்த மாத்திரை வழிவகுத்தது. சமுதாயத்தால் கட்டுப்படுத்தப்படும் அதிகாரத்திலிருந்து விடுவித்துக் கொள்வதற்குப் பெண்கள் தங்கள் உடலைக் கட்டுப்படுத்துவதும், குழந்தை பெறுவதைக் கட்டுப்படுத்துவதும் அவசியமாகிறது. பணம் சம்பாதிக்க விரும்பிய பெண்கள், தொழில்துறைகளில் உயர்ந்த இலக்குகளை அடைய விரும்பிய பெண்கள் கருவுறுதலின் காலவரிசையை தங்களுக்கு ஏற்றமாதிரியாகக் கட்டுப்படுத்திக் கொள்வதற்கும் பொருளாதார வளர்ச்சியில் தங்களின் இணைந்த செயலாக்கங்களை உறுதிசெய்வதற்கும் குடும்பக் கட்டுப்பாட்டு மாத்திரை பெரும் பங்கு வகித்தது.
1960களில் பெண்கள் விடுதலை இயக்கம் , சிவில் உரிமைகள், போர் எதிர்ப்பு இயக்கங்களுடன் வேகத்தை அதிகரித்தது. இது மிகப்பெரிய மாற்றத்தின் காலம், குறிப்பாகப் பெண்களுக்கு. மகிழ்ச்சியான இல்லத்தரசியின் உருவத்தை மகிமைப்படுத்துவதாகப் பிரபலமான கலாசாரம் இருந்தாலும், உண்மையில், ஏராளமான அமெரிக்கப் பெண்கள் வீட்டிற்கு வெளியே வேலை செய்தனர். இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு பெண் வேலைவாய்ப்பு விகிதம் குறைந்துவிட்டது. ஆனால், 1954 வாக்கில் போரின் உச்சத்தைவிட அதிகமான பெண்கள் தொழிலாளர் தொகுப்பில் இருந்தனர். பெரும்பாலான பெண்கள் ஆசிரியர்கள், செவிலியர்கள், பணியாளர்கள், செயலாளர்கள் அல்லது தொழிற்சாலை தொழிலாளர்கள் எனக் குறைந்த ஊதியம் பெறும் வேலைகளில் பணியாற்றினர். 1964ம் ஆண்டின் சிவில் உரிமைகள் சட்டம், வேலைவாய்ப்பு, கல்வி பாகுபாட்டை அமெரிக்காவில் தடைசெய்தது. பெண்கள் தொழில் துறைகளுக்குச் செல்வதை சாத்தியமாக்கியது. இந்த அனைத்து மாற்றங்களிலும் பிறப்புக் கட்டுப்பாட்டு மாத்திரையும் ஒரு குறிப்பிடத் தக்க பங்கைக் கொண்டிருந்தது. ஏறக்குறைய 100% கருவுறுதல் கட்டுப்பாட்டுடன், பெண்கள் மாத்திரைக்கு முன்னர் ஒருபோதும் சாத்தியமில்லாத ஒரு தொழில் அல்லது பட்டத்தைத் தொடர குழந்தைகள் பிறப்புகளை ஒத்திவைக்க முடிந்தது.
ஒரு தசாப்தத்திற்குப் பிறகு, ‘விடுதலை’ என்றும் ‘புரட்சி’ என்றும் பெண்களால் பாராட்டப்பட்ட அதிசய மருந்து பெண்ணியவாதிகளின் தாக்குதலுக்கு உள்ளானது.
1970ல் இடம்பெற்ற பல விசாரணைகள் குடும்பக் கட்டுப்பாட்டு மாத்திரையின் சுகாதார அபாயங்களைக் கவனத்திற்குக் கொண்டு வந்தன. பல பெண்கள் கோபமடைந்தனர். பெண்ணியவாதிகள் இப்போது மாத்திரையைப் பெண்கள் வாழ்வில் ஆணாதிக்க கட்டுப்பாட்டுக்கு மற்றொரு எடுத்துக்காட்டாகப் பார்த்தார்கள். மாத்திரைமீதான பெண்களின் ஏமாற்றம் அமெரிக்க சமுதாயத்தின் புதிய பெண்ணிய விமர்சனத்திற்கு ஊட்டமளித்தது. பிறப்பு கட்டுப்பாட்டு முறைகள் ஏன் பெண்களின் பொறுப்பாக இருக்க வேண்டும்? ஆண்கள் ஏன் மருத்துவத் தொழிலையும் மருந்துத் துறையையும் கட்டுப்படுத்துகிறார்கள்? இதன் விளைவாகப் பெண்களின் சுகாதார நலன்கள் பாதிக்கப்படுகின்றனவா? இது போன்ற கேள்விகளைப் பெண்கள் கேட்கத் தொடங்கினர்.
மாத்திரை சர்ச்சை அறிவியலினதும் மருத்துவத்தினதும் நிலையை ஒழுங்கமைக்கவும் எதிர்ப்பு தெரிவிக்கவும் பெண்ணியவாதிகளை ஊக்குவித்தது. பெண்கள் எழுந்து நின்று பேசினாலும், அவர்களின் உடல்நலப் பாதுகாப்பில் செயலற்ற பங்கேற்பாளர்களாக இருக்க மறுத்ததாலும், அவர்கள் அமெரிக்க சுகாதாரப் பாதுகாப்பு முறைமையில் நீடித்த மாற்றங்களை அடைந்தனர்.
இன்னும் மாத்திரையைச் சுற்றியுள்ள கேள்விகள் தீர்க்கப்படாத நிலையில் சுகாதாரப் பாதுகாப்புடன் பெண்களின் கர்ப்பத்தைத் தடுப்பதை யார் கட்டுப்படுத்த வேண்டும் என்ற பெண்ணியவாதிகளின் விவாதம் தொடர்கிறது.
ஆனால், இன்று உலகம் பூராகவும் வளர்ச்சியடைந்த வளர்ச்சியடையாத அனைத்து நாடுகளிலும் குடும்பக் கட்டுப்பாட்டு மாத்திரைகள் மட்டுமல்ல; வேறுபல குடும்பக்கட்டுப்பாட்டு முறைகளும் மருத்துவ சந்தைகளில் பரவலாகக் கிடைக்கின்றன. குறுகிய கால – நீண்ட காலக் குடும்பக் கட்டுப்பாட்டு முறைகளைப் பெண்கள் தங்களின் தேவைக்குத் தகுந்த விதமாகத் தெரிவு செய்து கொள்கின்றனர்.
- ஸ்டெர்லைசேஷன் (அறுவை சிகிச்சை)
- மாத்திரை (இதில் கர்ப்பத்தைத் தடுக்கும் ஹார்மோன்கள் உள்ளன)
- கருப்பையக சாதனம் (IUD) போன்ற நீண்டகாலம் மீளக்கூடிய கருத்தடை
வரலாறு முழுவதும், கருத்தடை, பிறப்புக் கட்டுப்பாட்டுக்கான பெரும்பாலான பொறுப்பு பெண்கள் மீதே விழுந்துள்ளது. பிறப்புக் கட்டுப்பாட்டு மாத்திரைகள் கண்டறியப்படாத காலத்தில் இயற்கையான மூலிகைகளையும், வேர்கள், தண்டுகள், பட்டைகளையும் இடித்து தேனுடன் கலந்தும், அவித்து நீரை அருந்தியும் குழந்தைப் பிறப்பைத் தள்ளிப்போட்டு அல்லது கருக்கலைப்புச் செய்தும் நம் முற்காலப் பெண்கள் பாதுகாத்துக் கொள்ள முயன்றார்கள். இவற்றினால் நச்சுத்தன்மை உடலில் ஏறி பல்வேறு பாதிப்புகளை எதிர்கொண்டதும், உயிரையே இழந்ததும் முற்காலப் பெண்களின் அனுபங்களாக இருந்தன.
கர்ப்பத்தைத் தடுப்பதில் ஆண்களின் பங்கு ஆணுறைகளுடன் (பிறப்புக் கட்டுப்பாட்டுக்கான மற்றொரு பிரபலமான முறை) மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. வாஸெக்டோமி (vasectomy) என்பது ஆண் கருத்தடை அல்லது நிரந்தர கருத்தடைக்கான ஒரு அறுவை சிகிச்சை. விந்தணுக்கள் சிறுநீர்க்குழாய்க்குள் நுழைவதைத் தடுப்பதன் மூலம் பெண்ணுடனான உடலுறவில் அவள் கருத்தரிப்பதைத் தடுக்கும். இந்தச் சிகிச்சை முறையைப் பல குழந்தைகளுக்குத் தகப்பனாக மாறிய பிறகும்கூட ஆண்கள் தேர்வு செய்வதில்லை.
எத்தனை குழந்தைகள் பெற்றுக் கொண்டாலும் என்ன மாதிரியான உடல் உபாதைகளையும் பக்கவிளைவுகளையும் தாங்க நேர்ந்தாலும் பெண்ணேதான் பிறப்புக் கட்டுப்பாடு செய்து கொள்ளும் வழக்கமே நம் சமூகத்தில் உள்ளது.
மருத்துவ விஞ்ஞான உலகம் ஆண்களுக்கான பிறப்புக்கட்டுப்பாட்டு மாத்திரையை நீண்ட காலமாகத் தேடிக் கொண்டே இருக்கின்றது. ஹார்மோன் அடிப்படையிலான ஆண் பிறப்புக் கட்டுப்பாட்டு மாத்திரையைத் தேர்ந்தெடுப்பதை ஆண்கள் வரவேற்பார்கள் என்று மேற்கத்தேய நாடுகளில் இடம்பெற்ற ஆராய்ச்சி முடிவுகள் காட்டியபோதும், பாதுகாப்பான, நம்பகமான, பயனுள்ள ஆண் பிறப்பு கட்டுப்பாட்டு மாத்திரையைக் கண்டுபிடிக்கும் பணி இன்னும் மெதுவாகவே நடக்கிறது. ஆமை நகர்வதை விடவும் மெதுவாக. இதுவரைகாலம் நடந்த ஆராய்ச்சிகளின் அடிப்படையில், விந்தணுக்களின் உருவாக்கத்தை மெதுவாக நிறுத்துதல், விந்து உடலை விட்டு வெளியேறுவதைத் தடுத்தல், விந்து அதன் இலக்கை அடைவதைத் தாமதப்படுத்துதல் போன்ற ஏதாவது ஒரு செயற்பாட்டை நிகழ்த்துவதற்கான ஒரு ஹார்மோனை இன்னமும் கண்டுபிடிக்கத் தக்க அறிவியல் வளர்ச்சி இந்த உகத்திற்கு வரவில்லை என்பது, ஆண் பிறப்பு கட்டுப்பாட்டு முறைகளை அறிமுகப்படுத்துவதில் அறிவியல் கூடத் தந்திரமானதாகவே உள்ளதென்றே புரிந்து கொள்ளச் செய்கிறது.
இதுவரை, இதில் பெரும்பாலான முயற்சிகளைப் பரிசீலித்த அறிவியல், ஆண்களுக்கான பிறப்புக்கட்டுப்பாட்டு மாத்திரைகளை விடவும் ஊசி செலுத்துவதற்கான வாய்ப்புகள் உள்ளதென்றும், ஆனால் இவை கல்லீரலுக்குச் சிக்கல்களை உருவாக்கும் என்றும் உடல் எடை அதிகரிப்பு, மனநிலை மாற்றங்கள், முகப்பரு போன்ற பக்கவிளைவுகளை உருவாக்கலாம் என்றும் கண்டறிந்து, அவை சிறந்ததல்ல என்ற முடிவுக்கு வந்தன. ஆனால், பெண்கள் எடுத்துக் கொள்ளும் குடும்பக் கட்டுப்பாட்டு மாத்திரைகள், ஊசிகள், இதர முறைகள் பலவும் நிரம்பவும் பக்கவிளைவுகள் கொண்டவை.
திருமணத்திற்குப் பிறகு, ஒரு குழந்தையைப் பெற்ற பிறகு பெண்கள் பலர் உடல் எடை அதிகரிப்பை எதிர்கொள்வதற்குப் பிரதான காரணமே அவர்கள் எடுத்துக் கொள்ளும் குடும்பக் கட்டுப்பாட்டு மாத்திரைகள், ஊசிகளே. ஆண்களின் கட்டுப்பாட்டு மாத்திரையில் அறிவியலுக்கு இருக்கும் அக்கறை பெண்களின் உடல் எடை, மன அழுத்தங்கள், முகப்பருக்களில் இல்லை.
2012ம் ஆண்டில், ஒரு நாளைக்கு ஒரு முறை கைகளின் மேற்பரப்பில் தேய்க்கும் ஹார்மோன் அடிப்படையிலான ஜெல், குறைந்த பக்க விளைவுகளை மட்டுமே கொண்ட விந்தணுக்களின் எண்ணிக்கையை கணிசமாகக் குறைக்கும் என்று கண்டறியப்பட்டது. இந்த ஆய்வுகள் இன்னமும் தொடர்ந்தபடியே உள்ளன.
ஹார்மோன் கலவை ஊசி பற்றிய ஒரு பெரிய ஆய்வு 2016ல் மிக நம்பிக்கையான வாக்குறுதிகளுடன் தலை காட்டியது. சில பக்க விளைவுகளுடன் கூட, ஆய்வுக்குப் பிறகு நேர்காணல் செய்யப்பட்டவர்களில் 75% அதை மீண்டும் பயன்படுத்துவதாகக் கூறினர்.
RISUG எனப்படும் ஒரு செயல்முறை – விந்தணுக்களை மாற்றியமைக்கக்கூடிய தடுப்பு பற்றியும் பேசப்பட்டது. இதுவொரு ஊசியினால் செலுத்தக்கூடிய மருந்து என்றும், இந்த ஊசிக்குப் பிறகு, விந்து உடலை விட்டு வெளியேற முடியாது எனவும், சூழ்நிலைகள் மாறினால் மற்றொரு ஷாட் மருந்தை ஊசி மூலம் ஏற்றி அடைப்பை அழித்து நடைமுறையை மாற்றியமைக்கலாம் என்று சொல்லப்பட்டது.
2019ம் ஆண்டின் முற்பகுதியில் 82 ஆண்களைக் கொண்டு நிகழ்த்தப்பட்ட ஒரு ஆய்வில், ஒரு மாதத்திற்கு ஒவ்வொரு நாளும் பயன்படுத்தும் டைமெண்ட்ரோலோன் அன்டெக்கானோயேட் – டி.எம்.ஏ.யு (Dimethandrolone undecanoate – DMAU) என்ற ஹார்மோன் அடிப்படையிலான மாத்திரை பாதுகாப்பானது என்று தீர்மானிக்கப்பட்டது. சோதனைகளில் இது கடுமையான பக்க விளைவுகளை ஏற்படுத்தவில்லை எனவும் சொல்லப்பட்டது.
மற்றொரு நம்பிக்கைக்குரிய மாத்திரை என 11β-MNTDC குறித்த ஆராய்ச்சி முடிவுகள் 2020 பெப்ரவரியில் வெளியாகின. ஹார்பர்-யு.சி.எல்.ஏ மருத்துவ மையத்தில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் பயோமெடிக்கல் ஆராய்ச்சி நிறுவனமும் வாஷிங்டன் பல்கலைக்கழகமும் 43 ஆண்களில் 2017 நவம்பர் 9 முதல் 2019 பெப்ரவரி 5 வரை மருத்துவ சோதனைகளை நடத்தி ஆண்கள் தினமும் எடுத்துக் கொள்ளக்கூடிய பிறப்புக் கட்டுப்பாட்டு மாத்திரை முடிவுகளை அறிவித்தது.
இவ்வாறு சோதனைகள் நடந்தபடியேதான் இருக்கின்றன. அறிவியல் உலகம் வாக்குறுதிகளைத் தந்து கொண்டேதான் இருக்கிறது. எத்தனை சுதந்திரமான ஒரு பெண்ணாயினும் அவளது உடலை ஆண்களின் அறிவியல் கண்டறிந்த ஏதோவொரு பிறப்புக்கட்டுப்பாட்டு ஆயுதமே பிடித்துக் கொண்டுள்ளது.
ஸர்மிளா ஸெய்யித்தின் முந்தைய கட்டுரைகள்
கட்டுரையாளர்
ஸர்மிளா ஸெய்யித்
விதிவிலக்கான துணிச்சலான சமூக செயற்பாட்டாளர். சமூக அநீதிகள் குறித்து அச்சமற்று விமர்சிக்கக்கூடியவர், எழுத்தாளர், கவிஞர். சிறகு முளைத்த பெண் (கவிதை 2012), உம்மத் (2014 நாவல்), ஓவ்வா ( கவிதை 2015), பணிக்கர் பேத்தி (நாவல் 2019), உயிர்த்த ஞாயிறு (2021 அனுபவம்) ஆகியன இவரது நூல்கள்.