முதலாவது ஓர்பால் இணையரை நியூயார்க்கில் சந்தித்தேன். ஆர்ட் ஓமை எழுத்தாளர் வாசஸ்தளத்திலிருந்த போது ஒவ்வொரு சனி, ஞாயிறுகளிலும் பதிப்பாசிரியர்கள், எடிட்டர்கள், எழுத்தாளர் – பதிப்பக முகவர்கள், மொழிபெயர்ப்பாளர்கள் என்று விருந்தினர்கள் வந்து கொண்டேயிருப்பார்கள். அவர்களோடு மாலை உணவும் கலந்துரையாடலும் இருக்கும். வாரந்தோறும் வரவுள்ள விருந்தினர்கள் பற்றி முன்கூட்டியே ஈமெயில் அறிவிப்பு வரும். ஆர்ட் ஓமை நிறுவனத்தின் இயக்குநர் டி.டபிள்யூ. கிப்சன் இந்த ஈமெயில்களை அனுப்புவார்.

கிப்சனிடமிருந்து வந்த ஒரு ஈமெயில் இப்படிச் சொல்லியது. ”க்ரோவ் அட்லாண்டிக் பதிப்பக (Grove Atlantic) பிரதான ஆசிரியர் பீட்டர் பிளாக்ஸ்டாக்  இந்த வார  இறுதியில் விருந்தினராக வருகின்றார். அவர் தனது கணவர் டைலருடன் வருவார்”.

பீட்டர் ஆண்பால் பெயர் என்றும் டைலர் பெண்பால் பெயர் என்பதாகவும் ஊகித்து, அவர் தனது மனைவி டைலருடன் வருவார் என்பதற்கு – தவறுதலாக கணவருடன் வருவார் என கிப்சன் எழுதிவிட்டார் என்றேதான் உறுதியாக எண்ணியிருந்தேன்.

pinterest

பீட்டரையும் அவரது இணையர் டைலரையும் சந்தித்த பிற்பாடுதான் அவர்கள் ஓர்பாலினத் தம்பதி என்பதையும் கிப்சன் தவறுதலாக எழுதவில்லை சரியாகவேதான் குறிப்பிட்டுள்ளார் என்றும் புரிந்து கொண்டேன். டைலரைப் பெண்பால் பெயர் என எண்ணியதும் கிப்சன் தவறுதலாக எழுதிவிட்டார் என எண்ணியதும் தற்செயலாகவோ இயல்பாகவோ எனக்குள் நிகழ்ந்ததென்று நம்பவில்லை. திருநர்களின் உறவு நிலைகளோடு பரிட்சயமற்ற பண்பாட்டின் துரு மூளையில் ஓரமாக ஒட்டியிருந்திருக்கவேண்டும்.

க்ரோவ் (Grove Atlantic) பதிப்பகம் 1947 இல் தொடங்கப்பட்டு நியூயோர்க் நகரத்தில் இயங்கும் மிகப் பிரபலமான அமெரிக்கப் பதிப்பகம். பீட்டர் பிரசித்தமான எழுத்தாளர்கள் பலரது நூல்களை ”எடிட்டிங்” செய்தவரும் எழுத்தாளரும். புக்கர் பரிசு வென்ற புத்தகங்களின் எடிட்டராகவும், இலக்கியத் திருவிழாக்களில் குயர் சமூகத்திற்கான குரலாகவும் இயங்கிவரும் இவர், சமீபத்தில் நிர்வாக அதிகாரியாகவும், பதிப்பாளராகவும் அதே பதிப்பகத்தில் நியமிக்கப்பட்டார். பீட்டர் தன்னையொரு ஓர்பாலினத்தவராக அடையாளப்படுத்திக் கொண்டு துணிந்து கௌரவமாகச் செயல்படுவதற்கு அவர் வாழும் நாடும் சமூகங்களும்  ஒரு தடையாக இல்லை.  

இரண்டாவது ஓர்பால் இணையரைத் தாய்லாந்தில் சந்தித்தேன். டேவிட்டும்  நொயலும் ஒன்பது வருடங்களை மகிழ்ச்சியாக வாழ்ந்து பத்தாவது ஆண்டுக்கு அன்பும் தோழமையும் நிரம்பிய அவர்களது வாழ்வு நகர்ந்துள்ளது. சமையல் கலையிலும், மூலிகைத் நேநீர் தயாரிப்பதிலும் இருக்கும் ஆர்வத்தையும் திறமையையும் பயன்படுத்தி இருவருமாக  உணவகமொன்றை நடத்துகிறார்கள். நல்ல வருமானம், வீடு, வாகனம் என்று சௌகரியமான பரபரப்பில்லாத  வாழ்க்கை. எப்போது தோன்றினாலும் உணவகத்தை மூடி விடுமுறை எடுத்துக் கொண்டு பயணிப்பார்களாம்.

இங்கிலாந்து, அமெரிக்கா, ஆப்பிரிக்கா, டுபாய் – இப்படி நாட்டுக்கு நாடு செய்த உல்லாசப் பயணங்களில் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை அத்தனை மகிழ்ச்சியோடு பகிர்ந்து கொண்டார்கள். ஒவ்வொரு புகைப்படத்தைப் பற்றிய கதைகளையும் நினைவுபடுத்தி, ஆளையாள் சீண்டுவதிலிருந்து அவர்களது கொண்டாட்ட மனநிலை அப்பட்டமாகத் தெரிந்தது. தாய்லாந்தில் ஓர்பால் திருமணம் சட்டபூர்வமாகப் பதிவு செய்ய முடியாது. டேவிட் இங்கிலாந்துப் பிரஜை என்பதால் பதிவை அந்த நாட்டில் செய்து கொண்டிருக்கிறார்கள். தாய்லாந்தில் திருமண வரவேற்பு வைபவத்தை நடத்தி ஆல்பம் தயாரித்திருந்தார்கள்.

 அவர்களது அழைப்பை ஏற்றுக் கொண்டு வீட்டுக்குச் சென்றேன். மூன்று அறைகள் கொண்ட மூங்கில் வீடு. பார்த்துப் பார்த்து விருப்பம்போலக் கட்டியிருக்கிறார்கள். முன்திண்ணையில் பஞ்சு மெத்தைகளும் தலையணைகளும். புத்தகங்களும். அவ்வளவு நேர்த்தியாகத் துப்புரவாக இருந்தது. ”உடோன்” என்ற பெயரில் செல்லம் கொஞ்ச ஒரு நாய். வாழ்வு குறித்து அவர்களிடம் எந்த முறைப்பாடுகளும் இல்லை. தங்களை ஏற்றுக் கொள்ளாமல் போனவரகளால் எந்த நஷ்ட்டமும் விளையவில்லை என்று வாய்விட்டுச் சிரிக்கிறார்கள். அதிர்ஷ்டவசமாக அவர்களை ஆரம்பத்திலேயே பெற்றோர்கள் ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள்.  நீண்ட காலம் மகழ்ச்சியாக இவர்கள் வாழ்வதைப் பார்த்து அயலவர்களும், ஊர் மக்களும்கூட ஏற்றுக் கொண்டுவிட்டிருக்கலாம் என்று அவர்களின் மென்போக்கிலிருந்து நம்புகிறார்கள்.

டேவிட் மற்றும் நொயலுடன் ஸர்மிளா

சமூகத்துக்குப் பயனுள்ள பல எதிர்காலத் திட்டங்களைக் கைவசம் வைத்திருக்கிறார்கள். சிறார் கல்வி, பெண்களுக்கான தொழில் வாய்ப்பு என்று சில திட்டங்களைச் செயற்படுத்திக் கொண்டுமிருக்கிறார்கள். இதன் வழியாகத்தான் இவர்களை எனக்குச் சந்திக்கக் கிடைத்ததும்.

எல்லாவற்றுக்கும் மேலாக நல்ல மனிதர்களாக இருக்கிறார்கள். திறந்த இயத்துடன் நேர்மையாக அன்பு பாராட்டுகிறார்கள். அவர்களை அவர்களாகவே  ஏற்றுக் கொண்டுள்ளோம் என்று  உணர்த்தினால்போதும் நம்மை அவ்வளவு நெருங்கமுடிகிறது அவர்களால்.

மிலினா – ஜோ ஓர்பால் பெண் இணையரை நேபாள் நாட்டில் சந்தித்தேன். மெக்சிக்கோ நாட்டவர்களான இவர்கள் என்னுடனான அறிமுகத்திற்குப் பிறகு இலங்கைக்கு வந்து எனது வீட்டில் இரண்டு வாரங்களுக்கும் மேலாகத் தங்கியிருந்தார்கள். மிலினா மருத்துவ துறையில் பயின்றவர். ஆனால் ஒரு நிகழ்த்து கலைஞராகவே தன்னை விரும்புகிறார். உளவளத் துறையில் பட்டமேற்படிப்புப் படித்தவர் ஜோ. இவர் அரச அனுமதி பெற்ற ஒரு தெரபிஸ்ட். வன்முறைகளினால் பாதிக்கப்பட்டவர்களுக்கான உளஆற்றுப்படுத்தல்கள், பொருளாதார வலுப்படுத்தல் செயற்பாடுகளில் ஆர்வம் கொண்டவர்கள். பல பெண்களின் கல்விக்கும், வாழ்வுக்கும் பல்வேறுபட்ட உதவிகளைச் சொந்த நாட்டிலும் வேறு நாடுகளில் செய்கின்றார்கள். தங்கள் உழைப்பின் பெரும்பகுதியை இதுபோன்ற உதவிகளுக்கே அர்ப்பணிக்கின்றார்கள்.

நம் சமூக அமைப்புக்குள்ளும் ஓர்பாலின உறவாளர்கள் இல்லாமலில்லை. ஆனால் இவர்களைப் போல வெளிப்படையான சமூக வாழ்வை வாழ்வதற்கான இடம் அளிக்கப்படாதபடியால் திரைக்குப் பின்னால் உள்ளார்கள். சமூகப் புறக்கணிப்பினால் ஆக்கபூர்வமான செயற்பாடுகள் எதனிலும் ஈடுபட முடியாமல் முடங்கிப் போயுள்ளார்கள். ஆற்றல்களையும் சமூகத்துக்குப் பயன்படக்கூடிய யோசனைகளையும் தங்களுக்குள்ளே புதைத்துக் கொண்டுள்ளார்கள்.

இலங்கையிலாகட்டும் இந்தியாவிலாகட்டும் எனக்குத் தெரிந்த திருநங்கைகளும், திருநம்பிகளும், ஓர்பாலின உறவாளர்களர்கள், பாலீர்ப்பு அற்றவர்கள் பாடல், ஓவியம், இசை, நடனம், நாடகம், புகைப்படம், குறும்படம், மாடல், இலக்கியம் என கலைத்துறையின் பல தளங்களில் திறன் பெற்றவர்கள். சிறந்த சமூக சிந்தனையாளர்கள். புறக்கணிப்புகளால் அவர்களுக்குரிய வாய்ப்புகள் முற்றிலும் மறுக்கப்படுவதாலும் இவர்கள் சாதாரணமல்ல, இதுவொரு உளவியல் கோளாறு, பைத்திய நிலை என்றவாறு வினோதமாகப் பார்ப்பதாலும் வெளிச்சத்துக்கு வராமலிருக்கிறார்கள்.

பாலினம், பாலீர்ப்பு பற்றி நமது புரிதல்களில் மாற்றங்கள் வர இன்னும் நூற்றாண்டுகள் ஆகலாம் என்று சொல்லிக் கொண்டிராமல் நாம்  நேசிக்கத் தொடங்க வேண்டும். யாரையும் எதையும் அவராகவும் அதுவாகவும் எவரெவர் எப்படியோ, எதெது எப்படியோ அப்படியாகவே ஏற்றுக் கொள்வதுதான் மனிதன் என்கிற பகுத்தறிவாளன் அடையக்கூடிய மிகச் சிறந்த நாகரீகம். உடைகளாலும், பொருள்களாலும், பொருளீட்டுதல்களாலும் நாம் நாகரீகடைந்திருக்கிறோமே தவிர, எண்ணங்களால் இன்னும் நாகரீகமடையவில்லை. மனத்தை நாம் விடுவிக்கவில்லை. மதம், கலாசாரம், பண்பாடு, புனிதம் என்ற ”லேபல்கள்”களுக்குள் மனத்தைச்  சிறைப்பிடித்து வைத்திருக்கிறோம்.

எனது உம்மாவின் வழியில் உறவினர் ஒருவர். இப்போது அவருக்கு நாற்பத்தி ஐந்தோ. ஐம்பதோ வயதிருக்கலாம். திருமணம் ஆகாதவர். அவருக்கு ஏன் திருமணம் ஆகவில்லை என்றால், அவரது குரல் பெண்ணுக்குப் போன்றது. அவரது உடல் மொழி, பேச்சு, சிரிப்பு அத்தனையும் பெண்ணைப் போலவே இருக்கும். ஆண் அணியும் ஆடைக்குள் வாழும் அந்தப் பெண்ணை எப்போதும் யாராவது கேலியும், கிண்டலுமாகப் பேசி பொழுது போக்குவதைப் பார்த்திருக்கிறேன். இதுபோல நாம் எத்தனையோ நபர்களைக் கடந்திருக்கிறோம். அவர்களுக்கும் ஒரு வாழ்விருக்கிறது, அவர்களாலும் ஒரு மூங்கில் வீட்டில் காதல் வாழ்வு வாழலாம் என்று  ஏன் நம்ப மறுக்கிறோம்?

அர்ஜென்டினா, சிலி, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, மற்றும் மேற்கு ஐரோப்பாவில் உள்ள பல நாடுகளில் பொதுமக்கள் மத்தியில் திருநர்கள் பற்றிய மனப்பான்மைகள் மென்மையாக்கப்பட்டுள்ளதாகவும் ஓர்பால் இணையர்களை ஏற்பதாகவும் தெரிகிறது. ஆனால் இந்த மாற்றங்கள் எப்போதும் முழு சமத்துவத்தைக் குறிக்காது. உதாரணமாக, தைவான் நாட்டில், ஓர்பாலின திருமணங்களுக்கு சட்ட அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ளது. திருமணத்தைப் பதிவு செய்த ஓர்பால் தம்பதிகளுக்கு முழுத் தத்தெடுப்பு உரிமைகளை வழங்குவதை அரசாங்கம் மறுக்கிறது.

சில நாடுகள் ஓரின சேர்க்கை எதிர்ப்பு சட்டங்களை வைத்துள்ளன. சுமார் 69 நாடுகளில் ஓர் பாலின உறவுகள் சட்டவிரோதமாக உள்ளன.

ஓர்பாலின மக்களுக்கான ஆதரவு உலகம் முழுவதும் ஏன் வேறுபடுகிறது என்ற கேள்விக்கான பதில் பொருளாதார அபிவிருத்தி, ஜனநாயகம், மதம் ஆகிய மூன்று காரணிகள் இந்த வேறுபாடுகளுடன் இணைக்கப்பட்டுள்ளதைக் காணலாம்.

ஒரு நாட்டின் பொருளாதாரம் அந்த நாட்டு மக்களின் மனப்பான்மையை வடிவமைக்கிறது, LGBTQIA+ குயர் சமூக மக்கள் உரிமைகளைப் பற்றியும், அவர்கள் எப்படி உணருகிறார்கள் என்பது உட்பட.

பெரும்பாலும், வறிய/அபிவிருத்தியடையாத நாடுகள் LGBTQIA+ குயர் சமூக மக்களில் குறைந்த ஆதரவைக் கொண்டிருக்கின்றன.  ஏனென்றால் இந்த நாடுகளில்  கலாச்சார விழுமியங்கள் அடிப்படை உயிர்வாழ்வில் அதிக கவனம் செலுத்துகின்றன.

சுத்தமான நீர், உணவு, வாழிடம், பாதுகாப்பு போன்ற விஷயங்களைப் பற்றி மக்கள் கவலைப்படும்போது சார்பு வலுவான விசுவாசத்தை ஊக்குவிக்கிறது. “பாரம்பரிய”  பாலின குடும்ப கட்டமைப்புகள் உட்பட அதன் விதிமுறைகளுக்கான ஆதரவையே இந்த நிலை அதிகரிக்கும்.

இதற்கு மாறாக, செல்வந்த நாடுகளில் வாழும் மக்கள் அதிக பாதுகாப்பைக் கொண்டுள்ளனர். இதன் விளைவாக, தங்களுக்கு ஏற்ற முடிவுகளை எடுப்பதற்கும், சுய வெளிப்பாட்டை நம்புவதற்குமான  அவர்களுக்கு சுதந்திரம் அதிகம்.

Freepik

உண்மையில் செல்வந்த நாட்டவர்கள் அனைவரும் ஓரின உறவுகளை சகித்துக் கொள்ளக்கூடியவர்கள் என்ற பொருள்கொள்ள முடியாது. ஆனால், தரவுகள் LGBTQIA+ குயர் சமூக மக்கள் ஆதரவைக் காட்டுகின்றன. இதற்கு முக்கிய காரணம் அந்த நாடுகளின் ஜனநாயக நிலை என்று கருதலாம்.

ஜனநாயக நாடுகளில், சமத்துவம், நேர்மை, எதிர்ப்பு தெரிவிக்கும் உரிமை போன்றன அரசாங்கத்தின் கொள்கைகளாகவும் குடியிருப்பாளர்களின் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாகவும் அமைந்திருப்பதன் விளைவாக ஓரின சேர்க்கையும், ஏனைய எல்லாப் பாலின, பாலீர்ப்பு அடையாளங்களையும் ஏற்றுக் கொள்ள அதிக வாய்ப்புகள் உள்ளன.

மேற்கு ஐரோப்பா, குறைந்த அளவிலான மத நம்பிக்கை கொண்டதாகவும் ஓர் பாலின திருமணத்தை சட்டப்பூர்வமாக்குவதிலும் முன்னணியில் உள்ளது. டென்மார்க், பெல்ஜியம், நோர்வே, ஸ்பெயின், சுவீடன் ஆகியவை அவ்வாறு செய்த முதல் நாடுகளில் அடங்கும்.

இஸ்லாம் மதம், பழமைவாத புராட்டஸ்தாந்து மத நம்பிக்கைகள் பொதுவாக நடைமுறையில் உள்ள சில மத்திய கிழக் குநாடுகளிலும் ஆபிரிக்க நாடுகளிலும் LGBTQIA+ குயர் சமூக மக்கள் பற்றிய சகிப்புத்தன்மையற்ற மனப்பான்மை உள்ளது.

ஆப்பிரிக்காவிலும் ஆசியாவிலும் கிட்டத்தட்ட அரைவாசிக்கும் அதிகமான நாடுகளில் ஓரினச் சேர்க்கை  சட்டவிரோதமானது. அங்கு 60% முதல் 98% வரை மக்கள், ஆண், பெண் என்ற இரு பாலின அடையாளங்களைத் தவிர்ந்த எதொரு அடையாளத்தையும் மறுப்பவர்களாகவும்,  மதம் முக்கியமானது என்று கருதுகின்றவர்களாகவுமே உள்ளனர்.  இந்த எதிர்ப்பானது, விகிதசார அடிப்படையில் ஓரினச்சேர்க்கை சட்டபூர்வமாக இருக்கும் ஐரோப்பிய நாடுகளின் விகிதாசாரத்தை விட மிக அதிகம்.  

பொருளாதார வளர்ச்சி, ஜனநாயகம், மதம் ஆகியவற்றின் அடிப்படையில் நாடுகள் எப்போதும் வேறுபடுகின்றன. இந்த மாற்றங்கள் ஒவ்வொரு தனிநபரின் அணுகுமுறைகளிலும் மாற்றம் செலுத்துகின்றன.

பீட்டர் – டைலர், டேவிட் – நொயல், மிலினா – ஜோ போன்ற இணையர்களை நம் சமூக அமைப்பு ஏன் புறந்தள்ளுகின்றது என்பதற்கு அரசுகளின் கொள்கைகள், பொருளாதார வளர்ச்சி, நாடுகளின் ஜனநாயகம், மதம் போன்ற காரணங்கள் மிகப் பாரியளவில் செல்வாக்குச் செலுத்துகின்றன.

இத்தகைய பின்னணியில் வித்தியாசமான பாலின அடையாளங்கள் கொண்டவர்களும், குயர் சமூகமும் எதிர்கொள்ளக்கூடிய சவால் என்பது இரு மடங்காகின்றது. சமூகத்தின் அணுகுறையில் ஆதிக்கம்  செலுத்துவதற்கு வலுவற்றவர்களாகவும் உதவியற்றவர்களாகவும் பால்நிலை, பாலீர்ப்பு அடிப்படையில் LGBTQIA+ குயர் சமூக மக்கள் மற்றுமொரு சிறுபான்மைச் சமூகமாக ஒதுக்கப்பட்டுள்ளனர்.

உரிமைகளைப் பெற்றுக்கொள்ளும் முகமாகவும், தமக்கான சமூக ஏற்பின் மூலம் தமது சுயமரியாதையினை நிலைநாட்டும் முகமாகவும் பல்வேறுபட்ட போராட்ட வடிவங்களை முன்னெடுத்து வரும் LGBTQIA+  குயர் சமூக மக்களுக்கு ஆதரவாக படைப்பாளர்கள், எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், சமூக செயற்பாட்டாளர்கள், கல்வியலாளர்கள் கரம் கோர்க்க வேண்டும். LGBTQIA+  குயர் சமூக மக்களின் போராட்ட வடிவங்களை எளிதாக்குபவர்களாக சமூகத்தின் சலுகைகளை ஏதோவொரு அடிப்படையில் பெற்றிருக்கக்கூடியவர்கள் ஒவ்வொருவரும் பொறுப்பேற்கும்போது சமூக அணுகுமுறையிலும் மனப்பாங்கிலும் மென்மையான போக்கிற்கான குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்த முடியும்.

இளைஞர்கள் தங்கள் மனநலப் பிரச்சினைகளுக்கு உதவி பெற தயங்குகிறார்கள் என்பதை சமீபத்திய சர்வதேச ஆராய்ச்சிகள் நிரூபிக்கின்றன. மனச்சோர்வு, பதற்றம், பயம் போன்றவற்றை வெளியிடுகின்ற அளவு சுய-தீங்கு விளைவிக்கும் அல்லது தற்கொலை எண்ணம் போன்ற கடுமையான மனநல அறிகுறிகளை வெளிப்படுத்தும் இளைஞர்கள் குறைவு. உதவி நாடுவதும் குறைவு. உதவி-தேடுதலை எளிதாக்கும் காரணிகளை ஆராய்வதை விடவும், மனநல பிரச்சினைகள் உள்ள இளைஞர்களுக்கு உதவி நாடுவதற்கு இருக்கும் தடைகள் குறித்து கவனம் செலுத்த வேண்டியுள்ளது.

பாலின அடையாளம், வேறுபாடு, பாலியல் நோக்கு நிலைகள் பற்றிய குழப்பங்கள், அவற்றைக் குறித்துப் பேசுவதற்கு இருக்கும் களங்கம், பயம், புறக்கணிப்பு போன்ற காரணங்கள் இளைஞர்களின் தற்கொலைகளில் பெருஞ் செல்வாக்குச் செலுத்துகின்றன. தனது சுய அடையாளத்தின் மீது களங்கம் கற்பிக்கப்படும் என்ற அச்சம், ஓரங்கட்டப்படுவோம் என்ற பய உணர்வு மனநல உதவிகள் பெறுவதற்கான வாய்ப்புகள் இருந்தும் அவற்றை நாடுவதற்கு மனத்தடையை ஏற்படுத்துகின்றது. தானொரு திருநங்கை, திருநம்பி என்றோ, ஓர் பாலீர்ப்பு, ஈர்பாலீர்ப்பு, அல்லது பாலீர்ப்பு இல்லை என்றோ அடையாளங்களை வெளிப்படுத்துவதில் உள்ள பயத்தை தற்கொலையில் முடித்துக் கொள்ளும் இளைஞர்களின் மரணத்திற்கு ஏதோவொரு வகையில் நாமும் பொறுப்புதாரர்கள்.

கட்டுரையாளரின் பிற படைப்பு:

கட்டுரையாளர்

ஸர்மிளா ஸெய்யித்

விதிவிலக்கான  துணிச்சலான சமூக செயற்பாட்டாளர்.  சமூக அநீதிகள் குறித்து அச்சமற்று விமர்சிக்கக்கூடியவர், எழுத்தாளர், கவிஞர். 
சிறகு முளைத்த பெண் (கவிதை 2012), 
உம்மத் (2014 நாவல்), 
ஓவ்வா ( கவிதை 2015), 
பணிக்கர் பேத்தி (நாவல் 2019), 
உயிர்த்த ஞாயிறு (2021 அனுபவம்) 
ஆகியன இவரது நூல்கள்.